பார்த்திபன் காதலி – 28 (2)

பார்த்திபன் மீண்டும் மீண்டும் நண்பனை அழைத்துக் கொண்டேயிருந்தான். அந்த அலைபேசி சத்தம் பிரியதர்ஷினியை தொல்லை செய்ய, கோபத்துடன் அழைப்பை ஏற்றிருந்தாள்.

“பார்த்திண்ணா” என்று அவள் அழைக்கவும், “யாரு பார்த்திபனா பேசுறான் தர்ஷினி? நான் அவன்கிட்ட பேசி எவ்ளோ நாளாச்சு. போனை குடு, நான் பேசுறேன்” என்று அவளின் மாமியார் மரகதவல்லி கேட்கவும், அலைபேசியை அவரிடம் நீட்டினாள்.

அவனின் நலம் விசாரித்து வேலை, தங்குமிடம், உணவு என எல்லாவற்றையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் மரகதவல்லி.

“சரிப்பா. நீ போய்ச் சாப்பிடு. நான் ஒரு முக்கியமான வேலையா இருந்தேன். நானும் அதைப் போய்ப் பார்க்கறேன்” என்றார்.

“அச்சோ, சாரி மிஸ். உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“அட இல்லப்பா பார்த்திபா, பிரியா வளைகாப்பு வருதுல்ல..”

“அப்படியா எப்போ?” என்று ஆச்சரியத்துடன் வினவினான்.

“ரஞ்சன் உன்கிட்ட சொல்லல?” என்று அவர் கேட்கும் போதே அலைபேசியை அவரிடம் இருந்து வாங்கியிருந்தான் பிரபஞ்சன்.

“என்னை வளைகாப்புக்கு கூப்பிடலடா நீ?” என்று பார்த்திபன் கோபிக்க, “நான் கூப்பிட்டா மட்டும் வந்துருவியா நீ?” என்று எதிர்கேள்வி கேட்டான் பிரபஞ்சன்.

“பிரபா..”

“போடா. நீ உன் லீவ உன் கல்யாணத்துக்கு வர சேர்த்து வை.” என்று கடுப்புடன் சொல்லி வைத்து விட்டான் பிரபஞ்சன்.

பார்கவியிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று காலையிலேயே சொல்லியிருந்தான் அவன். அவளும் ஆர்வமாக என்னவென்று கேட்டிருந்தாள். அம்மாவோடு வெளியில் செல்கிறேன் என்றவள், தன் அம்மாவுடன் செல்கிறேன் என்ற தகவலை தன்னிடம் சொன்னாளா? என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

அந்த முக்கியமான விஷயத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி வை என்று கேட்டிருந்தாள். இனிமேல் அவனிடம் பேசுவாளா என்பதே அவனுக்குச் சந்தேகமாகி போனது.

ஆனால் எப்போதும் போல அவனுக்கு ஆச்சரிய அதிர்ச்சியை அளித்தாள் பார்கவி. அவனது செய்திக்கு இயல்பாகப் பதில் அனுப்பினாள்.

அவன் பகிர வேண்டிய முக்கியமான விஷயம் இப்போது முக்கியம் இழந்து போனதை உணர்ந்து மனம் நொந்தான் அவன்.

ஆனாலும் அவளை அழைத்து விட்டான். இம்முறை அவனது காணொளியையும் அணைத்து விட்டே அழைப்பை ஏற்றாள். அதுவே அவனுக்கு முகத்தில் அறை வாங்கிய உணர்வை தந்தது.

மீண்டும் மீண்டும் அவளைக் காயப்படுத்துகிறோம் என்ற குற்ற உணர்வு அவனைத் தாக்கியது.

“சொல்லுங்க” என்று பார்கவி சொல்லவும், “உன் ஃப்ரெண்ட் பிரியதர்ஷினி வளைகாப்புக்கு நீ என்ன கிஃப்ட் பண்ண போற?” என்று கேட்டான் அவன்.

“வளைகாப்புக்குலாம் என்ன கிஃப்ட் பண்றது? அதெல்லாம் அம்மா பார்த்துப்பாங்க” என்றாள்.

“சரி. அப்ப இப்படி வருவோம். உங்கம்மா என்ன கொடுக்கப் போறாங்க?” என்று கேட்டான். சன்ன சிரிப்புடன், “எதுக்குக் கேக்கறீங்க?” என்று கேட்டாள்.

“நீ பதில் சொல்லு பாரு”

“அம்மா பிரியா கையில காசா கொடுத்திடலாம்னு அப்பா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க”

“ஏன் நீங்க எதுவும் பெருசா செய்யலையா?” என்று சந்தேகம் கேட்டான்.

“ஹலோ அமெரிக்கா போனதும் அமஞ்சகரய மறந்துடுவீங்களா நீங்க? உங்க தங்கச்சிக்கு செஞ்சுருப்பீங்கல்ல ஞாபகம் இல்லையா?”

“அம்மா ரேணுக்கு தங்க வளையல் போட்டாங்க”

“ம்ம், வளைகாப்புக்குலாம் வளையல்தான் போடுவாங்க.” என்றவள், “எங்கம்மா பிரியா கல்யாணத்தப்போ அவளுக்கு நகை போட்டாங்க. பிரபஞ்சனுக்கு மோதிரம். அதுனால இப்போ பணமா செய்யுற ஐடியா அவங்களுக்கு. அடுத்து அவ குழந்தைக்கு வேற செய்யணும் இல்ல. அப்போ தங்கத்தில் செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டு இருந்தாங்க. தங்கம் விக்கிற விலைக்குப் பணமா கொடுத்துடுறது பெட்டர்னு அம்மாப்பா பேசிக்கிட்டாங்க” என்று கூடுதல் தகவல் சொன்னாள்.

“ம்ம், அப்போ நான் என்ன செய்ய?” என்று அவளிடமே கருத்துக் கேட்டான்.

“அது உங்க விருப்பம்” என்று முடித்து விட்டாள் அவள்.

“ஹேய் பாரு..”

“சத்தியமா சொல்றேன், எனக்கு ஐடியாவே இல்ல. என்னைக் கேட்டா உங்கம்மாவை கேளுங்கன்னு சொல்லுவேன். உங்கம்மா ஏற்கனவே முடிவு பண்ணியிருப்பாங்க” என்று அவள் சொன்னது, அவனுக்குத்தான் இரட்டை அர்த்தத்துடன் ஒலித்தது.

அப்போது, “பாரும்மா” என்று ரங்கராஜன் அவளை அழைக்க, “அப்பா கூப்பிடுறாங்க. நான் வச்சுடவா?” என்று கேட்டாள்.

“பாரு..”

“ம்ம், அந்த முக்கியமான விஷயம் இன்னும் சொல்லலையே நீங்க..”

“அதுக்கான நேரம் வரும் போது சொல்றேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

“ஓகே. பை” என்று வைத்து விட்டாள்.

அங்கே கூடத்தில் காவேரி கோபமும் கண்ணீருமாக அமர்ந்திருந்தார். கோவிலுக்குப் போய் வந்த அமைதியே அவர் முகத்தில் இல்லை.

கணவர் வீடு வரவும் அவரிடம் புலம்பித் தள்ளி விட்டார்.

“என்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவாங்கங்க. அவங்க பையனுக்குப் பொண்ணு பார்த்திட்டு இருக்கோம்னு சொன்னாங்கதான். ஆனா இப்படிப் பேசி முடிக்கிற அளவுக்கு இவ்வளவோ சீக்கிரம் போவாங்கன்னு நான் எதிர்பார்க்கல.” என்றார் கண்ணீருடன். திருத்தணியில் இருந்து சென்னை திரும்புகையில் காரில் வைத்து மகளிடம் எதுவும் பேச முடியாதது அவரை மிகவும் வருத்தியது.

“இப்போ நான் என்ன காவேரி பண்ணணும்ங்கற?”

“என்னங்க இப்படிப் பொறுப்பில்லாம பேசுறீங்க? உங்க பொண்ணைப் பத்தின கவலை கொஞ்சமாவது இருக்கா உங்களுக்கு?”

“என் பொண்ணே கவலை இல்லாம நார்மலா இருக்கா. நீதான் ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்க” என்று அவர் சொன்னதும் கடுப்பாகி விட்டார் காவேரி.

“உங்க பொண்ணு நார்மலா இருக்காளா? எங்க அவளைக் கூப்பிடுங்க இப்போ. அவ மூஞ்சியைப் பார்த்து இதைச் சொல்லுங்க பார்ப்போம்”

“காவேரி..”

“அவளைக் கூப்பிடுங்கன்னு சொன்னேன் நான். அந்தப் பிராடு பய பாரி வேந்தனுக்குக் கூடக் கல்யாணமாகிடுச்சு. ஆனா, நம்ம புள்ளை இன்னமும் கண்ணு கலங்கிட்டு நிக்குது. நாம பெத்தவங்க இருந்து அவளுக்கு என்ன செஞ்சுட்டோம்”

“அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு நல்லபடியா அமைச்சு கொடுப்போம்” என்றார்.

“எல்லாம் வாய் சவடால்தான் உங்களுக்கு. பேச்சு பறக்கும், ஆனா காரியம் ஆகாது”

“இப்போ என்னம்மா செய்யணும்ங்கற நீ?”

“வாங்க, அந்தப் பார்த்திபன் தம்பி வீட்ல போய் நாமளே கல்யாணம் பேசிட்டு வருவோம். பையன் வீடுதான் பொண்ணு கேட்டு வரணுமா? நம்ம பொண்ணை அவங்க வீட்ல கொடுக்க ஆசைப்படுறோம்னு நாமளே போய்ச் சொல்லுவோம். அப்படியென்ன வேணாம்னு நம்ம பொண்ணைச் சொல்லிடுவாங்களா என்ன?”

“காவேரி அவங்க போடுற கண்டிஷன்லாம் தெரிஞ்ச நீயே இப்படிப் பேசினா எப்படி?”

“அவங்க கண்டிஷன்லாம் கிடக்கு. நாம விரும்பி கேட்கும் போது அதெல்லாம் பார்க்க மாட்டாங்கதானே?”

“அப்படிச் சொல்ல முடியாதும்மா” என்று அவர் சொன்ன மறுகணமே, “உங்களுக்கு உங்க பொண்ணு மேல அக்கறையே இல்ல” என்று கத்த தொடங்கி விட்டார்.

“இப்போ உங்க பொண்ணைக் கூப்பிடுங்க சொல்றேன்”

“எதுக்கும்மா? அவ போன் பேசிட்டு இருக்கா போல”

“கூப்பிடுங்கன்னு சொல்றேன் இல்ல? அவ வந்ததும் உனக்குக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கவான்னு கேளுங்க”

“சும்மாவே இருக்க மாட்டியா நீ?” என்று மனைவியைக் கோபமாகக் கடிந்து கொண்டார்.

“கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னேன். அவ சரின்னு பதில் சொல்லிட்டா.. நான் அதுக்குப்புறம் இந்தப் பேச்சையே எடுக்கல. ஆனா உங்க பொண்ணு வேணாம்ப்பான்னு சொல்லி ஏதாவது காரணம் சொன்னான்னு வைங்க.” என்று இழுத்து நிறுத்தியவர், “என்ன ஆனாலும் சரி, நீங்களும் நானும் போய்ப் பார்த்திபன் வீட்ல நம்ம பொண்ணு கல்யாணத்தைப் பத்தி பேசுறோம்” என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.

“உங்க பொண்ணைக் கூப்பிடுங்க”

“ஏன் நீ கூப்பிட்டா என்னவாம்?” என்று மனைவியை முறைத்து, “பாரும்மா” என்று மகளை அழைத்தார் ரங்கராஜன்.

“என்னப்பா?” என்று அலைபேசியும் கையுமாக வந்து நின்றாள் பார்கவி.

“அது வந்தும்மா..” என்று அவர் இழுக்க, “உங்கப்பாவோட பெரியப்பா பொண்ணு சொந்தத்துல உன்னைப் பொண்ணு கேட்குறாங்கடா பாரு. அதைப் பத்தி பேசத்தான் அப்பா உன்னைக் கூப்பிட்டார்” என்று கணவரின் தயக்கம் உணர்ந்துதானே கதை கட்டி விட்டார் காவேரி.

பார்கவி நெரித்த புருவங்களுடன் அப்பாவை திரும்பிப் பார்த்தாள்.

மகளின் கைப் பிடித்துத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் அவர். “பாரும்மா, ரெண்டு மூனு இடத்துல இருந்து உன்னைக் கேட்டு வர்றாங்கதான்டா. அப்பா என்ன சொல்லட்டும்?” என்று கேட்டார்.

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேப்பா” என்றாள்.

“உனக்கு யார் மேலயாவது விருப்பம் இருந்தா சொல்லுடா. அத நாங்களே பேசி முடிச்சு, அரேஞ்ச் மேரேஜ் மாதிரி அப்பா மாத்திடுறேன்” என்று அவர் சொல்ல, அவள் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன.

காவேரி ஆவலே உருவாக, “ஆமா, சொல்லு பாரு” என்று மகளின் கைப் பிடித்தார். பெற்றோரை மாறி மாறிப் பார்த்தவள், கீழ் உதட்டை பிதுக்கி, இல்லை என்றாள்.

காவேரி கணவரை முறைக்க, ரங்கராஜன் பட்டென்று மகள் புறம் திரும்பி விட்டார்.

“நானே சொல்றேன்ப்பா. பிளீஸ், அதுவரைக்கும் இந்தக் கல்யாண பேச்சே வேணாமே” என்று பார்கவி சொல்லவும், ‘நான்தான் சொன்னேன்ல’ என்று கண்களால் மொழிந்து கணவரை முறைத்தார் காவேரி.

“சரிம்மா. உன் விருப்பம்தான். ஆனா ரொம்ப லேட் பண்ணாத” என்று முடிவாகச் சொல்லி மகளின் தலைக் கோதினார் ரங்கராஜன். இந்த இதம் போதுமென்று கண் மூடினாள் பார்கவி.

பார்கவியின் திருமண மண்டபத்தில் பிரியதர்ஷினியின் வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.

மரகதவல்லி மருமகளின் வளைகாப்பை எளிமையாக வீட்டில் நடத்தத்தான் விரும்பினார். ஆனால் அவர்களது இரட்டை படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வீடு என்பதால் விருந்தினர்களுக்கு இடம் போதாது என்றார் ராதா.

அவர்கள் வீட்டுக் கூடம் பெரியது என்றாலும் கூட வரும் விருந்தினர்கள் அத்தனை பேருக்கும் அங்கே வைத்து விருந்து பரிமாறுவது சற்றே சிரமமாக இருக்கும் என்றார்.

அதனால் வளைகாப்பை திருமண மண்டபத்தில் நடத்துவது என்று முடிவு செய்திருந்தார்கள்.

பிரியதர்ஷினி மேடையில் அமர்ந்திருக்க, பார்கவி எங்குச் சுற்றினாலும் அவளின் பார்வை தோழியின் மீதே இருந்தது. பிள்ளை சுமக்கும் பேரழகுடன் இருந்தாள் அவள்.

அவர்களுக்கு அறிந்த தெரிந்த அத்தனை குடும்பத்து பெண்களும் அங்கிருந்தார்கள்.

பார்த்திபன் வீட்டுப் பெண்கள் விழாவுக்கு வந்ததும், காவேரியை தேடி வந்தனர். காவேரியும் இயல்பாக அவர்களிடம் பேசினார்.

ரேணுகாவின் கையில் இருந்த குழந்தை பார்கவியைக் கண்டதும் பால் பற்களைக் காட்டி புன்னகைத்து மயக்கியது. பார்கவியின் கரம் தானாகக் குழந்தையை நோக்கி நீண்டது. குழந்தையும் தாவி அவளிடம் வந்தது.

“உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சே செல்லம். என்னை ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள். வலிக்காத வண்ணம் அவள் கன்னத்தில் அடித்தது குழந்தை.

“நோ வயலன்ஸ். அடிக்கக் கூடாது செல்லம்” என்று கண்ணை உருட்டி அவள் மிரட்ட, உதடு பிதுக்கியது குழந்தை.

“அச்சச்சோ” என்று அவசரமாக வேடிக்கை காட்ட வாசலுக்கு அழைத்துச் சென்றாள். அங்கே மெல்லியதாக மழைத் தூறிக் கொண்டிருந்தது.

இளநீல மைசூர் பட்டில் இருந்தவள், குழந்தையோடு மழையை ரசித்து நின்றாள். இருவரின் கையையும் ஒன்றாகக் கோர்த்து வெளியே நீட்டி, மழைத் துளிகள் ஈரமாய்க் கையைத் தீண்டவும் சிலிர்த்து கையை உதறினாள்.

ஒரே ஒரு நொடி மழையில் நனைந்து விட்டு படக்கென்று உள்ளே ஓடி வந்திருந்தாள். அவள் சேலை, முகம் என முழுக்க மழைத் துளிகள் மின்ன மண்டபத்துக்குள் வந்தாள்.

அவளைக் கண்டதும் புகைப்படக் கலைஞர்கள், “ப்ரோ, குடிக்க ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அந்நேரம் பிரியதர்ஷினியின் அண்ணன் அவர்களைக் கடக்க, “அண்ணா” என்று அழைத்து அந்தப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தாள்.

“என்னோட வாங்க” என்று பிரகாஷ் அவர்களை அழைக்க, அவர்கள் திரும்பி புகைப்படக் கருவியைப் பார்த்தார்கள்.

“நான் கவர் பண்றேன் ப்ரோ. நீங்க போய்ச் சாப்பிட்டுட்டு பொறுமையா வாங்க” என்றாள் பார்கவி.

அவர்கள் சந்தேகமாகப் பார்க்க, “நீங்க மறந்துட்டீங்களா ப்ரோ? அண்ணா கல்யாணத்துல நீங்க பிரேக் எடுத்தப்போ நான்தான் கவர் பண்ணேன். ஞாபகம் இல்லையா?” என்று கேட்டாள். பிரகாஷின் திருமணத்தின் போதும் இதே குழுதான் வந்திருந்தார்கள். அவள் அதை நினைவுப்படுத்தவும், “ஓகே, பார்த்துக்கோங்க” என்றார்கள்.

அப்போதும், “நான் இருக்கேன்” என்று ஒருவன் தயங்கி நிற்க, “போங்க ப்ரோ” என்று அவனைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள் அவள்.

கேமரா முன் நின்று, அதன் கண்களின் வழியே பிரியதர்ஷினியை பார்த்தாள். அவளின் ஒரு கரத்தில் குழந்தை வேறு இருக்க, அவளால் கூர்மையாகக் கவனம் செலுத்த முடியவில்லை.

குழந்தையை இடது பக்கத் தோளில் போட்டு வலக் கரத்தை கேமராவின் மேல் வைத்தாள்.

அப்போது அவள் முன் நீண்ட நெடிய கரமொன்று மிக இயல்பாக அவள் கரத்தை அழுந்த பற்றியது.

“ஹலோ கேமரா ஹேண்டில் பண்ண தெரியாதா உனக்கு?” அவளை ஒட்டி உரசும் நெருக்கத்தில் நின்று காதோரம் கிசுகிசுப்பாகக் கேள்வி கேட்டது.

“இரு, உனக்கு நான் சொல்லித் தர்றேன்” என்று அழுத்தமாய் அவள் கைப் பிடித்தான்.

“புருஷனும் பொண்டாட்டியும் புள்ளைய கையில வச்சுட்டு போட்டோ எடுத்து விளையாண்டுட்டு இருக்காங்க பாரு” என்று அவர்களைக் கடந்து போன பெண்மணி கடுப்பாக முணுமுணுக்க, பார்கவியின் கண்கள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்திருந்தன.

இருவரின் மூச்சு காற்றும் உரசும் நெருக்கத்தில் நின்றிருந்தான்.

பார்கவி கண்ணை மூடித் திறந்தும் மறையவில்லை அவன்.

என்னை நீ எறிந்ததும் எழுந்து நிற்க முயன்று எரிந்து போன என்னை மீண்டும் உன் மூச்சுக் காற்றால் எரிக்கிறாய்.

உன்னை வேண்டாம் என விலகவும் முடியாமல் ஏற்கவும் விடாமல் நம் இடையில் சிக்கி நிற்கிறது நீ வீசிப் போன என் காதல்.

error: Content is protected !!
Scroll to Top