41 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 41 

 

 

“ரெண்டே ரெண்டு கேன் தான்… பிளீஸ் டி!”

“என்ன மனோ நீங்க? பியர் வேண்டவே வேண்டாம்ன்னு சொல்றேன்! நீங்க ரெண்டே ரெண்டுன்னு அடம் பிடிக்கிறீங்க?”

“ஃப்ரெண்ட்ஸ் எல்லார்ட்டயும் சொல்லிட்டேன். நீ தான் பார்ட்டி கொடுக்கிற” என்று எபியிடம் கூறி, வீட்டின் மிக அருகிலிருந்த பப்பிற்கு மார்க்-அட்ரே இருவரும் ஜோடியாய் சென்றிருக்க, இவன் தன் ஜோடியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“எனக்கு உயிர் போர அளவுக்கு முதுகும் காலும் வலிக்குது! அத விட அதிகமா தல வலிக்குது! மாத்திர வாங்கித் தந்து, ஒரு கப் காபி போட்டுக் கொடுத்து, தலைக்கு தைலம் போட்டுக் கொடுக்காம தண்ணி அடிக்கப் போறேன்னு நிக்கறீங்க?” அவள் முறைக்க,

“இலக்கியா கொடுத்த மாத்திரைய அடுப்பு கிட்ட வச்சிருக்கேன் பாரு. கடைசியா ஒரே ஒரு மாத்திர டப்பாவோட இருக்கு. அது அவ ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகும் போது போட்டுக்கிறதாம். அது கூட வேற எந்த மாத்திரைய போட்டாலும் ஆபத்தாம். சோ ரொம்ப முடியலனா மட்டும் அதப் போட சொன்னா. போட்டுட்டு படு. நீ தூங்கி எழுந்திருக்கும் போது உன் பக்கத்துல உக்கார்ந்திருப்பேன். சத்தியமா! இப்போ போறேன் டி…. பிளீஸ். செம்ம குஷியா இருக்கேன். என் செல்லமில்ல நீ… இந்த தரம் மட்டும்… பிளீஸ் பிளீஸ்…”

கெஞ்சி, கொஞ்சி நிற்பவனிடம் என்ன கூற? “சரி… இதுதான் லாஸ்ட். இனி இப்படிக் கூடாது சரியா? ஒரு கிளாஸோட நிறுத்திடணும். காபி குடிக்கிற நேரம் வீட்டுக்கு வந்திருக்கணும். உங்க முகத்துல தான் நான் கண் விழிக்கணும்! புரியுதா?” என அனுப்பி வைத்தாள்.

தனியே அமர்ந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க, நகுநா ‘ஆன்லைன்’ என்றிருக்கவும் தங்கையை அழைத்தாள்.

“என்ன டி நடு ராத்திரி முழிச்சிருக்க?”

“இப்போ தான் அத்த கிளம்பினாங்க. இன்னும் நாங்க யாரும் படுக்கல அலர்.”

“எந்த அத்த?”

“ஏய் என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்குற?”

“எனக்கு தல வலிக்குது நகு, சட்டுன்னு விஷயத்த சொல்லு!”

“இன்னைக்கு பெரியப்பா குடும்பமும், மாதுண்ணாவோட ரெண்டு அத்த மாமாவும் குடும்பமா வந்து பேசி முடிச்சுட்டி தட்டு மாத்திட்டு போனாங்களே… அம்மா உனக்கு தெரியும்ன்னு சொன்னாங்க அலர். எனக்கும் பிஸியா போகவே என்னாலயும் பேச முடியல. இரு இரு அம்மா ஃபோன் கேட்டாங்க. அம்மா பேசணுமாம்!”

இங்கு மனோ இவளுக்கு மோதிரம் போட்டிருக்க, அங்கு இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து பேசியும் முடித்தாயிற்றா? 

கேட்ட விஷயத்தில் உள்ளத்தின் பூரிப்பெல்லாம் தடம் இல்லாமல் போனது. “அடுத்த மூணு மாசத்தில பிரவீனோட கல்யாணம்!” என்பது பேரிடியாய் இறங்கியது. நேற்று தானே அவன் விருப்பம் கூறினான்? ‘அதற்குள்ளாகவா’ என்றிருந்தது! ‘ஓ… வீட்டுல விஷயம் சொன்ன பிறகு தான் இங்க வாய் திறந்திருக்கிறான்!’

“அம்மா, நான் தான் என் மனச முன்னமே சொன்னேனே மா”

“இன்னைக்கு தட்ட மாத்திட்டு போனவங்கட்ட இத எல்லாம் சொல்ல நீ ஒண்ணும் எங்களுக்கு ஒரே பொண்ணு இல்ல! ‘இதுதான் டா பொண்ணு’ன்னு நாங்க சொன்னா போதும் எங்க பையன் தாலி கட்டுவான்னு அவங்க சொல்றாங்க! நான் என்ன சொல்லட்டும்? என் பொண்ணும் அப்படித்தான், ‘அடக்கமானவ, அவ குடும்பம் தான் அவளுக்கு எல்லாமே’ன்னு சொல்லி வச்சிருக்கேன். குடும்பத்த நடு சந்தியில நிக்க வைக்க மாட்டேன்னு நம்பறோம்!” என்று முடித்தால் என்ன கூற முடியும்.

“அம்மா… மனோ? அவரும் நம்ம குடும்பம் தானே மா,” என்றதற்கு அம்மாவிற்கு கோபம் அதிகம் ஆகவும், பட்டென்று “இன்னும் அவன மறக்கலியா? மறந்துடு! உனக்கும் உன் மேல நம்பிக்கை வச்சிருக்க ‘நம்ம’ குடும்பத்துக்கும் அது தான் நல்லது!” என்றால் என்ன அர்த்தம்?

“அவர வேண்டாம்ன்னு சொல்ல ஒரு காரணம் சொல்ல முடியாது மா… அவர் நல்லவர்ன்னு நான் சொல்லல. நீங்களே அவரப் பத்தி யார் கிட்ட வேணும்னாலும் விசாரிங்க. அவர்கிட்ட ஒரே ஒரு குறை கண்டு பிடிங்க, அப்புறம் வேண்டாம் சொல்லுங்க” என்றதற்கு, “அந்த முழுப் பேர ஒரு தரம் நீயே சொல்லிப் பாரு அலர். காரணம் உனக்கே புரியும்,” என்றார்.

மனதை விட மதம் பெரிதாகப் போனதா? “எங்க ரெண்டு பேருக்குமே கடவுள் நம்பிக்கை இருக்கு, அதனால மதம் பெரிய விஷயமில்ல மா. அவர கூட்டிட்டு வரேன்… பாருங்க, பேசுங்க. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்மா அவர. ப்ளீஸ் மா… அவர ரொம்ப விரும்பறேன் மா. அவரத் தவிர வேற யார் கூடவும் என் வாழ்க்கையைப் பகிர என்னால முடியவே முடியாது. 

ஊருக்கு வந்தா ஏதாவது சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்ன்னு ப்ளான் போடாதீங்க. நான் ஒரு காலமும் ஒத்துக்கவே மாட்டேன்,” என்றதற்கு, “சரி நீ பிரவீன கல்யாணம் பண்ண வேண்டாம்… அப்படியே உன் கூடப் பிறந்த பாவத்துக்கு கூனோ, குருடோ வருவான் அவனுக்கு உன் தங்கையை கட்டிக் குடுக்குறேன். நீ சந்தோஷமா இரு” என்ற ஏவுகனை பெண்ணை நிலை குலையச் செய்தது.

“எத எதோட லிங்க் பண்றீங்க? வினோ அத்தான் நகுவ விரும்பறார் தானே… அப்புறம் என்ன? நீங்க இப்படியே சொல்லிட்டு இருந்தீங்க நான் வரும் போதே இவர கல்யாணம் பண்ணிட்டு தான் வருவேன்” என்றதற்கும், “நீ எப்படி வருவியோ அப்பிடியே தான் மூணு மாசத்துல உனக்கு பிரவீனோட கல்யாணம் அவ்வளவு தான்” என்றார் தகவல் போல். 

கெஞ்சல், மிரட்டல், அழுகை என்று எதுவுமே அம்மா காதில் ஏன் விழவில்லை? 

“இப்போ காதல் எல்லாம் தெய்வீகமா தான் தெரியும். கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சு தான் புரியும் வாழ்க்கைனா என்னன்னு! அப்போ ஒண்ணும் பண்ண முடியாது. நீ நினைக்குற மாதிரி வேற ஆளுங்களோட வாழ முடியாது. அவங்க பழக்க வழக்கம்ன்னு எல்லாமே வேற! அடுத்த வைதேகி ஆகிடாத! கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் உனக்கு தோணும். தாலி கழுத்துல ஏறின பிறகு பிரவீனோட பழகிடும்! நீ லீவ் போட்டு வர வேண்டாம். அவங்க நீ வேலைக்குப் போகலாம் சொல்றாங்க, ஆனா வெளிநாட்டுல இல்ல. அதனால, வேலைய முன்ன மாதிரியே சென்னைக்கு மாத்திட்டு வா” என்று, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அம்மா நின்று கொள்ள பெண் தவித்துப் போனாள்.

“நீங்க மனோ பத்தி ஒண்ணுமே விசாரிக்காம வேண்டாம்ன்னு சொன்னா, அத என்னால ஏத்துக்க முடியாது. யாரு கூடனாலும் புதுசா ஒரு வீட்டுக்குப் போனா கஷ்டம் தான். அது எல்லாம் ஒரு காரணமா என்னால எடுத்துக்க முடியாது. நீங்க என்ன சொன்னாலும் என்னால மனோவ மறக்க முடியாது, வேற யாரையும் கல்யாணம் பண்ணிட்டு சாக முடியாது.”

“பிரவீன் தான் இந்த வீட்டு மூத்த மாப்பிள்ளை அலர்! நீ சரின்னு சொன்னாலும் சொல்லாட்டாலும். உன் சம்மதம் எங்களுக்கு வேண்டாம். கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆகிடும். நம்பு என்னை! உன்ன நம்பி வாக்கு கொடுத்த எங்களுக்கு தல குனிவ ஏற்படுத்தாத!”

“புருஷன் பொண்டாட்டி உறவு என்னன்னு தெரிஞ்ச நீங்களே எப்படி மா பிரவீனோட பழகீடும், சோ கல்யாணம் பண்ணுன்னு சொல்லுவீங்க? உங்களுக்கு அப்பா எப்படியோ அப்படித்தான் ம்மா மனோ எனக்கு. மனோட்ட அவர கல்யாணம் பண்றதா வாக்கு மட்டும் இல்ல, என் மனசையும் சேர்த்தே கொடுத்துட்டேன். மனோவத் தவிர யாரையும் நான் என் வாழ்க்கைத் துணையா ஏத்துக்கவே மாட்டேன்! என்ன காரணம் நீங்க சொன்னாலும் சரி… மனோ தான் உங்க மூத்த மாப்பிள்ளை!”

“என் வாழ்க்கைய நான் பார்த்துக்கிறேன்… உன் வேலையப் பாருன்னு சொல்றியா? சரி! உன் இஷ்டம்! எனக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும்ன்னு நினைச்சுக்கிறேன்!” என்றவர் அதன் பின் எதுவும் பேசவில்லை.

போராடி பிரயோஜனம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. வழிந்து கொண்டிருந்த கண்ணீர்  நின்ற பாடில்லை. ஏன் அப்பாவும் அம்மாவிற்கு உடன்     படுகிறார்? அவளின் செல்லப் பாட்டி கூட இம்முறை இவளுக்காக அம்மாவிடம் ஏன் பேச மறுக்கிறார். அலர்விழிக்கு வெறுத்தே போனது. ‘மனோ-வா? இல்லை பெற்றவர்களா?’ என்ற நிலையில் வந்து நிற்பாள் என்று எண்ணவில்லையே! அவளிடம் கோவித்துக் கொண்டாலும், அப்பாவும் பாட்டியும் தனக்காகப் பேசி அம்மாவை சம்மதிக்க வைப்பார்கள் என்று எண்ணியதெல்லாம் பொய்யாயிற்றே!

“லவ்? அதுவும் நான்? அதுவும் வேற ஆட்களை? ம்ம்கும்!!! அது தெரிஞ்சே நெருப்பு குழியில இறங்குற மாதிரி! நீங்க எல்லாம் தான் எனக்கு ரொம்ப இம்பார்ட்டெண்ட். அந்தக் கருமத்த செஞ்சுட்டு எவன் அவஸ்த படுறது? காதலிச்ச ஒருத்தரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரம் சொல்லல! எனக்கு சோக கீதம் எல்லாம் செட்டே ஆகாது. சோ இந்த அலர்விழி யாரையும் காதலிக்க மாட்டா நகு! காதலாவது கத்தரிக்காயாவது!!” என்றோ பேசிய வீர வசனம் சம்மன் இல்லாமலே அலர்விழி முன் ஆஜர் ஆனது! 

மனோ-வா? இல்லை பெற்றவர்களா?

‘காதல் என்ன, கேட்டா வந்தது? வராதே என்று அணை போட? எத்தனை ஆண்களைக் கடந்த என்னால் ஏன் மனோவைக் கடக்க முடியவில்லை? காதல் உரைக்கும் முன்பே இவனை மறக்க முடியவில்லை… இனி எப்படி?’ மனதோடு போராடிக் கொண்டிருந்தவள் தலை பாரம் கூட, அடுக்களையிலிருந்த மாத்திரையை விழுங்கி காலி டப்பாவை குப்பையில் போட்டவள், அப்படியே சோஃபாவில் கண் மூடினாள். 

error: Content is protected !!
Scroll to Top