உதய ராகம் – 4 (2)

மாலை நான்கு மணி அளவில் டீ கோப்பையுடன் அமர்ந்திருந்தவளுக்குத் திடீரென்று சந்தேகம் தோன்றியது.

‘நம்மைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாதே, அவரும் எதையும் கேட்டுக்கலையே, அப்புறம் எப்படி நம்ம வீட்ல பேசுவார்? அவர் நம்பரும் நம்மகிட்ட இல்லையே, எப்படிக் கண்டாக்ட் பண்றது?’ புதிதாகக் கவலை ஒன்று முளைத்தது. அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து விட, முகம் வாடி இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து விட்டாள் அவள்.

‘போலீஸ்காரன் நினைச்சா என்னைக் கண்டுப்பிடிக்க முடியாதா? அதுவும் சைபர் செல்லில் இருக்கவருக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல’ தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு வேலையைக் கவனித்தாள் ராகவி.

இரவு எட்டு மணி அளவில் ராகவனுக்கு மொபைலில் அழைத்தாள்.

“ராகவ், ஏதோ வாங்கிட்டு வர சொன்னியே? மறந்துட்டேன். என்னனு சொல்லு. வரும் போது வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிக் கொண்டே, தன் டேபிளில் இருந்தவற்றைச் சீராக்கி கொண்டிருந்தாள்.

“உதய் வீட்ல இருந்து கால் வந்தது. அப்பா, இப்ப தான் பேசிட்டு வச்சாங்க” கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

அவளுக்கு விஷயத்தை முதலில் சொல்லி விட வேண்டும் என்ற ஆர்வம் தான் அவனது குரலில் அதிகமிருந்தது.

அவளுக்குப் புரிந்தது. அன்றைய தினம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்புடன் சுற்றினாலே, அவளது படபடப்பை உணர்ந்து கொண்டிருக்கின்றான் அவன் என்று தெளிவாகத் தெரிய, “தேங்க்ஸ் ராகவ்” என்றாள்.

இருவரும் இரட்டையர்கள் என்பதினாலோ, என்னவோ அவர்களால் ஒருவர், மற்றவரின் உணர்வுகளைச் சொல்லாமலேயே எப்போதும் புரிந்து கொள்ள முடிந்ததிருக்கிறது.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அப்படித் தான். மகிழ்ச்சி, துக்கம், கோபம், சோகம் என ஒருவர் உணர்வை மற்றவர் எங்கிருந்தாலும் உணர்ந்து கொள்வர்.

யார் முதலில் பிறந்தது, யார் மூத்தது என்று அவர்கள் என்றுமே ஆராய்ந்ததேயில்லை.

ராகவன், அவன் மன நிலைக்குத் தகுந்தது போல அக்கா, பாப்பா என்று மாற்றி மாற்றி அழைத்துக் கொள்வான்.

ராகவிக்கு அவன் எப்போதும் தம்பி தான்.

“பாப்பா, சீக்கிரம் வீட்டுக்கு வா. இன்னைக்கு மாலதி அக்காவை கடையை அடைக்கச் சொல்லிட்டு நீ கிளம்பி வா” என்றான், அவன் குரலில் அத்தனை அவசரம்.

“ஓகே, வரேன்.” என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக, “ஹேய் ராகவ், வீட்ல மீட் பண்ண சொன்னது இவர் இல்ல. வேற ஒருத்தர். நான் தான் ஆளை மாத்தி… ஆமா, உனக்கு எப்படி உதய் பேர் தெரியும்?” சந்தேகத்துடன் கேட்டாள்.

சத்தமாகச் சிரித்துக் கொண்டே, “எனக்கு மட்டும் இல்ல, வீட்ல எல்லோருக்கும் தெரியும். அவங்க அப்பா நடந்த குழப்பத்தைச் சொல்லி தான் பேச்சையே ஆரம்பிச்சார். உன்னோட விவரம் எல்லாம் கேட்டுட்டு, வீட்ல கலந்து பேசிட்டுத் திரும்பக் கூப்பிடுறேன்னு சொல்லிட்டுப் போனை வச்சார். இன்னும் கொஞ்ச நேரத்தில கால் வரும். நீ உடனே வா.” என்றான்.

“இதோ கிளம்பிட்டேன்” என்று போனை அணைத்து வைத்தவள், மனது சந்தோஷ மிகுதியில் துள்ளாட்டம் போட்டது.

‘ஆக, போலீஸ் சரியாகத் தான் வேலை பார்த்திருக்கிறார்’ என்று புன்னகைத்துக் கொண்டாள்.

பேச்சி முத்துவிடம் அவளைக் குறித்துச் சொன்னதன் காரணமும் விளங்கியது. அவளை அறிமுகப் படுத்தவில்லை. மாறாக, அவளைக் குறித்து அறிய, விசாரிக்கச் சொல்லி இருக்கிறான் என்று நினைக்கையில் சிரிப்பு வந்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தாள். அவளுக்காக வாசலிலேயே காத்திருந்தான் ராகவன். காரை அதன் இடத்தில் நிறுத்தி, சாவியைத் தூக்கி போட்டுக் கொண்டே திரும்பினாள்.

மனதில் இனம் புரியா பதட்டம் பரவியது.

“என்னாச்சு ராகவ்?” என்றாள்.

“ஒன்னுமில்லையே. வா, சாப்பிட போவோம்” என்று அவள் கைப் பற்றினான்.

“ராகவ்” அந்தக் குரலின் கடுமையில் அப்படியே நின்று விட்டான்.

“என்னனு சொல்லு” என்றாள். மனதில் அதுவரை நிறைந்திருந்த மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது.

“ஆச்சி, எப்ப வந்த? வீட்டுக்குள்ள வா. வாசலில் நின்னுட்டு என்ன பஞ்சாயத்து?” என்று அழைத்தார் கண்ணதாசன். பார்வையை ராகவிடம் இருந்து திருப்பி, ஐயாவை பார்த்தாள்.

அமைதியாய் வீட்டுக்குள் நுழைந்தாள்.

“முகமே சோர்ந்து போய் இருக்கு. குளிச்சிட்டு வா ஆச்சி, சாப்பிடலாம்” என்றார் விசாலாட்சி.

சோஃபாவில் இறுக்கமாய் அமர்ந்திருந்த தந்தையின் முன் போய் அமர்ந்தாள்.

“என்னப்பா? என்ன சொன்னாங்க?” என்றாள்.

அவரும் சுற்றி வளைத்துச் சமாளிக்காமல், “அவங்க வீட்ல, இந்தச் சம்மந்தம் சரி வராதுன்னு சொல்லிட்டாங்க மா” என்றார் குரல் உடைய, காலையில் மலர்ந்த முகத்துடன் வந்து நின்ற பெண்ணைப் பார்த்ததுமே அவருக்கு விளங்கி விட்டது. மகளுக்குப் பையனை பிடித்திருக்கிறது என. ஆனால், மகளுக்கானவன் அவனில்லை போல, என்ற பெருமூச்சுடன் அவளைப் பார்த்தார்.

“என்னப்பா சொன்னாங்க? ஏன் வேணாம் சொன்னாங்க?”

“அது வந்து…”

“சொல்லுங்கப்பா…”

“நாம வேற பிரிவாம். அவங்க நம்மதில் சம்மந்தம் கலக்க மாட்டாங்களாம். பழக்கம் இல்லையாம்.”

“என்னப்பா காரணம் இது? பழக்கம் இல்லையா? சம்மந்தம் கலக்க மாட்டாங்கன்னா?”

“அது ஆச்சி, அப்படி எதுவும் இல்லை. அவங்களும், நம்மளும் சம்மந்தம் கலக்கலாம். அவங்க தெரியாம சொல்லி இருக்காங்க. உங்க அப்பாக்கும் சரியா விவரம் தெரியாம பேசிட்டு வச்சுட்டான். நாளைக்கு நான் பேசுறேன் ஆச்சி. நான் சொல்றேன் அவங்ககிட்ட” என்றார் கண்ணதாசன், அவளைச் சமாதானப்படுத்தும் வகையில்,

அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

ஐபிஎஸ் முடித்து, காவல் துறையில் உயர் பதவியில் இருப்பவன், வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண் வேண்டும், ஒரே ஜாதியில், ஒரே பிரிவாக இருக்க வேண்டும் என்று காரணங்களை அடுக்குவது அவளுக்கு அபத்தமாகப் பட்டது.

தனக்கு என்று வரும் போது, படித்த படிப்பு, பார்க்கும் வேலை எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் போல என்று எண்ணிக் கொண்டாள் ராகவி.

“இல்லப்பா, நான் அவருக்குச் சொல்லிப் புரிய வைக்கப் பார்த்தேன். ஆனா, ஒரே பேச்சா முடியாது சொல்லிட்டாங்க” என்றார் சிதம்பரம்.

வீடே அமைதியில் மூழ்கியது. அனைவரும் ராகவியின் முகம் பார்த்து நின்றிருந்தனர்.

அவளும், “சரி விடுங்கப்பா. வேற வரன் பாருங்க.” என்று சொல்லத் தான் நினைத்தாள். ஆனால், மனம் முரண்டியது.

உதயின் கரம் பற்றி நெருக்கமாக நின்றதே நினைவில் வந்தது.

“ராகவி, எனக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு” அவனின் கம்பீர குரலே மீண்டும் மீண்டும் காதில் எதிரொலித்தது.

கைகளைக் கோர்ப்பதும், பிரிப்பதுமாக இருந்தாள்.

“நாகப் பதினி, நாகப்பதினி மாதிரி இல்லப்பா? பெருசா வித்தியாசம் கண்டுபிடிச்சுட்டாங்க. அவங்க காரணத்தைத் தூக்கிக் குப்பையில் போடுங்க.” எரிச்சலோடு சொன்னான் ராகவன். அவன் மனதில் உதயின் மேல் கோபம் துளிர்ப்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.

“ராகவ்…” என்றாள் திரும்பி அவனைப் பார்த்து, “குளிச்சிட்டு வா க்கா, சாப்பிடலாம்” அவளின் கையை உதறி விட்டுப் போனான்.

“போ ஆச்சி” என்று விசாலாட்சி சொல்ல, அவளும் அங்கிருந்து நகர்ந்தாள்.

“அவ்வளவு தானா?” ஒற்றைப் பார்வையில் பிடித்தத்தைச் சொன்னவன், இப்படி ஒரேடியாக மறுப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லையே. பால்கனியில் நின்று அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி இருந்தாள் ராகவி.

காலையில் அவள் தான் வேண்டும் என்று சொல்வதற்கும் சரி, இப்போது அவளை வேண்டாம் என்று சொல்வதற்கும் சரி, அவனுக்குப் பெரிதாகக் காரணங்களே தேவைப்பட்டிருக்கவில்லை என்பதை யோசிக்கையில் அவள் உதட்டில் கசப்பான முறுவல் ஒன்று வந்தமர்ந்தது.

ஆனால், அவனின் நிராகரிப்பை தாங்கிக் கொள்ள இயலாத இதயம் இலை போல உதிர்ந்து சருகாகியது.

மறுநாள் காலையிலேயே கடைக்கு வந்து விட்டாள் சுஹாசினி. நடந்ததை அறிந்து பொங்கிக் கொண்டிருந்தாள்.

ராகவி பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அமைதியாய் தன் வேலையைக் கவனித்தாள்.

“மலரே உனக்கு ஒரு கதை சொல்லவா? உலகின் மிகச் சிறிய காதல் கதை. இல்ல, இல்ல.. மிகப் பெரிய காதல் தோல்வி கதை.” ராகவியைச் சீண்ட வேண்டும் என்றே அப்படிக் கேட்டாள் அவள்.

“காலையில் சந்திந்து காதலில் விழுந்தார்கள். மாலையில் ஆளுக்கொரு பக்கமாகக் காதல் தோல்வியில் மனமொடிந்து விழுந்தார்கள். எப்படி?” என்றாள் மார்பில் கைகளைக் கட்டிக் கொண்டு. பனிமலர் தன்னுள் மூழ்கியவளாக அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“இவ்வளவு சீக்கிரம் யாரும் காதலில் விழவும் மாட்டாங்க. இவ்வளவு வேகமாக யாருடைய காதலும் தோல்வியிலும் முடியாது” ராகவியைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் சுஹாசினி.

ஏற்கனவே நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த சேலைகளை ஒவ்வொன்றாகப் பிரித்து, மீண்டும் மடித்து அடுக்க ஆரம்பித்தாள் ராகவி.

“ஐ அம் சாரி. நான் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை.” என்ற ராஜாவின் குரலில் கலைந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“அந்த நிராகரிப்பு தந்த வலி இன்னும் இருக்கு போல, ரொம்ப நேரமா அடுத்து என்ன நடந்ததுன்னு சொல்லாம, அமைதியா இருக்கீங்க. அதான்… நான் குறுக்கப் பேசினேன்” என்றான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் நினைவுகளில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தப்படி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“சட்டமும், காவல் துறையும்.. ம்ம்ம், டெட்லி காம்பினேஷன்” என்றான் சிரித்துக் கொண்டே,

“நான் சட்டம் படிச்சேனே தவிர, பிராக்டீஸ் பண்ணல. எங்கம்மான்னா எனக்கு உயிர். இப்போ அவங்க உயிரோட இல்ல. அவங்க வக்கீல், அதனால் தான் நானும் சட்டம் படிச்சேன்.” அலைகளைப் பார்த்தபடி சொன்னாள்.

“ஓ, சாரி” என்றான்.

கூட்டமாய்க் கூடடைய விரையும் பறவைகளை விழி உயர்த்திப் பார்த்திருந்தாள் அவள்.

“அப்படியே கதை சொல்லும் வேகத்தில் உங்க பேரையும் சொல்லிட்டீங்க.” குரலில் சிரிப்பு வழிய சொன்னான்.

“எஸ், ரோஜா இல்ல. நான் ராகவி.” என்றாள் நிமிர்ந்து அமர்ந்து.

கணவனின் பெயரை விளையாட்டிற்குக் கூட, மாற்றிச் சொல்ல தோன்றவில்லை அவளுக்கு, அதே போல அவன் பெயரோடு வேறொரு பெண்ணின் பெயரையும் தொடர்புப்படுத்த விரும்பில்லை. அதனாலேயே இருவரது நிஜப் பெயர்களைச் சொல்லி விட்டிருந்தாள் அவள்.

“சரி, அதை விடுங்க. நான் உங்களை ரோஜான்னே கூப்பிடுறேன்” என்றவன் தொடர்ந்து,

“என்னைக்காவது அவங்க வீட்ல ஏன் வேணாம் சொன்னாங்க. என்ன காரணம்னு உதய் கிட்ட நேரடியாகக் கேட்டு இருக்கீங்களா?” என்று கேட்டான்.

அவன் கேள்வி அவளை யோசிக்க வைத்தது. இல்லை, உதயிடம் நேரடியாக இது பற்றிப் பேசியதில்லை என்பதே அப்போது தான் அவளுக்கு உரைத்தது.

“இல்ல, அவர்கிட்ட நான் கேட்டது இல்ல” என்றாள்.

“ஆனா, அவர் இது பத்தி ஏதாவது சொல்லி இருக்காரா?”

“இல்லையே” புருவம் சுருக்கி யோசித்தபடி சொன்னாள்.

“ஒருவேளை அவருக்கு, உங்க வீட்ல தான் வேணாம்னு சொன்னதா சொல்லப்பட்டிருக்கலாம் இல்லையா? வாய்ப்பு இருக்கு தானே?” என்று அவன் வினவ, அதிர்ந்து தலையைப் பின்னுக்கு இழுத்தாள்.

“என்ன? எப்படி? இருக்குமோ?”

“உதய் இதைப் பத்தி பேசினாரான்னு யோசிங்களேன். பதில் கிடைக்கலாம்”

அவன் பார்வை தனக்குப் பின்னால் போவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். பல்லைக் கடித்தபடி கோபமாகச் சுஹாசினி நிற்பது கண்ணில் பட்டது.

“வா, ரூமுக்குப் போகலாம்” என்றாள் ராகவியைப் பார்த்து,

“நான் சொன்னதை யோசிங்க. அப்புறம் பார்க்கலாம்” எழுந்து, விறுவிறுவென்று நடந்து மறைந்தான் ராஜா.

இடுப்பில் கை வைத்து அவளைக் கடுமையாக முறைத்தாள் சுஹாசினி.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ? இவன் கூட உனக்கு என்ன பேச்சு?” கத்தினாள்.

“இது உன்னோட வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ராகவி.

error: Content is protected !!
Scroll to Top