பார்த்திபன் காதலி – 32 (1)

பார்கவிக்குப் பதிவு திருமணத்தில் எல்லாம் ஒப்புதல் இல்லை.

“ரெஜிஸ்டர் மேரேஜா? நாம அவசரப்பட்டு முடிவெடுக்க வேணாமே பார்த்தி. நான் ஒரு முறை அவசரப்பட்டு முடிவெடுத்து எவ்ளோ அவஸ்தைப்பட்டுட்டேன் தெரியுமா? திரும்ப அதே போலத் தப்பை செய்ய வேணாமே பிளீஸ். அத்த சரின்னு சொல்ற வரைக்கும் வெயிட் பண்ணுவோம்” என்றாள் அவன் முகம் பார்த்து. அவளை நெருங்கி நின்று அவள் தோள் சாய்ந்தான்.

“இப்போ அவசரப்படாம எப்போ அவசரப்படுறது பார்கவி? எனக்கு இப்பவே முப்பது வயசாகிடுச்சு. ஹ்ம்ம், எங்கம்மா எப்போ சம்மதிச்சு..” என்று பெருமூச்சுடன் அவன் இழுக்க, “சொல்லி முடிங்க” என்று சிரிப்புடன் அவனை முறைத்தாள்.

“உன்னைத் தவிர வேற யார்னாலும் நானும் எங்கம்மாவை போலவே யோசிச்சிருப்பேன் பாரு. அதுனால அவங்களை என்னால புரிஞ்சிக்க முடியுது”

“ஓ, அப்போ என்னை விட்டுட்டு வேற பொண்ணைப் பார்க்கற ஐடியா இருந்ததா உங்களுக்கு?” என்று லேசாகத் தலையைத் திருப்பி அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

“நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் பாரு. நான் என்னைக்கும் பேச்சு மாற மாட்டேன், எனக்கு உன்னை விட்டா வேற யாரு இருக்கா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

“ஆள் மயக்கி”

“என் ஆளு, நீ மயங்கினா போதும் எனக்கு” ஒற்றைக் கரத்தால் அவள் தோளை இறுக்கினான். அவனது நெருக்கம், தொடுகை என அவனை இயல்பாக ஏற்றுக் கொண்டது அவள் மனமும், உடலும்.

“கண்டிப்பா லவ் இஸ் அ ட்ரக் தான் இல்லையா பார்கவி?” திடீரென்று திசை மாற்றி அவன் கேட்க, அவள் விழிகள் ஆச்சர்யமாக அவன் மேல் பதிந்தன.

“காதல் எல்லாப் பைத்தியக்காரத் தனத்தையும் செய்ய வைக்கும்னு பிரபஞ்சனுக்கு ஒரு கவிதை அனுப்பினேன் நானு. இப்போ பாரு நானும் அதே இடத்துல நிக்கறேன்.”

“பார்த்தி ரொம்ப ஃபீல் பண்றாப்ல தெரியுதே?”

“ஃபீல் பண்றேன்தான் பாரு. நீ கிண்டலா சொல்ற ஃபீல் இல்ல. இந்த ஃபீல் வேற. என் மனசு முழுக்க நீதான் இருக்க. இந்தப் பெட்டர் ஹால்ப்னு தங்களோட இணையைச் சொல்வாங்க இல்ல. அது சத்தியமான உண்மைன்னு நம்புறேன் பாரு. ஏன்னா உன்கிட்ட பேசாம, டெய்லி உன்னைப் பார்க்காம.. யூ நோ நான் பாதியா இருக்க ஃபீல் எனக்கு..”

“பார்த்தி..”

“சத்தியமா பாரு. இந்தத் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு வருமே பசலை நோய். அது போல இது லவ் சிக் போல. ஐ பீல் இன்கம்ப்ளீட். பார்கவி எனக்கு வேணும்ங்கறத தாண்டி, நான் அவளோட இருக்கணும். அவளோட பெட்டர் ஹால்பா மாறணும்னு மனசு கிடந்து அடிச்சுக்கிது. அதுனாலதான் யூஎஸ்ல இருந்து அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன்.” என்றவனை அதிர்ச்சியும், ஆச்சரியமுமாகப் பார்த்தாள்.

“இதோ இந்த உன்னோட பார்வை என்னோட பல நாள் தூக்கத்தைப் பறிச்சுருக்கு தெரியுமா”

“பார்த்தி”

“என்னை நல்லா தெரிஞ்ச எல்லாருமே என்னைப் பார்த்தின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா நீ கூப்பிடுற இந்தப் பார்த்தீ என் மனசுல தீயை பத்த வைக்குது”

அதற்கும், “பார்த்தி” என்றாள் புன்னகையுடன்.

“உன் குரல கேட்கவே உனக்கு அடிக்கடி கால் பண்ணுவேன். சமையல் எல்லாம் ஒரு சாக்கு அவ்ளோதான். சைவம் எல்லாம் உன்னாலதான் சாப்பிட ஆரம்பிச்சுருக்கேன்”

“அடடே எவ்வளவு பெரிய தியாகம்?” என்று அவள் கேலி செய்ய, “இல்லையா பின்ன?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“பார்கவிக்குப் பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிக்கும். அதான் என் பாலிசி” என்றான் கண் சிமிட்டி.

“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா போதும் பார்த்தி. எனக்காக உங்களுக்குப் பிடிச்சதை மாத்திக்காதீங்க. எனக்குப் பிடிச்சதுன்னு பார்த்து நீங்க ஒன்னொன்னா மாத்திட்டே வந்தா நாளைக்கு உங்க சுயமே தொலைஞ்சுடும். எனக்குப் பார்த்திபனை பிடிக்கும். டாட். நோ கண்டிஷன்ஸ் அப்ளைடு” என்றாள் தீர்க்கமாக. நீ வேண்டும் அதைத் தவிரக் காதலில் வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை என்கிறாள். நிபந்தனைகள் அற்ற அன்பே அலாதிதானே?!

அவன் கண்களில் காதலின் தீவிரம் கூட, “நீ, என் கண்ணு முன்னாடியே இருந்திருக்க, உன்னை எப்படி மிஸ் பண்ண இருந்தேன் நானு” என்று குற்ற உணர்ச்சியுடன் சொல்லி அவளின் நெற்றியில் முட்டினான்.

“எதுவுமே நம்ம கைக்கு எட்டாத தூரத்துக்குப் போனதும்தான் அத்தோட அருமை தெரியுது என்ன செய்ய?” என்று அவனே அலுத்தும் கொண்டான்.

“அவ்ளோ தூரமா போனதுக்கு அப்புறம் ஒரு பூவை பார்த்தா கூட உன் ஞாபகம்தான் வந்தது பாரு. ஒரு புத்தகம் படிக்க எடுத்தா அதுல இருக்க வரிகள் எல்லாம் எனக்காகவே எழுதினது போல இருக்கு. அதை அடிக்கடி அடிக்கோடிட்டு உனக்கு அனுப்பணும்னு கை பரபரத்துச்சு. நான் கேட்கிற பாட்டெல்லாம் நம்மளை பத்தியே பேசுற மாதிரி இருக்கு. யாரோ நம்ம சிட்டுவேஷனை ஒரு பாடல் ஆசிரியர் கிட்ட கொடுத்து வரிகளை எழுதி வாங்கிட்டு வந்து காதலையும், பிரிவையும் பிழிய பிழிய உணர்த்துற போல மியூசிக் போட்ட மாதிரி இருந்தது. இசையின் ராஜா இசைக்கும் போதெல்லாம் நானே சோகத்துல இருக்கேன், நீ வேற ஏன் ராசய்யான்னு அவர்கிட்ட சண்டைக்குப் போகணும் போல இருந்தது” என்று அவன் புலம்ப, அவனைப் பிரியம் பொங்கிய விழிகளில் பிரம்மிப்பு கூடப் பார்த்திருந்தாள்.

“நான் வீட்டை மிஸ் பண்றேன்னு நினைச்சு ஹோம் சிக்னு கிண்டல் பண்ணானுங்க பசங்க. ஆனா அது பார்கவிய பார்க்காததுனால வந்த சிக்னஸ்னு கத்தணும் போல இருந்தது”

“பார்த்தி..”

அவளின் அழைப்புக்கு ம்ம் கொட்டி லேசாகச் சரிந்து அவள் தோள் சாய்ந்தான். “உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம்தான்.” என்று பாடினான். அவனுக்கு நல்ல குரல் வளம். அவன் பாடுவதைக் கேட்கவே இனிமையாக இருந்தது. அவள் வீட்டு மாமரத்துக் குயில் அவன் காதலுக்குப் பின்னணி இசை இசைக்க, அந்த ஏகாந்த உணர்வை கண் மூடி ரசித்தாள் பார்கவி.

“என் மனம் உன் வசமே, கண்ணில் என்றும் உன் சொப்பனமே..”

என்று அவன் பாட பாட அனிச்சையாக அவன் கரம் பற்றினாள்.

“நான் சொன்னேனே. இந்தப் பாட்டெல்லாம் நான் கேட்காத நாளே இல்ல பார்கவி. பிரபாவை, அவனோட பிரியத்தை இப்போ புரிஞ்சுக்க முடியுது என்னால.” என்றான்.

“உங்கம்மாப்பா கூட லவ் மேரேஜ் தானே?”

“ஆமா. அதுவும் அப்பவே. அவங்க லவ்க்குலாம் செம்ம எதிர்ப்பு ரெண்டு வீட்லயும். நான் பிறந்து நாலு வருஷம் கழிச்சுதான் ரெண்டு வீட்டு ஆளுங்களும் ஒன்னு மண்ணா பழக ஆரம்பிச்சாங்கன்னா பார்த்துக்கோ. ஆனா இன்னைக்கு எங்கம்மா என்னன்னா என் லவ்வுக்குக் கட்டைய போடுது. இந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல?”

“உங்க லவ்வா?” என்று அவள் புருவம் உயர்த்த, “உனக்கு வருது பாரு சந்தேகம்” என்று செல்லமாகச் சலித்துக் கொண்டான்.

“நான் காலையில வீட்ல இருந்து கிளம்பும் போதே பார்கவிய பார்க்க போறேன்னு சொல்லிட்டுதான் வந்தேன் எங்கம்மா கிட்ட. இனிமே அவங்க நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லலன்னா நான் பார்கவியைக் கல்யாணம் பண்ணிட்டு மாலையும் கழுத்துமா வந்து நிப்பேன்னு வார்ன் பண்ணிட்டுதான் வந்தேன்.”

“அடப்பாவி, அத்த ஏற்கனவே கோபத்துல இருக்காங்க. இதுல நீங்க இப்படிப் பேசினா.. அவங்க கடுப்பாகப் போறாங்க”

“ஆகட்டும்ங்கறேன். அவங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? காதலுக்கு எதிரின்னா பரவாயில்ல. அவங்களே லவ் மேரேஜ் பண்ணிட்டு..”

“உங்க லவ், அது பத்தி நீங்க ஒன்னுமே சொல்லலையே பார்த்தி” என்று எதிர்பார்ப்புடன் அவன் விழிகளை ஏறிட்டாள்.‌

“என்ன சொல்லல?”

“என்கிட்ட சொல்லல” என்றாள் அழுத்தமாக. அவனுக்கு அப்போதுதான் விளங்கியது போலும்.

“அதெல்லாம் நேரம் வரும் போது செயல்ல காட்டிடுவோம்” என்றான் குறும்பு புன்னகையுடன்.

“எப்படி?”

“இப்படி” என்று அவள் கைப் பற்றித் தன் நெஞ்சில் பதித்தான்.

“உங்களுக்குப் பேசவா சொல்லி தரணும்” என்று அவள் முறைக்க, “ப்ராக்டிக்கல்” என்று உச்சரித்தவன் வாயை அடித்து மூடினாள். அவன் கண்களில் கள்ளப் புன்னகை, சிரிப்பை அடக்கியதில் அவன் உடல் குலுங்கியது.

அப்போது, “மாப்ள, பார்கவி” என்று காவேரி கீழிருந்து அழைக்க, “வா கீழ போகலாம்” என்று அவளுடன் கீழிறங்கினான் அவன்.

அவனுக்குச் சூடாகத் தேநீரும், தேங்காய் சட்னியுடன் முட்டைக்கோஸ் பக்கோடாவும் கொடுத்து உபசரித்தார்.

“மாப்ள, உங்க வீட்ல என்ன சொல்றாங்க?” என்று அவனிடம் விசாரித்தார் அவர்.

“அம்மா சீக்கிரம் சரின்னு சொல்லிடுவாங்க அத்த” என்றான் லகுவாக.

“அவங்க இப்போ வீட்லதானே இருப்பாங்க? நான் வேணும்ன்னா அவங்க கிட்ட இன்னொருக்கா பேசி பார்க்கவா? அவங்களுக்கு என் மேல இருக்கக் கோபம் நியாயம்தானே மாப்ள? அப்போ நான்தானே பேசி அவங்களைச் சரி பண்ணணும்?” என்று காவேரி கேட்க, “அம்மா இன்னைக்குக் கோவிலுக்குப் போகணும்னு சொன்னாங்க அத்த” என்று கோவிலின் பெயரைச் சொன்னான்.

“நீங்க யூஎஸ்ல இருந்தப்போ நானும், உங்கம்மாவும் வாரா வாரம் அந்தக் கோவிலுக்குத் தவறாம போய்டுவோம். இப்பத்தான் அவங்க கோபமா இருக்காங்க, என்னை எதேச்சையா பார்த்தா கூட அவங்களுக்குச் சங்கடமா இருக்குமேன்னு நான் போகாம இருந்துட்டேன். நான் அங்கதான் தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கறேன். நான் எப்பவும் போலப் போய் இருந்தா உங்கம்மா பேசி இருப்பாங்க மாப்ள” என்றார் தீவிரமான யோசனையுடன்.

“அம்மா கண்டிப்பா பேசியிருப்பாங்க அத்த. ஆனா இந்த விஷயத்துல அவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னே என்னால கெஸ் முடியல” என்று உண்மையைச் சொன்னான்.

“என்ன செய்வாங்கன்னு நேர்ல போனாதானே தெரியும் மாப்ள.”

“ம்மா” என்று பார்கவி இடைபுக, “ஆமா பாரு. இன்னைக்கு நாமளும் அந்தக் கோவிலுக்குப் போறோம். போய்க் கிளம்பு ஓடு” என்று மகளை விரட்டினார்.

பிரபஞ்சன், பிரியதர்ஷனியின் வீட்டில் இருக்க, பார்த்திபன் அங்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றான்.

பார்கவி, காவேரி இருவரும் கோவிலுக்குச் செல்ல தயாராகி அவனை அழைக்கையில் திரும்ப அங்கு வந்தான்.

அதற்குள் ரங்கராஜன் காரை வீட்டுக்கு அனுப்பியிருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top