பார்த்திபன் காதலி – 31 (2)

“என்ன அம்மாவுக்கும் பையனுக்கும் இன்னும் சண்டை ஓயலயா?” என்று அவர் சிரிப்புடன் வினவ, சன்னதம் வந்தது போலச் சட்டென்று எழுந்து நின்றார் சத்யபாமா.

“என்ன பார்த்திபா?” என்று மகனிடம் கேட்டவர், “சத்யா சூடா காப்பிக் குடுமா” என்றார் அலட்டி கொள்ளாமல்.

“காப்பி எல்லாம் யாருக்கும் கிடையாது இந்த வீட்ல. எல்லாம் அப்படியே எனக்கு மதிப்பு கொடுத்து எல்லாத்தையும் செய்றீங்க பாருங்க. உங்களுக்குக் காப்பிக் குடுக்க மட்டும் நான் ஆளா?” என்று அவர் பொரும, “சரி, காஃபி வேணாம். இந்தா இந்தக் கறியை குழம்பு வை. நைட்டு சாப்பாட்டுக்கு ஆகும். புள்ள உன் சமையலுக்கு ஏங்கி போய் வந்திருப்பான்” என்று அவர் கையில் இருந்த கோழிக் கறியை மனைவியிடம் நீட்டினார்.

“யாரு, உங்க புள்ளை என் சமையலுக்கு ஏங்கி போய் வந்திருப்பான்? நீங்க கண்டீங்க? அவன் காலையில வந்ததும் மொத வேலையா அவன் லவ் பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்கான்ங்க. நேத்து கிளம்பி இன்னைக்கு வந்தவன், வீட்டுக்கு வந்து படுத்து கூட எந்திரிக்கலங்க” என்று அங்கலாய்த்தார். அப்பா நீட்டியதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நழுவியிருந்தான் பார்த்திபன்.

சத்யபாமா கணவரிடம் சண்டை மும்முரத்தில் இருந்தவர், சிறிது நேரம் கழித்தே மகனைத் தேடினார்.

“எங்க உங்க மகனை?” என்று அவர் கத்த, “ம்மா” என்று பவ்யமாகக் காஃபி கொண்டு வந்து கொடுத்தான் அவன். அப்பாவுக்கும் கொடுத்து, தனக்கொரு கோப்பையை எடுத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்.

“உக்காரு சத்யா, சும்மா கோபத்துல குதிக்காம பொறுமையா என்ன ஏதுன்னு உன் புள்ளய கேளு.” என்று துரைராஜ் சாந்தமாகச் சொல்ல, மகன் போட்டு கொடுத்த காஃபியை கோபமாக என்றாலும் முழுதாகக் குடித்து முடித்திருந்தார்.

அவரை அமைதியாக இருக்கும்படி கண் காட்டி விட்டு, “சொல்லுப்பா பார்த்திபா. பொண்ணு யாரு? நாம எப்போ போய் அவங்க வீட்ல பேசலாம்?” என்று கேட்டார் துரைராஜ்.

“பார்கவி ப்பா” என்றான் இருவரையும் பார்த்து.

“பார்கவின்னா.. இவன் யாரைங்க சொல்றான்? நம்ம மண்டபத்து ஓனர் பொண்ணயா?” கணவரையும், மகனையும் மாறி மாறிப் பார்த்துக் கேட்டார் சத்யபாமா.

துரைராஜ், மகனையே பார்த்திருக்க, “அந்தப் பொண்ணு தான்ம்மா.” என்றான் பார்த்திபன்.

மறுகணம் சத்யபாமாவின் முகமே மாறி விட்டது.

“அந்தப் பொண்ணா? எப்படி?” என்று ஆச்சர்யம் தாங்காமல் கேட்டு விட்டார்.

“நீயி அமெரிக்காவுல இல்ல இருந்த?”

“சத்யா, போன்ல பேசியிருந்திருப்பாங்கம்மா. நீ சொல்லுப்பா பார்த்திபா. நாம எப்போ போய் அவங்க வீட்ல பேசலாம்?” என்று அப்பா கேட்டதும் அவன் முகம் விளக்கில் திரியை தூண்டியது போலப் பிரகாசமானது.

“நாளைக்கே நல்ல நாள்னு அவங்கம்மா சொன்னாங்கப்பா. அவங்க வீட்ல எல்லோருக்கும் ஓகே. நான் நம்ம வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்தேன் அவங்ககிட்ட” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சத்யபாமாவின் அலைபேசி ஒலித்தது.

காவேரிதான் அழைத்திருந்தார்.

“ஓஹோ, இவங்களுக்கு இப்போதான் என் ஞாபகம் வருதா? என் பையன் கிட்ட எல்லாம் பேசிட்டு இப்போ எனக்கு என்னத்துக்குப் போன் பண்றாங்க?” என்று கோபமாகக் கேட்டு, அழைப்பை ஏற்காமல் தவித்திருந்தார்.

“சத்யா..”

“இப்போ என்னங்க உங்களுக்கு? சும்மா என்னையே அடக்கறீங்க? நம்மகிட்ட ஒரு வார்த்தை கலந்து பேசாம அவங்க வீட்டுக்கு போய் எல்லாத்தையும் பேசிட்டு வந்திருக்கான் பெரிய மனுஷன். நம்மள ஒரு ஆளாவே மதிக்கலங்க உங்க புள்ள..”

“அப்படியில்லம்மா, நான் பார்கவிய பார்க்க போனேன். அப்படியே அவளோட வீட்டுக்கு போகவும் அவங்க அம்மாப்பா கிட்ட பேசிட்டேன். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி உங்களை மதிக்காம.. நான் பிளான் பண்ணி எதுவும் செய்யலம்மா. பிளீஸ் புரிஞ்சிக்கோங்க”

“போப்பா, பார்த்திபா.” என்று முகம் திருப்பினார். மீண்டும் காவேரியிடம் இருந்து அழைப்பு வர, அலைபேசியை ஓரமாகத் தூக்கிப் போட்டார் அவர்.

“சத்யா”

“பார்கவி பணக்கார வீட்டு பொண்ணு. அவங்க வசதிக்கும் நம்ம வசதிக்கும் ஏணி என்ன ஏரோப்ளேன் வச்சா கூட எட்டாது. இது சரி வராதுங்க” என்றார் திட்ட வட்டமாக.

“வசதியை பார்க்க இதென்ன நாம பேசி முடிக்கற கல்யாணமா? உன் பையன் ஆசைப்படுறான். நீ அதை மட்டும் மனசுல வச்சுட்டு உன் முடிவை சொல்லு” என்று துரைராஜ் அழுத்தமாகச் சொல்ல, “அவங்க நம்மாளுங்க இல்லைதானே?” என்று அவரை விட அழுத்தமாகக் கேட்டார் அவர்.

“ம்மா..” என்று பார்த்திபன் ஆட்சேபிக்க, “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுப்பா பார்த்திபா. பொண்ணு நம்ம ஆளுங்களா? ஒன்னு உங்கப்பா ஆளுங்களா இருக்கணும். இல்லையா எங்க ஆளுங்களா இருக்கணும். ரெண்டும் இல்லன்னா நான் இதுக்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரித்துச் சொன்னார்.

“என்ன சத்யா நீயி. புள்ள ஆசப்படுறான்னு சொன்னதுக்கு அப்புறமும் என்ன ஆளுங்கன்னு கேட்டுட்டு இருக்க? சாதி பார்த்தா எல்லாம் சரி வராது. இது லவ் மேரேஜ். அவங்க விருப்பம்தான் முக்கியம். நம்ம..”

“என்ன நம்ம? நம்ம விருப்பம் முக்கியம் இல்லையா உங்க பிள்ளைக்கு? நான் வேணாம்னு சொன்னாலும் அவளைத்தான் கட்டுவானா? அவன் கல்யாணத்துக்கு நான் வர வேணாமா? இல்ல, இவன் பொண்டாட்டியும் நானும் நாளைக்கு ஒரே வீட்ல இருக்க வேணாமா?”

“ம்மா, என்னம்மா நீ இப்படிப் பேசுற? உங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்ம்மா. ஆனா இந்தச் சாதியை எல்லாம் தூக்கி பிடிக்காதீங்கம்மா பிளீஸ்” என்று அவன் கெஞ்சலாகச் சொல்ல, “நான்தான் உங்களுக்குச் சாதியை தூக்கி பிடிக்கறேனா? இந்தா நம்ம வீட்டு நடு ஹால்ல வச்சு ஒரு மனுஷன் நம்ம சாதியை சொல்லி அவமானப்படுத்திட்டு போனாரே, உங்க ரெண்டு பேருக்கும் அது மறந்து போச்சா? நான் போட்டு கொடுத்த காப்பியை தொட்டு கூடப் பார்க்காம போனாரு. அவரை விடச் சாதியில நாம என்ன குறைஞ்சிட்டோம்னு..” என்று கொந்தளித்து விட்டார்.

“அம்மா” என்று அவன் எத்தனை முறை சத்தமாக அழைத்தும் அவரைச் சமாதானப்படுத்த அவனால் முடியவில்லை.

“சாதி மட்டுமா? அந்தப் போலீஸ்காரனை விடப் பார்கவி வீடு ரொம்ப வசதி. நாளைக்கு நம்மளை மதிக்க மாட்டாங்க. இப்பவே என்னை மதிக்கல அவங்க. அந்தம்மாக்கு பொண்ணு லவ் தெரிஞ்சுருக்கு. அவங்க சொல்லித்தானே நீ ஊருக்கு வந்த?” என்று பழியை மொத்தமாகத் தூக்கி காவேரியின் மேல் போட்டார்.

“கோபத்துல கண்டபடி பேசாதீங்கம்மா. நான் பார்கவிகிட்ட இன்னைக்குத்தான் லவ்வே சொன்னேன்” என்று அவன் சொல்ல, “நான் நம்ப மாட்டேன்” என்று ஒரேடியாக மறுத்து விட்டார்.

காவேரிக்கு மகளின் காதல் தெரிந்திருக்கிறது. அவர்கள் இரண்டு குடும்பமும் ஒரே இடத்தில் பல வருடங்கள் வசித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நெருக்கமாகப் பழகாமல் திடீரென்று இப்போது வந்து தன்னிடம் நட்பு பாராட்ட வேறென்ன காரணம் இருந்து விட முடியும்? என்று சந்தேகம் கொண்டு ஆணித்தரமாக அடித்துப் பேசினார்.

“நாளைக்குப் பொண்ணு லவ்வுக்குப் பேசணும்னு என்கிட்ட பேசியிருக்காங்க அந்தம்மா. நானும் லூசு மாதிரி அவங்களோட பழகி இருக்கேன்” என்று தன்னைத்தானே நொந்து கொண்டார்.

“அந்தப் போலீசு எதுக்கு அவரா நம்மள தேடி வந்து பொண்ணு கொடுக்க ரெடியா இருந்தாரு சொல்லு? உன்னை வீட்டோட மாப்பிள்ளையாக்க. வீடு வாங்கிக் கொடுத்துத் தனிக் குடித்தனம் வைக்கப் போறேன்னு எங்ககிட்டேயே சொன்னாரு இல்ல? இவங்களும் அவரைப் போலத்தானே இருப்பாங்க” என்று அவரின் கசப்பான அனுபவம் பேச, “ஒரு மோசமான அனுபவத்தை வச்சு எல்லாரையும் ஒரே தராசுல வச்சு எடை போட கூடாது சத்யா” என்று மனைவியைக் கடிந்தார் துரைராஜ்.

“இல்ல நீங்க பேசி பேசி என் மனச மாத்த பார்க்காதீங்க. பார்கவி ஒரே பொண்ணு, நம்மளை விட ரொம்ப வசதி, அவங்க நம்ம ஆளுங்களும் இல்ல. நாளைக்கு எது ஒன்னுன்னாலும் அவங்களுக்கு இவன்தான் பார்க்கணும். நம்ம பையனை நாம மறந்துற வேண்டியதுதான். அவங்க வசதிக்கு நம்மள கீழாவே பார்ப்பாங்க” என்று புலம்பினார்.

“முதல்ல அவங்ககிட்ட பேசுவோம். அப்புறமா” என்று துரைராஜ் ஆரம்பிக்க,

“அப்புறமாவும் இதே பதிலைத்தான் சொல்லுவேன்” என்று முறுக்கி கொண்டார். துரைராஜ் கரிசனத்துடன் மகனைப் பார்த்தார்.

“பார்கவி அம்மா, இம்புட்டு வருஷமா இல்லாம என்னோட வந்து நல்ல மாரியா பழகுறாங்களேன்னு நினைச்சேன். ஆனா அவங்களும் காரியம் ஆகணும்னுதான் என்கிட்ட பழகியிருக்காங்க. என்னைய ஒரு தரம் கூட அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகல தெரியுமா?”

“உன் வருத்தம் புரியுது சத்யா. அதுக்காக அவங்களைத் தப்பா பேசாத. நம்ம வீட்டுக்கு வந்தப்போலாம் உன்னைய எத்தனையோ தரம் வற்புறுத்தி அழைச்சாங்க. ஆனா நீதான் ஏதேதோ காரணம் சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு போகல” என்றார்.

சத்யபாமா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, அம்மாவின் கையைப் பிடித்தான் பார்த்திபன்.

அவன் பார்கவியைப் பல வருடங்கள் கழித்துப் பிரபஞ்சன் திருமணத்தில் சந்தித்தது தொடங்கி, அவளிடம் பேசியது, பழகியது, அந்த நேரம் அவளிடம் நெருங்கி பழகாதே என்று நண்பன் அவனை எச்சரித்தது. அதனால் அவள் மேல் நேசம் துளிர்த்தும், அவளை விட்டு தள்ளிப் போனது, வீட்டில் பார்த்த பெண்ணுக்குச் சம்மதம் சொன்னது. அந்தத் திருமணம் நிற்கும் முன்பே அவன் மனம் பார்கவியின் பக்கம் சாய்ந்தது என அனைத்தையும் அவரிடம் ஒப்பித்தான்.

“பார்கவிக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்மா. எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருக்கும்மா.” என்று சிறுவனைப் போலக் கூச்சத்துடன் சொல்லி அம்மாவின் முகத்தை ஆவலே உருவாகப் பார்த்திருந்தான்.

“அவங்க வீட்ல பேசி பார்த்திட்டு உங்க முடிவை சொல்லுங்கம்மா” என்றான்.

துரைராஜ் மகனின் ஆசைக்குத் தடை போடுவதாக இல்லை. தனக்குச் சம்மதம் எனத் தெளிவாகச் சொல்லி விட்டார்.

error: Content is protected !!
Scroll to Top