உதய ராகம் – 5 (1)

அவள் அறைக்குள் நுழைந்ததும் அர்ச்சனையைத் தொடங்கி விட்டாள் சுஹாசினி. ஆனால், ராகவியின் மனம் முழுவதும் ராஜாவின் கேள்வியைச் சுற்றியே வந்தது.

எத்தனை யோசித்தும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. இது குறித்துக் கணவன் பேசிய நினைவேயில்லை அவளுக்கு. திருமணம் முடிவான பொழுது அவர்கள் தான் பேசிக் கொள்ளவேயில்லையே. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளாகச் சென்று அவன் முன் நிற்கும் வரை!

ஆனால், முன்பு போல இல்லாமல் இப்போது மனதின் ஓரம் கணவனின் மேல் கரிசனை துளிர்த்தது. ஒருவேளை அப்படியும் நடந்திருக்குமோ என்று அவனுக்குச் சாதகமாகச் சிந்திக்கத் தொடங்கி இருந்தாள்.

“ரா… நான் சொல்றது உனக்குக் கேட்குதா இல்லையா? உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க?”

“சுஹா, இதென்ன சின்னப் பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்க. அவங்க ரெண்டு பேரும் சாதாரணமா உட்கார்ந்து பேசிட்டு தானே இருந்தாங்க. எங்க இருக்கோம், என்ன பண்றோம்னு ராகவிக்கு நல்லா தெரியும் சுஹா. அவங்க வீட்ல இதையெல்லாம் பெரிசுப்படுத்த மாட்டாங்க. நீ முதல்ல அமைதியாகு” எட்டி சுஹாசினியின் தோளை பற்றினாள் பனிமலர். பட்டென்று அவளின் கைகளைத் தட்டி விட்டு, அறையை விட்டு வெளியேறினாள் சுஹாசினி.

அவள் போவதையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி.

“அவளுக்கு ஏதோ கோபம் ராகவி. நீ கண்டுக்காத” என்றாள் பனிமலர்.

“அவ இன்னும் போன வாரம் நடந்ததையே நினைச்சிட்டு இருக்காளா?”

“இல்ல ரா, அந்தக் கல்யாண மாப்பிள்ளைக்குச் சாரி சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்கா?”

“அச்சோ, அப்புறம்?”

“அவன் கொஞ்சம் ஹார்ஷா பதில் அனுப்பி இருப்பான் போல…”

“இவ எதுக்குத் தேவையில்லாம அவனுக்கு இப்போ மெசேஜ் அனுப்பணும்? அவன் இப்போ கோபமா இருப்பான்னு தெரியாதா? மடச்சி”

“மனசு கேட்காம அனுப்பி இருக்கா. ஆனா, அந்த ஆள் கோபமா, நக்கலா பதில் அனுப்பி இருக்கார். என்னைத் தலைப்பு செய்தியா ஆக்கினது போதும் மா, ஏற்கனவே என்னைப் போதுமான அளவு பிரபலம் ஆக்கிட்ட.. என் வாழ்க்கையையும் பிராப்ளம் ஆக்கிட்ட. இனியும் என்ன வேணும் உனக்குன்னு…”

“ஐயோ. என்ன மலர், இவ ரொம்ப அப்செட்டாகி இருப்பாளே”

“ஆமா ரா, நான் ஏன் இப்படி இருக்கேன்? நான் ஏன் இப்படிப் பண்ணேன்? அப்படினு புலம்பிட்டே வந்தா. அந்நேரம் உன்னை ராஜா கூடப் பார்க்கவும் கடுப்பாகிட்டா. நீ அவ திட்டினதை நினைச்சு ஃபீல் பண்ணாத ரா..”

“எனக்கு அவளைப் பத்தி தெரியாதா மலர். என் மேல இருக்கற அக்கறையில தான் சொல்றா.. ஆனா, ம்ப்ச்” திரும்பி கண்ணாடி ஜன்னலின் வழியே தெரிந்த கடலைப் பார்த்தாள்.

அலைகளுக்கு நடுவே ஆதரவற்ற குழந்தையைப் போல் நின்றிருந்த சுஹாசினியை கண்டதும் கால்கள் தானாக அவளை நோக்கி நகர, அவள் கைப் பிடித்துத் தடுத்தாள் மலர்.

“அவளை அப்படியே கொஞ்ச நேரத்துக்கு விடுறது பெட்டர் ராகவி” மௌனமாய்த் தலையசைத்தாள் ராகவி.

“சரி, நீ என்ன முடிவெடுத்து இருக்க?. வீரா கால் பண்ணாரா?” கையில் இருந்த மொபைலை அவள் முன் நீட்டினாள் மலர். சைலண்ட் மோடில் இருந்த மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது.

“வீரா காலிங்” என்று ஒளிர்ந்து கொண்டேயிருந்தது திரை.

“எடுத்து பேசு மலர். நீ பண்றது கொஞ்சம் கூடச் சரியில்லை. நீ இங்க இருக்கறது அவருக்குத் தெரியுமா?”

“ரெண்டு நாள்ல 100 மிஸ்டு கால் ராகவி. ஹீ இஸ் நாட் கிவிங் மீ ஸ்பேஸ். மூச்சு முட்டுது” திரைச்சீலைகள் இழுத்து மூடுவதும், பின் திறந்து விடுவதுமாக இருந்தாள் பனிமலர்.

“அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பாரேன் மலர். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டவரை… இப்படி அலைய விடுறது நல்லா இல்ல மலர்”

“நான் பண்றது தப்புனு எனக்குத் தெரியும் ரா.. நான் அவனைக் கிராண்ட்டடா எடுத்துக்கறேன் தான். ஆனா, அவன் இன்னும் தன்னோட.. முதல் காதலை மறக்கலை அப்படின்றதை என்னால ஜீரணிக்கவே முடியலை. அதுவும் போன வாரம் அவங்க காலேஜ் ரீயூனியனில் அவன் காதலிச்ச பொண்ணை, அந்த மலரை பார்த்து வீரா உறைஞ்சு நின்ன நொடியை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன் ரா”

“இவ்வளவு சொல்ற நீ, உன்னோட பழசை மறந்திட்டியா மலர்?” சடாரென்று விழிகளை உயர்த்தி ராகவியைப் பார்த்தாள் மலர். விழிகள் கலங்கி இருந்தது.

“மறக்க கூடாதுனு சொல்றியா ராகவி?” குரல் உடைய, கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.

“பிளீஸ் மலர். நான் அப்படிச் சொல்வேனா? மறந்திடுன்னு தான் சொல்றேன். அது தான் எல்லோருக்கும் நல்லது. ஐயோ, அழாத மலர்.”

“நான் வீராவுக்குத் தகுதியானவளே இல்ல ரா, அவனுக்கு வேற பொண்ணு கிடைப்பா. நான் இப்படியே இருந்துக்கறேன்” கண்களைத் துடைத்துக் கொண்டு அறையின் வாயிலை நோக்கி நடந்தாள்.

“மலர் நில்லு, மலர்” சத்தமாகக் கதவை அறைந்து சாற்றி விட்டு போனாள் பனிமலர்.

அழகான எல்லாக் கோலங்களும் ஒற்றைப் புள்ளியில் தான் தொடங்வது போல, ஆண் எனும் ஒற்றைப் புள்ளி தங்கள் மூவரின் வாழ்க்கையை அலங்கோலமாக்கி விட்டதாகத் தோன்றியது ராகவிக்கு.

‘ஆண்களா? இல்லை நீங்களேவா?’ என்று கேள்வி எழுப்பிய மனசாட்சியை இரக்கம் இல்லாமல் எட்டி மிதித்துத் தள்ளினாள்.

மலரின் காதல், மணமேடை வரை வந்து நின்ற சுஹாசினியின் திருமணம், தனது திருமண முறிவு அனைத்திற்கும் காரணம் ஆண்.. தன் திருமணம் முறியத் தான் போகிறதா? நினைக்கையிலே உள்ளூர வலித்தது.

கண்களை மூடி படுக்கையில் சரிந்தாள். மணி ஒன்பதை நெருங்குகையில் அவளை எழுப்பினாள் சுஹாசினி.

“எழுந்திரு, சாப்பிட்டு படு ராகவி”

அவரவர் சிந்தனையில் மூழ்கியபடி அமைதியாய் இரவு உணவை உண்டு, உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலையில் அவள் கண் விழிக்கையில் மணி ஐந்து என்றது கடிகாரம். சுஹாசினி சோஃபாவிலும், பனிமலர் அவளுக்கு அருகில் படுக்கையிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவர்களின் உறக்கத்தைக் கலைக்காமல் எழுந்து முகம் கழுவி விட்டு வெளியில் வந்தாள்.

கால்கள் மெல்ல கடற்கரையை நோக்கி நகர்ந்தது. இருளை விலக்கி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பரவி கொண்டிருந்தது. தன் மனதிலும் இப்படி வெளிச்சம் வந்து விடாதா என்ற ஏக்கத்துடன் கடலையும், வானையும் பார்த்தபடி நின்றாள் ராகவி.

error: Content is protected !!
Scroll to Top