பார்த்திபன் காதலி – 30 (2)

“நான் எங்கப்பா பார்க்கற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லியிருக்கேன்” என்றாள் தீவிரமாக.

“அவ்ளோதானே? விடு. மாமனாரை கரெக்ட் பண்ணிடுவோம்” என்று கண்ணடித்தான்.

“அவரைக் கரெக்ட் பண்ணாலும்.. என் பொண்ணு கேட்டுட்டு சொல்றேன்னுதான் சொல்லுவார்” அவள் கண்களில் மின்னிய சிரிப்பை கண்டவன், “அவர் பொண்ணு எப்போவோ எனக்கு ப்ரொபோஸ் பண்ணிடுச்சுங்க பார்கவி மேடம். நானும் ஓகே சொல்லிட்டேன். இனி எங்க லவ் மேட்டரை வீட்ல சொல்லி கல்யாண தேதி குறிக்கணும். அவ்ளோதான்” என்றான் புன்முறுவலுடன்.

“தன்னெஞ்சறிவது பொய்யற்க” அவள் மனத்தை அவளை விட நன்றாக வேறு யார் அறிவார்? அவளால் அவளிடமே பொய் சொல்ல சத்தியமாக முடியாது.

அவன் மேல் அவளுக்கு அதீத கோபம் உண்டு, வருத்தம் உண்டு. ஆனால் அதையெல்லாம் விட அவன் மேலான பிரியம் அதிகம். பிடித்தவருடன் வாழ முடியாமல் போகும் வலி அவளை விட யாருக்கு அதிகமாகத் தெரியும்?

அவன் அவளையே இமைக்காமல் பார்த்திருக்க, அவள் தலை மெதுவாகச் சம்மதமாக அசைந்தது.

“நான் பேச்சு மாற மாட்டேன் பார்கவி. நீ கல்யாணத்துக்கு அப்புறம் என்னை என்ன வேணாலும் செஞ்சுக்கோ” என்று தன்னை இப்போதே அவளிடம் முழுமையாக ஒப்படைத்தான்.

அவள் புன்னகையில் பிரிந்த உதடுகளுடன் அவனை முறைக்க, “இதுக்கு மேலலாம் நல்லவனா என்னால நடிக்க முடியாது பாரு” என்று அவளை நெருக்கமாக இழுத்தான். அவள் அதிர்ந்து அவனை ஏறிட, அவள் கண்களை ஊடுருவி புன்னகைத்து, அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றினான்.

அவன் உதட்டு வரிகள் ஈரமாய் அவள் நெற்றியில் பதியும் அளவுக்கு அழுத்தமாக முத்தமிட்டு நிமிர்ந்தான். அவன் இட்ட முத்தத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டாள். மனது இதமாக உணர, இதயத் துடிப்பு இனிமையாக எகிறியது.

மழை மெல்லியதாகத் தூற தொடங்க, அவர்களைச் சுற்றி இருள் கவிய தொடங்கியது.

“இரு, நமக்குக் காஃபி ஆர்டர் பண்றேன்” என்று அவனது அலைபேசியை எடுத்து நண்பனை அழைத்தான்.

இரண்டாம் நிமிடம் பிரபஞ்சன், பிரியதர்ஷினி இருவரும் அங்கிருந்தார்கள்.

அவர்களின் பார்வை அவள் மேல் ஆர்வத்துடன் பதிய, “பார்கவி அப்பா கிட்ட போய்ப் பொண்ணு கேட்க போறேன் பிரபா. நீயும் வர்றியா?” என்று நண்பனை துணைக்கு அழைத்தான். அதன் வழியே பார்கவி திருமணத்துக்குச் சம்மதித்து விட்டாள் என்ற முக்கியச் செய்தியை அவனுக்குக் கடத்தினான்.

பிரபஞ்சன் பற்கள் தெரிய புன்னகைத்தான்.

“ஏன்ம்மா பார்கவி, போயும் போயும் இவனையா கல்யாணம் பண்ண போற?” என்று அவன் கேட்க, “அடப்பாவி பிரபா. உன்னை எனக்கு ஹெல்ப் பண்ண கூப்பிட்டா, காரியத்தைக் கெடுத்த போ நீ. இந்தக் கள்ளக் காதலிகள நம்பவே கூடாது சாமி” என்று கோபமாகக் கத்தினான். நண்பனின் தோளில் கைப் போட்டு, “உன் காதலுக்கு நீதான் பேசணும் மச்சா” என்றான் பிரபஞ்சன்.

பிரியதர்ஷனி பார்கவியின் கரம் பற்ற, “தேங்க்ஸ் பிரி” என்றாள் அவள்.

“பிளான்லாம் பார்த்தி அண்ணாது நான் ஜஸ்ட் உன்னை இங்க வர வச்சேன். அவ்ளோதான் பாரு” என்றாள் அவள். அவர்களுக்கு வேறு எந்த விளக்கங்களும் தேவைப்படவில்லை. நட்பின் குணமே அதுதானே.

பார்த்திபனுக்கு வீட்டில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வரவும், பார்கவியுடன் கிளம்பி விட்டான் அவன்.

இருவரும் ஒரே குடையில் நடந்தார்கள். மழை தந்த நெருக்கம் இருவருக்கும் இடையில் இதமாய் இருந்தது.

அங்கே வீட்டு வாசலில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த ரங்கராஜன்தான் அவர்களை முதலில் பார்த்தார்.

மறுநொடி வேகமாக வீட்டுக்குள் வந்து, “காவேரி, காவேரி. வேகமா வாங்கறேன். காவேரி” என்று சந்தோஷ மிகுதியில் சத்தமாக மனைவியை அழைத்தார்.

“என்னங்க? எதுக்கு என் பேரை ஏலம் போடுறீங்க இப்போ?”

“இங்க வாங்கறேன். நம்ம வீட்டுக்கு யார் வர்றாங்கன்னு பாரு” என்று சத்தம் போட்டு சொன்னவர், மனைவிக்குக் காத்திருக்காமல் மகளை நோக்கி நடந்தார்.

“அப்பா..” என்று பார்கவி தயங்க, “வாங்க தம்பி. எப்படி இருக்கீங்க?” என்று பார்த்திபனை பார்த்து பளிச்சென்று புன்னகைத்தார் ரங்கராஜன்.

அவன் கையில் இருந்த குடையை வாங்கி அவரே மடக்கி ஓரமாக வைத்தார்.

“நல்லா இருக்கேன் மாமா” என்றான் முறை வைத்து உரிமையாக. அவர் பார்வை அவன் மேல் மெச்சுதலாகப் பதிந்தது.

“உள்ள வாங்க” என்று அவர் அழைக்க, அதற்குள் அங்கே வந்து விட்டார் காவேரி.

கணவரை போலத் தயக்கமெல்லாம் அவருக்கு இல்லை.

“மாப்ள, நீங்களா? வாங்க வாங்க” என்று மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.

பார்கவி அம்மாவை புன்னகையுடன் முறைக்க, “உக்காருங்க. எங்களயா பார்க்க வந்தீங்க? என்ன விஷயம்?” என்று நேரிடையாகக் காரியத்துக்குள் குதித்திருந்தார்.

“காவேரி, நீ போய்த் தம்பிக்குச் சூடா குடிக்க ஏதாவது கொண்டு வா” என்று ரங்கராஜன் மனைவியிடம் சொல்ல, “ஆமா. நீங்க பேசிட்டு இருங்க. நான் போய் உங்களுக்குக் காஃபி போட்டுக் கொண்டு வாறேன்” என்று அங்கிருந்து நகர்ந்தவர், அப்பாவின் அருகில் நின்றிருந்த மகளையும் கையோடு இழுத்துக் கொண்டு போனார்.

“பாரு, போய் மூஞ்சியைக் கழுவிட்டு வா” என்று மகளை விரட்டினார். அவள் ஏற்கனவே சேலையில்தான் இருந்தாள். அவள் முகம் திருத்தி வரவும், “இப்படி வா” என்று அவளை இழுத்து, பின்னல் நிறையப் பூ சூடி விட்டார். அப்போதுதான் அவருக்குத் திருப்தியானது.

“ம்ம், இந்தா இப்போ போய் இந்தக் காபிய குடு” என்று அவளைக் காஃபி கோப்பைகளுடன் அனுப்பி வைத்து அவரும் பின் தொடர்ந்தார்.

“உங்களுக்குத் தெரியுமா ம்மா?” என்று திரும்பி அவள் சந்தேகம் கேட்க, “எங்களை என்ன நினைச்ச நீ?” என்று கெத்தாகப் பதில் கொடுத்தார் அவர்.

பார்த்திபன் தன் மனத்தில் இருந்ததைப் பளிச்சென்று ரங்கராஜனிடம் பகிர்ந்திருந்தான்.

“உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும்ன்னு எனக்குத் தெரியும் மாமா. இருந்தாலும் நானே சொல்லிடுறேன்” என்று நேர்மையாகத் தங்களுக்குள் நடந்ததை மேலோட்டமாகச் சொல்லி விட்டான். அதன் பிறகே பார்கவியை மணக்க விரும்புகிறேன் என்று அவரின் சம்மதத்தை வேண்டி நின்றான்.

“தம்பி, எனக்கு என் பொண்ணோட ஆசைதான் முக்கியம். ஆனா, நான் உங்க குடும்பத்தையும் யோசிக்கணும் இல்ல? உங்க வீட்ல இதுக்குச் சம்மதிப்பாங்களா? என் பொண்ணோட ஆசையை மட்டுமே நான் யோசிக்க முடியாது இல்லையா? அவ நாளைக்கு வாழ போற குடும்பத்தையும் நான் பார்க்கணும் இல்ல?” என்று எதார்த்தம் பேசினார் ரங்கராஜன்.

அவர்கள் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சாதி, அந்தஸ்து எனப் பல வேறுபாடுகள் இருந்தனவே. மகளின் விருப்பத்துக்கு முன்பு அதுவெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல‌. ஆனால், அதே போலப் பார்த்திபனின் குடும்பமும் யோசிக்க வேண்டும் அல்லவா? அதனால் அதைப் பற்றிப் பேசினார்.

“எங்கம்மாப்பாவும் உங்களை மாதிரிதான் மாமா. எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னா அதுக்கு மேல தடை போட மாட்டாங்க” என்றான் உறுதியாக.

அந்நேரம் பார்கவி காஃபி கோப்பைகளுடன் அங்கு வந்தாள்.

அது பெண் பார்க்கும் படலம் போலிருக்க, ரங்கராஜன் மனைவியை முறைத்தார். காவேரியின் கவனமெல்லாம் தங்களின் வருங்கால மருமகனின் மீதுதான் இருந்தது. கணவரை புன்னகையில் சரி கட்டி விட்டார் அவர்.

பார்கவியைப் பார்த்து புன்னகைத்து காஃபியை எடுத்துக் கொண்டான் பார்த்திபன்.

அப்போது ரங்கராஜன் மனைவியிடம் விவரம் பகிர்ந்தார்.

“தம்பி அவங்க வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொல்றாரு. அவங்க சரின்னு சொன்னதும் அவங்கம்மாப்பாவோட நம்ம வீட்டுக்கு வந்து பேசுறாராம்” என்று அவர் சொல்ல, “அப்படிங்களா? இன்னைக்கு நைட்டுப் போய்ப் பேசிடுவீங்கதானே மாப்ள?” என்று காவேரி கேட்க, “ம்மா” என்று அவரின் கையை அழுத்தி பிடித்தாள் பார்கவி.

பார்த்திபன் சிரிப்புடன், “வீட்டுக்குப் போனதும் பேசிடுவேன் அத்த. அதை விட வேறென்ன பெரிய வேலை இருக்கு எனக்கு” என்றான்.

“நீங்கதான் என்னைப் போலவே பேசுறீங்க மாப்ள” என்று உற்சாகமான காவேரி, “அப்போ நாளைக்கே பார்கவியைப் பொண்ணு பார்த்து பேசி முடிக்க வர்றீங்களா? நாளைக்கு நல்ல நாளு அதான் சொன்னேன்” என்றார்.

அவரின் அதிவேக பாய்ச்சலுக்குப் பார்த்திபனும் ஈடு கொடுத்தான். அவன் சரியெனச் சொல்லவும் காவேரியை கையில் பிடிக்க முடியவில்லை.

மனோ வேகத்தில் மனதுக்கினியவளை மனைவியாக்கிக் கொள்ளக் காலமும் கைக்கூட வேண்டுமே?

கனிந்து வந்த காதல் கைசேர காலம் வந்தது போல் திருமணமும் கண் இமைக்கும் நேரத்தில் பார்த்திபன் கை சேரட்டும்.

error: Content is protected !!
Scroll to Top