நற்காதல் நெய்திடவா – 12 (1)

வெற்றியின் சிரிப்பைப் பார்த்து வேதாவால் கோபம் கூடக் கொள்ள முடியவில்லை. அவன் சிரிப்பு அவளை மொத்தமாய் வசீகரிக்கையில் கோபம் எங்கிருந்து வரும்?

“காதலில் நியாய அநியாயங்களுக்கு எல்லாம் இடமே கிடையாது வேதா மேடம்” வெற்றியின் கண்கள் கோப்பை சரி பார்த்துக் கொண்டிருக்க, இதழ்கள் அவளுக்கான பதிலை கொடுத்துக் கொண்டிருந்தது.

அவனது இந்த நடத்தை அவளைக் கொஞ்சம் குழப்பினாலும், அவளை அதிகமாக மலைக்க வைத்தது என்னவோ உண்மை.

வேலை செய்யும் இடத்தில் ஒருவரின் மேல் ஈர்ப்பும், காதலும் வருவது இயல்பு. ஆனால், வேலை நேரத்தில் காதல், சீண்டல், பார்வை பரிமாற்றம் என எந்தச் சேஷ்டைகளும் செய்யாத அவன் மேல் தனி மரியாதை வந்தது.

அன்று வேதா வேலை முடித்துக் கிளம்பிய பின்னரும் கூட வெற்றி வங்கியில்தான் இருந்தான்.

இரவு உணவு முடித்து அவள் உறங்கச் செல்லும் போது அலைபேசியில் அழைத்தான்.

“தூங்க போறியா வேதா? ரொம்ப லேட்டா கால் பண்ணிட்டேனா?” தயக்கத்துடன் கேட்டான் வெற்றி.

“ம்ம். இல்லயில்ல, சொல்லுங்க” வேதா வேகமாக மறுக்கவும் அவனிடம் சிரிப்பு.

“என்ன இன்னைக்கு வேதா மேடம் பேங்க்ல வச்சு ஒரே புலம்பல்? நியாய, அநியாயம் பத்தி எல்லாம் பேசிட்டு இருந்தீங்க?” அவன் கிண்டலாகக் கேட்க,

“நீங்க கூடதான் என்னை மறக்க முடியுமான்னு என்கிட்ட கேட்டு சவால் விட்டுட்டு இருந்தீங்க” சடைத்தாள் வேதா.

சட்டெனச் சத்தமாகச் சிரித்தான் வெற்றி. “உனக்கு ஒன்னு தெரியுமா வேதா. நமக்கு ஒருத்தரை பிடிச்சதுன்னு வச்சுக்கோ. அந்த ஸ்டார்டிங் பீரியட்ல மனசு முழுக்க அவங்கதான் இருப்பாங்க. அவங்களைப் பத்தின சின்னச் சின்ன விஷயங்களையும் நாம கவனிச்சு, குறிச்சு வச்சுட்டே இருப்போம். சதா அவங்க நினைவு மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கும். அதுக்கு அவங்க நம்ம கண் முன்னாடி இருக்கணும்னு கூட அவசியமில்ல. நம்ம மைண்ட்ல இருந்துட்டே இருப்பாங்க. நீ எப்பவும் என் மனசுக்குள்ள ஏதாவது பண்ணிட்டே இருக்கும் போது, எனக்கு உன்னைத் தேடல வேதா. எஸ், நான் ஒத்துக்கறேன். உன் நினைவு வரும் போது உன்னை நிமிர்ந்து பார்க்கிற தூரத்தில் நீ, என் கண் முன்னாடி இருக்கறது பிளஸ் பாய்ண்ட்தான். ஆனா, நீ பக்கத்தில் இல்லனாலும் என் மனசுல இருப்பியே” அவன் நீளமாகப் பேசி முடிக்க, வேண்டுமென்றே கொட்டாவி விட்டாள் வேதா.

“இப்படியெல்லாம் உருக வைக்கிற மாதிரி பேச உங்களுக்கு யார் சொல்லிக் கொடுக்கிறா?” தூக்க கலக்கத்துடன் அவள் கேட்க, பக்கென்று சிரித்து விட்டான் வெற்றி.

“உனக்கெல்லாம் எஜுகேஷன் லோன் கொடுத்துக் காலேஜ் அனுப்பி இருக்கணும். காதல் பண்றது எல்லாம் மகா தப்பு செல்லமே”

“ஆமா. ஆமா. எனக்கும் மேல படிக்கணும்னு நிறைய ஆசை இருந்தது. நான் பேசாம படிக்கப் போகலாம்.” அவன் சொல்லவும், அதையே பிடித்துக் கொண்டாள் வேதா.

“எம்மாடி வேதா, முதலுக்கே மோசமா? போச்சு போ” அவன் புலம்ப, இப்போது அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“இப்ப மட்டும் என்ன வேதா? படிக்க விருப்பம்னா படியேன். கரஸ்ல படி. என்ன கோர்ஸ் படிக்க ஆசைன்னு சொல்லு. நான் விசாரிச்சு சொல்றேன்” வெற்றி சொல்ல, அவளிடம் இருந்து அமைதியே பதிலாக வந்தது.

“ஓ, மாமனார் பெர்மிஷன் தர மாட்டாரா? ஓகே. ஓகே. அதுனால என்ன? நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் படி. அப்போ உன்னை எந்தக் கொம்பனும் தடுக்க முடியாது இல்ல?” அவன் சொல்ல சொல்ல, அந்த வார்த்தைகளில் அவளது தூக்கம் தூரப் போனது.

“வெற்றி, நிஜமா சொல்றீங்களா? இல்ல, என்னை இம்ப்ரெஸ் பண்ண…” அவள் முடிக்கும் முன்பே, “இனிமேதான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணனுமா என்ன?” என்று சீண்டலாகக் கேள்விக் கேட்டான் வெற்றி.

“நான் இன்னும் இம்ப்ரெஸ் ஆகல”

அவள் வீம்பாகச் சொல்ல, “சிலருக்கு உண்மையை ஒத்துக்க அவ்வளவு சீக்கிரம் மனசு வராது. அப்படியொரு வியாதி இருக்கும். அந்த வியாதி உனக்கும் இருக்கும் போலயே” நக்கலாகச் சொன்னான் வெற்றி.

மெல்லிய சிரிப்புடன், “தேங்க்ஸ்” என்றாள்.

“எதுக்கு?”

“நாளைக்கு நான் படிப்பேனா, இந்த வேலையில் தொடர்ந்து இருப்பேனா, எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா, நீங்க சொல்றதை நம்பச் சொல்லுது என் மனசு”

“நம்பு வேதா. கல்யாணத்துக்கு அப்புறமும் இதே வெற்றிதான் இருக்கப் போறேன். உன் விருப்பம் இல்லாம, எதுவும் நம் வாழ்க்கையில் நடக்காது. சரியா?”

“ம்ம்”

சில மாயக் கணங்கள் மந்திரம் போட்டது போல நிகழ்ந்து விடும். வேதா அந்தக் கணத்தில் வெற்றியின் பக்கம் அதிகம் சாய்ந்திருந்தாள்.

“நேரமாச்சு தூங்கு வேதா. நாளைக்குக் காலைல பார்க்கலாம்” அவன் சொல்ல, “இப்போ பார்க்க முடியாதா?” என்ற அவளின் பதில் கேள்வியில் திடுக்கிட்டான் வெற்றி.

“முடியுமே. கண்ணை மூடி படு. எனக்கு நீ வர்ற மாதிரி, உனக்கும் என் முகம் கனவில் வரும். குட் நைட்” மென்மையாய் சொல்லி, அழைப்பை துண்டித்திருந்தான் வெற்றி.

வேதா ஒரு முடிவை எடுத்த பின் அதற்கான சரியான காரணங்களைத் தேடி அடுக்கிக் கொண்டிருந்தாள். இப்போது வெற்றியின் பக்கம் ஒட்டு மொத்தமாகச் சாயும் மனத்தை அவளால் தடுக்க முடியவில்லை. அதை ரசிக்கத் தொடங்கி இருந்தாள். அவளின் உணர்வுகளே அவளுக்குப் பிடித்தது.

மறுநாள் வங்கிக்குச் செல்லும் போது புது மனநிலையுடன், புதிதாக எடுத்திருந்த முடிவுடன் சென்றாள் அவள்.

வேலை இடத்தில் அவள் வங்கியின் துணை மேலாளர் மட்டுமே. அந்த எல்லைக் கோட்டை கடக்கவே கூடாது என்ற தீர்மானத்துடன் வங்கிப் படியில் ஏறினாள். அவளின் தீர்மானம் குலையாமல் இருக்க, வெற்றி அதிகம் உதவினான்.

ஒரு சீண்டலான பேச்சு, பிரிய பார்வை, சிக்க வைக்கும் கள்ளச் சிரிப்பு என எதுவும் இல்லாமல், வங்கியின் மேலாளராக மட்டுமே நடந்து கொண்டான் வெற்றி.

வேதா முதலில் மிக மிகத் தடுமாறினாள். வங்கி வாடிக்கையாளர்களிடம் பேசுபவனை நிமிர்ந்து பார்க்க சொன்னது அவள் மனது. அவனது புன்னகையை, தலைக் கோதலை, சமயங்களில் கோபத்தைக் கூட ரசிக்கச் சொன்னது அவள் மனது. கண்களை அவன் பக்கமாகத் திருப்பாமல் இருக்க அதிகச் சிரமப்பட்டாள் வேதா. அந்த வாரம் முடிவுக்கு வரும் போது, “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அவள்.

அவர்கள் இருவரும் பணியிடத்தில் எப்போதும் போல இயல்பாக இருக்க, அவர்களின் காதல் வங்கியின் மற்ற பணியாளர்களுக்குத் தெரியாமலேயே போனது.

அந்த வார இறுதி ஞாயிறு ஒருநாள் விடுமுறையை உறங்கியே கழிக்க அவள் திட்டமிட்டு இருக்க, வெற்றி அவளை வெளியில் அழைத்துப் போனான்.

வேதாவிற்குதான் ஒருவித பய உணர்வு. அதையும் தாண்டிய குற்ற உணர்ச்சி. நாளையே விஷயம் வீட்டிற்குத் தெரிந்தால் என்ன சொல்வார்கள் என்று தவித்தாள் அவள்.

இதுவரை அவள் எதையும் வீட்டில் மறைத்தது கிடையாது. பொய் சொன்னது கிடையாது. அப்படியிருக்கையில் வெற்றியுடனான ஊர் சுற்றலை, அவன் மேல் துளிர்த்திருக்கும் நேசத்தை வீட்டில் சொல்லாமல் இருப்பது அவளுக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது.

சென்னையில் அவளுக்கு நிறைய உறவினர்கள் உண்டு. யார் கண்ணிலாவது ஜோடியாகக் காட்சித் தந்தால், முடிந்தது ஜோலி. அவளின் தயக்கம் புரிந்து, தனியாக இல்லாமல் நண்பர்களுடன்தான் அவளை வெளியே அழைத்துச் சென்றான் வெற்றி.

பிரதீப், மோனிகா மற்றும் பிரபு. கௌசல்யா, காந்திமதி இருவரும் வேலை இருக்கிறது என்று வரவில்லை.

வெற்றியின் காரில் நண்பர்கள் பயணிக்க, அவனது இரு சக்கர வாகனத்தில் அவனும், வேதாவும் பயணித்தனர்.

இம்முறையும் சென்னை – ஆந்திரா எல்லை பயணம்தான்.

சாலையின் இருபுறமும் பசுமை கண்ணைக் குளிர்விக்க, முகத்தில் அளவளாவிய தென்றலுடன் ஒரு நீண்ட பயணம்.

சாலையோர தேநீர் கடையில் நண்பர்கள் வண்டியை நிறுத்தி இருக்க, இவர்களும் சிறிய ஓய்விற்காக அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.

மஞ்சள் நிற சுடிதார் அணிந்து, தூக்கி போட்ட கொண்டையுடன் நின்றிருந்த வேதாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான், ஜீன்ஸ், டி ஷர்ட்டில் இருந்த வெற்றி.

அவர்கள் இருவரையும் பிரபு புகைப்படம் எடுக்க, “டேய், போட்டோகிராபர். கையை வச்சுட்டு சும்மா இரேன் டா” என்று அதட்டினான் வெற்றி.

“உனக்கு வேதா மேல எவ்வளவு லவ்வோ, அதே அளவு எனக்குப் போட்டோகிராபி மேல மச்சான். என்னைத் தடுக்காத பிளீஸ். நீங்க ரெண்டு பேரும் பெர்பெக்ட் ஜோடி டா. மணம், குணம், திடம்னு..” பிரபு சொல்லிக் கொண்டே போக,

“இதெல்லாம் எங்க வீட்ல சொல்லணும். நம்மைப் பார்த்து நல்ல ஜோடினு அவங்க சொன்னா, வேதா ஹேப்பி ஆகிடுவேன்” என்றாள் வேதா.

வெற்றி அவளின் கண்களைக் கூர்ந்து, “என்னாச்சு வேதா” என்று கேட்க, “வீட்ல சொல்லாம இப்படி வெளில வர்றது ஒரு மாதிரி, தப்பு பண்ற ஃபீல். அட்லீஸ்ட் அண்ணாகிட்டயாவது சொல்லி இருக்கலாம் நான்.” அவள் புலம்ப, அவளின் கைப் பிடித்தான் வெற்றி.

“இங்க பாரு வேதா. நீ சொல்றது எனக்குப் புரியுது. ஆனா, இந்த லவ் எல்லாம் வீட்ல சொல்லிட்டுப் பண்றது இல்ல மா. நாம அதைச் சொன்ன உடனே பிடிச்சு கட்டி வைக்கத்தான் அவங்களுக்குத் தோணும். அவங்களையும் தப்பு சொல்ல முடியாது. ஏன்னா இப்போ இருக்கற லவ் அப்படித்தான் இருக்கு. காதல்ன்ற பேர்ல..” அவள் முகம் போன போக்கில் பேச்சை நிறுத்தினான் வெற்றி.

“எம்மாடி வேதா. உன் மண்டைக்குள்ள என்ன ஓடுது?” அவன் கவலையுடன் கேட்க, “வீட்டுக்கு போவோமா?” என்று கேட்டாள் வேதா.

“சரி. எழுந்துக்கோ” அவளின் கைப் பிடித்து எழுப்பி, வண்டியை நோக்கி நடத்திக் கொண்டு போனான் வெற்றி.

அதன் மேல் சாய்ந்து நின்று, “சாரி” என்றாள் வேதா.

“அட, இட்ஸ் ஓகே வேதா. நாம தினமும் பார்த்துக்கறோம் தானே? இன்னைக்கு ஒரு நாள் பார்க்காம இருந்தா ஒன்னும் ஆகாதுதான். ஆனா, எனக்கு இந்த ஆறு நாள் வேலை தரும் டென்ஷனை இப்படி ஃப்ரீயா வெளில வந்துதான் ரிலாக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லா வேலையையும் வீட்ல அம்மா, தங்கச்சி செஞ்சு வச்சுடுவாங்க. அதுனால கவலை இல்லாம, கிளம்பி வந்துட்டேன். ஆனா, உனக்கு நீ தானே செஞ்சுக்கணும்? அதை யோசிக்கவேயில்லை நான். சாரி, வேதா” அவளின் நாடிப் பிடித்துச் சொன்னான் வெற்றி.

அவனையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேதா.

பிரபு அதையும் புகைப்படமாக எடுத்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top