“என்ன செய்யணும் சொல்லு பாரு” என்று கேட்டான். அவள் பதில் சொல்லும் முன் அவர்களின் பேச்சுக்கு பின்னணி இசை கோர்க்க இசையின் ராஜாவை இழுத்து வந்தான் அவன்.
“என்ன செய்யணும்னா? நீங்கதானே சிக்கன் குழம்பு எப்படிச் செய்யணும்னு சந்தேகம் கேட்டீங்க?”
“எஸ், கேட்டேன்தான். எனக்குத் தெரிஞ்ச அளவுல, தேவையான பொருள் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். சரியா இருக்கா பாரு” என்று திரையைச் சமையல் மேடை பக்கம் திருப்பினான்.
“இன்னைக்கு அங்க வெள்ளிக்கிழமைதானே?”
“ஆமா. அதுக்காகச் சாம்பார் வைக்கச் சொல்லிடாத தெய்வமே. ஏற்கெனவே நாக்கு செத்துப் போய்க் கிடக்கேன்” என்று புலம்பினான். அவள் சிரிப்புடன், “இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கணும் மிக்ஸி எடுங்க” என்றாள்.
“இங்க பாரு, பாரு. இது பேச்சுலர் வீடு. இங்க மிக்ஸி, கிரைண்டர்லாம் இருக்காது” என்றான் கோபம் போல.
“ஓ. சாரி. அப்போ வெங்காயம் வெட்டுங்க, இஞ்சி பூண்டு இடிச்சுச் சேர்த்துக்கலாம்” என்று ஓவ்வொன்றாக அவள் சொல்ல சொல்ல அவன் செய்து கொண்டே வந்தான்.
“நீங்களே நல்லாத்தானே செய்யுறீங்க?” அவனது நேர்த்தியும், லாகவமும் கண்டு அவள் கேட்டு விட, “பாரு, அது நான் சமைக்கிறத சாப்பிட்டு பார்த்துட்டு அதுக்கு அப்புறமா நீ இத சொல்லணும். சரியா?” என்று கேட்டான். அவன் விழிகள் திரையில் பதிந்து விலகும் போதெல்லாம் அவள் இதயம் தாளம் தப்பித் துடித்தது.
“இல்ல, பிரபா அண்ணா ரொம்ப நல்லா சமைப்பாங்க. அவங்க குக் பண்ணி நான் சாப்பிட்டுருக்கேன். அவங்க ஃப்ரெண்ட் நீங்க உங்களுக்குச் சமைக்கத் தெரியலைன்னா.. எனக்கு ஆச்சரியமா இருக்கு”
“இதுல ஆச்சரியப்பட என்ன பாரு இருக்கு? அவன் அவனோட காதல் மனைவிக்காகச் சமையல் கத்துக்கிட்டான். ஆனா அப்போ சமையல் கத்துக்க எனக்கென்ன அவசியம் வந்தது சொல்லு?” என்று வெங்காயத்தை வதக்குவதை நிறுத்தி, திரையில் ஒரு நொடி விழி பதித்துக் கேட்டான்.
“உங்களுக்கும் கத்துக்க வேண்டிய அவசியம் வந்ததுதானே?” என்று மறைமுகமாகப் பிரபாவதியை குறிப்பிட்டு கேட்டாள்.
“அவசியம் இல்லன்னு காலமே முடிவு பண்ணதுக்கு அப்புறம் அதைப் பத்தி என்ன பாரு பேச்சு? ம்ம்?” என்று கண்டிப்புடன் அவன் கேட்க, அவளுக்குத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டது தவறோ என்றாகி போனது.
“இல்ல, அப்பவே குக்கிங் கத்துட்டு இருந்தா இப்ப நீங்க கஷ்டப்படத் தேவையில்லல்ல? அதுக்குச் சொன்னேன்”
“சமையல் சரியான ஆள்கிட்ட இருந்து கத்துக்கணும்னு காத்திருந்தேன் போலப் பாரு.”
அவன் பேச்சில் இருந்த மறைப் பொருளை புரிந்து கொள்ளாமல், “எனக்கே ஒழுங்கா சமைக்கத் தெரியாது” என்றாள் வேகமாக.
“அப்படியா? சரி ஃபீல் பண்ணாத. நான் சமையல் கத்துட்டு வந்து உனக்குச் சமைச்சு.. சாரி சமைக்கத் சொல்லித் தர்றேன்” என்று முகத்தை நிமிர்த்தித் திரையைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் அவனது உதட்டோர குழியுடன் வசீகரித்தது அவன் முகம்.
அவன் தன்னைப் பார்க்க முடியாது என்று அவளுக்குத் தெரிந்தாலும் சட்டென்று அவனிடம் இருந்து பார்வையை விலக்கி கொண்டாள் அவள். அவன் கிட்டத்தட்ட சொல்ல வந்து சொல்லாமல் விட்டதன் பொருளும் அவளுக்குத் தெளிவாகவே விளங்கியது.
“அவ்ளோதான். குழம்பு நல்லா கொதிச்சு வத்தி வந்ததும் சிக்கன் வெந்துருச்சா பார்த்திட்டு அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டிக்கப் போனாள்.
“ஹே பாரு. வெயிட் பண்ணு” என்று கத்தினான்.
“என்ன?”
“ஒர்க் எப்படிப் போகுது? இந்தச் சிக்கன் குழம்பு ரெடியாகுற வரைக்கும் நீ என்கிட்ட பேசலாம் இல்ல?” என்று இரைஞ்சினான். ஒரு மௌன பெருமூச்சுடன் இறங்கி வந்தாள்.
“ஒர்க்? ம்ம், புது ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு. சோ எப்பவும் போலத்தான். உங்களுக்குத் தெரியாதா?”
“ம்ம், உங்க வீட்ல யாருமில்லையா? நீ மட்டும் தனியாவா இருக்க?” அவனையும் அறியாமல் அவன் குரலில் துளி பதட்டம் வந்திருந்தது.
“எஸ். அப்பா மண்டபம் போய் இருக்காங்க. அம்மா கோவிலுக்கு.. நான் இப்போ மண்டபம் போகணும்”
“போனை வச்சுத் தொலைடான்னு சொல்றியா பாரு”
“ச்சே ச்சே இல்லயில்ல” என்று அவள் பதற, அவன் வாய் விட்டுச் சிரித்திருந்தான். அவள் விழிகள் மீண்டும் அந்த உதட்டோர குழியில் போய் விழுந்தது.
மெல்ல விழி மூடித் திறந்து, “குழம்பை செக் பண்ணுங்க” என்றாள்.
“பண்ணிட்டா போச்சு” என்று சொல்லி கரண்டியில் குழம்பை எடுத்து ருசி பார்த்தான்.
“ஐயோ அம்மா.. ஷ்ஷ்ஷ்ஷப்ப்பா” என்று அவன் அலற, “என்னாச்சு பார்த்தி…” என்று பதறி கேட்டிருந்தாள். மறுகணம் தண்ணீரை எடுத்துத் தொண்டையில் சரித்திருந்தான்.
“என்ன ரொம்ப ஒரைக்குதா?”
“உச்சி மண்டைக்கு ஏறுற அளவுக்குக் காரம் கூடி போய்ருக்கு”
“அச்சோ. எப்படி? நான் சரியாதானே அளவு சொன்னேன்”
“சரி, விடு. இப்போ காரம் போக என்ன செய்யலாம்?”
“தேங்கா அரைச்சு ஊத்தினா ஒரப்பு கொறஞ்சுடும்” என்றாள்.
“தேங்காயா? நான் இப்போ அதுக்கு எங்க போக?” என்று அவன் புலம்ப, “சிக்கன் குழம்பு வைக்கத் திங்க்ஸ் எங்க வாங்கினீங்களோ, அங்கேயே போய் வாங்குங்க” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.
“ம்ம், அது பக்கத்துல ஏசியன் ஸ்டோர் இருக்கு. அங்க வாங்குனேன்”
“அங்க தேங்கா இல்லன்னா கூடத் தேங்கா பால், கிரீம் இப்படி ஏதாவது இருக்கும். வாங்கிட்டு வாங்க” என்றாள். அவளை இணைப்பில் வைத்துக் கொண்டே போய் வாங்கி வந்தான்.
அவள் சொன்னது போலவே தேங்காய் பால் சேர்த்ததும் காரம் குறைந்து குழம்பின் சுவை கூடி விட்டது.
பார்த்திபன் கண்ணை மூடி ரசித்து, ருசித்து, “எங்கம்மா சமையலையே மிஞ்சிடுச்சு போ. டேஸ்ட் சும்மா அள்ளுது” என்று குறுநகையுடன் சிலாகித்தான்.
“நீங்க செஞ்சதுதான், சோ என்ஜாய்” என்றாள்.
திரையில் இல்லாத அவளைக் குரல் வழியே தொட்டு, “ரெசிப்பி உன்னோடது பாரு” என்றான்.
“சரி, உங்களுக்கு ரொம்ப லேட்டாகிடுச்சு. நீங்க டின்னர் சாப்பிடுங்க. நான் வைக்கிறேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன், “ஹே பாரு” என்று கத்தினான்.
“என்ன?”
“நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..” என்று ஆழ்ந்த குரலில் முணுமுணுத்தான்.
அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.
“இந்தப் பாட்டு பாடுறத விட மாட்டீங்களா நீங்க? போய்ச் சாப்பிடுங்க போங்க” சிரிப்புடன் சொன்னாள்.
அவன் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை சத்தமாக முணுமுணுத்தான்.
“பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா?”
“என்னது?”
“பாடும் பாடல் அங்கே கேட்காதா?” என்று பாடினான்.
“அதெல்லாம் நல்லாவே கேட்குது. போய் வேலையைப் பாருங்க பார்த்திபன். எனக்கு வேலை இருக்கு” என்று நழுவப் பார்த்தாள். அவள் குரலில் இருந்த சிரிப்பை கண்டு கொண்டான் அவன்.
“என் பாடல் கேட்டா பதில் சொல்லணும் பாரு” என்றான் மந்தகாசப் புன்னகையுடன்.
“நீங்க அதுக்குக் கேள்வி கேட்கணும் பார்த்திபன். பாட கூடாது”
“கேள்விதானே பாரு. அதுக்கான நேரம் வரும் போது மறக்காம கேக்கறேன். ஓகே?” என்று மீண்டும் திரையைக் கூர்ந்து நோக்கினான்.
அவனால் தன்னைப் பார்க்க முடியாது என அவளுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவள் கன்னங்களில் குறுகுறுப்பு கூடிட, இதழ்கள் தாமாகப் புன்னகையில் பிரிவதை தடுக்க முடியாமல் தவித்தாள் அவள்.
“ஓகே. பை” என்று பேச்சை முடிக்கப் போனாள்.
“ஹே பாரு. பிளீஸ் பிளீஸ் வச்சுடாத” என்று கெஞ்சினான். அலைபேசி வழியே அவளின் அமைதி மட்டுமே அவனுக்குக் கடத்தப்பட்டது.
“எனக்கு நீ இன்னொரு ஹெல்ப் பண்ணணும் பாரு” என்றான்.
‘இல்லை, என்னால முடியாது’ என்று சொல்லவே விரும்பினாள். ஆனால் முடியவில்லை. இதுதான் அவள் பிரச்சனை. அவனிடம் இருந்து விலகி போக நினைத்தாலும் முடியாமல் ஏதோ ஓர் இழை இருவரையும் இணைத்துக் கொண்டேயிருக்கிறது.
மெல்லிய பெருமூச்சுடன், “என்னால முடிஞ்சா செய்யுறேன். சொல்லுங்க” என்றாள்.
“நான் ஊருக்கு கிளம்புறதுக்கு நாலு நாளைக்கு முன்னாடிதான் பிரியா ப்ரெக்னன்ட்ன்னு பிரபஞ்சன் என்கிட்ட சொன்னான். அந்நேரம் அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். பட் நான் இருந்த பரபரப்புல மறந்துட்டேன்.”
“ம்ம்..”
“இப்போ அவங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கறேன். ஆனா என்ன வாங்குறதுன்னு ஒரு ஐடியாவும் இல்ல”
“ஓகே..” என்று அவள் இழுக்க, “என்ன வாங்கிக் கொடுக்கலாம்னு நீயே சொல்லு பாரு” என்றான்.
“உங்க ஃப்ரெண்ட்டுக்கு நீங்க என்ன வாங்கிக் கொடுக்க ஆசைப்படுவீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?”
“ஹே நான் கேட்டது பிரியாக்கு வாங்கிக் கொடுக்க. என் ஃப்ரெண்ட்டுக்கும் பெரிய பங்கிருக்குன்னாலும்..” குறும்பு புன்னகையில் உதடுகள் வளைய அவன் சொல்லி முடிக்காமல் இழுக்க, “ஹலோ” என்றாள் கோபமாக.
“கூல் டவுன் பாரு” என்றான் சத்தமாகச் சிரித்து.
“நீ உன் ஃப்ரெண்ட்டுக்கு என்ன வாங்கிக் கொடுத்த?”
“வேற என்ன? பாதாம், பிஸ்தா, முந்திரி, அப்புறம் பழங்கள். அவளுக்குப் பிடிச்ச ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ்” என்று அடுக்கினாள்.
“ஓகே. அப்போ நானும் அதையே செய்றேன். நான் வாங்கிக் கொடுக்கறதை அப்படியே கொண்டு போய்ப் பிரியா வீட்ல கொடுத்துடுறியா?” என்று கேட்டான்.
“நானா?”
“அப்புறம் நானா? நீதானே அங்க இருக்க? நான் இதுக்காக அமெரிக்காவில் இருந்து வர முடியுமா?”
“விளையாடாதீங்க பார்த்திபன். நீங்க ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுங்க. அது நேரா பிரியா வீட்டுக்கே போயிடும்” என்றாள்.
“ஆன்லைன்லாம் பத்திரமா போய்ச் சேருமான்னு நம்ப முடியாது”
“அப்போ உங்க பிரெண்ட்டுக்கே பணம் அனுப்பி அவரையே வாங்கிக்கச் சொல்லுங்க” என்றதும் அவன் முறைத்து வைத்தான்.
சமையல் மேடையில் சாவகாசமாகச் சாய்ந்து நின்று அலைபேசி திரையைக் கூர்ந்து, “எனக்கு உன்னை விட்டா யாரு பாரு இருக்கா?” என்று அவன் உருக்கமாகக் கேட்க, ஒரு நொடி அதிர்ந்து அவனைப் பார்த்தவள் மறுநொடியே சிரித்து விட்டாள். அவளின் சிரிப்புச் சத்தம் கேட்டு அவனது உதடுகள் மென்முறுவலில் பிரிந்தன.
அவன் முகத்தில் இருந்து சிரமப்பட்டு விழிகளைப் பிரித்தாள் அவள்.
“அதுக்கெல்லாம் நிறைய ஆப் இருக்கு. உங்களுக்குத் தெரியாதா என்ன? வேணும்னா நான் நேம்ஸ் அனுப்பறேன். நீங்க ஆர்டர் பண்ணிடுங்க” என்றாள்.
“உன்னை மாதிரி அவங்க பொறுப்பா இருக்க மாட்டாங்க பாரு. பிளீஸ்” என்று கண்ணைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்டான்.
“நான் போய்ப் பிரியா வீட்ல உங்க பேர் சொல்லி கொடுக்கவா? அவ கேட்டா என்ன சொல்ல? இதெல்லாம் சரியா வராது. நீங்க வேற ஆளை பாருங்க” என்று திட்டவட்டமாக மறுத்தாள்.
“வேற ஆளை எதுக்குப் பார்க்கணும். எனக்குத்தான் நீ இருக்கியே” என்றான் ஆழ்ந்த குரலில். பார்கவி அவசர அவசரமாக ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்தாள்.
இவன் சொல்வதை எல்லாம் செய்தால் அவள்தான் சிக்கலில் மாட்டுவாள்.
பிரியதர்ஷினி, “பார்த்திபனின் பரிசை நீ எப்படிக் கொண்டு வந்தாய்?” என்று அவளிடம் கேட்டால், இவள் சிக்கி கொள்வாள்தானே? இல்லை, இது சரி வராது.
“பார்கவி பிளீஸ்” என்றான். பார்கவியோ பதிலே சொல்லவில்லை.
அவன் புன்னகையும் உதட்டோர குழியும், பேச்சும் அவளின் மனத்தைத் தொட்டாலும், அன்றைய மயக்கம் கலைந்து போனவளுக்கு இன்று கலக்கம் மட்டுமே வந்தது.
கலக்கம் இருக்கும் மனம் காதலை எங்கு நினைக்க?!