பார்கவியின் விரிந்த விழிகள் அவன் மேலிருந்து இம்மியும் விலகவில்லை. இமைகளைச் சிமிட்டினால் மறைந்து விடுவானோ என்பது போல இமைக்க விரும்பாமல் நிலைத்த பார்வையுடன் நின்றிருந்தாள்.
“நான் சொன்ன அதே பதிலை எனக்குச் சொல்லி, நான் பண்ண அதே தப்பை நீயும் செஞ்சுடாத பாரு” என்று குறும்பு புன்னகையுடன் கெஞ்சினான். அந்த உதட்டோர குழியில் விழுந்தது அவள் பார்வை.
புருவங்களை உயர்த்தி என்னவென்று கண்களால் வினவினான். சட்டெனப் பார்வையைத் தாழ்த்தினாள்.
“பாரு பாருன்னு நீ பேசுற வரை பொறுமையா என்னால காத்துட்டு இருக்க முடியாது பாரு.” என்று அவனின் குரலின் தொனியே மாறிட, “உங்கம்மா உங்களுக்குப் பொண்ணு பார்த்திருந்தாங்க இல்ல?” என்று கேட்டாள்.
“இப்போ அது ரொம்ப முக்கியம்” என்று அவளை முறைத்தான்.
“இப்படித்தான் என்கிட்ட க்ளோஸா பேசுவீங்க, அப்புறம் என் ஃப்ரெண்ட் பிரபஞ்சனோட ஒய்ஃப் பிரியதர்ஷினியோட ஃப்ரெண்ட் இவங்கன்னு, என்னை யாரோ ஒருத்தி போல இன்ட்ரோ கொடுப்பீங்க. என்னால இன்னொரு ஹார்ட் பிரேக்லாம் தாங்க முடியாது பார்த்திபன். என்னை விட்டுருங்க பிளீஸ்” என்று அவனை விட்டு இரண்டடி பின்னகர்ந்து போனாள்.
மறுகணம் அவள் உண்டாக்கிய இடைவெளியை இல்லாமல் செய்திருந்தான் அவன்.
அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவளின் காயம் பெரிது. ஆனால் அவனது காரணங்களைச் சொன்னால் புரிந்து கொள்வாள்தானே?
“உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லியிருந்தேனே? என்னன்னு யோசிச்சியா?” அவன் கேட்டதும் உதட்டை பிதுக்கினாள். அவன் பார்வை அவள் உதட்டில் நிலைத்துப் பின் கண்களுக்குத் தாவியது.
“பாரு, உன்கிட்ட பேச நான் இவ்வளவோ கஷ்டப்படுவேன்னு யாராவது என்கிட்ட சொல்லியிருந்தா சத்தமா சிரிச்சிருப்பேன் நான்” என்று புலம்பி ஆழ்ந்த மூச்செடுத்தான்.
அவனையே இமைக்காமல் அமைதியாகப் பார்த்திருந்தாள் அவள்.
“எனக்கும் உன்னைப் பிடிக்கும் பார்கவி. பிடிக்கும்னா பிடிக்கும். அதுக்கு வேற அர்த்தமெல்லாம் என் மூளை யோசிக்கல. சின்ன வயசுல இருந்தே உன்னைத் தெரியும். உன்னை வேற கண்ணோட்டத்தில் நான் பார்த்ததே இல்ல. உன் அழகு..” என்றதும் அவள் விழிகள் அதிர்ந்து விரிய, “என் கண்ணு முன்னாடியே நீ இருந்ததால உன்னை ரொம்பச் சாதாரணமா பார்த்து பழகி கடந்து போயிட்டேன்னு நினைச்சேன் பாரு. ஆனா அது உண்மை இல்ல. என்னோட அடி மனசுல நீ ஆழமா பதிஞ்சுருக்க. ஆனா எனக்கு நானே போட்டுகிட்ட தடையால உன்னை விட்டு தள்ளியே நிற்க வேண்டிய சூழல். உன் மேல ஈர்ப்பு வந்தது நிஜம். நான் உன்னைப் பார்த்தது, ரசிச்சது, பழகினது, ஃபிளர்ட் பண்ணது எல்லாம் நிஜம். ஆனா அதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டு போக ஏராளமான தடைகள் நம்ம கண்ணுக்கு தெரியாமலே என் முன்னாடி இருந்திருக்கு. இப்போ யோசிச்சா எல்லாமே அபத்தமாப் படுது. ஆனா அன்னைக்கு என்னை அறியாம உன்கிட்ட இருந்து நான் விலகிட்டேன் பாரு.” என்றான்.
“ஏன்? பிரபஞ்சன் அண்ணா என்கிட்ட பேச கூடாதுன்னு உங்ககிட்ட சொன்னாங்களா?” என்று அவள் சரியாகக் கணித்துக் கேட்க, அவளை மெச்சுதலாகப் பார்த்துப் புன்னகைத்தான்.
“யாரு என்ன சொன்னாலும் நான் தெளிவா இருந்துருக்கணும் பாரு. என் மனசுக்கு நான் நியாயமா இருந்திருக்கணும். எனக்கானவ நீ என் கைக்கு எட்டுற தூரத்துல இருந்திருக்க. ஆனா நான் உன்னை விட்டு விலகி போனாலும்.. நீயில்லாம வாழவே முடியாதுன்னு உணர்ந்து திரும்பி உன்கிட்டேயே வந்திருக்கேன்” என்றான். அவள் பேசத்தான் நினைக்கிறாள். ஆனால் வார்த்தைகள் வசமாகவில்லை.
அவனையே கூர்ந்து நோக்கும் அவளின் பழுப்பு நிற விழிகளில் தொலைந்து கொண்டிருந்தான் அவன். அவள் அழகி என்பதெல்லாம் அக்கணம் அவன் கண்களுக்குப் பொருட்டாகப்படவில்லை. இதோ என் முன்னே நிற்பவள் என் மனத்தைக் கவர்ந்தவள், என்னை நேசிப்பவள், எனக்கானவள் என்ற உரிமையும் ரசனையும் அவன் கண்களில் இருந்தது.
“எங்கம்மா பார்த்திருந்த பொண்ணை எப்பவோ வேணாம்னு சொல்லிட்டேன் பாரு. ரொம்பத் தெளிவா நான் லவ் பண்ற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன்” என்றான்.
“என்ன அப்படிப் பார்க்கற? உன்கிட்ட நான் பேச நினைச்ச முக்கியமான விஷயம் அதுதான்” என்றான் அவள் கண்களில் இருந்து கண்களை விலக்காமல்.
“எது?” என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கேள்வியாக்கினாள்.
“இது” என்று கண் சிமிட்டி, ஆள்காட்டி விரலால் இருவரையும் சுட்டினான்.
“இது எப்போ?” என்று அதிர்ச்சியும் நம்ப இயலாத ஆச்சரியமுமாக அவள் கேட்க, “ஹே ரொம்பப் பண்ணாத பாரு. நான் உங்கிட்ட பேசுனது வெறும் டைம் பாஸ்க்குன்னு நீ நினைச்சியா? இல்ல ஜஸ்ட் சிக்கன் குழம்பு ரெசிபி கேட்க பேசுனேன்னு நினைச்சியா? நான் உன்கிட்ட கேட்டது காதல் ரெசிப்பிப் பார்கவி” என்றான். அவன் உதடுகள் ஒரு பக்கமாக வளைய, மீண்டும் அவள் பார்வை அந்த உதட்டோர குழியில் போய் நின்றது.
கன்னத்து குழி ஒருவித அழகென்றால் இந்த உதட்டோர குழி அவனுக்கு அதீத கவர்ச்சியைத் தந்தது. பிரியம் கொண்டவனைப் பல மாதங்கள் கழித்துப் பக்கத்தில் பார்க்கிறாள். பாவையின் பார்வை அவன் மேலிருந்து நகர மறுத்தது. அவள் சொல்லாத பதிலை அவளின் விழிகள் அவனுக்கு அப்பட்டமாக மொழி பெயர்த்து கொண்டிருந்தன.
“உன் குழப்பம் எனக்குப் புரியுது பார்கவி. இன்பாக்ட் உண்மையைச் சொல்லணும்னா உனக்கு இருக்க இந்தக் குழப்பம்தான் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தது. திடீர்னு இந்தப் பொண்ணு ஏன் என்கிட்ட வந்து இப்படிப் பேசினான்னு நான் ஷாக்கானது உண்மை. எங்க வீட்ல பிரபாவதியை பேசினப்போ, நான் உன்கிட்ட சொன்ன மாதிரி அவளைப் பிடிச்சுதான் சம்மதம் சொன்னேன். அது இல்லைன்னு நான் மறுக்கவே மாட்டேன்.” என்றவன் அப்படியே நிறுத்தி அவளையே பார்த்தான்.
“சொல்லுங்க” என்றாள்.
“இப்போ மட்டும் பேச்சு வருமே உனக்கு?” என்று குறுநகையுடன் வினவினான்.
“ம்ம். உங்களுக்கு அவங்களைப் பிடிக்கும்னு முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கீங்க. இப்போ என்னைப் பிடிக்கும்னு சொல்றீங்க. அவங்கள பிடிச்ச உங்களுக்குத் திடீர்னு எப்படி என்னைப் பிடிச்சதுன்னுதான் சந்தேகம் கேக்கறேன்.” என்றாள் ஆழ்ந்த அமைதியுடன்.
“சாரி பாரு. அந்தப் பொண்ணுக்கு முன்னாடியே எனக்கு உன்னைத்தான் பிடிக்கும்னு நான் ரியலைஸ் பண்ணல. அது என் தப்புத்தான். எல்லாரோட லைஃபையும் நான் ரொம்பக் காம்ப்ளிக்கேட் பண்ணிட்டேன். அந்தப் பொண்ணுக்கு வேற ஒருத்தர் கூடக் கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க கல்யாணத்தை நிறுத்துறதுக்கு முன்னாடியே நான் நிறுத்துற ஐடியாலதான் இருந்தேன். ஆனா அவங்களே நிறுத்திட்டாங்க” என்று அதற்கான காரணங்களைச் சொன்னான். அவளுக்கு நிரம்ப அதிர்ச்சி.
“சாரி” என்றாள் மனதார.
“இட்ஸ் ஓகே. விடு. எனக்கெல்லாம் ஆவணும்” என்று சொல்லி கசப்பாகச் சிரித்தான்.
“அவங்களை மறக்க..”
“வேற ஒருத்தன் பொண்டாட்டிய நான் ஏன் நினைக்கப் போறேன் பாரு. அப்படி மறக்க முடியாத அளவுக்கு எல்லாம் என் மனசுல அந்தப் பொண்ணு பதியல. அந்தப் பொண்ணு சந்தோஷமா, நிம்மதியா நல்லா இருந்தா போதும் எனக்கு” என்றான்.
“அன்னைக்கு எனக்கு இருந்த மனநிலை என்ன தெரியுமா? எனக்குப் பிடிச்ச ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு, அவளைச் சந்தோஷமா வச்சுட்டு, அவளோட சந்தோஷமா வாழணும்னு கனவு கண்டுட்டு இருந்தேன். அப்போதான் என் லைஃப்ல நீ வந்த. உன் லவ்வ சொன்ன.. அப்பப்பா யாரு சாமி இவன்னு என்னைப் பிரம்மிக்க வைச்ச. என்னை நேசிக்கிற ஒருத்தி அந்த ஃபீல் இருக்கே, அது பெரும் போதை பார்கவி” என்று அவளின் கைப் பிடித்தான்.
அவள் உடலில் ஓடிய சிலிர்ப்பை அவனால் உணர முடிந்தது.
“பாரு, இதைத்தான் சொன்னேன்” என்று அவளின் விரல்களைக் கோர்த்துக் கொண்டான். அவள் விலக்க முயன்றாலும் விடவில்லை.
“அன்னைக்கு ஜவுளி கடையில வச்சு நான் உன் முன்னாடி வந்து நின்னப்ப கண்ணு கலங்க என்னைப் பார்த்துட்டு நின்ன. அந்த நிமிஷத்தை ஆயுளுக்கும் மறக்க மாட்டேன். உன்னோட அந்த முகம் இப்பவும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு பாரு. நான் நேசிக்கறவளோட நல்லாருப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ நினைச்சிருந்தா என்னை மறந்து கடந்து போய் இருக்கலாம். ஆனா இப்பவும் உன் கண்ணுல எனக்கான அன்பு தெரியுது. இந்தப் பார்கவியின் பிரியத்துக்காக, பார்வைக்காக என்ன வேணாலும் செய்யலாம்னு என் மனசு அடிச்சு சொல்லுது பார்கவி. நான் என்ன செய்யட்டும்?” என்று அவளிடமே கேட்டான்.
“உன்னை அப்படிக் கண்ணீரோட பார்த்த அன்னைக்கு உன்னைச் சிரிக்க வச்சு பார்க்கணும் போல இருந்தது” என்றான். அவள் இதழ்கள் தாமாகப் புன்னகையில் பிரிவதை கண்டு புன்முறுவல் பூத்தான்.
“அந்தப் பரதேசி.. அவனைப் பத்தி பேச கூட விரும்பல. ஆனா பேசித்தான் ஆகணும் இல்ல?” என்று கேட்டு, பிரபஞ்சன் தன்னிடம் பாரி வேந்தனை பற்றி விசாரிக்கச் சொன்னது, தான் உண்மையைத் தெரிந்து கொண்டும் தாமதித்தது என எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்தான்.
“என்னால உன் லைஃப்ல பிரச்சினை வரக் கூடாதுன்னு நான் முழுசா உண்மையைத் தெரிஞ்சிட்டு வருவோம்னு வெயிட் பண்ணேன். ஆனா அதுக்குள்ள.. சாரி பார்கவி” விரல் கோர்த்திருந்த அவள் கையைத் தன் நெஞ்சில் பதித்து மன்னிப்பை வேண்டினான்.
“அவன் எப்படி இருந்தாலும் என்னை ஏதாவது செஞ்சிருப்பான். அவங்க அக்கா வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டு போய் இருந்தான் ஒரு டைம். அந்த இன்சிடென்ட் நடந்த அன்னைக்கு…”
“வேணாம் பாரு. அதைப் பத்தியே பேச வேணாம்”
“பார்த்தி, அவன் பண்ண காரியத்துக்கு அவன்தான் அவமானப்படணும். நான் இல்ல” என்றாள் அழுத்தமாக.
“அச்சோ பாரு. அந்தப் பரதேசிய அடிச்சு அடைச்சு வச்சுருந்தியே. மறக்க முடியுமா? அவனைப் பத்தி பேசி நீ டென்ஷனாக வேண்டாமேன்னு சொன்னேன்” என்று விளக்கம் கொடுத்தான்.
“இல்ல. அன்னைக்கு என்னை அவங்க அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போறதா இருந்தான். சோ அவனுக்குக் கண்டிப்பா ஏதாவது பிளான் இருந்திருக்கும். தேவையில்லாம நீங்க உங்களை ப்ளேம் பண்ணிக்காதீங்க” என்றாள். அவள் கரத்தை இன்னும் இன்னும் அழுத்தமாகப் பற்றினான்.
“எனக்கானவள எங்கயோ தொலைக்க இருந்தேனே பார்கவி. நீயில்லாம நிம்மதியா என்னால வாழ்ந்திருக்கவே முடியாதுனு கடல் கடந்து போய் உணர்ந்து வந்திருக்கேன் நான். என்னை நேசிக்கிற ஒருத்தி. எந்த நிலையிலும் என்னைக் கடந்து போக முடியாத ஒருத்தி. உன்னைப் பத்தி நினைச்சாலே எனக்கு மூச்சடைக்குது. எனக்கொரு வாய்ப்பு கொடுன்னு கெஞ்சல்லாம் எனக்கு வயசு இல்ல பார்கவி. பிளீஸ் என்னைக் கல்யாணம் பண்ணிட்டு என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோ. நான் தாராளமா ஏத்துக்கறேன். ஆனா முடியாதுன்னு மட்டும் சொல்லி என் மனசை உடைச்சுடாத பாரு” என்று கெஞ்சுவதாகப் பெயர் செய்து கட்டளையாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“நமக்குள்ள லவ்லாம் வருமா வராதான்னு வாழ்ந்து பார்த்துடுவோம். என்ன சொல்ற? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அவள் கையை விட்டுவிட்டு முகத்தைக் கையில் ஏந்தினான்.