உதய ராகம் – 4 (1)

“என்ன சொல்றீங்க? அவர் உதய்னா, அப்போ இவர்?”

அந்தப் பெண் தன் அருகில் நின்றவனை, குழப்பத்துடன் பார்த்தாள்.

“உதய் பிரகாஷ்?” என்று உதயை பார்க்காமல், ராகவியைப் பார்த்துக் கேள்வியாக நிறுத்தினாள் அந்தப் பெண்.

“எஸ்” என்று பதில் சொன்னவனின் கண்கள், தன் கைகளை இறுகப் பற்றியிருந்த ராகவியின் முகத்தைக் கூர்ந்தது.

“அப்போ, நீங்க?” என்று தன் அருகில் நின்றவனை, திரும்பி பார்த்து கேட்டவளை, பாவமாகப் பார்த்தாள் ராகவி.

எப்படி இந்தக் குழப்பம் நேர்ந்தது என்றே ராகவிக்குப் புரியவில்லை. ஆனாலும், நடந்த குழப்பத்திற்கு அவள் வருந்தவும் இல்லை.

உதயின் கரத்தை இறுக பற்றி, அவனை நெருங்கி நின்று, “இவன் என்னவன்” என்று அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டிருந்தாள்.

சன்ன சிரிப்புடன் தானும் அவளை நெருங்கி நின்றான் உதய்.

“சாரி, இவ்வளவு நேரமும் உங்ககிட்ட பேர் கேட்கவே தோணல. இப்போ சொல்லுங்க” என்று அந்தப் பெண் தன் அருகில் இருந்தவனிடம் விசாரணையில் இறங்க, திரும்பி உதயை பார்த்தாள் ராகவி.

மறுநிமிடமே,

“சாரி, உங்களைத் தொல்லைப் பண்ணிட்டோம். மிஸ்டர் உதய், எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு. பிளீஸ், தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க, உங்க வீட்ல சொல்லிடுங்க. உங்களுக்கு ஆட்சேபனை இருக்காதுன்னு நினைக்கிறேன்.”

பிணைந்திருந்த இருவரின் கரங்களையும் பார்த்து, வெகு இயல்பாகச் சொல்லி விட்டு, தான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக, அருகில் நின்றவனுடன் கைக் கோர்த்தப் படி, அப்பெண் படியிறங்கி கூட்டத்தில் கலந்து மறைந்து போனாள்.

இவர்கள் இருவரும் அப்படியே அசையாமல் ஆணி அடித்தது போல நின்றிருந்தனர்.

ராகவியின் மனதில் பயப் பறவை ஒன்று மெல்ல ரெக்கை விரிக்கத் தொடங்கியது.

ராகவன் அவளிடம் மாப்பிள்ளை பற்றிச் சொல்லும் போதே யாரை பார்க்கச் செல்கிறோம் என்று பெயரைக் கூடக் கேட்காமல் வந்த தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள் அவள்.

போலீஸ் என்றதும் அவளுக்கு அனைத்தும் மறந்திருந்தது. அப்போது, அந்தத் தகவல் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஒரு காலத்தில் அவளது கனவாக இருந்தது, இன்று கணவனாகப் போகிறவன் போலீஸாக இருக்கிறான் என்றதும் மற்ற விஷயங்களைச் செவிக் கொடுத்து கேட்க கூடத் தோன்றவில்லை அவளுக்கு. மேலும், அங்கு அவளுக்காகக் காத்திருந்தது அவன் மட்டும் தானே.

இதைத் தான் கடவுளின் முடிச்சு என்பதா? விதி? டெஸ்டினி? அவளின் கேள்விகளுக்கு, “ஆம், அப்படித் தான்” என்று பலமாகத் தலையாட்டியது அவள் மனது.

“ம்க்கும்” தொண்டையைச் செருமி அவள் கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான் உதய்.

“நான், நான்.. நீங்க..” தடுமாறினாள்.

“உனக்குத் தான் என் பேர் தெரியாது ராகவி. ஆனா, எனக்குத் தெரியுமே. நான் பார்க்க வந்த பொண்ணு பேரு ராகவி இல்லை. அதனால, நீ உன் பேர் சொல்லும் போதே எனக்குத் தெரியும். எங்க வீட்ல சொன்ன பொண்ணு நீயில்லைன்னு. ஆனா, உன்னைப் பார்த்ததும் மனசில சின்னதா சலனம். அதான், அமைதியா இருந்துட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னான் அவன். அதிர்ச்சியில் விழிகள் விரிய உறைந்து நின்றாள் ராகவி.

இறுக பற்றியிருந்த அவள் கரத்தில் இன்னும் இறுக்கத்தைக் கூட்டி, “ராகவி” என்றான்.

“ஆங், என்ன சொன்னீங்க?” அவன் முகம் பார்த்தாள்.

தனக்காக வீட்டினர் பார்த்தவன் இவனில்லை என்பதே அவளின் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.

‘இப்போது அப்பா, ஐயா, ஆயாவிடம் என்ன சொல்வது? நீங்கள் சொன்னவன், இவன் இல்லை. ஆனால், எனக்கு இவனைப் பிடித்திருக்கிறது என்று எப்படிச் சொல்வாள்?

எப்படியும் கீழே இறங்கினதும் விசாரிப்பார்கள். என்னவென்று சொல்லி சமாளிப்பது?’

கேள்விகள் குறுக்கும் மறுக்குமாக அவள் மனதில் வலம் வர, அப்படியே அவனை நிமிர்ந்து பார்த்தாள் ராகவி.

அவளது கரத்தை மென்மையாக விலக்கி விட்டு, அவள் முன்னால் வந்து நின்றான் உதய்.

“ராகவி, என்னைப் பார். ரொம்ப வித்தியாசமான சந்திப்பு இல்ல நம்மளோடது? ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத் தான் ரொம்பச் சந்தோசமா ஃபீல் பண்றேன். எனக்கும் உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தவன்,

“நான் எங்க வீட்ல பேசி, உங்க வீட்ல பேச சொல்றேன். அவங்க பேசுற நேரத்தில நாமளும் பேசி, ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலாம். இப்போ ரொம்ப யோசிச்சு குழப்பிக்காத. ரிலாக்ஸ். எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றான்.

‘எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்று தான் அவளும் நம்பினாள்.

அவளது மனக் கலக்கம் புரிந்து, சிறிது நேரம் நின்று அவளுடன் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான். அவள் மெல்ல இயல்புக்கு வந்து அவனுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“ராகவி, எனக்குக் கொஞ்சம் அவசர வேலை இருக்கு. நான் கிளம்பணும். அடுத்த அரைமணி நேரத்தில் என் டீம் கூட, நான் இருந்தே ஆகணும். ஏற்கனவே மேடையேறி தலையைக் காட்டிட்டேன். உனக்காகத் தான் இவ்வளவு நேரம் இங்க இருந்தது. இனியும் முடியாது. கிளம்பட்டா? பிளீஸ்” கையைத் திருப்பி மணி பார்த்து, மொபைலில் எதையோ டைப் செய்து கொண்டே கேட்டான் உதய்.

“ம்ம், ஓகே” தயக்கத்துடனே விடைக் கொடுத்தாள்.

“ஒரு நாலு மணி நேரம் கழிச்சு ப்ரீயாகிடுவேன். முதல் வேலையா அப்பாகிட்ட பேசிடுறேன். அவரை உங்க வீட்ல இன்னைக்கே பேச சொல்றேன். சாயங்காலம் எல்லாம் சரியாகி இருக்கும். ஓகே?” என்றான்.

அவள் பதிலுக்கு,

“எப்படிப் பிடிச்சது?” என்றாள் அவன் எதிர்பாரா நேரத்தில்,

“என்ன?” என்றான் அவளது கேள்வி புரியாமல்,

“இல்ல. என்னை எப்படிப் பிடிச்சது? எனக்கும் உங்களை எப்படிப் பிடிச்சது?” அவன் முகம் பார்த்து அவள் கேட்க, மெலிதான முறுவல் ஒன்று அவன் முகம் நிறைத்தது. மீசையோடு சேர்த்து மேலுதட்டை கடித்தவன், தீவிரமான முகபாவத்துடன் அவளருகில் வந்து நின்றான்.

“ஒருத்தரை பிடிக்காம போகத் தான் காரணங்கள் வேணும் ராகவி. பிடிக்கக் காரணமே தேவையில்லை. லவ் அட் முதல் பார்வை. கேள்வி பட்டது இல்ல?” சிரிப்புடன் கேட்டான்.

“ஹான்…” தலையை மேலும் கீழுமாக அசைத்து கொண்டிருந்தாள் ராகவி. வலக் கரத்தின் சுண்டு விரல் கொண்டு அவள் முகத்தில் விழுந்த முடி கற்றைகளை விலக்கி விட்டவன்,

“வீட்ல பார்த்து, பேசி நிச்சயிக்கிற திருமணங்கள் பெரும்பாலும் இப்படித் தானே முடிவாகுது ராகவி? முதல் பார்வையில், முதல் சந்திப்பில் பலருக்கு பிடிச்சு தானே போகுது. அது போலத் தான் நமக்கும். பார்த்தோம், பேசினோம். பிடிச்சுக்கிட்டோம். அடுத்துக் கட்டிக்கலாம். கட்டிக்கிட்டதுக்கு அப்புறமா, ஏன் பிடிச்சதுன்னு காரணங்களைப் பொறுமையா, அவசரமில்லாம ஆராயலாமே” என்றான்.

அவன் சொன்னதற்குச் சிரிப்பாள், குறைந்தபட்சம் புன்னகையாவது வரும் என்ற எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்க்க, இப்போதும் தலையைத் தான் அசைத்து வைத்தாள் ராகவி.

“ராகவி, என்னாச்சு?” என்றான்.

“வீட்ல என்ன சொல்லுவாங்க?” என்றாள் அவள் தயக்கத்துடன்,

“ஓகே சொல்லுவாங்க. இப்போ சிரி. பிளீஸ்” என்றான் குரலை தணித்து, மெலிதாகப் புன்னகைத்தாள்.

“வரேன் ராகவி”

அதற்குப் பின் அவன் அதிக நேரம் அங்கிருக்கவில்லை. அவளுடன் இணைந்து கீழே இறங்கி வந்தவன், அவள் கரம் பற்றிப் பார்க்கிங் நோக்கி நடந்தான். அங்கே அவனுக்காகக் காரும், டிரைவரும் காத்திருந்தனர்.

“இது பேச்சி முத்து. என்னோட சாரதி.” என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.

அவருக்கு எப்படியும் நாற்பத்தைந்து வயசு இருக்கும் என்று சொல்லியது அவர் முகம். இரு கரம் கூப்பி, “வணக்கம் சார்” என்றாள்.

“வணக்கம் மா” என்றவர், கேள்வியாக உதயை பார்க்க, அவளருகில் வந்து நின்று, “எனக்கு ரொம்ப வேண்டியவங்க முத்து. பேரு, ராகவி. கலெக்டர் நகரில் ஜவுளி கடை வச்சுருக்காங்க. வீடும் அங்க தான்” என்றான்.

“நல்லது தம்பி” என்றவர், அவளைப் பார்த்து, “அப்போ வரேங்க மேடம்” என்று விட்டு அவனுக்காகக் காரின் கதவை திறந்து விட்டார்.

“சீக்கிரம் பார்க்கலாம் ராகவி. இப்போ பை” என்று காரில் ஏறினான் அவன்.

அவன் கார் நகர்ந்து மறையும் வரை, அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள் ராகவி.

அவளது மோன நிலையைக் கலைத்தது அவளின் அலைபேசி. அதை எடுத்து காதிற்குக் கொடுத்தாள்.

“சொல்லு சுஹா?”

“………….”

“இங்க பார்க்கிங்கில் இருக்கேன். இதோ வரேன்” என்று விட்டு மீண்டும் படியேறினாள்.

தோழிகள் எத்தனை தோண்டி துருவி கேட்டும் எதையும் சொல்லி விடவில்லை அவள்.

“என்ன ஆச்சி? பையன் எப்படி?” என்று கேட்ட ஆயாவிடமும், “என்னடா?” என்று தோளை தட்டிய அப்பாவிடமும், “அவங்க வீட்ல இருந்து பேசுவாங்களாம் ப்பா. எனக்கு இப்போ கடைல முக்கியமான வேலை இருக்கு. நைட் வந்து எல்லாத்தையும் சொல்றேன். இப்போ கிளம்பறேன். மாலதியும், புவனாவும் தனியா எப்படிச் சமாளிக்கறாங்களோ தெரியல” என்றபடி, அங்கிருந்து விலகி தன் வண்டியை நோக்கி நடந்தாள் அவள்.

கடையைக் காரணம் காட்டிய பின் அவளை யாரும் தடுக்கவும் இல்லை.

“பார்த்து போ ஆச்சி, நானும் வரவா?” என்றார் விசாலாட்சி.

“வேணாம் ஆயா, கல்யாணத்துக்கு வந்ததே உங்களுக்கு அலைச்சலா இருக்கும். நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. நான் கடையைப் பார்த்துக்கறேன்” என்று கையாட்டி விட்டு காரை கிளப்பினாள்.

ஒரு கோணல் புன்னகையுடன், புருவம் உயர்த்தி விடை கொடுத்தான் அவளோடு ஒட்டிப் பிறந்த இரட்டை ராகவன்.

“நீங்க ரெண்டு பேரும் இரட்டையர்களா?” என்ற உதயின் கேள்வி நினைவில் வந்து அவளைப் புன்னகைக்க வைத்தது.

அன்று முழுவதும் மலர்ந்த முகமாகவே சுற்றினாள்.

error: Content is protected !!
Scroll to Top