பிரியதர்ஷினியின் வளைகாப்புக்கு வரும் எண்ணமே இல்லை சத்யபாமாக்கு, அவருக்கு வீட்டில் நிரம்ப வேலையிருந்தது. மகள் ரேணுகா வேறு நேரத்தோடு அவரின் வீட்டுக்கு வந்து விட்டாள். அவளையும் பிரியதர்ஷினி வீட்டினர் அழைத்திருக்க, “வாங்கம்மா போகலாம்” என்று அவரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தாள்.
“இப்ப நான் எப்படி வர்றது? நீ மட்டும் போயிட்டு வா. நான் பிரியா பொண்ணுக்கிட்ட சொல்லிக்கறேன்” என்றார் அவர்.
ரேணுகாவிற்குத் தனியாகச் செல்ல மனமில்லை. மாமியார் வீட்டில் இருந்து தப்பிக்கக் கிடைத்த ஒரு நாளையும் தவற விட அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அம்மாவை கட்டாயப்படுத்தி விழாவுக்கு அழைத்து வந்திருந்தாள்.
அவர்கள் மண்டபத்துக்குள் நுழைந்ததும் காவேரி கண்ணில் பட, “அப்பாடா அந்தா காவேரி இருக்காங்க. வா” என்று அவரை நோக்கி நடந்தார் சத்யபாமா.
“உங்களைத்தான் தேடிட்டு வந்தேன் பார்கவி அம்மா. எங்க ரெண்டு வாரமா கோவிலுக்கு வரல நீங்க. எனக்குப் போனும் பண்ணல?” என்று காவேரியை பிடித்துக் கொண்டார். அவர் பதில் சொல்லும் முன், “இன்னைக்கு நான் இங்க வர்றதாவே இல்ல, தெரியுமா? இந்தப் பொண்ணுதான் என்னை வந்தே ஆகணும்னு கைய பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டா” என்றார்.
“ஏன், நீங்க வேற விசேஷம் எதுக்கும் போகணுமா?” என்று காவேரி இயல்பாகக் கேட்க, “அட, நீங்க வேற அதை ஏன் கேட்கறீங்க..” என்று அவரின் கைப் பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, காவேரியையும் பக்கத்தில் இருத்திக் கொண்டார்.
ரேணுகாவின் கையில் இருந்த குழந்தை பார்கவியைப் பார்த்ததும் அவளிடம் தாவியது. அவள் குழந்தையை வாங்கி விளையாட்டுக் காண்பித்துக் கொண்டே வாயிலுக்கு நகர்ந்திருந்தாள்.
இங்கே சத்யபாமா, “எங்க பார்த்திபன் அமெரிக்கால இருந்து வந்துட்டான்” என்றார்.
காவேரி அதிர்ச்சியுடன், “எப்போ?” என்று கேட்டார்.
“இன்னைக்கு விடிய காலையில வந்தான்.”
“அதையேன் இப்படிச் சோகமா சொல்றீங்க? நீங்கதான் உங்க பையனுக்குப் பொண்ணு பார்த்துட்டு இருந்தீங்களே? ஊருக்கு வரச் சொல்லணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே? அப்புறம் என்ன?”
“நான் அவனை வரச் சொன்னேன்தான் இல்லைங்கள. ஆனா இப்படி மொத்தமா இங்கேயே இருக்க மாதிரி வருவான்னு நான் நினைக்கல” என்றார் சத்யபாமா.
“ஓ அப்போ பார்த்திபன் தம்பி லீவ்ல வரலையா?” என்று அவரிடம் சந்தேகம் கேட்டார் காவேரி. அவருக்கு அந்த நொடியே அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.
பார்த்திபன் பார்த்துக் கொண்டிருந்த ப்ராஜெக்ட் முடிந்து விட்டது. அடுத்த ப்ராஜெக்ட்காகக் காத்திருக்காமல் அலுவலகத்தில் பேசி, அனுமதி பெற்றுச் சென்னை வந்து விட்டான். இனி இங்கிருந்தே வேலை பார்க்க போகிறான்.
சத்யபாமா விடுமுறை எடுத்து வீடு வரச் சொல்ல, அவனோ மொத்தமாக வந்து விட்டிருந்தான்.
“அவன் திரும்பப் போகணும்னா போகலாமாம். யூஎஸ் விசா இருக்கும்மான்னு அசால்ட்டா என்கிட்ட சொல்றேன்”
“சரி, கல்யாணத்துக்கு அப்புறமா போக ஆசைப்பட்டா போகட்டுமே. தம்பி தப்பா முடிவெடுக்க மாட்டாப்ல இல்ல?” என்று காவேரி கேட்க, “கல்யாணத்துக்கு அப்புறமாவா? நீங்க வேற, அவன் வீட்டுக்கு வந்ததும் வராததுமா சொன்னதை நீங்க கேட்டிருக்கணுமே. நான் பார்த்த பொண்ணு அவனுக்குப் பிடிக்கலையாம்.” என்று குரலை தழைத்து மனத்தாங்கலுடன் சொன்னார் சத்யபாமா.
“அது கூடப் பரவாயில்ல பார்கவியம்மா. அவன் யாரையோ லவ் பண்றானாம். அந்தப் பொண்ணைத்தான் கட்டுவேன்னு வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்துல குண்டை போட்டுட்டான்” என்றார் தொண்டையடைக்க, கோபமாக.
காவேரியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. ஒருவேளை அப்படியும் இருக்குமோ? என்ற ஆவல் அவருக்கு.
“பொண்ணு யாருன்னு கேட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே கண்களைச் சுழற்றி மகளைத் தேடினார். அவளைக் காணவில்லை.
“எங்க, நான் கேட்டேனே. இப்பவே சொல்லணுமா உங்களுக்குன்னு கத்துறான்.” என்று நொடித்துக் கொண்டார்.
“அவன் பொண்ணு வீட்ல பேசிட்டு சொல்லுவானாம். சார் சொன்னதுக்கு அப்புறமா நாங்க பொண்ணு கேட்க அவரோட போனா போதுமாம். பெத்தவங்க எங்களுக்கு என்னடா மரியாத கொடுக்கற நீன்னு கேட்டா.. நான் கல்யாணம் பண்ணிக்கணுமா வேணாமான்னு திருப்பி என்னை மிரட்டுறான். எங்க பார்த்திபன் இப்படிப் பண்ணுவான்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல பார்கவி அம்மா. எல்லாரும் சொல்ற மாதிரி வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்தா புள்ளைங்க மாறிடுறாங்கதான்” என்றார் கோபமும், கலக்கமுமாக.
அவர்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்தவர் மெதுவாகத் தலையைத் திருப்பி, “யாரு நம்ம பார்த்திபனா? நம்பவே முடியலையே” என்று ஆச்சரியத்துடன் வினவினார். பகலில் பக்கம் பார்த்து பேச மறந்ததால் வந்த வினை.
“ஒருவேளை அங்க போய் யாரையும் லவ் பண்ணி இருப்பானோ? மொத பொண்ணு நம்ம ஊரான்னு விசாரிங்க. வட நாட்டு பொண்ணா இருக்கப் போகுது” என்று சொல்லி சத்யபாமாவின் பயத்தில் நெருப்பைக் கொளுத்தி போட்டார்.
அவருக்குப் பக்கத்தில் இருந்தவர், “வட நாட்டு பொண்ணா இருந்தா கூடப் பரவாயில்லையே. பார்த்திபன் லவ் பண்ற பொண்ணு வேற நாட்டு பொண்ணா இருந்திட போகுது” என்று கிண்டலாகச் சொன்னார். அதைக் கேட்டு சத்யபாமாக்குக் கண்ணைக் கட்டி விட்டது.
“ஐயோ அப்படியெல்லாம் எவளாவது வேற நாட்டுக் காரிய லவ் பண்றேன்னு சொன்னான்னா அவ்ளோதான், நா என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது” என்று அவர் கோபமாகச் சொல்ல, “உங்க பையன நம்புங்க நீங்க. தம்பி அப்படியெல்லாம் எதுவும் செய்ய மாட்டார்” என்று அவரின் கையை அழுத்திக் கொடுத்தார் காவேரி.
“நா நம்பாம இருப்பேனா? ஆனா அவங்கப்பா கிட்டயே நெஞ்ச நிமிர்த்திட்டு நான் ஒரு பொண்ண விரும்புறேன்ப்பான்னு தைரியமா சொல்றான்ங்கறேன். இம்புட்டுக்கு துணிஞ்ச பைய என்ன செய்யக் காத்திருக்கானோ தெரியலையே” என்று அங்கலாய்த்தார்.
“அம்மா, எல்லாரும் நம்மளையே பார்க்கறாங்க. பேசாம இரும்மா.” என்று அவரைக் கடிந்து கொண்டாள் ரேணுகா.
“அண்ணா என்ன சொல்லுச்சு? பொண்ணு வீட்ல பேசிட்டு நம்மளையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னுச்சு இல்ல? அப்போ பொண்ணு இந்த ஊர்தான்” என்று அழுத்தமாகச் சொன்னாள் அவள்.
“அப்போ உங்கண்ணே லவ் பண்ற பொண்ணு யாருன்னு தெரியுமா உனக்கு? உங்க அண்ணனுக்கு நீயும் கூட்டா? அவனைத் தொல்லை பண்ணாதன்னு நீ என்னைய இழுத்துட்டு வரும் போதே எனக்குத் தெரியும்” என்று மகள் மேல் பாய்ந்தார் அவர்.
“விடுங்க. வீட்ல போய்ப் பேசிக்கலாம்” என்று காவேரி அவரைச் சமாதானப்படுத்த, “நான்தான் சொன்னேனே. இன்னைக்கு இங்க வர்றதாவே இல்ல நாங்க. இந்தப் பொண்ணுதான் என்னை வம்படியா இழுத்துட்டு வந்தா. அண்ணா தூங்கட்டும்னு அவனுக்குச் சப்போர்ட்டு. இப்போதானே தெரியுது, இவளும் அண்ணன்காரனுக்குத் துணைன்னு..” என்று மகளை முறைத்தார்.
“ம்மா, நா அண்ணா ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொன்னேன்ம்மா.” என்று பல்லைக் கடித்தாள் ரேணுகா.
“அண்ணா லவ் பண்றதே எனக்கு நீங்க சொல்லித்தான் தெரியும். இதுல நான் வேற கூட்டுன்னு என்னைக் கோர்த்து விடுறீங்க. உங்க மருமக யாருன்னு நீங்களே கேட்டு சொல்லுங்க எனக்கு” என்று அம்மாவை முறைத்தாள்.
“அம்மா கோபத்துல பேசினா நீயும் கூடக் கூடப் பேச கூடாதும்மா ரேணு. அமைதியா இருங்க” என்று இருவரையும் பார்த்துச் சொன்னார் காவேரி.
“பொண்ணு யாருன்னு தெரிஞ்சாதான் எனக்கு நிம்மதியாகும்” என்று சத்யபாமா விடாமல் சொல்ல, “என்ன? என்ன?” என்று அக்கம் பக்கத்து இருக்கைகளில் இருந்தவர்கள் விசாரிக்க, “நம்ம போஸ்ட் மாஸ்டர் பையன் பார்த்திபன் லவ் பண்றானாம். அதுனால பாரின்ல இருந்து வந்துட்டானாம். அந்தப் பொண்ணுக்காக வேலையை விட்டுட்டு வந்துட்டானாம்” என்ற செய்தி நொடியில் அந்த வரிசை முழுக்கப் பரவியிருந்தது.
“பார்த்திபன் காதலி யார்?” அனைவரும் கேட்டது அந்த ஒற்றைக் கேள்வியைத்தான்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவன், பழுப்பு நிற காற்சட்டை, அடர் நீல நிற மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டையின் முதல் பட்டன் திறந்து விடப்பட்டிருக்க, மாப்பிள்ளை தோரணையுடன் மண்டபத்துக்குள் நுழைந்திருந்தான்.