நற்காதல் நெய்திடவா – 13 (3)

அவள் மனம் முழுவதும் அண்ணனிடமே இருந்தது. அவளுக்கு வேலை நாட்களில் எதைக் குறித்தும் யோசிக்க நேரமிருக்கவில்லை. வீட்டுக்கு தினம் அழைக்கிறாள்தான். அண்ணனிடம் அவ்வப்போது பேசினாள்தான். ஆனால், இந்தப் பேச்சு மட்டும் எங்கும் வரவில்லை. அது இப்போது அவளைத் தொல்லை செய்து கொண்டேயிருந்தது.

அவளின் மனம் வெற்றிக்கும் புரிந்ததுதான். ஆனால், அவனால் மட்டும் என்ன செய்து விட முடியும்? விஜய்யின் தொலைபேசி எண் அவனிடமும் இருந்தது. விஜயை அழைத்துப் பேச விரும்பவில்லை அவன்.

தன் குடும்பத்தை, தன்னைப் பற்றி நன்கு விசாரித்து அதன் பின் ஒரு முடிவுக்கு அவர்கள் வரட்டும் என்பதுதான் அவனது எண்ணமாக இருந்தது.

வெற்றி நினைத்ததைப் போலதான் நடந்து கொண்டிருந்தது.

விஜய் முதலில், தன்னளவில் வெற்றி குடும்பத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டான்.

ஒருவாறு எல்லாத் தகவல்களும் சரியா இருக்க அவனுக்குத் திருப்தி. வெற்றியின் வீட்டினர், அவர்களின் வசதி, பூர்வீகம் எனப் பலதும் அவன் ஆராய்ந்தான். எல்லாம் நிறைவாக இருக்கவே அப்பாவிடம் பேச முடிவு செய்தான் அவன்.

அதற்குள் மேலும் ஒரு வார காலம் ஓடி மறைந்திருந்தது.

இந்தக் காத்திருப்பு வேதாவின் பொறுமையைக் கரைத்துக் கொண்டிருந்தது. வெற்றி எப்போதும் போல இயல்பாக இருந்தான்.

அதைப் பார்த்தும் கடுப்பானாள் அவள்.

“எம்மாடி வேதா. என்ன உன் பிரச்சனை?” நேரடியாக அவளிடம் கேட்டவனை முறைத்தாள் வேதா.

செவ்வாய் கிழமை காலையில் வங்கி கிளம்பும் அவசரத்தில் இருந்தாள் வேதா. வெற்றியின் வீட்டில் அனைவரும் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்கள்.

வங்கி வேலையாகக் காலையிலேயே அவளுக்கு அலைபேசியில் அழைத்திருந்தான் வெற்றி.

“அம்மா இல்லாம, ஒரு டீ கூடப் போட தெரியல எனக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் கத்துக்கணும் நான்” அவன் புலம்ப, “வீட்டுக்கு வாங்க. நான் போட்டுத் தர்றேன்” என்றிருந்தாள். அவள் எதிர்பார்க்காத விதமாக உடனேயே குளித்து, கிளம்பி வந்து நின்றான் வெற்றி.

சட்டையின் கையை மடித்து விட்டபடி, அழைப்பை மணியை அடித்து நின்றவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் வேதா.

“என்ன ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிற? அப்போ சும்மா பேச்சுக்குதான் வீட்டுக்கு கூப்பிட்டியா?” வாசல் நிலையில் சாய்ந்து நின்று அவளைக் கண்ணெடுக்காமல் பார்த்தபடி அவன் கேட்க, “அது, இல்லையே” என்று திக்கினாள் வேதா.

வெற்றி மெல்ல முன்னே சாய, “டிஸ்டன்ஸ்..” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்.

“டிஸ்டன்ஸ் சொல்லிட்டு அதை மெயின்டைன் பண்ணாம டச் பண்றது யாராம்?” மீசை வருடி, புருவம் உயர்த்திச் சோம்பலாக அவன் கேட்க, “வெற்றி, காலைலயே இம்சை பண்ணாதீங்க” என்றாள் வேதா.

“ம்ம். இம்சை? யாரு நானு? சொல்ல மாட்ட பின்ன? வெற்றி நல்லவனுக்குக் காலமே இல்லடா” வேண்டுமென்று அவள் பக்கமாகச் சாய்ந்து புலம்பினான்.

“வீட்டுக்குள்ள வாங்க.” புன்னகையுடன் அவனை உள்ளே அழைத்தாள் வேதா.

அவனைப் பார்த்ததும், “ஹாய்.. ஹாய்.. எப்படி இருக்கீங்க?” என்று பேச்சு கொடுத்து விட்டு கல்லூரிக்குக் கிளம்பினார்கள் கௌசல்யா மற்றும் காந்திமதி.

“இங்க வாங்க” வேதா அழைக்க, சமையல் அறை சென்றான்.

ஒரு தட்டில் வெண்பொங்கல், சாம்பார், சட்னி பரிமாறி அவள் நீட்ட, வெற்றியின் முகம் நவரசத்தையும் காட்டியது.

“என்னாச்சு?” வேதா அவன் முகம் பார்த்து கேட்க,

“காலையிலேயே பொங்கலா? நான் பேங்க் போய் வேலை பார்க்க வேணாமா? தூங்கச் சொல்றியா நீ?” என்றான் அவன்.

“டெய்லி இட்லி, தோசை சாப்பிட முடியுமா? உப்மா சாப்பிட்டா சீக்கிரம் பசிக்கும். இந்த அக்காஸ் ரெண்டு பேருக்கும் உப்புமா பிடிக்காது வேற. பூரி செய்ய டைம் எடுக்கும். அதெல்லாம் லீவ் நாள் பிரேக்ஃபாஸ்ட். அப்புறம் பொங்கல் ஒன்னுதான் மீதம் இருக்க ஆப்ஷன்.” அவள் சொல்லவும் பேச்சின்றித் தட்டை வாங்கினான் வெற்றி.

“பொங்கல் சாப்பிட்டா எனக்கு எல்லாம் தூக்கம் வராது.” அவள் சொல்லவும் முறைத்துப் பார்த்தான்.

“அதெப்படி உனக்கு மட்டும் தூக்கம் வராது?”

“பொங்கல்னு இல்ல. என்ன சாப்பிட்டுத் தூக்கம் வந்தாலும், உங்க கண்ணைப் பார்த்ததும் சட்டுனு காணாம போய்டும்” அவள் சொல்லவும், நெருங்கி நின்றான் வெற்றி.

“இதையே கல்யாணத்துக்கு அப்புறம் சொல்ற, சரியா?” அவன் உல்லாச குரலில் சொல்ல, “கல்யாணமானா கண்டிப்பா சொல்றேன்” அந்த உல்லாசத்தில் ஊசி ஏற்றி உடைத்தாள் வேதா.

“எம்மாடி வேதா. என் மனசை உடைக்காத மா” சோகமாகச் சொன்னான் வெற்றி.

அவனுக்காக வேகமாக, அவசரமாகக் கேசரி கிண்டி சிறிய கிண்ணத்தில் வைத்து அவனுக்கு நீட்டிய வேதா, “இந்தாங்க இனிப்பு. அழாம சாப்பிடுங்க” என்றாள் நக்கலாக.

சமையல் மேடையில் சாய்ந்து, ஒற்றைக் காலை சுவரில் உயர்த்தி வைத்து, தட்டைக் கையில் பிடித்துக் கொண்டு, எதிரில் நின்ற தன் எதிர்காலத்தைப் பார்த்தான் வெற்றி.

அந்தக் கணம் அவளோடு வாழ்வது போலப் பிரம்மை அவனுக்கு வந்தது.

அவன் வங்கி செல்ல தயாராகி வந்திருந்தான். அவளோ இன்னமும் இரவு உடையில் இருந்தாள். காலை உணவை அவளுக்குப் பக்கத்தில் நின்று உண்பது கூட ஒருவித நெருக்கமான உணர்வை அவனுக்குத் தந்தது.

அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்து நீட்டிய, வேதாவிற்கு உணவை எடுத்து நீட்டினான் அவன்.

“என்ன புதுசா?” என்று கேட்டவள் மறுக்காமல் உணவை வாங்கிக் கொண்டாள்.

“எம்மாடி வேதா. என்ன உன் பிரச்சனை?” நேரடியாக அவளிடம் கேட்டவனை முறைத்தாள் வேதா.

“இந்த வெயிட்டிங் பீரியட். என் பொறுமையைச் சோதிக்குது” கடுப்புடன் சொன்னாள்.

“இப்பவே கல்யாணம் பண்ணிப்போமா வேதா? நீ, நான் இந்த வீடு, இந்த நெருக்கம், என்னை என்னமோ பண்ணுது.” இடக் கரத்தால் அவளை அருகில் இழுத்து அவன் கேட்க, இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் வேதா.

“உனக்காக நிறைய நிறையப் புக்ஸ் வாங்கித் தரேன். உனக்குப் பிடிச்ச லாங் ட்ரைவ் வார வாரம் போகலாம்..”

“அப்போ வீட்ல வேலை எல்லாம் யார் பார்ப்பா?” அவள் கேட்கவும், தலையைப் பின்னுக்கு இழுத்துச் சிரித்தான் வெற்றி.

“மனுஷனை கொஞ்சம் ஃபீல் பண்ணி ரொமான்டிக்கா பேச விடுறியா நீ?” சிரிப்பில் வார்த்தைகள் சிதற அவன் கேட்க, “என் கல்யாணம், இன்னைக்கோ, நாளைக்கோ இல்லை என்னைக்கோ நடந்தாலும் சரிதான். எங்கப்பா இல்லாம.. ம்ஹூம், கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எங்கப்பா, எங்கம்மா வரணும். அப்பத்தா, அப்புச்சி, விஜய் ண்ணா அவங்க எல்லோரும் வேணும் எனக்கு” அவன் கண்களைப் பார்த்துத் தீவிரமாகச் சொன்னாள் வேதா.

அந்தத் தீவிரத்தில் சற்று மிரண்டுதான் போனான் வெற்றி.

“உங்க வீட்ல சம்மதிக்கற வரைக்கும் கண்டிப்பா வெயிட் பண்ணுவோம்.” அவளின் முகம் பற்றிச் சொன்னான் வெற்றி.

“அப்பா சம்மதிப்பாரா?” அவள் கவலையுடன் கேட்க, “சம்மதிக்காம போகக் காரணங்கள் இல்லையே வேதா” என்றான் வெற்றி.

அதையேதான் மகனிடம் அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தார் வானமாமலை.

“நல்ல பையன், நல்ல வேலை. அதுவும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலை. இந்தச் சின்ன வயசில மேனேஜர் போஸ்டிங். குடும்பமும் நல்ல குடும்பம். நான் விசாரிச்ச வரை எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம்தான்.” என்ற வானமாமலை, “என்ன ஒரு விஷயம்தான் கொஞ்சம் நெருடலா இருக்கு. நம்ம சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்கன்னு..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அப்பா..” என்று அதட்டலாக அழைத்தான் விஜய்.

“எனக்கு அந்தப் பையனை பிடிச்சிருக்கு தம்பி. நம்ம வேதாவை போலத் திறமையான ஆள் போல. ரெண்டு பேரும் ஒரே இடத்தில வேலை பார்க்க போறாங்க. நம்ம பிள்ளையை நல்லா பார்த்துப்பார்னு தோணுது. அதுவும் வேதாவை விரும்பி கல்யாணம் பண்ண கேட்கறார். நல்லா வச்சுப்பார். இல்லப்பா?” அத்தனை பேசி கடைசிக் கேள்வியை மகனிடமே அவர் கேட்க, “ம்ம். வேதா நல்லா இருப்பா ப்பா. வெற்றி மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு” என்று அப்பாவிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவே பேசினான் விஜய்.

“அப்போ அவங்க வீட்ல பேசுவோமா?” கேட்டார் வானமாமலை.

“பேசலாம் ப்பா.” என்றான் விஜய்.

error: Content is protected !!
Scroll to Top