பார்த்திபன் காதலி – 31 (3)

சத்யபாமா அத்தனை எளிதில் சம்மதிப்பதாக இல்லை.

“நான் நைட்டுச் சாப்பாட்டைப் பார்க்கறேன்” என்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.

பார்த்திபன் சோர்ந்து அமர, “உங்கம்மாக்கு‌ ஷாக் இருக்கும் இல்லப்பா? அது குறைஞ்சதும் சரியாகிடுவா. நீ மனசை போட்டு வருத்திக்காம, போய் ரெஸ்ட் எடு” என்று மகனின் தோளில் தட்டினார்.

அவனது வருத்தம் கோபத்தையெல்லாம் உணவில் காட்டாமல் நன்றாக உண்டு உறங்கி எழுந்தான்.

“மாப்ள போன் பண்ணாரா? அவங்க வீட்ல இருந்து இன்னைக்கு வர்றாங்களா என்னனு கேட்டீங்களா? பாரு, மாப்ள போன் பண்ணாரா?” என்று காலையிலேயே பரபரத்துக் கொண்டிருந்தார் காவேரி.

அன்று விரைவாகவே சரளாவை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார். கூடுதலாக மண்டபத்தில் இருந்தும் உதவிக்கு ஒருவரை வரச் சொல்லி, வீட்டை புரட்டி போட்டுச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

காலியாக இருந்த கூடத்துக்குப் புதிய சோஃபா செட் வாங்க கிளம்பினார்.

“இன்னைக்கே டெலிவரி பண்ணிடுவானான்னு கேட்கணும்ங்க. இல்லன்னா நம்ம கேட்டரிங் டெலிவரி டெம்போவை எடுத்துட்டுப் போய்க் கையோட நாமளே சோஃபாவை வாங்கிட்டு வந்துடுவோம்” என்று பரபரத்தார்.

அவர் அத்தனை செய்தும் அந்தப் பக்கமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.

“அவங்கம்மா கோபமா இருக்காங்களாம்மா. இன்னைக்கு நைட் திரும்ப அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்னு பார்த்திப் போன் பண்ணி சொன்னார்” என்று பார்கவி சொல்ல, “ஆமா, அவங்களுக்குக் கோபம் இருக்கும் இல்ல பின்ன? அதுவும் என் மேல கொள்ளை கோபம் இருக்குமே. அன்னைக்கு மண்டபத்துல வச்சு பார்த்திபன் லவ் பண்ற பொண்ணு யாருன்னு ஆளாளுக்குக் கேட்டப்போ நான் அமைதியாதானே உட்கார்ந்திருந்தேன். அவங்களுக்குக் கோபம் இருக்காம என்ன செய்யும்? அதான் என் போனை அவங்க எடுக்கல போல” என்று இயல்பாக நியாயம் பேசிய அம்மாவை புன்னகையுடன் பார்த்து நின்றாள் பார்கவி.

“அவங்க ரொம்ப நல்ல டைப் பாரு. போன முறை பொண்ணு வீடு பண்ண அராஜகத்துல அரண்டு போய் இருந்தாங்க. அதான் இப்போ சட்டுனு சரின்னு சொல்ல மாட்டேங்கறாங்க. மத்தபடி நம்மளை வேணாம்னு சொல்ல அவங்களுக்கு என்ன காரணம் இருக்கப் போகுது? சீக்கிரம் சரின்னு சொல்லிடுவாங்க” என்று மகளோடு சேர்த்து தன்னையும் தேற்றிக் கொண்டார்.

“அவங்களுக்கு ரெண்டு நாள் டைம் கொடுத்துட்டு நாமளே போய்ப் பேசுவோம்” என்று ரங்கராஜன் சொன்னார்.

அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை.

பார்கவி பார்த்திபன் மணிக்கொரு முறை அலைபேசியில் பேசி காதலை வளர்த்தார்கள். ஆனால் நான்கு நாள்கள் கடந்தும் கல்யாண பேச்சு வளரவில்லை.

சத்யபாமா தன் முடிவில் இருந்து மாறாமல் ஒரே பிடியாக நிற்க, காவேரி, கணவருடன் அவரை நேரடியாகச் சந்திக்க வீட்டுக்கே சென்றிருந்தார்.

எப்போதும் போலக் கவனிப்பில், உபசரிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பேச்சு? அது குறைந்திருந்தது. காவேரி திருமணப் பேச்சை எடுக்க, “எங்க பையனுக்கு ஊர்ல பொண்ணு ரெடி. சென்னையில பொண்ணு தர தயாரா இருக்காங்க” என்று சுற்றி வளைத்து பேசி தட்டி கழித்து விட்டார் சத்யபாமா.

காவேரி வீட்டுக்கு வந்ததும் அழுதே விட்டார்.

“என்னம்மா காவேரி நீ” என்று ஆறுதலாக மனைவியை அணைத்துக் கொண்டார் ரங்கராஜன்.

மறுநாள் காலையிலேயே பார்கவியைச் சந்திக்க அவளின் வீட்டுக்கு வந்து விட்டான் பார்த்திபன்.

“மாப்ள, வாங்க. பாரு மொட்டை மாடியில இருக்கா. நீங்க போங்க, அவளோட பேசிட்டு இருங்க. நான் காஃபி குடுத்து விடறேன்” என்று காவேரி அவனை வரவேற்று சொல்ல, அவளைத் தேடி மாடியேறி விட்டான் அவன்.

அங்கே அவளுக்காக ஒற்றைக் காகம் காத்திருக்க, அதற்கு உணவு வைத்துக் கொண்டிருந்தாள் அவள்.

காகத்தின் பார்வையும், பதிலுக்குப் பார்கவி அதனிடம் பேசுவதும் என அதைப் பார்க்கவே அவனுக்கு வெகுசுவாரசியமாக இருந்தது.

அவனது காலடி சத்தத்தில் அவனைத் திரும்பி பார்த்து புன்னகைத்தாள்.

காகம் இரையை உண்பதை பாதியில் நிறுத்தி பறக்க, “ஹே இவரு நம்ம ஆளுதான். நாளைக்கு உனக்கு இவர்தான் சோறு வைப்பார். ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இவரையும் வச்சுக்கோ.” என்று அவள் கத்த, “என்ன பாரு, காக்கா கூடப் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்க?” என்று சிரிப்புடன் கேட்டான் அவன்.

அவளின் உடை உரசும் நெருக்கத்தில் நின்று அவள் முகம் பார்த்தான்.

“அது டெய்லி எங்க வீட்டுக்கு வர்ற காக்கா. நான் அதுக்குச் சோறு மறக்காம வைக்கணும். இல்லனா கத்தி கூப்பிட்டு என்னைச் சோறு வைக்கச் சொல்லும். நான் அதுக்குச் சோறு வைக்கிறேன்னு அதுவும் பதிலுக்கு எனக்குத் தவளை, பல்லின்னு ஏதாவது கொண்டு வந்து வைக்கும். அங்க பாருங்க” என்று அவள் கைக் காட்ட, அங்கிருந்த மீன் தலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தான் அவன்.

“பாரு காக்காக்கு கூடப் பார்கவிய பிடிச்சுருக்கு” என்றான்.

அவள் கரம் மெல்ல உயர அவனது உதட்டோர குழியை ஒற்றை விரலால் தொட்டாள். அவள் கரத்தை அப்படியே கன்னத்தோடு அழுத்தி பிடித்தான் அவன்.

“பாரு பாருன்னு உன்னைக் கண்ணைச் சிமிட்டாம எவ்வளவோ நேரம் பார்த்தாலும் பத்த மாட்டேங்குதே பாரு. நான் என்ன செய்யட்டும்?” என்று அவள் கண் பார்த்துத் தீவிரமாகக் காதல் பேசினான்.

பார்கவியின் இதழ்கள் புன்னகையில் பிரிய, “பார்த்திபனுக்குப் பேச சொல்லித் தரணுமா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

“நீ எனக்குப் பேச சொல்லித் தர வேணாம். ஏன்னா எனக்குப் பேச மட்டும்தான் தெரியும். ப்ராக்டிக்கல் பாருகிட்டதான் படிக்கணும்” என்று அவள் காதோரம் குனிந்து கிசுகிசுத்தான். சட்டெனச் சத்தமாக மூச்செடுத்தாள் அவள்.

“என்னது ப்ராக்டிக்கலா?” என்று அவள் விழிகள் விரிய, “நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா பாரு? உன்னைப் பக்கத்துலயே வச்சுட்டு தூரமா இருக்க மாதிரி ஃபீல் எனக்கு. இது ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்கம்மா வீம்புக்கு நோ சொல்லிட்டு இருக்காங்க.” என்று கோபமாகச் சொன்னவன், “நான் பிரபஞ்சன் கிட்ட பேசறேன். நாம சிம்பிளா கோவில், இல்லன்னா ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.

பார்கவி திருமண மண்டபத்து உரிமையாளரின் மகள். அவளின் திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எத்தனை கனவுகள் அவளின் பெற்றோருக்கு இருக்கும்.

அவளின் பதிலை எதிர்பார்த்து, “பாரு” என்றழைத்தான் பார்த்திபன்.

error: Content is protected !!
Scroll to Top