பார்த்திபன் காதலி – 27 (2)

பார்த்திபனின் வாழ்வில் பிரபஞ்சனின் இடத்தை இப்போது பார்கவி பிடித்திருந்தாள்.

அவர்களின் நட்பு நன்றாக வளர உதவிய மாதங்களும் இப்போது வளர்ந்திருந்தன.

ரங்கராஜன் உடல்நிலையில் இப்போது பெரிதான முன்னேற்றம் வந்திருந்தது. மகளை முன்பு போல மகிழ்ச்சியாகப் பார்க்கையில் அவருக்கு என்ன கவலை இருக்கப் போகிறது, அவரின் இதயத்தைப் பலவீனமாக்க.

காவேரி, சத்யபாமா நல்ல தோழிகளாகி இருந்தார்கள்.

இருவரும் கோவில் கோவிலாகச் சென்று வேண்டுதல் வைத்து, நிறைவேற்றி என மிகவும் நெருக்கமாகி இருந்தார்கள்.

இப்போதெல்லாம் அலைபேசியில் அடிக்கடி பேசும் அளவுக்கு நெருக்கமாகி இருந்தார்கள்.

“இந்த வாரம் இந்தக் கோவிலுக்குப் போவோமா?” என்று முன் கூட்டியே திட்டமிட்டு செல்கிறார்கள்.

சத்யபாமா, காவேரியை பல முறை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார். பண்டிகை பலகாரங்கள் பரிமாறி கொள்கிறார்கள். அவ்வப்போது ஷாப்பிங் சேர்ந்து செல்கிறார்கள்.

இருவரின் குடும்பக் கதையும், சூழலும் மற்றவருக்கு அத்துப்படி.

ஆனாலும் காவேரியின் வீட்டுக்கு இன்னமும் வரவில்லை சத்யபாமா. என்னமோ அதற்கு நேரம் கூடி வரவில்லை போலும்.

அன்று சனிக்கிழமை.

பார்கவியின் அலைபேசி அடித்து அவளை எழுப்பி விட, உறக்கத்துக்குக் கெஞ்சிய விழிகளுடன் புரண்டு படுத்தாள் அவள்.

“பாரு, உன் போன் அடிக்குது பாரு” என்று காவேரி சமையல் அறையில் இருந்து கத்த, “போன் அடிச்சா ஆப் பண்ணிட்டு தூங்க போறா. தூங்கற பிள்ளையை நீ கத்தியே எழுப்பி விட்டுடு” என்று அலுவல் அறையில் இருந்து ரங்கராஜன் மனைவியைக் கடிய, “ம்க்கும் மணி ஒன்பதாகப் போகுது. என்னமோ உங்க பொண்ணுக்கு மட்டும் விடியாத போலப் பேசுறீங்க நீங்க” என்று அலுத்துக் கொண்டார் காவேரி.

“நீ இந்நேரம் கோவிலுக்குக் கிளம்பி இருக்கணுமே காவேரி? நம்ம டிரைவர் வந்திருப்பானே” சமையல் அறை வாசலில் வந்து நின்று அவர் கேட்க, “அதெப்படிங்க உங்க பொண்ணுன்னு வந்துட்டா மட்டும் அசால்ட்டா பொண்டாட்டியை மறந்துடுறீங்க?” என்று கோபமாகக் கேட்டார்.

“இல்ல காவேரி”

“இன்னைக்கு உங்க பொண்ணும்தான் என்னோட வர்றா. இல்லன்னா நான் ஏன் லீவ் நாள் அதுவுமா தூங்குறவள எழுப்ப போறேன்” என்று கணவரை முறைத்தார்.

“நேத்து நைட்டு உங்ககிட்ட சொன்னேன்ல்ல. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?”

இடுப்பில் கை வைத்து நின்ற மனைவியைப் புன்னகைத்தே மலையிறக்கினார் ரங்கராஜன்.

“பாரு ப்ராஜெக்ட் பிஸின்னு நைட்டெல்லாம் வேலை பார்த்திட்டு இருந்தாளே, அதான் பாவம் நல்லா தூங்கட்டுமேன்னு சொன்னேன் காவேரி. இன்னைக்கு ஒருநாள் அவளை விடேன். என் பொண்ணு தூங்கி எழுந்திருக்கட்டும். நீ மட்டும் போய் அவளுக்கும் சேர்த்து சாமி கும்பிட்டுட்டு வா. உன் சாமி ஒன்னும் கோபிச்சுக்க மாட்டார்”

“எங்களைப் பேச விட்டா போதுமே, என் பிளானை எல்லாம் கெடுத்து விட்டுருவீங்க. நானே எப்போடா பார்த்திபன் தம்பி அம்மாவோட நம்ம பொண்ணை மீட் பண்ண வைக்கிறதுன்னு காத்துட்டு இருக்கேன். நீங்க என்னன்னா..”

“ஆமா, அவங்க என்னமோ நம்ம பொண்ணைப் பார்த்ததே இல்லாத மாதிரி பேசுற காவேரி நீ..”

“ஏங்க நீங்க வேற.. அவங்க கோவில்ல வச்சு, கடைங்கள்ல பார்க்கும் போது நாலு வார்த்த பேசுவாங்கதான் இல்லைங்கள. ஆனா இப்படி நாள் முழுக்கக் கூடவே இருக்க மாதிரி இது வரைக்கும் அமைஞ்சது இல்லயில்ல?” என்று கேட்டார்.

“காவேரி..”

“முட்டுக் கட்டை போடுற மாதிரியே பேசாதீங்க. நாங்க இன்னைக்குத் திருத்தணி போயிட்டு வர்றோம். அந்த முருகன் மனசு வச்சு என் பொண்ணு வாழ்க்கையை நல்ல மாதிரியா அமைச்சு கொடுக்கணும்” என்றார் கண்கள் கலங்க. மனைவி கலங்குவதைக் கண்டதும் ரங்கராஜன் அதற்கு மேல் எதிர்மறையாக எதுவும் பேசவில்லை.

பார்கவியின் அலைபேசி திரும்பவும் இசைத்தது.

“பாரும்மா” இம்முறை ரங்கராஜன் குரல் கொடுக்க, “வர்றேன்ப்பா” என்று தூக்க கலக்கத்துடன் சொன்னாள்.

அப்படியே கோடாகத் திறந்திருந்த கண்களுடன் அலைபேசியைக் கைப்பற்றி அழைப்பை ஏற்றிருந்தாள். தூக்கம் சொக்கிய கண்களில் இன்னமும் கவனம் வரவில்லை. அது காணொளி அழைப்பு.

“பாரு” என்றழைத்தான் பார்த்திபன்.

“ஹாய்.. சொல்லுங்க” என்று கண்ணை மூடி மூடித் திறந்தாள்.

“புத்தம் புது மலரே, என் ஆசை சொல்லவா?” அவனது ஆழ்ந்த குரலில் மெலிதாக முணுமுணுத்தான்.

“பாட்டுப் பாடவா போன் பண்ணீங்க பார்த்தி?” என்று சன்ன சிரிப்புடன் கேட்டாள்.

அவன் கண்கள் அவளையே வட்டமடித்தன. அவள் படுக்கையில் இருப்பதைப் பார்த்ததும், “உன்னைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்” என்று பாடல் வரியை ஹம்ம் செய்தான்.

கண்ணை முழுதாகத் திறந்தவள், அவனது கண்களைச் சந்தித்ததும் திகைத்து, திடுக்கிட்டு, “ஹாய் பார்த்தி” என்றாள். மறுநொடியே காணொளியை அணைத்து சாதாரண அழைப்பில் அவனோடு பேசினாள்.

அவன் குரலில் மெலிதான ஏமாற்றம் இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“இன்னும் தூக்கம் போல. சாரி நான் கால் பண்ணி எழுப்பி விட்டுட்டேனா?”

“ஆமா..”

“ஒரு பேச்சுக்கு கூட இல்லைன்னு சொல்றியா?”

“உண்மையைச் சொன்னேன்” என்று சிரித்தாள்.

அவனும் சிரிக்க, “ம்ம், இன்னைக்கு என்ன சமைக்கப் போறீங்க? மீனா, கோழியா?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“பார்த்தியா நக்கலா கேக்கற”

“ச்சே ச்சே இல்லங்க. எப்போ பாரு நான்வெஜ் சாப்பிடுறீங்களே, எப்படி? எனக்கெல்லாம் தொடர்ந்து ரெண்டு நாள் சாப்பிட்டாலே மூஞ்சில அடிச்ச மாதிரியாகிடுது”

“என்ன பாரு செய்யறது? டாக்டர் என்னைக் காய்கறிலாம் கம்மியா சாப்பிட சொல்லியிருக்கார்” என்று தீவிரமாகச் சொன்னான்.

“ஓ, அப்படியா?” என்று அப்பாவியாகக் கேட்டவளுக்கு, அவன் கேலி செய்கிறான் என்பதே தாமதமாகத்தான் புரிந்தது.

அவளின் கேள்வி அவனை வாய் விட்டு சிரிக்க வைத்திருந்தது. அவனது சிரிப்பு அவள் முகத்தில் புன்னகையை வரவழைத்திருந்தது.

“கோழி பக்கத்துல இலை, தழைய வச்சா அது கோபிச்சுக்காத?”

“கோபிக்குமா எப்படி? அதைக் கொன்னு நீங்க தின்னும் போதா?”

“கொன்னா? வாய்ல அடி பாரு. அது கஷ்டப்படக் கூடாதுன்னு நான் பார்த்தா.. இரு, உனக்கு நான் ட்ரைனிங் தர்றேன்” என்றான் தீவிரமாக.

அவள் பதில் சொல்லும் முன், “பாரும்மா” என்று ரங்கராஜன் அவளை அழைக்க, “பார்த்தி, நான் அப்புறமா கால் பண்ணட்டுமா?” என்று கேட்டு அழைப்பை துண்டிக்கப் போனாள்.

“ஹேய் பார்கவி, ஒரு நிமிஷம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று பரபரத்தான்.

“இப்பவேவா?”

“ம்ம்”

“நான் அம்மா கூட வெளில போறேன். ஆல்ரெடி ரொம்ப லேட்டாகிடுச்சு, அம்மா திட்டப் போறாங்க. நான் கார்ல போகும் போது உங்களுக்குக் கால் பண்ணவா? இல்லனா நீங்க மெசேஜ் போடுங்க. ஓகே?”

“பாரு..” என்று தயக்கத்துடன் இழுத்தவன், “ஓகே” என்று முடித்து விட்டான்.

பார்கவி படுக்கையில் இருந்து எழுந்து பேசிக் கொண்டே அறைக்குள் நடக்க, மகளின் பேச்சை கேட்டிருந்தார் ரங்கராஜன்.

பார்த்திபனிடம் பேசுகிறேன் என்று அப்பாவுக்குச் சொல்லியிருந்தாள் அவள். ஆனால் நான் நேசித்தவன் அவன் என்று அவருக்கு அவள் சொல்லவில்லை. அவருக்குத் தெரியும் என்பதை அவரும் மகளிடம் சொல்லவில்லை.

மகள் நட்பாகப் பழகுகிறாள் என்று அவருக்கும் புரிந்திருந்தது. அதையே மனைவியிடமும் சொல்லியிருந்தார்.

அவ்வளவுதான். காவேரிக்குக் காலில் சலங்கை கட்டி விட்டது போலானது. ஆனாலும் அடக்கித்தான் வாசித்தார் அவர்.

இம்முறை எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்ற கவலை அவருக்கு அதிகமாக இருந்தது.

“அம்மா உனக்காக வெயிட் பண்றா பாரும்மா. அதான் அப்பா உன்னை எழுப்பி விட வந்தேன்” என்றார் ரங்கராஜன்.

“இதோ குளிக்கப் போயிட்டேன்ப்பா” என்று அவசரமாகக் குளியல் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அம்மாவுடன் அவளும் தயாராகி நின்றிருந்தாள்.

பிரியதர்ஷனியும் வந்து விட்டாள்.

இவர்கள் மூவருமாகச் சென்று சத்யபாமாவை கூட்டிக் கொண்டு திருத்தணி நோக்கி பயணித்தார்கள்.

“பார்கவி எப்படிம்மா இருக்க?” அவளைப் பார்த்ததும் வாஞ்சையுடன் விசாரித்தார் சத்யபாமா.

“நல்லா இருக்கேன் அத்த. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள். அவர்கள் சிறுமிகளாக இருக்கும் போதிருந்தே அவரை, அத்தை என்று அழைத்துதான் பழக்கம். ஆண்டி என்ற விளிப்பெல்லாம் கேட்டாலே காவேரிக்கு ஆகாது. அதனால் அவர்களை அப்படி அழைக்கச் சொல்லி கொடுத்திருந்தார்.

“நல்லா இருக்கேன். எனக்கென்ன குறை..” என்று சிரிப்புடன் சொல்லி, அவளின் கைப் பிடித்து அவள் பக்கத்தில் அமர்ந்தார்.

தான் எடுத்து வந்திருந்த பையைத் திறந்து அதில் பொதிந்து வைத்திருந்த இருவாட்சி சரத்தை எடுத்து அவள் முகத்தைத் திருப்பி அவள் பின்னலில் வைத்து விட்டார்.

பிரியதர்ஷினிக்கு பூவை கையில் கொடுத்தார். அதைப் பார்த்திருந்த காவேரிக்கு மனம் பூரித்துப் போனது அவர் கண்களிலேயே தெரிந்தது. பிரியதர்ஷினியை பார்த்து அர்த்தமுள்ள புன்னகையைப் பரிமாறினார்.

“ம்ம், நானும் வேண்டாத சாமியில்ல. என்னைக்கு என் மருமக வந்து நான் அவளுக்குப் பூ வச்சு அழகு பார்க்க?” என்று சத்யபாமா பெருமூச்சுடன் சொல்ல, பார்கவி இயல்பாகப் புன்னகைத்து பார்வையை அலைபேசிக்கு கொடுத்தாள்.

பார்த்திபனிடமிருந்து வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி வந்திருந்தது.

“நீ ப்ரீயாகிட்டு மெசேஜ் பண்ணு. நான் கால் பண்றேன்” என்று பூடமாகச் செய்தி அனுப்பியிருந்தான்.

“ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னீங்களே?”

“எஸ். பட் அதை இப்படி மெசேஜ்ல சொல்ல முடியாதே. நீ பொறுமையா வீட்டுக்கு வந்துட்டு கால் பண்ணு. அப்புறம் சொல்றேன்” என்று அவன் அனுப்ப, சரியென்று பதில் அனுப்பி அலைபேசியைக் கைப்பையில் போட்டாள்.

“ஆனாலும் உனக்கு ரொம்பத் தைரியம்தான்” என்று பிரியதர்ஷினி அவள் தோளை இடித்துக் கிசுகிசுக்க, அவளை முறைத்தாள் பார்கவி.

இங்கும் அதே கதைதான். இருவரும் நட்பாகப் பேசுவது பிரியதர்ஷினிக்கு தெரியும். ஆனால் பார்கவி தன் நேச ரகசியத்தை அவளிடம் பகிரவில்லை. அவளுக்கு ஏற்கனவே தெரியும் என்று பாவம் இவளுக்குத் தெரியாது.

அன்று திருத்தணி முருகன் கோவிலில் மிதமான கூட்டமிருந்தது. பொறுமையாகக் காத்திருந்து நிறைவாகச் சாமி தரிசனம் செய்து கீழிறங்கினார்கள்.

புளியோதரை, எலுமிச்சை சோறு, உருளை வறுவல், தேங்காய் துவையல், கொண்டைக்கடலை மசாலா எனக் காவேரி செய்து எடுத்து வைத்திருக்க, வழியில் காரை நிறுத்தி பாய் விரித்து அமர்ந்து பேசியபடியே உணவை முடித்தார்கள்.

அப்போது சத்யபாமாக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தது.

பார்கவிதான் காரில் இருந்த அவரின் பையை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.

“யாரு இம்புட்டுத் தரம் போன் அடிக்கிறது?” என்று சலித்துக் கொண்டே அலைபேசியை எடுத்தவரின் கண்கள் திரையில் ஒளிர்ந்த பெயரைக் கண்டதும் பிரகாசமாகின.

“ஆத்தாடி ஒரு வாரமா இவங்க போனுக்குத்தான் கண்ணு பூக்க காத்துட்டுக் கிடந்தேன்” என்று ஆனந்த மிகுதியில் ஆர்ப்பரித்தவர், “அண்ணி, சொல்லுங்க. எப்படி இருக்கீங்க?” என்று படபடப்புடன் அழைப்பை ஏற்றுப் பேசினார்.

பார்கவி, பிரியதர்ஷினியுடன் பேசிக் கொண்டிருக்க, காவேரியின் கவனமெல்லாம் சத்யபாமாவின் மீதே இருந்தது.

ஏனோ காரணமே இன்றி அவருள் ஒருவித தவிப்பு பரவியது. மகளைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டார். அவளோ எந்தவித கவலையும் இல்லாமல் பேச்சும், சிரிப்புமாக இருந்தாள்.

பத்து நிமிடங்கள் பேச்சில் கரைந்திருந்தது. சத்யபாமா முகத்தில் விளக்கை போட்டது போல அப்படியொரு வெளிச்சம். வேகமாக வந்து காவேரியின் கைப் பிடித்துக் கொண்டார்.

“முருகன் நம்மளை கை விடல. அவன பார்த்துட்டு கீழ இறங்குனதும் நல்ல செய்தி சொல்லிட்டான் பாருங்க. அப்பனே முருகா..” என்று உணர்ச்சி வசப்பட்டு அவர் பேச, “என்ன நல்ல செய்தின்னு சொல்லுங்க” என்று அவரின் கையை அழுத்திக் கொடுத்தார் காவேரி.

“ஊர்ல ஒரு வரன் அமையற மாதிரி இருக்குன்னு சொன்னேன்ல? இந்தா இப்போ அவங்கதான் போன் போட்டாங்க. அவங்களுக்குச் சம்மதமாம்.” என்று சந்தோஷத்துடன் சொன்னார். காவேரி அதிர்ந்து அவரின் பிடியை நழுவ விட்டிருந்தார். அவரின் கருவிழிகள் உருண்டு கரிசனத்துடன் மகளைப் பார்த்தன.

இன்னும் எத்தனை முறை காயப்படுவாள் என் மகள் என்று நினைக்க நினைக்க அவருக்கு அவர் மீதே கோபம் வந்தது.

“இந்தா பொண்ணு போட்டோ அனுப்பிருக்காங்க பாரு பிரியா” என்று தன் அலைபேசியைத் திறந்து அதில் இருந்த புகைப்படத்தைக் காண்பித்தார். பார்கவி அவருக்குப் பக்கத்தில் நின்றிருக்க, கை நீட்டி அவரின் அலைபேசியை வாங்கினாள்.

அவள் விழிகள் அந்தப் புகைப்படத்தில் பதியும் போதே, “குடு பாரு, பொண்ணைப் பார்ப்போம்” என்று அலைபேசியை அவளிடம் இருந்து பிடுங்கியிருந்தாள் பிரியதர்ஷினி.

“பாரும்மா, அப்பாக்கு அடிச்சா போன் போகல. உன் நம்பர்ல இருந்து அடிச்சு குடுடா” என்று மகளைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டார் காவேரி.

மகளின் கையை ஆதரவாகப் பிடித்தார்.

“என் கைய விடுங்கம்மா, அப்பாக்கு போன் பண்ணி தர்றேன்” என்றாள் இயல்பாக.

கடவுளையும் காதலையும் உணர மட்டுமே முடியுமாமே! பார்கவியின் முகமும் அகமும் உணர்ச்சிகளைத் துடைத்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top