பார்த்திபன் காதலி – 32 (2)

பார்த்திபன் காரை செலுத்தி கொண்டே, “நான் அம்மாக்கு போன் பண்ணி எங்கருக்காங்கன்னு கேட்கறேன்” என்று சொல்லி சத்யபாமாவை அழைத்திருந்தான். அவரும் அன்று தாமதமாகத்தான் கோவிலுக்குச் சென்றிருந்தார்.

“அம்மா இப்போதான் கோவிலுக்குள்ள போறாங்களாம். அப்போ நாம போக சரியா இருக்கும்” என்றான்.

“சரிங்க மாப்ள” காவேரி இயல்பாகச் சொல்ல, பார்கவி பதட்டத்துடன் இருந்தாள். எல்லாம் காதல் படுத்தும் பாடு.

அவர்கள் கோவிலை நெருங்கியதும், “நீங்க காரை பார்க் பண்ணிட்டு வாங்க மாப்ள. நான் முன்னாடி போறேன்” என்று முன்னே நடந்தார் காவேரி.

சந்தன நிற பருத்தி பட்டில் பாந்தமாக இருந்தாள் பார்கவி. பெண்களுக்குப் புடைவை எப்போதும் பேரழகை தந்து விடுகிறது.

பார்த்திபனின் சந்தன நிற சட்டைக்குப் பொருத்தமாக அவளின் சேலை நிறம் இருக்க, கண்களால் அதைச் சுட்டி என்னவென்று கேட்டான் அவன்.

“நீங்க வேற.. உங்கம்மா என்கிட்ட பேசாம முகம் திருப்பிட மாட்டாங்களே பார்த்தி?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.

“பாருவ பார்த்திட்டு பேசாம இருக்க முடியுமா? கூல் டவுன் பாரு. எங்கம்மா அவ்ளோ டெரர் பீஸ்லாம் கிடையாது” என்று அவளின் கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான்.

“நான் இருக்கேன் உன் கூட. ஓகே?” என்று வார்த்தைகளால் தைரியம் ஊட்டினான். அவன் கைகள் அவளின் நெஞ்சுக்கு உயர, கைகளை மேலே கீழே அசைத்து ஆழ்ந்த மூச்செடுக்கச் சொன்னான்.

அதை அப்படியே பின் பற்றியவள், ஓரிரு நொடிகளில் இயல்பாகி விட்டாள்.

இருவரும் இணைந்து உள்ளே செல்ல, அங்கே காவேரி, சத்யபாமா இருவரும் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அதிசயிக்கும் வகையில் இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

காவேரியை பொறுத்தவரை சண்டைக்காரன் காலில் விழுவது உத்தமம் என்ற முடிவுடன் வந்திருந்தார்.

சத்யபாமாவை கூட்டத்தில் தேடி அவரின் கைப் பிடித்து மன்னிப்பு கேட்டு விட்டார்.

“அண்ணி, இத்தன வருஷமா உங்க கூடப் பேசக் கூடாது, பழகக் கூடாதுனுலாம் நா நினைச்சதே இல்ல. என்னமோ அப்படியொரு வாய்ப்பு நமக்கு அமையல. இப்பவும் நான் என் பொண்ணுக்காகதான் உங்களோட பேசினேன். இல்லைங்கள. அதுக்காகப் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க” தெய்வம் குடியிருக்கும் கோவிலில் வைத்து மனதார மன்னிப்பை வேண்டினார்.

“நம்ம பிள்ளைங்க நல்லதுக்காகப் பேசினேனே தவிரத் தப்பான நோக்கத்துல இல்லைங்க அண்ணி” என்று கண் கலங்கி விட்டார்.

“ஐயோ என்ன நீங்க..” என்று சத்யபாமா அப்போதே தடுமாறிட, “உங்க குணம் பிடிச்சுத்தான் உங்களோட பழகினேன். உங்க வீட்லதான் பொண்ணைக் குடுக்கப் போறோம்னு நிம்மதியா இருந்தேன். நீங்களும் ஒரு பொண்ணைக் கட்டி கொடுத்திருக்கீங்க. மாமியார் கொடுமையெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன? ஆனா நீங்கதான் எங்க மகளுக்கு மாமியாரா வர போறீங்கன்னு..” என்று அவர் சொல்லும் போதே சிரித்து விட்டார் சத்யபாமா.

அப்பொழுது காவேரியின் பார்வை அவருக்குப் பின்னே செல்ல சிரித்த முகமாக அவரும் திரும்பினார். பார்கவியுடன் பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தான் பார்த்திபன்.

பார்கவி பக்கவாட்டில் திரும்பி அவனைச் சிரிப்புடன் முறைத்து ஏதோ சொன்னாள். மறுகணம் பார்த்திபன் முகம் பளிச்சிட்டது.

மகனை அத்தனை மகிழ்வாக முன்னெப்போதும் அவர் பார்த்திருக்கவில்லை.

அவர்களில் இருந்து அவரால் பார்வையை அகற்ற முடியவில்லை.

மகனின் மகிழ்ச்சியை விட வேறென்ன வேண்டும் அவருக்கு என அவரின் நியாய மனம் வாதிட, அவரின் ஆழ் மனத்தின் பயம் நீங்குவதாக இல்லை.

“எனக்கு வேற பொண்ணு பார்த்து, என்னைப் பிளாக் மெயில் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு பிளான் பண்ணாதம்மா. பார்கவிய தவிர வேற யாரையும் கட்ட மாட்டேன் நான். பார்கவி இல்லன்னா பார்த்திபன் பாபான்னு காவி கட்டிட்டு போய்டுவேன் பார்த்துக்கோ” என்று அவரை மிரட்டியிருந்தான். அது மட்டுமா இன்னும் என்னெல்லாமோ சொல்லி அவரை எச்சரித்திருந்தான் அவன். கூடுதலாகக் கணவரும் அல்லவா அவரைக் கடிந்து கொண்டிருந்தார்.

“நீ பிடிவாதமா நின்னு உன் பையன் ஆசையை நிராசையாக்கி அவனைத் தொலைச்சிடாத” என்று அவரை எச்சரித்திருந்தார். அவருக்கு எல்லாம் புரிகிறது. ஆனாலும் அலைபாயும் மனம் அவர் பேச்சுக்கு அடிபணிய மறுக்கிறதே என்ன செய்வது?

அவரின் மனநிலை புரிந்தார் போல, “அண்ணி எங்க பொண்ணுக்குத் தனிக் குடித்தனம் போற ஐடியாலாம் இல்ல. நீங்க அவங்களை அமெரிக்கா அனுப்பினா, நல்லபடியா போயிட்டு வாங்கன்னு நாங்களும் சந்தோஷமா அனுப்பி வைப்போம். அதுனால நீங்க..” என்று காவேரி தயங்கி இழுக்க, “என் பயம் உங்களுக்குப் புரியாது” என்று முடித்து விட்டார் சத்யபாமா.

அவர்களின் பிள்ளைகள் அவர்களை நெருங்க, “அத்த, எப்படி இருக்கீங்க?” என்று இயல்பாக அவரிடம் நலம் விசாரித்தாள் பார்கவி.

அவளிடம் பேசக் கூடாது என்றுதான் நினைத்தார். முகம் திருப்பிக் கொள்ள வேண்டும், அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொல்ல வேண்டும் என்று அவருள் எத்தனையோ எண்ணங்கள் ஓடினாலும் அக்கணம் எதையும் அவரால் செயலாற்ற முடியவில்லை.

மகனின் மகிழ்ச்சிக்கு இவள்தான் காரணம் என்ற ஒற்றைக் காரணமே அவரை அமைதியாக்கியது.

“நல்லா இருக்கேன் பார்கவி” என்றார். அம்மாவை மெச்சுதலாகப் பார்த்துப் புன்னகைத்தான் பார்த்திபன்.

மகனை முறைத்து, “முதல்ல சாமியை பார்த்துட்டு வந்து அப்புறமா பேசுவோம்” என்றார் சத்யபாமா.

“நீங்க இன்னைக்குக் கோவிலுக்கு வருவீங்கன்னு தெரிஞ்சுதான் நாங்களும் வந்தோம்” என்று உண்மை விளம்பினார் காவேரி.

சத்யபாமா, “சரிதான்” என்று முன்னே நடந்தார்.

நால்வரும் நிறைவாகச் சாமி தரிசனம் செய்து கோவில் வளாகத்தில் ஓரமாக அமர்ந்தார்கள்.

சத்யபாமா சாமி சன்னிதானத்தில் இருந்து கொடுத்த பூவை பார்கவிக்கு வைத்து விட்டார்.

காவேரி ஆவலாக அவரின் முகத்தை முடிவு அறியும் ஆர்வத்துடன் பார்த்திருக்க, அவரோ மகன் வாங்கித் தந்த பிரசாதத்தைப் பார்கவிக்கு நீட்டினார்.

இப்போதும் வேறு ஏதேதோ கோவில்கள் பற்றிப் பேசினாரே தவிர, தன் முடிவை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

அப்படியே எவ்வளவு நேரம்தான் கோவிலில் அமர்ந்திருப்பது என அங்கிருந்து கிளம்பினார்கள்.

“நான் உங்களை வீட்ல விட்டுட்டு அப்புறமா அவங்களை ட்ராப் பண்ணிக்கறேன்ம்மா” என்று பார்த்திபன் அவரிடம் சொல்ல, “வேணாம் பார்த்திபா, நீ என்னை ஆட்டோ ஏத்தி விடு போதும்” என்றார் அவர்.

“நாங்க உங்களை ட்ராப் பண்ணிட்டு அப்புறமா போறோம் அத்த” என்ற பார்கவியைப் பார்த்த சத்யபாமா ஒன்றும் சொல்லவில்லை.

“வாங்க அத்த” என்று அவரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள் அவள்.

அவனது வீடு வரை பார்த்திபன் காரோட்டினான். சத்யபாமா அவர்களை வீட்டுக்குள் அழைக்கவில்லை. பார்த்திபன்தான் அழைத்தான்.

அவனிடம், “நாங்க முறையா வர்றோம் மாப்ள” என்று விட்டார் காவேரி.

சத்யபாமா மௌனமாக நின்றாலும், “நாங்க போய்ட்டு வர்றோம்த்த” என்று அவரிடம் சொல்லி விட்டே காரில் ஏறி இயக்கி நகர்த்தினாள் பார்கவி.

அவர்கள் கார் கடக்கவும் மகன் பக்கம் திரும்பி, “நீயி நாலு வருஷத்துக்கு முன்னாடி வாங்கின வண்டியைதான் இன்னமும் ஓட்டிட்டு இருக்க. அவங்க பக்கத்து தெருவுக்குப் போகணும்னாலும் கார்லதான் போவாங்க. பொண்ணுக்கு தனி வண்டி. அவங்கப்பாக்குத் தனிக் காரு..” என்று சத்யபாமா சொல்லி முடிக்கும் முன் இடையிட்டு, “அம்மா..” என்று உறுமினான் பார்த்திபன்.

“நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் வான்னு கூப்பிட்டா, உங்கம்மா ஃபீல் பண்ணுவாங்கன்னு உனக்காகப் பீல் பண்ணி வேணாம்னு சொல்றா அவ. ஆனா நீ என்னன்னா.. போம்மா” என்று கோபமும், வருத்தமுமாகச் சொல்லி, விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்று, அவனது அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.

சத்யபாமா சோர்வுடன் சோஃபாவில் சரிந்தார்.

அங்கே ரங்கராஜன், “என்ன காவேரி, போன காரியம் என்னாச்சு?” என்று மனைவியிடம் கேட்க, காய் என்று கையை விரித்தார் காவேரி.

“அவங்க ஒன்னும் சொல்லல. ஆனா சீக்கிரமே சம்மதம் சொல்லிடுவாங்கன்னு நம்புறேன்ங்க” என்றார். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

மறுநாள் மதியம் போலச் சத்யபாமா காவேரியை அழைத்துப் பேசினார். அன்று மாலையே பார்த்திபன் குடும்பம் பார்கவியின் வீடு வந்தது.

பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி, கல்யாணம் பேசி, ஒப்புத் தாம்பூலம் மாற்றி, பார்கவிக்குப் பூ வைத்து, திருமணத்தை நிச்சயித்திருந்தார்கள்.

சத்யபாமா நான்கு தேதி குறித்து வாங்கி வந்திருந்தார்.

இரண்டு வீட்டினருக்கும் தோதான தேதியை முடிவு செய்யலாம் என்று அவர் சொல்ல, காவேரி நெருக்கத்தில் இருந்த முகூர்த்ததைத் தேர்ந்தெடுத்தார்.

“20 நாள்லனா எப்படி இவ்வளவு நெருக்கத்துல ஏற்பாடுலாம் கவனிக்கறது? முதல்ல மண்டபம் கிடைக்கணுமே. உங்க மண்டபம்னாலும் அது ஏற்கனவே புக்காகி இருக்கும்ல?” என்று சத்யபாமா சந்தேகம் கேட்க, “கல்யாண ஏற்பாடுலாம் நாங்க பார்த்துக்கறோம். நீங்க என்ன எப்படின்னு உங்க விருப்பத்தைச் சொல்லுங்க. நாம அதுபடியே செஞ்சுடலாம்.” என்று அவர்களுக்கு உத்தரவாதம் தந்தார் ரங்கராஜன்.

“மண்டபம்..” என்று துரைராஜ் ஆரம்பிக்க, “நம்ம புது மண்டபத்துல வச்சுக்கலாம் சம்பந்தி” என்றார் அவர்.

அவர்கள் பகுதியை ஓட்டிருந்த மையப் பகுதியில் பழமையான திரை அரங்கம் ஒன்று இருந்தது. சமீபமாக அது நட்டத்தில் ஓடவும் விற்று விட்டார்கள். அதை வாங்கிய ரங்கராஜன், அதைப் பிரம்மாண்ட திருமண மண்டபமாக மாற்றியிருந்தார். அதில் தற்போது இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

மகளின் திருமணம் அதில் நடக்கும் முதல் திருமணமாக இருக்கும் என்று அவர் பெருமையாகச் சொல்ல, சத்யபாமாவின் முகம் ஒரு நொடி இருண்டு பின் இயல்பானது.

அவர்களின் இந்த வசதிதான் அவரை மிரட்டுகிறது.

திருமண மண்டபம் மட்டுமா, கேட்டரிங் தொழிலும் அவர்களின் கைவசம் இருக்க, எதற்கும் கவலை கொள்ளவில்லை அவர்கள்.

சத்யபாமா சம்மதித்து இங்கு வந்திருந்தாலும் அவரின் கலக்கம் கூடியதே தவிரக் குறையவில்லை.

ரங்கராஜன் சொன்னது போலவே திருமண வேலைகள் விரைந்து நடந்தன.

பார்த்திபன் வீட்டினர் விரும்பியபடி பத்திரிக்கை அடித்துக் கொடுத்து விட்டார் ரங்கராஜன். அதில் சற்று சமாதானமானார் சத்யபாமா.

முகூர்த்த பட்டு, நகைகள் என இரண்டு நாள்கள் கடை கடையாக ஏறி இறங்கி மணமக்களுக்குப் பிடித்த விதமாக வாங்கினார்கள்.

பார்த்திபன் வீட்டினருக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் ரங்கராஜன். அதே வேளையில் அவர்களுக்கான முக்கியத்துவத்தைத் தவறாமல் தந்திருந்தார்.

அந்தப் புத்தம் புதிய பிரம்மாண்ட திருமண மண்டபத்தில் பார்கவி – பார்த்திபன் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பார்த்திபன் தன் மனத்திற்குச் சொந்தமானவளை மனைவியாக்கிய பெருமிதத்துடன் பிரியம் மிகப் பார்கவியின் கைப் பிடித்திருந்தான்.

இருவரின் தோளும் மாலையோடு சேர்ந்து உரசியது. அதுநாள் வரை அவன் மனம் தேடி தவித்த முழுமை அன்றைக்கு அவனுக்கு முழுமையாக வாய்த்திருந்தது.

பார்த்திபனின் சரி பாதி அவனுக்குச் சொந்தமாகியிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top