பார்கவி பொறுப்பாக அப்பாவுக்கு அழைப்பு விடுத்து அம்மாவிடம் நீட்டினாள். காவேரிக்கு இருந்த கண் மண் தெரியாத கோபத்தில் மகளைக் கடுமையாக முறைத்து வைத்தார்.
ஒருவரிடம் நெருக்கமான நட்பை பாராட்ட மட்டுமே நம்மால் முடியும். நண்பர்களின் மனத்தை மாற்றுவதெல்லாம் அத்தனை எளிதல்ல என்பதைக் கண் கூடாகக் கண்டு கொண்டார் காவேரி.
வாழ்வில் நாம் சந்தித்த மனிதர்களும், நிகழ்வுகளுமே பெரும்பாலும் நம் முடிவுகளுக்குக் காரணமாக அமைகிறார்கள். நம் தவறான முடிவுகளுக்கு அவர்களைக் கைக் காட்டுவதில் நம்மை நாமே குற்றவாளி கூண்டில் ஏற்றுவதில் இருந்து தப்பித்துக் கொள்கிறோம்.
சத்யபாமாக்கு நேர்ந்த மோசமான அனுபவம் அவரை அப்படியொரு முடிவை எடுக்கச் செய்திருந்தது.
காவேரியும், சத்யபாமாவும் இத்தனை மாதங்களில் எவ்வளவோ பேசியிருப்பார்கள். ஆனாலும் சத்யபாமாவின் மனம் மாறவில்லை என்பதில் காவேரிக்கு மிகுந்த மனவருத்தம். அதிலும் மகளின் முன்னேயே பார்த்திபனின் கல்யாண பேச்சு வந்ததில், மகளை நினைத்து அவருக்குக் கண்கள் கலங்கி விட்டன.
பார்கவியின் முகத்தில் மாற்றமே இல்லை.
“ம்மா, அப்பா லைன்ல இருக்காங்க” என்று தன் அலைபேசியை அம்மாவின் கையில் திணித்தாள்.
“பாருப்பா, நாங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். வேற ஒன்னுமில்ல. வச்சுடுங்க” என்று கணவரை சமாளித்தார்.
இத்தனை வருட தாம்பத்தியத்தில் மனைவியின் குரல் பேதத்தை அவரால் கண்டுபிடிக்க முடியாதா என்ன?
“என்னாச்சு காவேரி? உன் குரலே சரியில்லையே?” என்று கேட்டார் ரங்கராஜன்.
“ஒன்னுமில்லங்க” என்று மூக்கை உறிஞ்சினார்.
“நீ போனை என் பொண்ணுக்கிட்ட குடு”
“எதுக்கு?”
“குடுங்கறேன்” என்று ரங்கராஜன் அதட்ட, “நானே வீட்ல வந்து விவரமா சொல்றேன்” என்றார் ரகசியம் போல.
“போனை குடுங்கம்மா” என்று பார்கவி அலைபேசியை வாங்க, சட்டெனக் கை நீட்டி அழைப்பை துண்டித்திருந்தார் காவேரி.
“ம்மா” என்று மகள் முறைக்க, “அம்மா நாந்தேன், வா. நேரமாகுது, போகலாம்” என்று அவளின் கரம் பற்றினார்.
“பொண்ணு நல்லா இருக்குல்ல? என் பையனுக்குப் பொருத்தமா இருப்பாதானே? இங்கதான் சென்னையில ஒரு கம்பெனியில வேலை பார்க்கறா. கல்யாணத்துக்கு அப்புறம் அமெரிக்கா போகணும்னு நாங்க சொன்னா.. ஆளுக்கு முந்தி அவங்க வீடு ரெடியா இருக்காங்க. அந்த மட்டுக்கும் எங்களுக்கு ரொம்ப நிம்மதியா போச்சு.” சத்யபாமா சந்தோஷ மிகுதியில் பேசிக் கொண்டே வந்தார்.
அவர் காரில் ஏறினதும் மீண்டும் பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக் காண்பிக்க, காவேரி அதைப் பார்க்காமலேயே, “ம்ம்ம்” கொட்டினார்.
பார்கவியின் பார்வை வெளியில் பதிந்திருந்தது.
“உங்க பையனுக்குச் சம்மதமா?” என்று காவேரி கேட்க, “அவன் வேணாம்னுதான் சொல்லுவான். ரெண்டு வருஷம் கழிச்சு அவன் ஊருக்கு வந்ததும்தான் கல்யாணம் பேச்சே எடுக்கணும்னு எங்ககிட்ட சொல்லியிருந்தான். அதுக்காக நாம அப்படியே விட முடியுமா? அவனுக்கும் வயசு ஏறுது இல்ல? இந்தா அவன் செட்டு பிரபஞ்சனுக்குக் கல்யாணமாகி பிள்ளையே வரப் போகுது. இவன் என்னன்னா.. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்ங்கறான்” என்றார்.
“அண்ணா ரெண்டு வருஷ காண்ட்ராக்ட்லதானே யூஎஸ் போய் இருக்காங்க? இப்போ திடீர்னு எப்படி வருவாங்க?” என்று பிரியதர்ஷினி கேட்க, “ஆமாமா, அதுக்காக ஊடால லீவ் தர மாட்டாங்களா என்ன? நாங்க பொண்ணு எல்லாம் பார்த்து முடிவு பண்ணிட்டு அவனை லீவ் போட்டுட்டு வரச் சொன்னா வந்துட்டுப் போறான். என்ன நான் சொல்றது?” என்று பதில் கேள்வி கேட்டார் சத்யபாமா.
“பாரும்மா, உங்ககிட்ட நான்தான் சொன்னேனே. அவனுக்கு அங்க தனியா சமாளிக்க முடியல. சாப்பாடு சரியில்ல. அவனே சமைச்சு சாப்பிட்டு புள்ள கஷ்டப்பட்டு இருக்கான். அவங்கப்பாவும் மகனுக்குக் கல்யாணத்தைப் பண்ணி பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுறார். போன முறை மாதிரி எதுவும் ஆகிடக் கூடாதுன்னு எங்களுக்குப் பயம். அதான் சொந்தத்துல பொண்ணைப் பார்த்து பேசி முடிச்சுட்டு அவனை வரச் சொல்லுவோம்னு இருக்கோம்” என்றார், அவர் கண்களில் மகன் வாழ்க்கை குறித்தான கவலைகளும் கனவுகளும் சேர்ந்தே இருந்தன.
“நல்ல முடிவுதான்” என்றார் காவேரி. மேலும் அது குறித்துப் பேசி மகளின் மனத்தை உடைக்க அவருக்கு மனமில்லை. ஆகவே பேச்சை மாற்றினார்.
ஆனால் சத்யபாமா தொடர்ந்து மகன் குறித்தே பேசிக் கொண்டு வந்தார்.
தாங்கள் பார்க்கும் பெண்ணை மகன் நிச்சயமாக மணப்பான். இந்தப் பெண்ணைக் கண்டிப்பாக அவனுக்குப் பிடிக்கும். விடுமுறையில் அவன் வந்தால் போதும், அவனது திருமணத்தை நல்லபடியாக நடத்தி, மருமகளையும் விரைவில் அவனோடு அனுப்பி வைத்து விடுவோம் என்று சொல்லி கொண்டே போனார்.
“எங்களுக்கு மண்டபம் பத்தின கவலையில்ல. அதான் உங்க கல்யாண மண்டபம் இருக்கே. தேதிய முன்ன கூட்டியே சொன்னா எங்களுக்குப் புக் பண்ணிடுவீங்கல்ல?” என்று அவர் கேட்க, காவேரிக்கு இருந்த கோபத்துக்கு, “உங்களுக்குலாம் மண்டபமே தர முடியாது, போங்க” என்று கத்தி இருப்பார்.
அவர் பேச எடுத்துக் கொண்ட நொடி நேர இடைவெளியில், “நீங்க டேட் சொல்லுங்க அத்த, நான் உங்களுக்குப் புக் பண்ணிடுறேன்” என்று அவருக்கான பதிலைச் சொன்னாள் பார்கவி.
அந்தப் பதிலில் பிரியதர்ஷினிக்கு தொண்டையை அடைத்தது. காதல் பெரும் அவஸ்தை என்பதை அக்கணம் உணர்ந்தாள் அவள். தோழியின் காதல் கை கூட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள்.
அன்றிரவு வீடு வந்ததும் கணவனைப் பிடித்துக் கொண்டாள்.
“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது பிரபா. ஆனா பாருவையும் பார்த்தி அண்ணாவையும் எப்படியாவது சேர்த்து வைக்கறீங்க. இல்லன்னா..” என்று கோபமாக அவள் இழுக்க, அவளை நெருக்கமாக இழுத்தான் பிரபஞ்சன்.
“இந்த லவ் இருக்கே லவ். அது ரொம்ப ரொம்பக் காம்ப்ளிகேட்டட் பிரியா. அதுக்குள்ள மூனாவதா ஒருத்தர் நுழைஞ்சா இன்னுமே சிக்கலாகும்.”
“அதுக்காக.. அப்படியே விடச் சொல்றீங்களா? உங்க ஃப்ரெண்ட் தானே சொதப்பினார். ஒழுங்கா அவரை ஊருக்கு வரச் சொல்லுங்க. வந்து..” என்று அவள் மிரட்ட, “வந்து?” என்று அவளின் நெற்றி முட்டி கேட்டான் அவன்.
“பார்த்தி மட்டுமே சொதப்பினான்னு சொல்ல முடியாது பிரியா. பாரு லவ் சொன்ன சூழ்நிலையும் யோசிச்சு பேசு.”
“அவளை லவ் பண்ண வச்சுட்டு எதுவுமே நடக்காத மாதிரி.. எனக்கென்னன்னு வேற ஒரு பொண்ணு கூட எங்கேஜ்மெண்ட் பண்ண போனது உங்க ஃப்ரெண்ட். அவருக்குச் சப்போர்ட் பண்ணாதீங்க நீங்க. பாரு லவ் சொன்னப்பவே பார்த்தி அண்ணா ரியலைஸ் பண்ணியிருந்தா… அவங்க ரெண்டு பேருக்கும் இந்த நிலைமை வந்திருக்காது. ரெண்டு பேரும் தப்பான ஆளோட போய் மனச உடைச்சுட்டு வந்திருக்க மாட்டாங்க” என்று கத்தினாள்.
“பார்த்தி எங்கேஜ்மெண்ட்ட அவ்ளோ பக்கத்துல வச்சுட்டு எப்படிப் பிரியா, வேற முடிவெடுத்திருப்பான்?”
“பிரபா, அவர் எங்கேஜ்மெண்ட் ஐஞ்சு நாளைக்கு முன்னாடி பாரு லவ் சொல்லியிருக்கா. அவருக்கு டைம் இருந்திருக்கு. அதுக்கு அப்புறம் கூட அவர் நினைச்சிருந்தா..”
“நடந்ததைப் பேசி ஒன்னும் மாறிடாது. விடு பிரியா” என்று அந்தச் சண்டை ஆரம்பிக்கும் முன்னே சமாதான கொடியை அசைத்து விட்டான் பிரபஞ்சன்.
“சரி, இப்போ உங்க ஃப்ரெண்ட் என்ன பண்ண போறார்?”
“ஃபர்ஸ்ட் உன் பிரெண்ட் என்ன பண்ண போறான்னு நீ சொல்லு?”
“ஹலோ முதல்ல கேள்வி கேட்டது நானு, ஒழுங்கா எனக்குப் பதில் சொல்லுங்க.” என்று எகிறினாள்.
“அதே போலப் பாருதான் ஃபர்ஸ்ட் லவ்வ சொன்னா. சோ உங்க ஃப்ரெண்ட் தான் இப்போ முடிவெடுக்கணும். அவள அசால்ட்டா தூக்கி போட்டுட்டு போயிட்டார் இல்ல உங்க ஃப்ரெண்ட்? இன்னைக்குக் கூட அவங்கம்மா பாரு முன்னாடியே அவருக்குப் பொண்ணு பார்த்திருக்கோம்னு சொல்லி, பொண்ணு போட்டோவ பாருகிட்ட காட்டுறாங்க. அவளுக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சி பாருங்க” என்று கோப மிகுதியில் படபடத்தாள்.
பிரபஞ்சனால் யார் பக்கமும் பேச முடியவில்லை.
“அவனுக்குக் கொஞ்சம் டைம் கொடுப்போம் பிரியா. பார்கவிகிட்ட பேசி அவனே சரி பண்ணட்டும்.”
“உங்ககிட்ட பேசினேன் பாருங்க. என்னைச் சொல்லணும்” என்று அவன் மார்பில் அடித்தாள்.
“என் ஃப்ரெண்ட்டுக்கு வேற நல்ல பையன் கிடைப்பான் போங்க. உங்க ஃப்ரெண்ட்டுக்கு அவங்கம்மா பார்க்கற பொண்ணுதான் செட்டாவா நீங்க வேணா பாருங்க..”
“என்ன பிரியா இப்படிப் பேசுற?”
“பின்ன என்னங்க? இன்னும் அவருக்கு டைம் கொடுக்கணும்னு சொல்லுறீங்க? ஆல்ரெடி ஆறு மாசம் ஆகிடுச்சு. இதுக்கு மேலயா அவருக்கு டைம் தேவைப்படும்? இன்னும் ஆறு வருஷம் போதுமான்னு கேட்டு சொல்லுங்க. ஆனா அப்போ என் ஃப்ரெண்ட் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி பிள்ளைங்களோட இருப்பா. இவரைத் திரும்பி கூடப் பார்க்க மாட்டா, தெரிஞ்சுக்கோங்க” என்று உதடு சுழித்தாள்.
“ஐயோ பார்த்திப் பாவம். இப்படிச் சாபம் விடாத பிரியா..” என்று கெஞ்சினான்.
அவன் கையை இடையில் இருந்து விலக்கி, “பாருவை விடுங்க. அவ அம்மாகிட்ட நானே பேசி அவளுக்கு வேற மாப்ள பார்க்க சொல்றேன் இருங்க. உங்க ஃப்ரெண்ட் ஊருக்கு வரும் போது அவளுக்கும் மேரேஜ் பிக்ஸாகி இருக்கும்” என்றாள் அவன் முகம் பார்த்து.
“என்னது? மீண்டும் மீண்டுமா?” என்று நொந்து கொண்டான் அவன்.
“அப்புறம்? உங்க ஃப்ரெண்ட்டுக்கு காதல் வர்ற வரைக்கும் காத்துட்டு இருப்பாங்களா? முடியாது போங்க” என்று முகம் திருப்பிக் கொண்டு சென்றாள்.
பிரபஞ்சன் அப்போதே பார்த்திபனை அழைத்து விட்டான். அவனுக்கு அங்கே அதிகாலை.
“என்னடா பிரபா, எனக்கு வந்த சோதனையைப் பார்த்தியா? இன்னமும் தூங்கி எழுந்து உன் மூஞ்சியில முழிச்சுட்டு இருக்கேன்” என்று கொட்டாவி விட்டபடி புலம்பினான்.
“ரொம்ப அலுத்துக்காதடா. சீக்கிரமே உன் பொண்டாட்டி மூஞ்சில கண்ணு முழிக்கற பாக்கியம் உனக்குக் கிடைச்சிடும் தம்பி. உங்கம்மா உனக்குப் பொண்ணு பார்த்திருக்காங்களாம். உன்கிட்ட சொன்னாங்களா?” என்று கேட்டான்.
“அவங்களுக்கு வேற என்னடா வேல? எப்போ பாரு இதையேதான் சொல்லிட்டு இருக்காங்க. நான் வேணாம்னு சொன்னாலும் அவங்க கேக்கறதில்ல” என்று எழுந்து அமர்ந்தான் பார்த்திபன்.
“உங்கம்மா உனக்குப் பொண்ணு பார்த்திருக்க விஷயம் எனக்கு எப்படித் தெரியும்னு நீ கேட்கலயேடா?”
“ஆமா. உனக்கு எப்படித் தெரியும். அம்மா உங்கிட்ட சொன்னாங்களா?”
“என்கிட்ட சொல்லல” என்று சொல்லி நண்பனை பார்த்தான்.
“அப்புறம்?”
“இன்னைக்கு உங்கம்மா திருத்தணி முருகன் கோவிலுக்குப் போனாங்க தெரியும்ல? பார்கவி, பார்கவியோட அம்மா, நம்ம பிரியா எல்லோரும் சேர்ந்துதான் போனாங்க.”
“அச்சோ போச்சு. நான் செத்தேன்” என்று தலையில் அடித்துக் கொண்டான் பார்த்திபன்.
“ம்ம், உங்கம்மா உனக்குப் பொண்ணு பார்த்திருக்க விஷயத்தைப் பார்கவிகிட்ட சொல்லி இருக்காங்க. அந்தப் பொண்ணோட போட்டோ காட்டி..”
“பிரபா, பிளீஸ் போதும்டா” என்று கத்தினான்.
“பார்கவி உன்னை நேசிச்ச ஒரே பாவத்துக்கு இன்னும் எவ்வளவுதான்டா அந்தப் பொண்ணைப் போட்டு படுத்துவ நீ? எனக்கு வர்ற கோபத்துக்கு..”
“சாரி டா.”
“உன் சாரி மயிரை நீயே வச்சுக்கோ” என்று கத்தி விட்டு அழைப்பை துண்டித்து விட்டான் பிரபஞ்சன்.