பார்த்திபன் காதலி – 26 (1)

பார்த்திபனின் இளமைக் காலங்கள் மிகவும் இனிமையானவை.

அவர்கள் வசித்த தெருவில் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டுவது, கிரிக்கெட் ஆடுவது என நிற்க நேரமின்றி நகர்ந்த பொழுதுகளை அனுபவித்தே அவனுக்குப் பழக்கம். அவன் வளர்ந்த பிறகும் கூடக் கிரிக்கெட் விளையாடும் வழக்கத்தை விடவில்லை. பெரும்பான்மையான அவனது நண்பர்கள் எல்லோருமே அவனோடு இணைந்து கிரிக்கெட் ஆடும் வழக்கம் உடையவர்கள். அது அலுவலகம், வசிப்பிடம், இளமைக் கால நட்பு என எப்படிப் பார்த்தாலும் அவனது நட்பு பட்டியலில் இருந்தாலே கிரிக்கெட்டோடு தொடர்புடையவர்கள்தான்.

அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் கிரிக்கெட் விளையாட கிளம்பி விடுவார்கள். இல்லையென்றால் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை காண்பார்கள். ஆகையால் தனிமையை ஒருநாளும் உணர்ந்ததில்லை பார்த்திபன். அப்படியே தனிமையை உணர்ந்தாலும் அவன் அழைத்த நொடி ஓடி வர நண்பன் பிரபஞ்சன் இருந்தான்.

இப்போது வாழ்வில் முதன்முறையாகத் தனிமையை உணர்கிறான் அவன்.

நாள் முழுக்க அலுவலகம், வேலை என்று தன்னை அமிழ்த்திக் கொண்டாலும், இரவு வீடு வந்தால் வெறுமையும் அவனோடு சேர்ந்து வீடு நுழைகிறது.

அவனது அலுவலக நண்பனோடு அந்தச் சிறிய அபார்ட்மெண்ட்டை பகிர்ந்து கொள்கிறான்.

அங்குச் சென்ற ஆரம்ப நாள்களில் அந்த நாட்டுக்கும், வேலைக்கும் பழகவே அவனுக்கு நேரம் சரியாகப் போனது. முழுதாக இரண்டு வாரங்கள் கடந்த பிறகுதான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தான். அப்போதுதான் இந்தத் தனிமை தகராறும் சேர்ந்து கொண்டது.

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இரவு. ஆக நண்பர்களையும் அழைக்க முடியவில்லை. பெற்றோருக்கும் அவர்களைத் தொல்லை செய்யாத தோதான நேரம் கணித்தே அழைத்துப் பேச வேண்டியிருந்தது.

பிரபஞ்சன் பேசும் போதெல்லாம் அப்படியே திரும்பி இந்தியா செல்லும் எண்ணம் அவனுள் பேரலையாக எழும்.

அதென்னவோ பிரபஞ்சனிடம் பேசும் போதெல்லாம் அவனுக்குப் பார்கவியின் நினைவுதான் வரும். ஏன் என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவளின் நினைவு மட்டுமே நெஞ்சில் நின்ற நாள்கள் ஏராளம்.

அவன் திருமணம் செய்ய இருந்த பெண்ணையும் நினைத்திருக்கிறான்தான். அது அனுதாபத்தினால் மட்டுமே வந்த நினைவலைகள்.

“அந்தப் பொண்ணு நல்லா இருக்காங்களா பிரபா?” என்று நண்பனிடமே அவளைக் குறித்து விசாரிக்கச் சொல்லியிருந்தான். அவள் இப்போது வேறொருவன் மனைவி, அவளை மனத்தால் நினைப்பதும் தவறு என்று அவளின் நலனை மட்டுமே விரும்பி, அதைக் குறித்து அறிந்து கொண்டதும் ஒதுங்கி கொண்டான்.

அவளுடன் திருமணம் நிச்சயித்திருந்த காலத்தில் கூட அவளைக் குறித்து அவ்வளாக யோசித்ததில்லை அவன். அதற்காக அவளைப் பிடிக்கவில்லை என்று மனம் அறிய பொய் சொல்லவும் மாட்டான். அவளைப் பிடித்து, முக்கியமாக அவளின் பெயர் பிடித்துதான் அந்தத் திருமணத்திற்குச் சம்மதித்திருந்தான். அப்போதும் அவளின் பிடித்தங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தான். அவளின் ஆசைகள், அவளின் ஏக்கங்களை நிறைவேற்றி வைக்கவே விரும்பினான். அவளுடன் இருக்கும் பொழுதுகளில் ஒருநாளும் தன்னைக் குறித்துத் தன் மனம் குறித்து அவன் யோசித்ததேயில்லை.

ஆனால் பார்கவி அவனது பிடித்தமாகிப் போனாள்.

எத்தனையோ இரவுகளில் அவள் முகம் அவன் மனத்தில் அழியா ஓவியமாக ஒளிர்ந்து அவனது தூக்கத்தைத் தூர விரட்டியிருக்கிறது. பல வருடங்களாக அவன் கண் முன்னே, கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தவளை எப்படிக் கண்டு கொள்ளாமல் போனான் அவன்?

அவளுடன் கிரிக்கெட் ஆடியது, அவன் வண்டியை அவள் ஓட்டியது, அவன் கிரிக்கெட் ஆடும் போது அவள் ஆர்ப்பரித்தது என அவள் நினைவுகள் எப்போதும் அவன் மனத்தில் அலைமோதிக் கொண்டிருந்தது.

“மனமே மனமே தடுமாறும் மனமே, உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே…” அவளை நினைக்கும் போதெல்லாம் இசை மட்டுமே துணையாகி போனது.

இந்த உணர்வுகள் அவனுக்குப் புதிது. பார்கவியிடம் பழகிய நாள்களில் கூட இப்படி உணர்ந்ததில்லை அவன். அதற்கும் காரணம் இருந்ததுதானே.

எப்போதும் அவளை நினைக்கும் போது நெஞ்சை கீறும் குற்ற உணர்ச்சி இப்போது இல்லை. மாறாகக் குற்றவுணர்ச்சி இருந்த இடத்தில் காதலின் கால் தடம் பதிந்திருந்தது.

அவனைச் சுற்றிய பலரின் மகிழ்வை யோசித்தவனுக்கு, தன் மகிழ்ச்சியை யோசித்தால் பார்கவியின் முகம் மட்டுமே மனத்தில் தோன்றியது. காதலில் கொஞ்சம் சுயநலம் இருக்கலாம் தவறில்லைதானே?! அவளோடு கழித்த ஒவ்வொரு பொழுதுகளும் இப்போது அவனுக்குப் பொக்கிஷ பொழுதுகளாகிப் போனது. எப்படித் தவற விட்டான் அந்தத் தருணங்களை?! அதை நினைக்கையில் ஒரு பெருமூச்சு எழுந்தடங்கியது.

அந்த வெள்ளிக்கிழமை இரவு வீடு வந்தான், அவனோடு வெறுமையும் கூடவே வந்தது. இன்னும் பெரிதாக நண்பர்கள் இல்லை இங்கு. ஆகவே வீடு வந்ததும் நண்பனை அழைத்தான்.

“இன்னைக்கு எங்களுக்கு முக்கியமான மேட்ச் இருக்குடா பார்த்தி. நான் ஈவ்னிங் பேசுறேன்” என்று பிரபஞ்சன் சொல்லவும், சுள்ளென்று கோபம் வர கெட்ட வார்த்தையில் திட்டி விட்டான்.

“ஃப்ரெண்ட் நீயில்லன்னா என்னடா? எனக்கு, என் பார்கவி இருக்கா போடா” என்று கத்தி விட்டு அழைப்பை துண்டித்திருந்தான்.

இங்கே அவனுக்கு இன்னுமொரு பெரிய பிரச்சனை இந்த உணவு பிரச்சினைதான்.

“சாண்ட்விச்சா? அதெல்லாம் எப்போடா சோத்துப் பட்டியலில் சேர்த்தீங்க?” என்று அவன் நெஞ்சை பிடித்துப் புலம்பாத குறைதான். பிட்சா, பர்கர், சாண்ட்விச் எதுவும் பிடிக்கவில்லை அவனுக்கு.

அவனோடு இருக்கும் நண்பன் கிடைப்பதை உண்டு பழகி விட்டான்.

இவனுக்குத்தான் இன்னமும் உணவு என்றாலே வீட்டைத் தேடியது. சோறு இல்லாமல் எப்படி உண்டதாகச் சொல்லி கொள்கிறார்கள். அவனால் அது முடியாது.

அம்மாவிடம் கேட்டு கேட்டுச் சமைத்தான் ஒரு வாரம்.

“உனக்கு அங்க நல்ல சாப்பாடு கிடைக்கலையா பார்த்திபா?” என்று அவர் கவலை கொள்ளவும், இவன் அது தொடர்பாகப் பேசுவதை நிறுத்தி விட்டான்.

பிரபஞ்சனிடம் சொன்னது போல அவனுக்குத்தான் பார்கவி இருக்கிறாளே.

அதனால் மறுகணமே அவளை அழைத்திருந்தான்.

முன்பு அவளை மறுத்தது அவன். அவளின் நேசத்தை நிராகரித்ததும் அவன்.

ஆகவே இம்முறை எல்லாவற்றுக்குமான முயற்சியை அவன்தானே ஆரம்பிக்க வேண்டும்.

அவனது எதிர்பார்ப்பை பொய்த்துப் போகச் செய்யவில்லை அவள்.

அவனது அழைப்பை கோபமாக என்றாலும் ஏற்றிருந்தாள்.

காவேரி இப்போதெல்லாம் சனிக்கிழமை ஆனாலே வேண்டுதல், விரதம், கோவில் என்று கிளம்பி விடுகிறார். வேறு யார் பார்த்திபனின் அம்மாவை காணத்தான்.

இந்த வாரமும் அப்படித்தான் காலையில் விரைவாகவே சரளாவை வீடு வரச் சொல்லி வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு கோவிலுக்குக் கிளம்பி விட்டார்.

பார்கவி தூங்கிக் கொண்டிருக்க, அவளை எழுப்பி, “பாரு நேரத்துக்குச் சாப்பிடு என்ன?, அம்மா சீக்கிரம் வந்துடுவேன்” என்று சொல்லிச் சென்றார்.

“நானும் உங்களோட வர்றேன்ம்மா” என்று அவள் சொல்ல, “இல்லயில்ல நீ வீட்ல இரு” என்று வேகமாக மறுத்தார்.

“ஏம்மா, கோவிலுக்குதானே போறீங்க? எப்பவும் என்னை வம்படியா கூட்டிட்டு போவீங்க. இப்போ என்னன்னா வேணாம்ங்கறீங்க” என்று அவள் கண்ணைத் தேய்த்து கேட்க, “இது வேற வேண்டுதல் பாரும்மா. உன்னைக் கூட்டிட்டுப் போனா பலிக்காது” என்று தீவிரமாகச் சொன்னவரை சிரிப்புடன் முறைத்தாள் பார்கவி.

பெற்றோர் இல்லாமல் வீடே வெறிச்சென இருக்க, கணினியில் பழைய படத்தை ஓட விட்டு அவள் அமர்கையில் பார்த்திபன் அவளை அழைத்தான்.

அவனுக்குச் சிக்கன் குழம்பு செய்ய வேண்டுமாம்.

அந்தக் காணொளி அழைப்பு தவறிய அழைப்பாகப் போனது.

“பார்கவி பிளீஸ். உன் வீடியோ ஆஃப் பண்ணிக்கோ. நீ என்னைப் பார்த்தா போதும். பிளீஸ் அட்டென்ட் த கால்” என்று வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பினான் அவன்.

இவனது செய்திக்கு பின்னே இரட்டை அர்த்தம் இருப்பது போல அவளுக்குத்தான் தோன்றுகிறதா? அவளின் அலைபேசி அதிர்ந்து அவளின் சிந்தனையைக் கலைத்தது.

மீண்டும் காணொளி அழைப்பில் பார்த்திபன் வந்தான்.

இம்முறை அவனைத் தவிர்க்க மனமின்றி அழைப்பை ஏற்றிருந்தாள். அவன் முகம் மட்டும் திரையை நிறைக்க, அவள் பக்கம் அவளின் புகைப்படமே இருந்தது. அவனுக்கு ஏதோ ஒரு வகையில் அவள் முகம் காண்பதே போதுமானதாக இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top