பார்த்திபனின் கண்கள் அவசரமாகச் சுழன்று பார்கவியைத் தேடின. அவள் நிச்சயமாக அங்கிருப்பாள் என்பது தெரிந்தே வந்திருந்தான் அவன். அவளை மீண்டுமொரு முறை தெரிந்தே தவற விட அவன் தயாரில்லை.
இளநீல பட்டில் அவன் விழியில் விழுந்து இதமாய் அவன் மனத்துக்குள் நுழைந்தாள் பார்கவி. அவளைக் கண்ட மறுகணம் அமெரிக்காவின் தனிமையான வாழ்வெல்லாம் விடை பெற்றுக் கொண்டது.
கண்களை அவள் மேலிருந்து விலக்காமல் அவளை நெருங்கினான்.
முன்பொரு முறையும் இப்படித்தான் புகைப்படக் கருவி முன் நின்றிருந்தவள், அவனுள் அழியாத புகைப்படமாகப் பதிந்து போய் இருந்தாள்.
அன்று சொன்ன அதே வசனத்தை இன்றும் சொன்னான். அந்த நினைவு இன்னமும் நீங்காமல் இருப்பதே அவனுக்கு ஆச்சர்யம்தான்.
பார்கவியின் விழிகள் அவன் மேல் அழுத்தமாகப் பதிந்தன.
“பார்த்தி..” என்று மெல்ல முணுமுணுத்தாள். அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
அவனை விழுங்கும் அந்த விழிகளில் மொத்தமாக விழுந்து தொலைய விரும்பினான் அவன்.
அவன் உதட்டில் மயக்கும் புன்னகை உதயமாக, அவள் கண்கள் இன்னுமே விரிந்தன. இது கனவில்லை, நிஜம் என அவளின் கரத்தை மென்மையாக அழுத்தம் கொடுத்துப் பற்றினான் அவன்.
அவனைக் கண்டதும், “மாமா” என்று அவனிடம் தாவினாள் தங்கை மகள். அதில் பார்கவி தடுமாற, மருமகளை ஒற்றைக் கையில் தூக்கி கொண்டு, மறுகையால் பார்கவியைத் தாங்கினான்.
“புருஷனும் பொண்டாட்டியும் புள்ளைய வச்சுட்டு விளையாண்டுட்டு இருக்காங்க பாரு” என்று கடுப்புடன் அவர்களைக் கடந்த பெண்மணி சொல்லி போக, “அப்படியே இவங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி பேசுறது.. இவங்கள..” என்று அவரை நோக்கி நகரப் போனவளை நிறுத்தி பிடித்தான்.
“அந்தப் பூமர் ஆன்டிகிட்ட இவ உன் புள்ளை இல்லைன்னு சொல்லணும். அவ்ளோதானே? இரு நானே சொல்லிடுறேன்” என்றவன், “ஆன்ட்டி” என்று கத்தி அவரை அழைத்தான். அந்தப் பெண்மணி திரும்பிப் பார்க்க, “இது என் தங்கச்சி பொண்ணு” என்றான்.
‘இத சொல்லவா கூப்பிட்ட?’ என்று அந்தப் பெண்மணி முறைத்து முன்னேற, மெதுவாகப் பார்கவியை நோக்கித் திரும்பினான்.
“ஹே பாரு, நாம புருஷன் பொண்டாட்டியான்னு விளக்கம் சொல்லுறதுக்கு முன்னாடி அவங்க போய்ட்டாங்களே” என்று சிரிப்புடன் அலுத்து அவளைப் பார்த்தான்.
பார்கவி இதழ்களைப் பிரித்தாலும் வார்த்தைகள் வரவில்லை. எத்தனையோ மாதங்கள் கழித்து அவனைப் பார்க்கிறாள். பிரியமும், பிரிவும் சேர்ந்து அவன் மேலிருந்த அத்தனை கசப்பையும் பின்னுக்குத் தள்ளி விட்டிருந்தன.
“பாரு”
“ஃபோட்டோகிராபர் கேங் பசிக்குதுன்னு சாப்பிட போய் இருக்காங்க. அவங்க வர்ற வரைக்கும் நான் கவர் பண்றதா சொல்லி இருக்கேன்.” என்று படபடத்து முன்னே திரும்பினாள்.
அவள் எப்போதும் பலமானவள்தான். ஆனால் அவன் முன் மட்டும் பலவீனப்பட்டுப் போகிறாள். எல்லாம் பிரியம் படுத்தும் பாடு.
காவேரியை சுற்றியிருந்த கூட்டத்தின் சலசலப்பு குறையவும், பெருமூச்சுடன் தலையை நிமிர்த்தி மேடையைப் பார்த்தார். அவரின் பார்வை அப்படியே நிலைக் குத்தி நின்றது.
அங்கே தன் மகளுடன் நிற்பது பார்த்திபன்தானே?. தன் மகளைத் தேடி வந்து விட்டானா?
அவன் நேசிப்பதாகச் சொன்னப் பெண், தங்கள் மகள் தானா? என்ற கேள்வி அவர் மனத்தைக் குடைய, அவரால் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை.
மகளிடம் செல்ல அவர் எழவும், அவருடன் சத்யபாமா, ரேணுகாவும் எழுந்து கொண்டார்கள்.
அங்கே, பார்கவியை நெருங்கி, “நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் பாரு. நீ என்னன்னா என்னைப் பார்க்காம கேமரா வழியா எல்லாரையும் பார்த்துட்டு இருக்க” என்றான் பார்த்திபன்.
பார்கவி பட்டென்று திரும்பி அவனைப் பார்க்க, அப்பொழுது, “டேய் பார்த்தி, எப்போடா வந்த? வர்றேன்னு சொல்லவே இல்ல?” என்று சத்தமாகக் கேட்டு, கையை விரித்துக் கொண்டு அவனை நோக்கி வந்தான் பிரபஞ்சன்.
“பிரபா” என்று இவனும் கையை விரிக்க, நண்பர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டார்கள்.
பார்கவியின் கவனமெல்லாம் கேமராவின் மேலிருந்தது. நண்பர்களின் அணைப்பையும், சிரிப்பையும் புகைப்படமாகப் பதிவு செய்திருந்தாள். அந்நேரம் அவள் திரும்பி மேடையைப் பார்க்க, பிரியதர்ஷினி கூட நண்பர்களைத்தான் பார்த்திருந்தாள். பார்கவி புன்னகைக்க, பிரியதர்ஷினி புன்னகைக்கவில்லை. மாறாக அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்நேரம் புகைப்படக் கலைஞர்களும் காபி குடித்து வந்து விட, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அம்மாவிடம் சென்றாள் அவள்.
“பிரியாக்கு வளையல் போட்டு விட்டுட்டு நாம வீட்டுக்கு போகலாம்மா” என்றாள்.
“ஏன் பாரு, இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போவோம்”
“எனக்குத் தலை வலிக்குதும்மா. நீங்க இருங்க. நான் அப்பாவோட ஆபீஸ்ல இருக்கேன்” என்று நழுவ பார்த்தாள்.
“ப்ச், தர்ஷி பொண்ணு கோபிச்சுப்பா. அவளுக்கு வளையல் போட்டு விட்டுட்டு போ நீ” என்று அவர் கண்ணை உருட்டி கடிய, அவரைப் பதிலுக்கு முறைத்துக் கோபத்தை வெளிப்படுத்தி விட்டு மேடையேறினாள்.
மகளை அப்படிப் பார்க்கையில் காவேரிக்கு சிரிப்புத்தான் வந்தது. பின்னே அவளின் கோபத்துக்கான காரணம் அவருக்குத்தான் தெரியுமே.
அம்மாவுடன் சேர்ந்து மேடையேறினாள். அங்கே அவனும் இருந்தான். அவள் பார்வை பார்த்திபன் பக்கமே போகவில்லை. ஆனால் அவனுக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. அவன் பார்வை மொத்தமும் அவள் மேல் பதிந்திருந்தது.
அவளைத் தொடர்ந்த அவன் பார்வையால் அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.
மேடையில் இருந்து கீழிறங்கியதும் நேராக அப்பாவை தேடி சென்றிருந்தாள். அதே மண்டபத்தின் அலுவல் அறையில் இருந்தார் அவர்.
“என்னடா பாரும்மா, உன் பிரெண்ட் கூட நிக்காம அப்பாவை தேடி வந்துட்ட?” என்று ரங்கராஜன் கேட்க, “லேசா தலைவலிப்பா” என்று கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
“டீ கொண்டு வர சொல்லவா? மாத்திர போடுறியா?” கரிசனத்துடன் வந்தது கேள்வி.
“அங்க கூட்டத்துல இருக்கவும் அப்படி இருந்ததுப்பா. நான் இப்போ ஓகே” என்றாள். ரங்கராஜன் பார்த்துக் கொண்டிருந்த வேலையை அவள் பார்க்கத் தொடங்கினாள். அதற்குள் அவர்களைத் தேடி அங்கு வந்து விட்டார் காவேரி.
கணவருக்குக் கண்களால் செய்தி சொன்னார். ஆனால் அவருக்குத்தான் புரியவில்லை.
“ம்ம், உங்கள” என்று அவரை முறைத்தார் காவேரி.
“என்ன காவேரி முறைக்கற, நீ என்னன்னு சொன்னாதானே எனக்குப் புரியும்?” என்று அவர் சத்தமாகக் கேட்டு விட, காவேரி கையும் களவுமாகப் பிடிப்பட்ட திருடனை போல முழித்தார்.
“என்னதுங்க? நான் வீட்டுக்குப் போகலாமான்னுதான் கேட்டேன். உங்க பொண்ணு தலை வலிக்குதுன்னு சொல்றாளேன்னு கண்ணு காட்டினா உங்களுக்குப் புரியல” என்று இயல்பாகச் சொன்னாலும், அவர் கண்கள் கணவரை கடுமையாக முறைத்தன.
“அம்மா எதுக்கோ கோபமா இருக்கா போலப் பாரும்மா. வேலை முடிஞ்சதுன்னா வீட்டுக்கு போவோமா?” என்று மகளிடம் கேட்டார்.
அவள் தலையசைக்கவும் மண்டபத்து மேலாளரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள்.
பார்கவி வீட்டுக்கு வந்ததும் வேலை செய்கிறேன் என்று சாக்கு சொல்லி கணினி முன் அமர்ந்து விட்டாள்.
அவளின் அலைபேசி அப்படியே கைப்பையில் கிடந்தது.
“இப்படி வாங்க” என்று கணவரை அலுவல் அறைக்குள் அழைத்துச் சென்று பார்த்திபன் திரும்பி வந்து விட்டான் என்று சொன்னார் காவேரி.
“அப்படியா?” என்று ஒரு நொடி மகிழ்ச்சியில் மலர்ந்த ரங்கராஜனின் முகம், “அவங்க வீட்ல அந்தப் பையனுக்குப் பொண்ணு பார்த்திருக்காங்கன்னு சொன்ன இல்ல?” என்று கேட்டதும் வாடியது.
“சிரிங்க பாருப்பா. பொண்ணுக்கு ஒன்னுன்னா அப்படியே தாங்காதே உங்களுக்கு” என்று கணவரை சிரிப்புடன் முறைத்து, மண்டபத்தில் பார்த்திபன் காதலி யாரென்று அனைவரும் கேட்டதை அவரிடம் சொன்னார்.
சத்யபாமா சொன்னதையெல்லாம் அப்படியே பகிர்ந்து கொண்டார்.
அதைக் கேட்டு ரங்கராஜன் முகம் தெளிய, “அந்தத் தம்பி நம்ம பொண்ணைதானேங்க சொல்லியிருக்கும்? இன்னைக்குக் கூட அந்தப் பையன் நம்ம பொண்ணு கூடப் பேசிட்டு நின்னத நான் பார்த்தேன். நானே போய் அந்தத் தம்பிக்கிட்ட கேட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க திட்டுவீங்களேன்னுதான்..” என்று அவர் தயங்கி நிறுத்த, “அப்படியே நான் திட்டுறதுக்குப் பயப்படுற ஆள்தான் நீயி” என்று மனைவியைக் கேலி செய்து சிரித்தார் ரங்கராஜன்.
“அந்தத் தம்பியே பொண்ணு வீட்ல போய்ப் பேசிட்டு சொல்றேன்னு சொல்லுச்சாம். அவரு வந்து பேசுற வரைக்கும் நாம வெயிட் பண்ணுவோமா? இல்லன்னா நாமளே அவரைப் பார்த்து பேசிடுவோமா?” என்று அவர் பரபரக்கவும், ரங்கராஜன் சத்தமாகச் சிரித்திருந்தார்.
“அது சரியா வராது இல்லங்க? பேசாம அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசுவோமா? இப்பத்தான் அவங்கம்மாவும், நானும் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே” என்று அவர் பெருமையாகச் சொல்ல, “பொறுமை பொறுமை காவேரி. பல வருஷமா காவேரிக்கு தமிழ்நாடே காத்துட்டு கிடக்கு. நீ என்னன்னா பாஞ்சு ஓடுற” என்று அவர் கேலி பேச, “உங்க பொறுமை எனக்கில்ல சாமி” என்றார் அவர்.
“நம்ம பொண்ணு ஆசைப்பட்டத நடத்துறத விட நமக்கென்ன பெரிய சந்தோஷம் இருக்கப் போகுது காவேரி. ஆனா அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சினைனாலதானே ஆளுக்கொரு பக்கமா போனாங்க. இப்போ அவங்களே பேசி சரி பண்ணிட்டு வரட்டும். காலம் முழுக்கச் சேர்ந்து வாழ போறது அவங்க. அவங்க முடிவெடுக்கட்டும்” என்று முடிவாகச் சொல்லி முடித்திருந்தார். காவேரி மறுத்து பேசவில்லை.
பார்கவி இயல்பாக இருப்பது போல நடித்தாலும் உள்ளுக்குள் எரிமலை ஒன்று புகைந்து கொண்டிருந்தது.
அவனுக்குப் பெண் பார்த்து விட்டார்கள்தானே? அவனுக்குத் திருமணம் முடிவாகி விட்டதா? அதனால்தான் ஊருக்கு வந்திருக்கிறானா? அவளின் கேள்விகள் நீண்டனவே தவிரப் பதில் அறியும் வழி தெரியவில்லை அவளுக்கு.
அவளின் மனநிலை அறிந்து பெற்றோர் அவளை அவள் போக்கில் விட்டார்கள்.
மாலை முழுதாகக் கவிழ்ந்திருந்தது. மழை மெல்லியதாகத் தூறிக் கொண்டிருந்தது. பார்கவி பின் வாசலில் சாய்ந்து நின்று தோட்டத்துச் செடிகள் தூறலில் நனையும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“பாரு, உன் போன் அடிக்குது இந்தா” என்று அவளின் அலைபேசியை எடுத்து வந்து அவளிடம் நீட்டினார் காவேரி.
“பிரியா தான்ம்மா” என்று அழைப்பை ஏற்றாள்.
“என்ன பாரு, உன்னைப் பார்க்கவே முடியல இன்னைக்கு? என் கூடவே இருப்பேன்னு சொல்லிட்டு காணாம போயிட்ட?” என்று அந்தப் பக்கம் புகார் படித்தாள் பிரியதர்ஷினி. இவள் சொன்ன எந்தக் காரணத்தையும் அவள் கேட்பதாக இல்லை.
“நான் வீட்டுக்கு வந்துட்டேன். பிரபா இல்லாம எனக்குப் போர் அடிக்குது. நீ இங்க வா” என்றாள் அவள். இவள் மறுக்கும் முன், “பிளீஸ் பாரு” என்று கெஞ்சினாள்.
பார்கவி வேறு வழியின்றி அம்மாவிடம் சொல்லிக் கொண்டு பிரியதர்ஷினியின் வீட்டுக்கு நடந்து சென்றாள்.
அவ்வளவு நேரமும் தூறிக் கொண்டிருந்த வானம் இப்போது வெறிச்சிட்டது. ஆனாலும் இதமான வானிலையே நிலவியது. காற்றில் குளுமை கூடியிருக்க, பிரியதர்ஷினி சொன்னபடி அவளைத் தேடி மொட்டை மாடிக்குச் சென்றாள்.
மாடிக்கு செல்வதென்றால் பிரியதர்ஷினிக்கு அலர்ஜி ஆகிற்றே. ஆனால் அவளைக் கண்டதும் ராதா கூட, “தர்ஷி, மேல இருக்கா பாரு, போ” என்றதும், தயங்காமல் மாடியேறினாள். அவள் கதவைத் திறந்ததும் குப்பென்று குளிர் அவளைத் தாக்கியது. இசை இனிமையாய் செவியில் நுழைந்தது.
குளிருக்கு அனிச்சையாக அவள் கைகள் சேலையை இழுத்து போர்த்தின.
“பிரியா” என்று சத்தமாக அழைத்தாள். அவள் சத்தத்தை மீறிய இசையின் ஆக்கிரமிப்பு அங்கிருந்தது.
“பார்கவி” என்று மென்மையாக அழைத்துப் பக்கவாட்டில் இருந்து அவள் பக்கம் வந்து நின்றான் பார்த்திபன்.
‘நீங்களா?’ என்று கண்களால் கேட்டு, அவனுக்குப் பின்னே பிரியதர்ஷினியை தேடினாள். ஆனால் அங்கே தோட்டத்து மலர்களைத் தவிர யாருமில்லை.
“என்கிட்ட பேச மாட்டியா பாரு?” அவளைத் தொட்டு விடும் தூரத்தில் நெருங்கி கேட்டான்.
அவனை நிமிர்ந்து நோக்கியவளின் மௌனம் கலையவில்லை.
“அட்லீஸ்ட் எனக்கு என்ன பிரச்சனைன்னாவது கேளேன்” என்றான்.
“சரி, நீ கேட்க வேணாம். எனக்கு என்ன பிரச்சனைன்னு நானே சொல்றேன்” என்று அவள் கண்களைக் கூர்ந்து கிசுகிசுத்தான்.
“எனக்கு உங்களைப் பிடிக்கும். அதை உங்ககிட்ட சொல்லத்தான் இன்னைக்கு உங்களைப் பார்க்க வந்தேன்” என்றான். இது அவள் அவனிடம் சொன்னது. அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தன. ஆனாலும் வேறு எந்த எதிர்வினையும் அவளிடம் இல்லை.
“இப்போ பிடிக்கும்னா? அப்படின்னு நீ என்னைக் கேள்வி கேட்கணும் பாரு” சன்ன சிரிப்புடன் அவனே தொடர்ந்தான். அவள் கால்கள் மெல்ல பின்னகர, அந்த இடைவெளியை நிரப்பினான் அவன்.
“பிடிக்கும்னா என்னன்னு தெரியாத அளவுக்குச் சின்னப் பொண்ணா பார்கவி நீ? பிடிக்கும்னா எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். இன்னைக்கு இல்ல என்னைக்கும்.. எங்கம்மா கல்யாணம் பத்தின பேச்செடுத்தா உன் ஞாபகம் மட்டுமே வர்ற அளவுக்கு உன்னைப் பிடிக்கும்” என்றான் புன்சிரிப்புடன். அவனிடம் இப்படித்தான் அவள் பிரியம் பகிர்ந்தாள். அவள் சொன்னது வார்த்தை மாறாமல் இன்னுமா அவனுக்கு நினைவில் இருக்கிறது? அவளுக்கு ஆச்சர்ய அதிர்ச்சிதான். ஆனாலும் மௌனம் கலையவில்லை அவள்.
அவள் நாடியில் ஒற்றை விரல் பதித்து அவள் முகத்தை நிமிர்த்தி, “பார்கவி, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அவனது ஆழ்ந்த குரலில் அவள் கண் பார்த்து கேட்டான்.
மென்மையாக அவன் கரத்தை விலக்கினாள் அவள்.
மீண்டும் அவளை நெருங்கி, “பாரு பிளீஸ்” என்றான்.
“உயிரே உன் மௌனம் கொல்லுகின்றதே. வாய் திறந்து பேசி விடு வாழ்கின்றேன்” என்று அவனது விருப்ப தேர்வான பாடல் ஒலிக்க, அதனோடு சேர்ந்து அவனும் முணுமுணுத்தான். அந்த வரிகளைக் கேட்டு அவள் கண்கள் கலங்கி விட்டன.
“எனை மீறி ஏதோ நேர்ந்து விட்டதே. நீ கொடுக்கும் தண்டனையை ஏற்கின்றேன்” அவள் விழிகளில் வைரமாய்க் கண்ணீர்த் துளி மின்ன, இவனை மீறி நடந்து விட்டதாமே என்ற கோபம் அவள் கண்களில் தெரிந்தது.
“பிளீஸ்.. அழாத பாரு” என்று அவள் கன்னம் தாங்கி கண்ணீரை துடைத்தான். உதட்டை கடித்துக் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்து அவனைப் பார்த்தாள்.
“உந்தன் நிழலாகிறேன்… ஐயோ கதை மாறுகின்றதே” என்று பாடல் தொடர்ந்தது.
கதை மாறித்தான் போனது. ஆனால் காதல் மனங்கள்?!
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா பார்கவி?” மெல்லிய தூறல் அவர்களை நனைக்க, பார்த்திபன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
கேள்வி மாறவில்லை. ஆனால் பதில்?!