சுந்தரம் மகனை தேற்றுவதில் இறங்கினார்.
“நாம இப்படியே இறங்கி வேதா வீட்டுக்கு போவோமா? ஒருவேளை நம்மளை உள்ள விடலைன்னா, நீ மட்டும் சுவர் ஏறி குதிச்சு, வேதாவை தூக்கிட்டு வந்திடு. எப்படி என் ஐடியா?” மகனுக்காகப் பேசினார் மனிதர்.
அது நடக்காது என்ற நிதர்சனம் புரிந்து, “போங்கப்பா” என்று கோபமாகச் சொன்னான் வெற்றி.
இப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டு மகனை பார்த்தார் அவர்.
இருவரும் மௌனமாய்த் தேநீர் அருந்தி விட்டு வீடு சென்றனர்.
வேதாவின் வீட்டில் வேண்டாத அமைதி நிறைந்திருந்தது. ஜெயலட்சுமி அத்தனை கோபத்துடன் வீட்டில் வளைய வந்தார். அவரால் முன் தினம் நடந்ததை ஜீரணிக்க முடியவேயில்லை.
ஏற்கனவே மகனின் வாழ்வு சிக்கலாக இருக்க, இப்போது மகளின் திருமண நிச்சயமும் இப்படி ஆனதில் அவருக்கு அத்தனை வருத்தம்.
முன்தினம் மாப்பிள்ளை வீட்டினர் வெளியேறிய ஒரு மணி நேரத்தில் எல்லாம் ரேவதிக்கு அலைபேசியில் அழைத்து விட்டார் அவர்.
மகளின் வாழ்வுக்காக மட்டுமின்றி, இன்னொரு பெண்ணைத் தன் உறவுகள் அவமானப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்க அழைத்திருந்தார் அவர்.
“நீங்க பெரிய மனசு பண்ணி எங்களை மன்னிக்கணும். எனக்கு அதைத் தவிர வேறென்ன சொல்லன்னு தெரியல. மன்னிச்சுடுங்க சம்மந்தி. என் நாத்தனார் பேசினதுக்கு நான் மனசார மன்னிப்பு கேட்கறேன். நீங்க எதையும் மனசுல வச்சுக்கக் கூடாது” ஜெயலட்சுமி பேச,
“ஐயோ, என்னங்க நீங்க..” என்று தொடங்கிய ரேவதியை பேச விடவில்லை அவர்.
“உங்க கோபம் நியாயமானது. நீங்க எல்லாம் இப்படிப் பாதியில போற மாதிரி ஆனதுக்கு நாங்க தானே காரணம். யார் பேசினதையும் மனசுல வச்சுக்காதீங்க. எனக்குச் சொல்றது சுலபம். ஆனா, உங்க இடத்தில இருந்து உங்க கோபம் சரின்னு புரியுது. என் பொண்ணு..” மகளைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்ததும் அவருக்குப் பேச்சு நின்று, அழுகை வந்தது.
“நாங்க பேசாம பாதில வந்தது தப்புதான். அதைப் பார்த்து இன்னமும் மோசமா பேசியிருப்பாங்க. கல்யாணம் நின்னுடுச்சு சொல்லியிருப்பாங்க. நாங்க அப்படி வந்ததும் தப்புதான். எங்க பையன் கோபமா கூப்பிடவும், ஏதோ ஆத்திரத்தில யோசிக்காம வெளில வந்துட்டோம். அதுக்கு நீங்களும் எங்களை..”
“ஐயோ நீங்க மன்னிப்பு கேட்க வேணாம். தப்பு எங்க மேல. என் நாத்தனார் மகனுக்கு என் பொண்ணைக் கேட்டா, நாங்க கொடுக்கல. அந்த ஆதங்கம் அவளுக்கு. அதுல இப்படிப் பேசிட்டா. தயவு செஞ்சு எதையும் நீங்க மனசுல வச்சுக்க வேணாம் சம்மந்தி மா.” என்று ஜெயலட்சுமி சொல்ல, ரேவதி மறுத்து பேச என இரண்டு பெண்களும் மாறி மாறி பேசி, சமாதானம் சொல்லி, அப்போதே சுமூகமாகி இருந்தார்கள்.
ஏற்கனவே வானமாமலை சுந்தரத்திடம் பேசியிருக்க, இங்கே ஜெயலட்சுமி பேச என, இருவரின் பெற்றோர்களும் இறங்கி வந்து உறவில் விழுந்த பிளவை சரி செய்திருந்தார்கள்.
ஆனால், அந்த உறவுக்கு அடிதளம் இட்ட இருவரும் பிரிந்து நின்றார்கள்.
வேதா அறையில் அழுதபடியே உறங்கி விட்டாள். நள்ளிரவில் விழிப்பு வந்து வெற்றிக்கு அவள் அழைக்க, அவன் எடுக்கவில்லை எனவும் மேலும் உடைந்து போனாள் அவள்.
வைதேகியை முடிவாக ஒரு வழி பண்ணி விட்டார் அய்யனார்.
“உன்னைய எல்லாம் ஒரு ஆளா மதிச்சு, பூ வைக்குறதுக்குக் கூப்பிட வேணாம்னு சொன்னேன். இந்த மடப்பய கேட்டா தானே? இப்போ அவன் மகளை அழ விட்டு வேடிக்கை பார்க்கிற இல்ல நீ?” அவர் மகளைப் பார்த்துக் கோபமாகக் கேட்க,
“ஐயோ, நான் என்னப்பா பண்ணேன்? என்னைக் கூப்பிடாம எப்படி இந்த வீட்ல ஒரு விசேஷம் வைப்பீங்க?” வைதேகி திமிராகப் பேச, “இந்தா, எழுந்திரு மேல..” என்று அவரைப் பார்த்து கத்தினார் முத்துமாரி.
“நீயெல்லாம் என் வயித்துல பொறந்தவத் தானா? எப்படி உன் குணம் மட்டும் இப்படிச் சாக்கடையா போச்சு?” என்று கேட்ட அம்மாவை அசட்டையாகப் பார்த்தார் வைதேகி.
அய்யனார் எழுந்து நின்று மருமகனை பார்த்து, “மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை” என்றவர், திரும்பி மகளைப் பார்த்து, “நீ கிளம்பு. இனிமே இந்த வீட்டுப் பக்கம் நீ வரக் கூடாது. அதான் ஏற்கனவே சொத்து எல்லாம் பிரிச்சு கொடுத்தாச்சு இல்ல? இனிமே உனக்கு இங்க என்ன வேலை..” என்றார்.
“என் மக இந்த வீட்டு மருமக..”
“ஓ. உனக்கு அந்த ஞாபகம் வேற இருக்கா? சொந்த மகளையும் பார்க்கல நீ. அண்ணன் மகளையும் பார்க்கல நீ. என் பேத்திங்க வாழ்க்கை முக்கியம். அவங்க நல்லா இருக்கணும். அதைக் கெடுக்க நினைக்கிற யாருக்கும் இந்த வீட்ல இடம் கிடையாது. கிளம்பு முதல்ல”
“என்னப்பா பேசுறீங்க?”
“உன் அப்பன், ஆத்தா எல்லாம் யாரும் இங்க இல்ல. உனக்கு அது ஞாபகம் இருந்தா, இத்தனை ஆடுவியா? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.. உன் வீட்டை பார்த்து போ நீ” அய்யனார் கர்ஜிக்க, ஷாலினியின் அப்பா எழுந்து வந்து மனைவியின் கைப் பிடித்து இழுத்துப் போனார்.
குடும்பம் மொத்தமும் அதைப் பார்த்தாலும், யாரும் எதுவும் பேசவில்லை, தடுக்கவுமில்லை.
முத்துமாரி ஷாலினியின் முன் வந்து நின்றார்.
“நான் முன்னவே சொன்னதுதான். இப்ப ஒருக்கா திரும்பவும் சொல்றேன். கேட்டுக்கோ. புருஷன், அவன் குடும்பம் வேணும்னா இங்க இரு. இல்லையா, உங்கம்மா கூடவே நீயும் உங்க வீட்டுக்குக் கிளம்பு. உங்கம்மா உபதேசத்தைக் கேட்டா உருப்படாமதான் போவ..” முத்துமாரி பேச, அந்தக் கடின வசவை தாங்கிக் கொள்ள முடியாமல், “அத்தை, வேணாம். புள்ளைய பேசாதீங்க” என்று அப்போதும் மருமகளுக்காகப் பரிந்து வந்தார் ஜெயலட்சுமி.
“பார்த்துக்கோ. உன்னை ஒரு வார்த்தை சொல்லக் கூடாது சொல்றா உன் மாமியா. அவ மகளுக்குக் கெடுதி நினைக்கிறீங்க, நீயும், உங்கம்மாவும்..”
“இல்ல ஆச்சி. நான் வேணும்னு பண்ணல. சாரி” என்றாள் ஷாலினி. சட்டென அவரின் கைப் பிடித்து அவள் பேச, பேத்தியை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு விலகிப் போனார் முத்துமாரி.
விஜய் விறுவிறுவென்று படியேறி தன் அறைக்கு வந்தான்.
அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடி வந்தாள் ஷாலினி.
அவர்கள் அறைக்குள் நுழைந்ததும், “சாரி மாமா” என்றவளை கொலை வெறியுடன் பார்த்தான் விஜய்.
“இப்போ நீ சொல்ற இந்தச் சாரி, நடந்ததை இல்லைனு ஆக்கிடுமா? என் தங்கச்சி வாழ்க்கையில் விளையாறீங்களா அம்மாவும், பொண்ணும்? வேதா உனக்கு யாரு? மாமா பொண்ணு இல்லையா? அதெப்படி மாமா மகன் மேல மட்டும் உனக்கு லவ் வரும். அவனைக் கல்யாணம் பண்ணிப்ப? ஆனா, அதே மாமா மகளை மட்டும் பிடிக்காது இல்ல? நல்லா இருக்குடி உங்க நியாயம்” ஆத்திரத்துடன் அவன் கேள்வி கேட்க,
“அந்த ஃபோட்டோ உங்ககிட்ட காட்டினது போலதான் அம்மாகிட்டேயும் காட்டினேன். அதை வச்சு அம்மா இப்படிப் பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியாது மாமா. நான் கொஞ்சம் அம்மா பைத்தியம்தான். ஆனா, நீங்க சொல்ற மாதிரி கெட்டவ இல்ல.” உதடுகள் அழுகையில் துடிக்கச் சொன்னாள் ஷாலினி.
அவள் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்க, மனைவி மேல் இருந்த அன்பில் மன்னித்தான் விஜய்.
அந்தக் குடும்பத்தில் அடித்த புயல் ஒருவாறாக ஓய்ந்தது. ஆனால், வேதவர்ஷினிக்கு மட்டும் புயலின் தாக்கம் அதிகமிருந்தது. மறுநாள் அதிகாலையில் எழுந்ததும், சென்னைக்கு விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து கிளம்பி விட்டாள் அவள்.
இதோ சென்னை வந்து வெற்றியிடம் பேசியும் விட்டாள். ஆனாலும், அவள் மனத்தின் அலைப்புறுதல் அடங்கவில்லை.
அவள் கைகளில் வரைந்திருந்த மருதாணி இன்னமும் பசுமையாய் இருக்க, மனது வாடிப் போய் இருந்தது.
அங்கே மகளைத் தனியாக அனுப்பி விட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் வானமாமலை. அவரின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் மகள் சென்றது அவரை அடித்துப் போட்டது.
எல்லாவற்றுக்கும் அவரிடம் எதிர்த்து நின்று வாதாடி, போராடும் மகள் இன்று அமைதியாய் சென்றதுதான் அவருக்கு அதிகப் போராட்டமாக இருந்தது.
அவர்கள் ஏற்கனவே எடுத்த முடிவின் படி அன்றிரவே மகளைக் காண சென்னை கிளம்பினார்கள்.
என்னதான் அவர்கள் வெற்றியின் குடும்பத்தினரிடம் ஓரளவு பேசி, மன்னிப்பு கேட்டு நிலைமையைச் சீர் செய்திருந்தாலும், நேரில் பார்த்து பேசுவது போல வராது இல்லையா? பூ வைக்கும் நிகழ்வில் நடந்தது இரண்டு வீட்டினருக்கும் பாதிப்புகள் இருக்க அதைச் சரி செய்ய நினைத்தார்கள்.
இது போன்ற விஷயங்களை நேரில் தானே பேசியாக வேண்டும். அதனால், அவர்களின் காரில் ஓட்டுநர் அமர்த்திக் கொண்டு சென்னை சென்று இறங்கினார்கள்.
“இப்பதான் அத்த, பிள்ளைக்குக் கரு கலஞ்சது. முழுசா மூனு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள உண்டானது சந்தோஷம்தான். ஆனா, இந்த முறை நாம நல்லா, கவனமா அவளைப் பார்த்துக்கணும். அதனால அவளை இங்கேயே விட்டுப் போறேன் சொல்றான் விஜய்” என்று ஜெயலட்சுமி சொல்ல,
“அதுவும் சரிதான்” என்ற முத்துமாரி ஷாலினியை கவனித்துக் கொள்ள, அங்கேயே இருந்து கொண்டார். வீட்டின் சூழல் மனத்தில் கலக்கம் கொடுக்க, கணவனின் மேல் இருந்த காதலில், அடங்கிப் போனாள் ஷாலினி. அவளுக்குத் தவறாக எதையும் சொல்லிக் கொடுக்கத்தான் வைதேகி அங்கில்லையே.
வைதேகியிடம் ஷாலினி முகம் கொடுத்தே பேசவில்லை. முன்தினம் முணுமுணுத்துக் கொண்டே கணவருடன் சென்னை சென்று விட்டார் அவர்.
அன்றிரவு வானமாமலை, ஜெயலட்சுமி, விஜய் மூவரும் சென்னை சென்றனர்.
ஞாயிறு அன்று அதிகாலையில் வீடு வந்த வீட்டினரை வெறுமையான முகத்துடன் வரவேற்றாள் வேதா. அவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாத அளவு அவளொன்றும் குழந்தை கிடையாதே.
காட்டுத் தீயை விட மோசமான பாதிப்புகளை, அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது கோபம் என்பதை அறிவாள் அவள். அதை அறிந்தும் கூட அப்பாவின் மேல் கோபம் குறையவில்லை அவளுக்கு.
“ஊர்ல எத்தனை ஜோடிய பிரிச்சு விட்டு இருப்பேன். அந்தப் பாவம்தான் இன்னைக்கு என் பிள்ளைங்க வாழ்க்கையைப் பாதிக்குது.” அம்மாவின் மடியில் அவள் படுத்திருக்க, புலம்பினார் வானமாமலை. அதைக் கேட்டாலும், எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை அவள்.
மெல்ல தன் கையை உயர்த்தி மணிக் கட்டில் இருந்த, கைச் சங்கிலியை பார்த்தாள் வேதா.
அவள் கண்களில் தானாக ரசனை குடியேறியது.
“செல்லமே, கையைக் காட்டு” என்று வெற்றி அவளின் கைப் பிடித்து அணிவித்து விட்ட, “பிரேஸ்லெட்” அது.
இரண்டு குட்டி இதயங்கள் இணைந்திருக்க, அதன் மேல் கொடிகள் படர்ந்து மலராக ஆங்கில, “வி” எழுத்துகள் இரண்டு ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்தது.
“குறிலாக நான் இருக்க, நெடிலாக நீ வளர்க. அழகூரில் பூத்தவளே..” அதை அணிவிக்கையில், இருவர் பெயரின் தமிழ் முதல் எழுத்துக்களைக் குறிப்பிட்டு, வெற்றிப் பாடியது அவளின் நினைவில் வந்து சோதித்தது.
“மேன்மை பொருந்திய மனசை உடைக்கும் மேலாளர்” அவள் முணுமுணுக்க, “என்ன வேதா சொன்ன?” குனிந்து மகளின் முகம் பார்த்து கேட்டார் ஜெயலட்சுமி.
“தூக்கம் வருது மா” என்று சொல்லி, கண்களை மூடிக் கொண்டாள் வேதா.
மறுநாள் திங்கள் கிழமை. பொதுவாகவே அன்று வங்கிச் செல்ல அவளுக்குப் பிடிக்காது. இப்போது திருமண நிச்சயத்திற்குப் பின் செல்கிறாள் அவள். உடன் பணிபுரியும் அனைவரின் கண்களும் அவர்களின் மேல்தான் பதியும்.
நல்லவேளையாகத் தொலைவின் காரணமாக வங்கியில் இருந்து யாரும் அவர்களது நிச்சயத்திற்கு வரவில்லை என்று ஆசுவாசப்பட்டுக் கொண்டாள் வேதா.
காலையில் சென்றதும் வாழ்த்துகள் சொல்வார்கள். நிகழ்ச்சி குறித்து விசாரிப்பார்கள். புகைப்படங்கள் கேட்பார்கள் என்பதை நினைக்கும் போதே அவளுக்குக் கண்ணைக் கட்டியது.
மாண்புமிகு மேலாளர் தனது அறைக்குள் அடைந்துக் கொள்வார். அவள் அல்லவா பொதுவில் அமர்ந்து அனைவருக்கும் பதில் சொல்ல நேரும். அதை நினைத்து இப்போதே பல்லைக் கடித்தாள் அவள்.
“பேருதான் பெத்த பேர். பெரிய போர்ட் மட்டும் வைப்பாங்க. ஆனா, எனக்குத் தனியா ஒரு ரூம் கூடக் கிடையாது” புலம்பிக் கொண்டே வங்கிக்கு செல்லத் தயாராகி, அம்மா நீட்டிய உணவினை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள் அவள்.
அங்கே புத்தம் புதிய, “ஸ்கூட்டி” ஒன்றின் மேல் அமர்ந்து அவளைப் பார்த்து வசீகரப் புன்னகை சிந்தினான் வெற்றிவேந்தன்.
பழுப்பு நிற காற்சட்டை, அடர்நீல நிற மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை என வங்கி செல்ல தயாராகி வந்திருந்தான். அவனது தோற்றப் பொலிவு அவளை ஈர்த்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல் முறைத்தாள் வேதா.
மஞ்சளும், பச்சையும் கலந்த மள்மள் சேலையில் அவன் மனத்தைக் கொள்ளை அடித்தாள் வேதா. ஒற்றை விரலால் கண்ணாடியை கழற்றி அவளைப் புருவம் உயர்த்திப் பார்த்தான் வெற்றி.
“வாங்க மாப்பிள்ளை. வீட்டுக்குள்ள வாங்க. காஃபி சாப்பிட்டு போவீங்க” என்று வானமாமலை, வெற்றியை உபசரிக்க, வேதா அப்பாவை முறைத்து விட்டு வேக வேகமாக வெளியில் போனாள்.
“ஈவ்னிங் வர்றேன் மாமா. அப்போ காஃபி சாப்பிடுறேன்” என்று கத்தி விட்டு வேதாவின் பின்னேயே ஓடினான்.
“எம்மாடி வேதா. ஏன் இந்த ஓட்டம்? நில்லு செல்லமே” என்றவனைக் கண்களால் எரித்துக் கையை உதறி விட்டு நடந்தாள் வேதா.
வெற்றி ஓடிப் போய் ஸ்கூட்டியை இயக்கி, அவளின் முன்னே வந்து வழிமறித்து நின்றான்.
“வண்டில ஏறு வேதா. உனக்காக வாங்கினதுதான்”
“எனக்கு யாரும், எதுவும் வாங்கிக் தர தேவையில்லை” அவன் முகம் பார்க்காமல் சொல்லி, வண்டியை சுற்றிக் கொண்டு முன்னே நடந்தாள்.
“வேதா.. ” அவளின் பின்னோடு வந்தான் வெற்றி.
“உன் மேனேஜர் வெற்றியா நினைச்சு வண்டியில ஏறு” அவன் சொல்லவும், அவளுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது.
“இப்போ நீங்க ஒன்னும் என் மேனேஜர் கிடையாது. தெரியும் தானே? இன்னைக்கு நான் எல்லாத்தையும் ஹேன்ட் ஓவர் கொடுத்துட்டு, அம்பத்தூர் பிராஞ்ச் போய்டுவேன். அப்போ யாரை வண்டியில ஏத்துவீங்க?” படபடவெனப் பொரிந்தாள் அவள்.
அவளுக்கு அவன் முகம் பார்க்க பார்க்க கோபம் அளவில்லாமல் வந்தது.
வங்கிச் சட்டப்படி கணவன், மனைவி ஒரே வங்கிக் கிளையில் வேலை பார்க்க முடியாது. அதனால் பதவி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வேதாவிற்குப் பணியிட மாற்றம் அளித்திருந்தது வங்கி நிர்வாகம்.
இன்னும் ஒரு வார காலம் மட்டுமே வெற்றியின் வங்கிக் கிளையில் பணிபுரிவாள் அவள்.
ஒரு வாரத்திற்கு முன்பே அவர்களுக்குப் பணியிட மாற்றம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருவரும் அதை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி இருந்தார்கள். ஆனால், இப்போது பிரிவு பெரிதானது போல் உணர்ந்தாள் வேதா.
“வேதா பேங்க் ஓபன் பண்ணணும். டைமாகுது பார்” வெற்றி சொல்ல, அவனை முறைத்து, அவன் கையில் இருந்து வண்டியை வாங்கினாள் வேதா.
அவள் வண்டியோட்ட பின்னால் அமர்ந்த வெற்றிக்கு அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்பது பிடிபடவில்லை. அவளின் இடுப்பில் கை பதித்து, இயல்பாக அவன் அமர, “மேனேஜர் பேங்க் போகனுமா? இல்ல, இப்படியே இறங்கி நடந்து போறீங்களா?” என்று கோபமாகக் கத்தினாள் வேதா.
“உன்னைக் கடந்து விடும் அற்புதம் எப்படியும் நிகழ்ந்து விடும் தானே?” என்று மனுஷ்ய புத்திரனின் வரிகளை வேதா வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருக்க, வெற்றிக்குத் துரதிஷ்டவசமாக இப்போது அது நினைவில் வந்தது.