பார்த்திபன் காதலி – 27 (1)

ஒரு மாதம் கழித்துப் பார்த்திபனின் பரிசு பிரபஞ்சனை வந்து சேர்ந்தது.

“ஹே பார்த்தி, என்னடா இதெல்லாம்?” என்று அலைபேசி வழியே ஆச்சரியமாக வினவினான் பிரபஞ்சன்.

“நான் அங்க இருந்தா இதெல்லாம் வாங்கிட்டு வந்து உங்களைப் பார்த்திருப்பேன்தானே?”

“பார்த்திருப்பியா? அதான் முடியாதே. மிஸ் யூ டா மச்சா” என்று பிரபஞ்சன் சொல்ல, பார்த்திபன் நண்பனை முறைத்தான்.

“அமெரிக்கா போனதும் எனக்கு ஆப்பிள் ஆர்டர் பண்ற. இங்க இருந்தப்போ ஒத்த பேரிக்கா கூட வாங்கித் தரல நீ” என்று பிரபஞ்சன் சலித்துக் கொள்ள, சிரித்தான் அவன்.

“அம்மாவும், பிரியாவும் எப்படி இருக்காங்க?”

“என் செல்லம் சௌக்கியமா இருக்கா. அம்மாவும் நல்லா இருக்காங்கடா. நேத்து கூட உன்னைப் பத்தி கேட்டாங்க” என்று பிரபஞ்சன் சொல்லும் போதே அவன் பின்னால் இருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது.

அந்தச் சிரிப்புச் சத்தம் சமீபமாக அவனுக்கு இசையல்லவா!

“பார்கவி உன் வீட்டுக்கு வந்திருக்காளா?” என்று சரியாகக் கணித்துக் கேட்டான் அவன்.

“ஆமாடா.” என்ற நண்பனை அப்போதுதான் நன்றாகப் பார்த்தான் பார்த்திபன்.

“எங்கயாவது வெளில கிளம்பிட்டீங்களாடா பிரபா?”

“ம்ம், பிரியா ஃப்ரெண்ட் கல்யாணத்துக்குப் போறோம்டா. அதான் பார்கவியும் எங்களோட வர்றா” என்றான்.

பார்த்திபன் வாரம் தவறாமல் பார்கவியிடம் பேசி விடுகிறான். கிட்டத்தட்ட தினமும் கூட வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்திகளைப் பரிமாறி கொள்கிறார்கள். அவன் எத்தனையோ முறை கெஞ்சி கேட்டும் அவனுக்கு உதவுவதாக இல்லை பார்கவி.

அவளைப் பொறுத்தவரை அவள் யாரை நேசித்தாள் என்பது பிரியதர்ஷினிக்குத் தெரியாது. அது யாரென்று சொல்லும் எண்ணம் இப்போதைக்கு அவளுக்கு இல்லை. ஆதலால் அவன் கேட்ட உதவியை மறுத்து விட்டாள்.

பார்கவி அவனோடு நன்றாகப் பேசினாலும் இருவருக்கும் இடையே ஒரு பலமான எல்லைக் கோட்டை வரைந்திருந்தாள். அவனால் அதை உணர முடிந்தது.

அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டவள், காதலை கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே நிறுத்தி வைத்திருந்தாள்.

அவனும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனோடு இயல்பாகப் பேசுகிறாள் அவள், அது போதும் என்ற மனநிலைதான் அவனுக்கு.

“பிரபா, அப்படியே உன் போனை கொஞ்சம் திருப்பிப் பார்கவியைக் காமி” என்று காணொளி அழைப்பில் இருந்தவன் கேட்க, “டேய்” என்று முறைத்தான் பிரபஞ்சன்.

“நட்புக்காக இது கூடச் செய்ய மாட்டியாடா நல்லவனே?”

“என் நேரம்டா” என்று அலுத்துக் கொண்டே அலைபேசியைத் திருப்பினான். அதில் கேமரா கோணம் மட்டுமே மாறியிருக்க, பார்த்திபன் தன்னைப் பார்க்கிறான் என்பதெல்லாம் பார்கவிக்குத் தெரியப் போவதில்லை.

பார்கவி பால்கனியில் நின்று பறவைகளுக்கு இரை வைத்துக் கொண்டிருக்க, பிரியதர்ஷினி ஓரமாக நின்றிருந்தாள்.

இளஊதா நிற மென்பட்டில் இருந்தாள். அவளின் நீண்ட பின்னல் ஒரு பக்க தோளில் பூச்சரத்தோடு வழிந்து கொண்டிருந்தது. பற்கள் தெரிய புன்னகைத்தபடி தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

பிரபஞ்சன் அவர்களை நெருங்க நெருங்க அவளின் முகம் அவனுக்கு மிகவும் நெருக்கத்தில் வந்தது.

இங்கு வந்த பிறகு முதல் முறையாக அவள் முகம் பார்க்கிறான். நொடியில் அவனுக்கு மூச்சடைக்கும் உணர்வு. அவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.‌‍ அவன் கண்களுக்குள் முழுமையாய் நிறைந்து, இதயத்திற்குள் நுழைந்து மூச்சடைக்கச் செய்தாள்.

பார்த்திபன் சத்தமாகச் செருமி தொண்டையைச் சரி செய்தான்.

“பிரபா, பார்கவிய பார்க்கலன்னா, அவ மேல பீலிங்ஸ் வந்தா.. அவ இல்லன்னா எனக்கு மூச்சு முட்டி போகணும்னு சொன்ன இல்ல?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான். காதொலிப்பான் வழியாக இணைந்திருந்த பிரபஞ்சன், “அப்படியாடா சொன்னேன்?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“ம்ம், அப்படித்தான்டா சொன்ன காதல் மன்னா” என்று கடுப்படித்தவன், “எனக்குப் பார்கவிய பார்த்தாலே மூச்சடைக்குதுடா, நான் என்ன செய்யட்டும்?” என்று கரகரத்த குரலில் சந்தேகம் கேட்டான்.

“போனை ஒழுங்கா தூக்கி பிடிடா, பாருவ ஃபோகஸ் பண்ணு” என்று கத்தினான்.

பிரபஞ்சனுக்குச் சிரிப்புதான் வந்தது.

“அதான் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி பேசிக்கறீங்களே, அப்புறம் என்னடா?” என்று நண்பனை சீண்டினான்.

“நீ வேற பிரபா, அந்தக் கொடுமைய ஏன் கேக்கற.. அவ எங்க என்கிட்ட பேசுறா, எனக்குக் குக்கிங் கிளாஸ் எடுக்குறா மச்சா” என்று நொந்து கொண்டான்.

“ஓஹோ சமையல் சொல்லிக் கொடுக்கற அளவுக்கு க்ளோசாகிட்டீங்களா? அப்படியென்ன ஸ்பெஷலா சமைச்சீங்க சாரு?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“அதெல்லாம் எங்கடா ஞாபகம் இருக்கு. நாங்க சமைச்சது லவ் மச்சா, காதல்” என்றான் கண்ணடித்து.

“நான் கேட்டது காதல் ரெசிப்பி.” என்று அவன் குறுநகை புரிய, பிரபஞ்சன் சத்தமாகச் சிரித்திருந்தான்.

பார்த்திபனுக்குப் போதுமான அளவு அவன் எச்சரிக்கை விடுத்திருந்தான். இதற்கு மேல் அவனைத் தடுக்க முடியாது எனத் தெளிவாகப் புரிந்ததும் ஒதுங்கிக் கொண்டான். அவனுக்கு இருவருமே மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் இணைந்தால் அவனை விட அதிகமாக யாரும் மகிழ்ந்து விட முடியாது என்கையில் அதற்கெதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும்?

நண்பனிடம் எந்தக் கேள்விகளும் அவன் கேட்கவில்லை. ஏனென்றால் காதல் வந்த கணத்தை யாராலும் கணிக்க முடியாதுதானே.‌ அது போலவே காரணங்களும்!

காதல் என்பதே சரணாகதிதானே.

“பிரபா, போனை ஒழுங்கா பிடிடா. எனக்குப் பாரு முகமே தெரியல”

“பார்த்தி, ஏர்போர்ட்ல வச்சு உன்கிட்ட ஒரு பென்ட்ரைவ் கொடுத்தேனே. அதைப் பத்திரமா வச்சிருக்கதானே?”

“எஸ், இப்போ அது ரொம்ப முக்கியம் பாரு. டேய், அது என்னோட லேப்டாப் பேக்ல பத்திரமா இருக்கு. அதுல என்னமோ பெரிய ராணுவ ரகசியம் இருக்கறது போலத் தொறந்து பார்க்க கூடாதுனு கண்டிசன் போட்டுருந்தியேடா நீயி”

“ம்ம், பட் இப்போ ஓபன் பண்ணி பாரு” என்றான் பிரபஞ்சன்.

“இப்பவா? அப்புறமா பார்க்கறேன்டா. நீ பாருவை காமி”

“நான் சொன்னதைச் செய்டா”

“அந்தப் பென்ட்ரைவ் ரொம்ப முக்கியமா மச்சா? நான் பார்கவியை இப்போ பார்த்தாதான் உண்டு. என்கிட்ட நல்லா பேசினாலும் முகத்தைக் காட்டவே மாட்டேங்கறாடா. அதுவே அவளுக்கு இன்னமும் என் மேல கோபம் இருக்கோன்னு டவுட் பண்ண வைக்குது”

“பார்த்தி” என்றான் அழுத்தமாக.

“இந்தக் கள்ளக் காதலிகளோட இதுவொரு தொல்லை. நாம சொல்றதை கேட்க மாட்டாங்க. அவங்க சொல்றததான் நாம கேட்டாகணும். ச்சே..” என்று சலித்துக் கொண்டே எழுந்தான்.

முழுதாக ஒரு நிமிட தேடலுக்குப் பிறகு, “டேய் பிரபா, அதை எங்கயோ போட்டுட்டேன் போலடா. அது கெடக்கட்டும். அப்புறமா தேடலாம். நீ கொஞ்சம் பார்கவி பக்கத்துல போயேன். அவகிட்ட பேச்சு கொடேன்” என்று கெஞ்சினான்.

“உன்னை இப்படிக் கெஞ்ச வைக்கிறது கூட நல்லாத்தான்டா இருக்கு பார்த்தி” என்று நமுட்டு சிரிப்புடன் சொன்ன பிரபஞ்சன், எப்போதோ கூடத்துக்கு வந்திருந்தான்.

“பென்ட்ரைவ்” என்றான் நண்பனை நன்றாக முறைத்து.

“அடிங்க, என் கையில சிக்காமயா போவ நீயி. உன்னை அப்போ கவனிச்சுக்கறேன் பிரபா” என்று கறுவியபடி மடிக்கணினி பையைத் திறந்து தேடினான். அதனுள் மிகவும் பத்திரமாக இருந்ததை எடுத்து நண்பனிடம் காண்பித்தான்.

“அது உனக்குத்தான். அதுல என்ன இருக்குன்னு நீயே பாரு.” என்று சொன்ன கணமே அழைப்பை துண்டித்து விட்டான் பிரபஞ்சன்.

‘எங்களுக்குத் திருமணத்திற்குச் செல்ல நேரமாகிறது’ என்ற தகவலை குறுஞ்செய்தி வழியாக அவனுக்குத் தெரிவித்தான்.

மடிக்கணினி திரையைக் கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பார்த்திபனுக்கு அக்கணம் அலைபேசி ஒரு பொருட்டாகப் படவில்லை.

பிரபஞ்சன் கொடுத்திருந்த பென்டிரைவை கணினியில் பொருத்தி, அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தவனுக்கு மீண்டும் மூச்சடைத்துப் போனது.

அவனின் கணினித் திரையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது பார்கவியின் முகம்.

திரை வழியே அவனைப் பார்த்து புன்னகைத்தாள், சிரித்தாள். அவள் மட்டுமே அக்கணம் அவன் கண்களுக்குள் விழுந்து நிறைந்தாள்.

அவனது இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.

பிரபஞ்சனின் அபார்ட்மென்ட் வளாகச் சிறுவர்களுடன் அவர்கள் கிரிக்கெட் விளையாடிய பொழுது எடுத்த சுயமியில் அவனது தலைக்கவசம் அணிந்து, அவனது கிரிக்கெட் மட்டையைப் பிடித்திருந்த பார்கவியின் முகத்தில் அப்படியொரு மலர்ந்த புன்னகை. சிறுவர்களுடன் சேர்ந்து புன்னகையுடன் அவர்கள் இருவரும் அருகருகே நின்றிருந்தார்கள்.

அந்தப் புகைப்படத்தில் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அதில் மட்டுமல்ல அடுத்து வந்த எல்லாப் புகைப்படங்களிலும் அவள் இயல்பாக நிற்க, அவன்தான் எல்லாவற்றிலும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் தெரிந்த அந்த நூதன நெருக்கத்தைக் கண்டு அவனுக்கே அதிர்ச்சிதான்.

பிரியதர்ஷினியின் அண்ணன் திருமணத்தில் குழந்தையோடு நின்ற பார்கவியை அவன் கண்களால் களவாடிய கணத்தைத் தத்ரூபமாகப் படமாக்கி இருந்தார்கள்.

அது புகைப்படம் அல்ல. காணொளியில் இருந்து புகைப்படமாக எடுத்தேன் என்று அவனுக்குச் செய்தி அனுப்பியிருந்தான் பிரபஞ்சன்.

அடுத்தப் புகைப்படத்தில் பார்கவி கேமரா முன் நிற்க, அவளின் பின்னே நின்றிருந்தான் அவன்.

அவன் கண்கள் குறும்புடன் பளபளக்க, உதட்டோர குழி பளிச்சென்று தெரிந்தது.

லேசாகத் தலையைத் திருப்பி அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.

பட்டென அவனுள் பதற்றம் பரவியது.

அவளுள் காதல் துளிர்க்க அவனே முற்றும் முழுதான காரணம் என்பது முன்னெப்போதையும் விட இப்போது அவனுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.

“பார்கவி, ஐ ஆம் சாரி” என்று மனதார மன்னிப்பை வேண்டினான். அவன் விரல்கள் கணினித் திரையில் இருந்த அவள் விழிகளைத் தீண்டின.

அன்றொரு நாள் தன்னை ஈர விழிகளுடன் ஏறிட்ட அவள் முகம் நினைவில் வந்து அவனை மிகவும் தொந்தரவு செய்தது.

“சாரி பாரு” என்றான் உளமார.

காதலில் மன்னிப்பு காலாவதி ஆவதில்லைதானே?!

error: Content is protected !!
Scroll to Top