“ஏன் அப்படிச் சொல்றீங்க?” வேதா கேட்க, “அதான் இப்போதைக்கு உனக்கு மாப்பிள்ளை பார்க்குறதை உங்க வீட்ல ஒத்திப் போட்டுட்டாங்க இல்ல? அது போதுமே. நமக்கு இப்போ என்ன அவசரம்? கொஞ்சம் நிதானமா நேசிச்சு, நெருங்கி அப்புறம்…” என்று அவன் சொல்லிக் கொண்டே போக,
“என்னது…” என்று அதிர்ந்தாள் வேதா. “கேடி. நான் அந்த நெருக்கத்தைச் சொல்லல” என்றான் வெற்றி கள்ளச் சிரிப்புடன்.
“நானும் அதுக்கு ஷாக் ஆகல”
“எம்மாடி வேதா, நம்பிட்டேன்” நக்கலாகச் சொன்னான். அலைபேசி வழியே அவனின் சிரிப்பு அவளுக்குக் கடத்தப்பட, உதடு கடித்துத் தன் சிரிப்பை அடக்கினாள் வேதா.
“நம்ம காதலுக்கு அற்ப காரணங்கள் இல்லாம, ஏதாவது அற்புத காரணங்கள் தேடுவோமே வேதா. என்ன சொல்ற?” என்று கேட்டவன்,
“நாம முதல்ல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க, தெரிஞ்சுக்க டிரை பண்ணுவோம். காதல் எனும் அற்புத வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்போம். அப்புறம் அவசரம் இல்லாம, பொறுமையா உங்க வீட்ல பேசுவோம். ஓகேவா?”
“ம்ம். நானும் அதான் யோசிச்சேன். அதுனாலதான் அண்ணாகிட்ட உடனே உங்களைப் பத்தி சொல்லல. எனக்கு உங்க மேல இருக்க ஈர்ப்புக்கு காதல்னு என் மனசு பேர் வைக்கிற அடுத்தச் செகண்ட் எங்க வீட்ல சொல்லிடலாம்னு இருக்கேன்” என்று வேதா சொல்ல,
“எம்மாடி வேதா, அதை முதல்ல என்கிட்ட சொல்லணும் நீ. என் மேல காதல் வந்தா, அதை என்கிட்ட தானே சொல்லணும்?” என்று சந்தேகம் கேட்டான் வெற்றி.
“நீங்க சொன்னீங்களா?” எதிர்கேள்வி கேட்டாள் வேதா.
“செல்லமே, கவிதை எல்லாம் சொன்னேனே. மறந்துட்டியா?”
“காதலை சொன்னீங்களாதான் கேள்வி” அழுத்தமாக அவள் கேட்க, “காதலின் மொழி உனக்குதான் தெரியல வேதா. காதலை சொல்றதை விட…” என்று சரசமாகப் பேசினான் வெற்றி.
“அச்சோ.. உங்களை..” அவள் தடுமாற, “ஓகே ஓகே. நான் பேசல” சத்தமாகச் சிரித்துச் சொன்னான்.
“உங்க வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா வெற்றி சார். உங்களுக்குப் பொண்ணு பார்த்திட்டு இருந்ததா உங்க தங்கச்சி சொன்னாளே. இப்போ உங்க கல்யாணம் தள்ளிப் போனா, என்ன சொல்லுவாங்க?”
“என் வீட்டை பத்தி நீ கவலைப்படாத. அவங்களுக்கு என் பேச்சுதான் வேதம். என்னோட சந்தோசம்தான் அவங்களுக்கு முக்கியம். மத்ததுக்கு எல்லாம் அவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்க மாட்டாங்க” உறுதியாகச் சொன்னான்.
“உங்களுக்கு வயசாகுது இல்ல. அதுக்குக் கூட ஃபீல் பண்ண மாட்டாங்களா?”
“என்ன? என்ன சொன்ன நீ? எனக்கு வயசாகிடுச்சா? எம்மாடி வேதா. நீ வேற நல்ல காதல்தான் செய்யணும்னு சொல்லிட்ட. ஆனா, நீ கேட்கிற கேள்வி வேற என்னை ஏடாகூடமா பேச சொல்லுது” அவன் குரலில் இருந்த துள்ளலில், கேலியில் தூண்டப்பட்டு, “இப்போ என்ன கேட்டேன் நான்? வயசு தானே?” என்று அவள் கோபத்துடன் கேட்க,
“திரும்பத் திரும்ப வயசாகுது சொல்ற நீ. நானும் உன்னைப் போல யூத் தான் மா” அவளைப் போலவே போலி கோபத்துடன் பதில் கொடுத்தான் வெற்றி.
“ம்ம். ஆனா, எங்கண்ணாவை விடப் பெரியவங்க நீங்க” வேதா முணுமுணுக்க, “உங்க அண்ணனுக்கு 26 வயசு தானா? அதுக்குள்ளவா கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க?” என்று கேட்டான் வெற்றி.
“அவனுக்கு 27. உங்களுக்கு 28”
“எம்மாடி வேதா, எனக்கு 28 வயசாகி ஒரு மாசம் கூட ஆகல. அதுவும் இல்லாம, உன் அண்ணனை விட ஒரு வயசு பெரியவனா நான் இருந்தா பெரிய பிரச்சனையும் இல்ல. நான் கல்யாணம் பண்ணிக்கப் போறது உன்னைத்தான். உங்க அண்ணனை இல்ல” என்று அவன் சொன்ன விதத்தில் வெடித்துச் சிரித்தாள் வேதா.
“உங்களுக்குக் கோபம் இல்லையே?”
“எதுக்கு?”
“நம்ம விஷயத்தை அண்ணாகிட்ட சொல்லாததுக்கு. அண்ணிக்கு உடம்பு முடியல. அத்தையும் வேற கோபமா இருந்தாங்க. அதுனால..” அவள் தயங்க,
“ஹேய் வேதா. இட்ஸ் ஓகே” என்றான் வெற்றி.
“ஒரே வாரத்தில் காதல், கல்யாணம்னு ரொம்பத் தூரம் டிராவல் பண்ணிட்டோம். நான் சொன்ன மாதிரி ஃபர்ஸ்ட் நெருங்கி வருவோம்” அவளின் தயக்கத்தைத் துடைத்து எறிந்தபடி சொன்னான் வெற்றி.
“வெற்றி” என்று சிணுங்கிய குரலில் நிறைய வெட்கமிருந்தது.
“எம்மாடி வேதா. இப்படிப் பேசினாதான் என் பேரை சொல்லுவியா?” சீண்டினான்.
“வெற்றி…” அவள் கத்த, சிரித்தான் வெற்றி. அது அவளையும் தொற்றியிருந்தது.
இருவரும் இயல்பாகப் பேசி, சிரித்து, புரிந்து கொண்டு, உறங்க சென்றார்கள்.
வேதாவுக்குத் திங்கள் கிழமை எப்போதும் வேப்பங்காய்தான். வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் வந்த சுணக்கம் மட்டுமல்ல. வாடிக்கையாளர்கள் நிறைந்திருக்கும் நாள் என்பதாலும் அந்தச் சோர்வு அவளைக் காலையிலேயே அப்பிக் கொள்ளும்.
ஆனால், இந்தத் திங்கள் கிழமை மிக ஆவலாக வங்கி கிளம்பிச் சென்றாள் அவள். அதற்குக் காரணம் இருந்தது.
இதுவரை மேலாளர் வெற்றியை, அவளிடம் மனதை சொன்ன வெற்றியை மட்டுமே வங்கியில் பார்த்திருக்கிறாள். காதலன் வெற்றி எப்படி நடந்து கொள்வான் என்ற துளி ஆர்வம் அவளுள் பெருவெள்ளமாக உயர்ந்து நிற்க, முதல் ஆளாக வங்கிக்கு சென்றாள் அவள்.
வெற்றியும் அப்போதுதான் வந்து இறங்கினான். தன் இரு சக்கர வாகனத்தை அதனிடத்தில் நிறுத்தி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.
“எம்மாடி வேதா. என்ன ஆளுக்கு முதல்ல வந்து அசத்தறீங்க?”
“என் ஆளை அசத்தலாம்னுதான்” குறும்பு சிரிப்புடன் கண் சிமிட்டி சொன்னாள். வெற்றி தன் வெட்கத்தை மறைத்து அவளை முறைத்தான்.
“வேலைக்கு வந்தா ஒழுங்கா வேலையை மட்டும் பார்க்கணும்.” ஒற்றை விரல் நீட்டி மிரட்டினான்.
“ஒரு ஆள் என்னை வேலையில் வச்சு சைட்டடிச்சு, லவ் பண்ணி, என்கிட்ட லவ் சொல்லி, என்னையும் அவரோட காதல்ல இழுத்து, விழ வச்சு.. என் கைப் பிடிச்சு…” அவள் அடுக்கிக் கொண்டே போக,
“எம்மாடி வேதா. இதெல்லாம் இப்பதான் பேச உனக்கு நேரம் கிடைச்சதா?” என்று அதட்டினான் வெற்றி.
அவனிடம் கண் சிமிட்டி, “டிஸ்டர்ப் ஆகுறீங்களா?” என்று வம்பாகச் சீண்டினாள் வேதா.
“இன்னைக்கு ஈவ்னிங் இருக்கு உனக்கு” மீண்டும் ஒற்றை விரல் நீட்டி மிரட்டினான்.
“தேவதர்ஷினி, வாங்க வேலையைப் பார்ப்போம்” அவன் சத்தமாகச் சொல்லி விட்டு முன்னே நடந்தான். மற்ற வங்கிப் பணியாளர்களும் வரத் தொடங்க, வேதா தன் வாயை மூடி, வாலைச் சுருட்டினாள்.
மற்ற வேலை நாட்களைக் காட்டிலும், திங்கள் கிழமைக்கே உரிய சிறப்பாக வேலை அவளை வைத்து செய்தது. அவளே விரும்பினாலும், வெற்றியை பார்க்க முடியவில்லை. கணினித் திரை, வாடிக்கையாளர் முகம் இரண்டை மட்டுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
மதிய உணவு இடைவேளையின் போதும் வெற்றி வெளியே சென்றிருந்தான். அவளது உணவை உள்ளே தள்ளி விட்டு, மீண்டும் பணிக்குத் திரும்பினாள் அவள்.
ஆனால், அன்றைக்குக் காலையில் அவனைச் சீண்டியதற்கு மாலையில் அவளை நன்றாகக் கவனித்தார் மாண்புமிகு மேலாளர்.
நாயகி அவசர வேலையாக வீடு செல்ல அனுமதி கேட்க, அவரின் வேலையையும் வேதாவை பார்க்க வைத்தான் வெற்றி.
ஆறு மணி கடந்தும் அவளின் வேலை முடியவில்லை. ஏழு மணிக்கு பொறுப்பாகத் தேநீர், காஃபி வாங்கி வரச் செய்து அனைத்து பணியாளர்களையும் சேர்த்துக் கவனித்தான் வெற்றி.
“இனிமே பேங்க் வாசலை தொட்டதும் இவரை மறந்துடணும் வேதா நீ” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டே வேலையை முடித்தாள் வேதா.
“அப்படியா?” முடியுமா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டபடி, அவள் மேஜையில் இருந்த கோப்புகளில் கையெழுத்து இட்டான் வெற்றி.
“என்னது முடியுமாவா? இதெல்லாம் அநியாயம். நீங்க மட்டும் என்னைத் தெரியாத மாதிரி ஆக்ட் கொடுத்துட்டு இருக்கீங்க. ஆனா, நான்? ஒவ்வொரு செகண்ட்டும் உங்களைத்தான் தேடுது என் கண்ணு. சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது” அவள் புலம்ப, அவன் முகத்தில் மந்தகாச புன்னகை.