42 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 42 

 

பூமியின் சீதோஷ்ணத்திற்கு ஏற்றார் போல் காலங்கள் மாறும். அலர்விழி வாழ்ந்த இடத்தில் வசந்த காலத்தில் துளிர்க்கும் அழகிய இலைகள், இலையுதிர் காலத்தில் விதவிதமான நிறத்தில் பழுத்து விழுந்து விடும். அங்கு இலையுதிர் காலம் என்பதால் மரங்களைப் பல நிறங்கள் அலங்கரித்திருந்தது.

இலைகள் மட்டுமா நிறம் மாறுகிறது? மக்களும் பச்சோந்திகளாய் நிறம் மாறுவதால், நல்லவன் யார் கெட்டவன் யார் என்று முகத்தைப் பார்த்தோ தோற்றம் வைத்தோ கண்டுபிடிக்க முடிவதில்லை. 

முன்தினம் முன் மாலை படுத்தவள், பதினாறு மணி நேரம் கழித்து கண் விழித்தாள். கண் திறந்தவள் கண்டது தன் முன் நீண்டிருந்த இரு கால் முட்டிகளை. மெத்தையில் சாய்வாய் அமர்ந்திருந்தவனின் முட்டி தொடா ஷாட்ஸ் அணிந்திருந்த கால்கள் என்று புரிந்தது. மெல்ல நகர்ந்து முட்டியில் கன்னம் உரசி கால்களில் முகம் புதைத்தாள். 

முட்டிகளின் சொந்தகாரனிடமிருந்து எந்த வித அசைவும் இல்லை. மூட்டில் இதழ் பதித்து, கன்னம் உரைய படுத்த வாக்கிலேயே பார்வை உயர்த்திப் பார்க்க, இமைக்காமல் இவளைத் தான் பார்த்தமர்ந்திருந்தான் எபி. உணர்வற்ற முகம்.

“சொன்ன மாதிரியே எழுந்துக்கும் போது பக்கத்துலயே இருக்கீங்க? சமத்து!”

புரியாத பார்வை பார்த்தான். அவள் சிரிப்பு அவனுக்குப் புரியவில்லை. கட்டிக் கொண்டு அழுவாள் என்று தானே நினைத்தான்!

“எழுந்து ரொம்ப நேரம் ஆச்சா மனோ? எழுப்ப வேண்டியது தானே… எப்போ படுத்தேன்னு கூட தெரியல! சரியான கும்பகர்ணி நான். காபி ஆச்சா மனோ? எனக்கு எடுத்துட்டு வரலியா? காபி வாசம் காணோம்?” கேட்டுக் கொண்டே போர்வையை அவன் கால்களோடு சேர்த்துப் போர்த்தி, “தல பாரம் தாங்க முடியல. தாகமா எடுக்குது. உடம்பெல்லாம் வலிக்குது மனோ. கொஞ்ச நேரம் கூடத் தூங்கட்டா?” பேசிக் கொண்டே அவன் கால்களோடு ஒண்டவும், வெற்று கால் வெற்று மேனியை உரசவும் பட்டென்று போர்வையை விலக்கிப் பார்த்தவள் நடுங்கிப் போனாள். ஆயிரம் வாட் மின்சாரத் தாக்கம். பதற்றம் தொற்றிக் கொள்ள, பெண் மிரண்டு போனாள். என்ன கோலமிது?

கட்டில் தலை மாட்டோடு ஒண்டியவள், போர்வையால் இழுத்து மூடிக் கொண்ட பின்னும் உடல் நடுக்கம் நின்ற பாடில்லை. எப்படி? ஏன்? எதற்கு? பதில் தெரியா கேள்விகள்! கண்கள் பனிக்க மனோவைப் பார்த்தாள். எந்தவித பதட்டமோ, உணர்வோ இல்லாத பார்வை அவனிடம். அவளின் கோலம் கண்ட பின்னும் முகத்தைத் திருப்பவும் இல்லை. ஏதும் கூறவும் இல்லை! 

தன் நிர்வாணம் ஏன் மனோவை பாதிக்கவில்லை? “ம..னோ?” திக்கித் திணறியவளுக்கு கண்ணீர் முட்டி மோதிக் கொண்டுத் கொட்ட தயாரானது. ‘என் மனோவா?’ மனம் நம்ப மறுத்தது.

அமானுஷ்ய மௌனம் மட்டுமே அங்கு. எதற்குமே வாய் திறக்க மாட்டானா? மூளையால் எதையுமே யோசிக்க முடியா வேதனை. “நீ.. நீங்களா மனோ?” இரண்டே இரண்டு வார்த்தைகள். மிக மிக கடினமான வார்த்தைகள். இதயம் கீழே விழுந்து தன் துடிப்பை நிறுத்தாதா என்ற வலியைக் கொடுத்த கேள்வி அது… கேட்டவளுக்கும்! கேட்டவனுக்கும்!

எதையுமே உணரும் நிலையில் அவனில்லை. அவள் கேள்வியும் புரியவைல்லை! ஏன் தன்னை குற்றப் பார்வை பார்க்கிறாள்? என்ன கேள்வியிது? அவனுக்கு உண்மையிலுமே புரியவில்லை. அவள் கண்விழித்த பின் அவளிடமிருந்து அவன் எதிர்பார்த்த எதிர் வினை இதல்லவே! 

மௌனம் சம்மதம் போல் தான் அவன் தோற்றம். எப்படி உணர்வில்லாமல் இவனால் அமர்ந்திருக்க முடிகிறது? அவளுக்கும் சூழ்நிலை புரியவில்லை. கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வர மூக்கு விடைக்க கத்தினாள். “ஆஆஆ…”

எச்சில் விழுங்கி பார்க்க முடியா கோர காட்சியை பாத்து அமர்ந்திருந்தான். அவளுக்கு மேல் அவன் மனம் கூப்பாடு போட்டது. தாயாய், தகப்பனாய், தமையனாய், தோழனாய், காதலனாய்… பார்த்து பார்த்து தோள் கொடுத்த அவன் செல்ல சிட்டு தொண்டை கிழியக் கதற, ஒன்றுமே செய்ய முடியாதவனாய் அவள் கதறலைப் பார்த்தே அமர்ந்திருந்தான்.

“நீங்களா மனோ?”

‘நானா?’ என்ன கேட்கிறாள் இவள்? நம்பாத பார்வை பார்த்தான்! சத்தியமாக கேள்வி புரியவில்லை. இந்த அறைக்குள் நுழைந்தது முதலே அவனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லையே! இது புரிவதற்கு!

“நீங்களா மனோ?” விக்கி வெடித்து, கோபத்தில் அலறலாய்… வலியில் கதறலாய் அவள். அவள் கண்களும், அதில் தெரிந்த வலியும் மட்டுமே அவன் பார்வையில். மௌனமாய் பார்த்தமர்ந்திருந்தவன் மனம் அமைதியில்லாமல் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலைக்கு, காக்காமல் போன தான் தானே காரணம்!

“தண்ணி அடிக்காதீங்கன்னு சொன்னேனே… கேட்டீங்களா?” உதடு நடுங்கியது. மனோ யார்? அவன் எப்படிபட்டவன் எல்லாம் இரண்டாவதாகப் போனது. அவள் நிலை… அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. பெண்ணோ ஆணோ… இது சகிக்க முடியாத வேதனை தான்!

“ஏன் மனோ?” கேட்டவளுக்கு வாய் திக்கித் திணறியது.

நீண்ட மௌனம். இருவருக்கும் பிடிக்காமல் நத்தை போல் நகர்ந்த நொடிகள் அவை.

“ஏன் மனோ?” மூக்கிலும் வாயிலும் ஒழுகிய நீரை துடைக்கத் தோன்றாதவளாய் கேட்க, அவனிடமிருந்த எந்த பதிலும் இல்லை. கோபம் எல்லையைக் கடக்க, மார்பை சுற்றிய போர்வையோடே “ஏன் மனோ இப்படி? அப்படி என்ன போதை? என் மேல தான் தப்பா? நான் அதிகம் இடம் கொடுக்கவே… இதெல்லாம் சரின்னு நினைச்சுட்டீங்களா?” வெறுமனே கேட்க ஆரம்பித்தவள் கோபத்தோடு அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

“ஏன் டா? அசிங்கப் படுத்தி வச்சிருக்க என்னை! ஏன் மனோ… எனக்கு ஒண்ணுமே நினைவில்ல… நினைவில்லாம இருந்த என் கிட்ட எப்பிடி முடிஞ்சுது உங்களால?” 

அடி வாங்கியும் கற்சிலை என அமர்ந்திருந்தவன் எந்த வித உணர்வையும் முகத்தில் காட்டினான் இல்லை. அவள் கோபம் தீரும் மட்டும், அவளை அணைத்த மார்பிலும் தோளிலும் அடி வாங்கிக் கொண்டான்.

“நான் உன்னோட விழி இல்லியா மனோ…” குனிந்து அமர்ந்து அவள் கதற, அசைவற்று, அவளைப் பார்த்தே அமர்ந்திருந்தான். என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றுமே புரியவில்லை. 

இது நடக்கும் வரை உணர்வற்று உறங்கினேனே என்ற கேவலமான உணர்வு அவளைக் கொன்று போட அந்த ஆத்திரத்தையும் அவன் மேல் காட்டினாள். “நான்… நான் உனக்கு பொண்டாட்டியாவே இருந்தாலும் இப்பிடி செய்யலாமா மனோ… எங்கிட்ட எப்பிடி மனசு வந்துது?” 

அவனிடமிருந்து எந்த வித பதிலோ, உணர்வோ இல்லை. 

“ப்ச்!” உடலைச் சுற்றியிருந்த போர்வையோடே கட்டிலை விட்டு இறங்கியவளுக்கு சுறுக்கென்று வலி. முதலில் புரியவில்லை. இரண்டடி எடுத்து வைத்தவள் “ஸ்ஸ்ஸ்ஆஆஆ” வலியில் முகம் சுருங்க நின்று விட்டாள்.

தலை வலிக்கான காரணம் தெரியும்! ஆனால் இந்த வலி? வலிக்கான காரணம் கண்டு பிடிக்க பிடிக்கவில்லை. நடக்க முயன்று தோற்றாள். கை கால் நடுங்க அழ ஆரம்பித்தாள். தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் மனோவா? அவனால் அவளைக் காயப்படுத்த முடியுமா? விசும்பல் கட்டுப்பாடில்லாமல் வர மனோ துவண்டு போனான். 

முதுகைக் காட்டி நின்றிருந்தவளைப் பார்த்தே அமர்ந்திருந்தான். எதுவும் பேசும் மனநிலையில் அவனில்லை. எது நடந்திருக்கக் கூடாது என்று வேண்டினானோ… அது தான் நடந்தேறியுள்ளது! உடையோடு அத்து மீறல் நிற்கவில்லை என்பது தெரிய செத்தே போனான். உள்ளுக்குள் பிசைந்து வலிக்க கதறக் கூட முடியாதவனாய் உள்ளுக்குள் உடைந்து அணு அணுவாய் மாண்டு கொண்டிருந்தான்.

அவனால் தானே தன்னவள் திராணியற்று நிற்க முடியாமல் நிற்க வேண்டும்! ஆனால்? மனம் வலித்தது. ‘ஓ’ என்று கத்தி கதற துடித்த மனதைக் கட்டுப்படுத்த தெரியாமல் தளர்ந்து போனான்.

யார் வந்தது? நேற்றிரவே கவனித்தான், ஈர குளியலறையும், ஈர டவலும்! அறையில் பரவியிருந்த வாசனை திரவியம் பிரவீன் என்றது. நேற்று, ‘அவன் எப்படி?’ என்று நினைத்தான்! இன்று, ‘அவனா இப்படி?’ என்று நினைத்தான்! ஆனால் விடயம் தெரியாமல் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை! அலர்விழி போராடியதற்கான அறிகுறி இல்லை. மயங்கிப் போகும் அளவிற்கு என்ன எடுத்துக் கொண்டாள்? அவளுக்கு எதுவுமே நினைவில்லை என்பது வரமா சாபமா? ‘விழி…’ நெஞ்சை அடைத்தது. 

முன் இரவு, வீட்டிற்கு வந்தவனுக்கு போதை எல்லாம் இல்லை. அவள் கூறியது போலவே ஒரு கோப்பையோடு முடித்திருக்க, என்றும் போல் நிதானமாக தான் இருந்தான். ‘செம லேட்! கொல்லப் போறா’ என்று புலம்பிக் கொண்டே கதவைத் திறக்க, இருட்டான வீடு அவனை வரவேற்றது.  

அலர்விழியின் அறையை எட்டிப் பார்த்தான், உறங்கியிருந்தாள். களைப்பில் அவனும் சென்று உறங்கி விட, காலை மூன்றுக்கெல்லாம் முழிப்பு தட்டியது.

காலைக் கடன், காபி, கைப்பேசி என்று நான்கு வரை சமாளித்தவன் விழியைத் தேடி அவள் அறைக்கு வர, விளக்கை எரியவிட்ட பின்னும் பெண் விழித்தாளில்லை. “தூங்கு மூஞ்சி” முணுமுணுத்துக் கொண்டே வர கட்டிலுக்கு கீழே கிடந்த உடைகளைப் பார்த்தவன், “கொழுப்பப் பாரு இவளுக்கு! நின்ன இடத்துல இருந்தே ட்ரெஸ்ச மாத்துறது. அத எடுத்து அழுக்கில போடக் கூட சோம்பேறித்தனம்…” என்று அதை அனைத்தையும் எடுத்து அழுக்கு கூடையில் போட்டு வந்தான். 

ஒலியும் ஒளியும் பெண்ணை அசைத்ததாக தெரியவில்லை என்றதும், “ஏய் தூங்கு மூஞ்சி… எழுந்திரி டி… எவ்வளவு மணி நேரம் தூங்குவ?” என்று போர்வையை இழுத்த நொடி, இதயம் துடிக்க மறந்த நொடி. பயத்தில் போர்வையை அவள் மேல் விட்டெறிந்தவன் கைகளும் கால்களும் நடுங்க, சுவரை முட்டி நின்றவனுக்கு மூளை உறைந்து போனது.

எகிறிக் குதித்த மனதை கட்டுப்படுத்த தெரியவில்லை. நடுக்கமும் நின்ற பாடில்லை. மெல்ல பெண்ணைப் பார்த்தான். அவளிடம் சலனமில்லை என்றதும் உடல் ஏகத்திற்கும் நடுங்கியது. அவன் விழிக்கு என்னானது? மூக்கின் கீழ் கை வைக்க… மூச்சிருந்தது.  

உள்ளம் படபடக்க, உடல் நடுங்க மெத்தையோரம் உள்ளங்கைகளில் தலைதாங்கி அமர்ந்து விட்டான். அவன் விழியா? ஏன் இப்படி? அவன் வாங்கிக் கொடுத்ததென்று பிடிக்காமல் கோபத்தில் கழட்டி எறிந்திருப்பாள் என்று தன்னையே ஆறுதல் படுத்தத்தான் முயன்றான். ஆனால் அது உண்மை இல்லை என்று கூற தனி அறிவு தேவைப்படவில்லை. 

முன்போலவே உடலை மூடிவிட்டான். “பட்டு…” கன்னம் தட்டினான். அசைவில்லாமல் படுத்திருந்தவள் உள்ளுக்குள் பயத்தைக் கிளப்பினாள். அப்படி என்ன தூக்கமிது? உணர்வில்லாமல்? தூக்கம் தானே? 911 அழைக்க வேண்டுமா?

நெஞ்சில் காது வைத்தான். ரிதம் மாறாமல் இதயம் இசைத்தது. ஓரத்தில் நிம்மதி மூச்சு வந்தது. 

“விழிமா… பட்டு…செல்லம்…” பெண் அசைந்தாளில்லை. மயக்கமா? கண்கள் அருவியாய் கொட்ட, “அடியேய்… பயமுறுத்தாத! விழி, எழுந்திரி டி… பட்டு ப்ளீஸ் கண்திற டி…” கெஞ்சினான்… கொஞ்சினான்… கதறினான். அசைந்தாளில்லை. 

இதயம் படபடக்க, “விழி எழுந்துரு டி… பிளீஸ் டி பட்டு…” பயத்தில் உலுக்கினான்.

கண்கள் திறக்காமல், “மனோ…” என்ற தெளிவில்லாத முனகல் பதிலாக வந்தது. அவள் தலை மாட்டில் தளர்ந்தமர்ந்தவன், அவள் விழிக்க கண்மூடி காத்திருந்தான். கண் விழித்து, அவள் தான் கூறவேண்டும் நடந்தது என்னவென்று! பதில் தெரியாமல், என்னவென்று யோசிக்கவும் முடியாமல் கண்களில் வழியும் நீரை துடைக்கவும் தோன்றாமல், அமைதியாக கண்மூடிக் கிடந்தவளைப் பார்ப்பதும் கண்களை மூடுவதுமாக அமர்ந்திருந்தான்.

கண்கள் மூட, மூடிய கண்களுக்குள் நேற்றைய இன்ப தருணங்கள் அலைமோதி வந்தது. மோதிரம் போட்டு நிச்சயித்த பின் அவள் தனக்கானவள் தானே? மூன்று மணி நேரம் தான் வீட்டில் இல்லை! என்ன நடந்தது? எதுவரை நடந்திருக்கும்…? தொண்டை கசந்தது. கண்ட காட்சியே அவன் மனதைப் பிய்த்தெடுக்க, எதுவும் யோசிக்கப் பிடிக்கவில்லை. எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று வேண்டுதல் வைத்தான். வேண்டுதல் கேட்கப் படவில்லை என்றது அவளின் விசும்பல் சத்தம்!

விசும்பல் சத்தம் அவனை நிகழ்விற்கு கொண்டு வர, கூந்தல் புரண்ட முதுகு அருகில் சென்றான். ஆறுதல் வார்த்தைகள் அவனுக்கே தேவைப்பட, தேடியும் கிடைக்கவில்லை, அவளுக்கு தானம் செய்ய.

தோள்கள் இரண்டிலும் கைகள் வைக்க, சில்லிட்ட வெற்று தோள் அவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தவில்லை மாறாக குலுங்கி அழுபவளின் வலியை மட்டுமே கடத்தியது.

கைகளைத் தட்டிவிட முயன்றவளை பொருட்படுத்தாமல் இடையோடு அவன் கட்டிக் கொள்ள, தோளில் இறங்கிய தன்னவனின் உஷ்ணமான நீர்த் துளிகள் வழிந்து மார்பை சுற்றியிருந்த போர்வையில் மோதி நிற்க, மட்டுப்பட்டிருந்த விசும்பல் அதிகமானது.

“எல்லாமே முடிஞ்சுடுச்சா மனோ…” கேட்டு முடிக்கும் முன் மீண்டும் தாள முடியா வேதனையில் உடைந்தழ ஆரம்பித்தவளை திருப்பி, கன்னம் துடைத்தான். அழுகையை சகிக்க முடியாதவனாய் குரல் கரகரக்க, “சாரி டி பட்டு,” என்றவன் கண்களும் அதன் ஊற்றை நிறுத்த முயலவில்லை. 

கண்கள் உயர்த்தி முகம் பார்த்தாள். ஒட்டுமொத்த வலியை தாங்கியிருந்த கண்கள்! “ஏன் மனோ?” கேட்டவள் உதடு துடிக்க, அவன் மனம் துடித்தது. 

என்ன கூற? பெண் முகத்தை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். திமிறியவளை விட மனமில்லாமல் அணைத்தான். தனக்குள் இறுக்கி புதைக்க முயன்றான். “மடையன் நான்! பெரிய தப்பு பண்ணிட்டேன் டி. சாரி டி பட்டு,” என்றவன் கண்களின் ஈரம் பெண்ணின் தலையை நனைத்தது. அவன் கண்ணீர் பெண்ணிற்கு சகிக்கவில்லை. மனோவோடு போராட முயலவுமில்லை. மனமுமில்லை. பாரத்தை நீயே வைத்துக் கொள் என்று அவன் மேல் சாய்ந்தாள்.

“குளிக்கப் போறியா?”

“ம்ம்ம்” என்றாள் விசும்பலோடு.

குளித்த பின் போலீஸிடம் சென்று பயனில்லை. இவளை சேதப் படுத்தியவன் யார் என்று கண்டு அவனுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டுமென்றால், குளிக்கும் முன்பே காவல் துறையை அணுக வேண்டும்! என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. செய்தது பிரவீன் என்றால், அவன் நாட்டில் இல்லை! காவல்துறையிடம் கூறி பிரயோஜனம் இல்லை! நடந்ததை அவளிடம் கூறி, அவளையும் வருத்தி என்ன கிடைக்கப் போகிறது? பெண்ணிடம் மறைப்பது தவறா? தெரியவில்லை. தவறோ சரியோ, வேண்டாம் என்றது மனது. ‘விழி… சாரி டி’ கண்கள் ஏகத்திற்கும் பனித்தது.  

அரை மணி நேரக் குளியல் பெண்ணவள் கண்ணீரை மட்டுப் படுத்தியது. என்ன யோசித்தும் ஒன்றுமே நினைவில் வரவில்லை. எப்படி இது சாத்தியம்…? ஏன் எதுவுமே தனக்கு தெரியவில்லை? போட்டுக் கொண்ட மாத்திரையா? ஆனால் அது போட்ட பின் தூக்கத்தின் இடையே பிரவீனோடே பேசின நினைவு இருக்க அதன் பின் என்ன ஆனது? லெமன் சோடா? கிளம்பிக் கொண்டிருந்தவன் அதை தானே வாட்கா என்றான். அரையும் குறையுமாக நினைவில் வந்தது.

மயங்கிப் போனாளா இல்லை நினைவு மட்டும் இல்லையா? தெரியவில்லை! சில மாத்திரைகள் போதை போல்! டேட்-ரேப் ட்ரக்(Date rape drug) என்பார்கள் அதை. மருந்தை எடுத்த பின் விழித்திருந்தாலும், செயல் பட்டாலும் நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள அது விடுவதில்லை. அப்படித்தான் ஏதோ நடந்திருக்கும் என்று தோன்றியது.

மனோ? மனோவால் மயங்கிக் கிடப்பவள் மேல் அவன் ஆசையை தணித்துக் கொள்ள முடியுமா? கண்டிப்பாக முடியவே முடியாது. ஆக மயக்கமில்லை! நடந்தேறியது நினைவில் இல்லை!

மனோவால் அவள் விருப்பமில்லாமல் அவளோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியாது! நிச்சயம் மாட்டான்.

பின் என்ன நடந்திருக்கும்? தான் தான் இதற்கு காரணமா? மனோவின் தவிப்பான முகம் முன் வர, அவனைக் குற்றவாளிக் கூண்டில் மனம் ஏற்ற மறுத்தது. கண்டிப்பாக மனோ முன்னேறியிருக்க மாட்டான் என்பது நிச்சயம். தான் தான் மனோவின் உணர்வுகளைத் தூண்டியிருக்க வேண்டும், அவளால் தான் அவர்கள் இருவரும் தங்கள் எல்லை மீறியிருக்க வேண்டும்! மனம் முழுமையாக நம்பியது. 

நேற்று முழுவதும் அவள் மனநிலையும் அப்படி தானே, ஒருவிதத் தேடலில் இருந்தது! தேடலும் அம்மாவோடு பேசிய வருத்தமும் நிலை பிழற வைத்திருக்கும்! இருவரும் போதையில் எல்லை தாண்டியிருக்க, அவனை மட்டும் குற்றம் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

மருத்துவன் கிளம்புவதாக உள்ளே பெட்டியை எடுக்க செல்லவும் அவனைப் பற்றி நினைக்கக் கூட இல்லை.

நடந்தது தன் மனோவோடு தானே… என்றானாலும் அவனோடு நடக்கப் போவது தானே… ஏதேதோ கூறி தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டாள். மனம் ஓரளவிற்கு சமன்பட்டது. 

குளித்து வெளி வந்தவள் மனோ இருந்த அறைக்கு தான் நேரே சென்றாள். உடல் சோர்வோ, உள்ள சோர்வோ, மருந்தின் தாக்கமோ… அவன் மடியில் தலை சாய்ந்தவள் கண்ணயர்ந்தாள். 

அவள் அமைதியாக படுத்திருக்க, தலையை வருடிக் கொண்டிருந்தவன் கண்கள் மட்டும் நிறுத்தாமல் நீரை கொட்டிக் கொண்டே இருந்தது. இந்தக் கொடுமையை சகிக்கத் தெரியவில்லை விழியின் மனோவிற்கு!

 

error: Content is protected !!
Scroll to Top