உச்சந்தலைகள் இரண்டும் ஒன்றாய் ஒட்டிப் பிறந்த இரட்டையரை நல்ல முறையில் பிரித்து மாதம் ஒன்றாகியிருக்க, இன்று, ஒன்றாய்த் தூக்கி வரப்பட்ட பிள்ளைகள் தனித் தனியே அவரவர் இருக்கையில்.
ஒருவனின் தனிப்பட்ட திறமையோ உழைப்போ இல்லை. நூறு கைதேர்ந்த மருத்துவர்களும் செவிலியரும் காட்டிய அன்பினாலும் அக்கறையினாலும் பிள்ளைகள் இருவருக்கும் புதுவாழ்வு புலர்ந்தது.
“சொன்ன மாதிரியே சாதிச்சுக் காட்டிட்டீங்க தம்பி! எப்போ… என்ன வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க தம்பி. என் உயிர் உள்ளவரை இந்த உதவிய மறக்க மாட்டேன்” என்று மத்திய மந்திரி பிரவீனைத் தழுவி, நெகிழ்ச்சியோடு கூறிச் சென்றார்.
பிரவீன் அமெரிக்கா வந்த வேலை முடிந்திருந்தது. இரண்டு வாரங்களில் இந்தியா கிளம்பி விடுவான். அவன் பக்க சாதக, பாதகம் மட்டுமே கருத்தில் கொண்டு, வந்த வேலை இரண்டையுமே பிழையின்றிக் கச்சிதமாக முடித்து விட்டான். கூடவே அம்பிகாவிடம் திருமணப் பேச்சை ஆரம்பிக்கவும் கூறியிருந்தான்.
எல்லா சனிக்கிழமை போல் இந்த சனிக்கிழமையும் விடிந்தது அலர்விழி-எபிக்கு. அடுக்களையில் நின்றிருந்தவள் பின்னால் சென்று எபி நிற்கவும், அவன் அணைப்பை எதிர்பார்க்க, அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், தோளில் ஆரம்பித்து கீழே இறங்கிய கைகள் இடையைச் சுற்றி வளைக்க, கட்டிக் கொண்டு நின்றான்.
வாகாய் மார்பில் சாய்ந்து கொண்டவள் தோள்பட்டையில் நாடி வைத்து, “என்ன டி பண்ற?” என்றான், வெட்டுப்படும் வெங்காயத்தைப் பார்த்துக் கொண்டே…
“ம்ம்ம்… அடுப்பங்கரையைக் கழுவி விட்டுட்டு இருக்கேன்… கேள்வியப் பாரு!” அவன் கையில் பட்டென்று வலிக்காத அடி ஒன்றை வைத்தாள்.
“என் செல்லம் டி நீ…” தோள் பட்டையில் இதழ் பதித்து, “ஹெல்ப் பண்றேனே…” என்றான் கொஞ்சலாய்.
“ம்ம்கும்! நேரத்துக்கு சாப்பிட்ட மாதிரி தான்! நீங்க ஹெல்ப் பண்ண நினைச்சா, என் லேப்டாப் எடுத்து நான் பாதியில விட்டத முடிச்சுக் கொடுங்க! புண்ணியமாப் போகும்!”
“என் அரும தெரியல உனக்கு! போகட்டும், பூரி போடும் போது கூப்பிடு, சுடச் சுட முழுங்க வரேன்” கூறியவன் அலர்விழியின் மடிக்கணினியோடு சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
எல்லையில்லா கொஞ்சல்களும், அடிதடியைத் தொடும் சண்டைகளும், சமாதானம் என்று சின்ன சின்னப் பரிசு பொருட்களுமாய் இருவரின் நாட்களும் சுவாரசியமாகவே நகர்ந்தது.
காலை உணவை முடிக்கவும் அம்மாவிடமிருந்து அலர்விழிக்கு அழைப்பு வந்தது. எபி இன்னுமே அலர்விழி மடிக்கணினியோடே நடுக் கூடத்தில் அமர்ந்திருக்க, அழைப்பு வந்ததுமே, கைப்பேசியோடு படுக்கையறை சென்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் சத்தம் எபியை வந்தடைந்தது. சத்தம் அதிகமாகவும், கதவைத் திறந்து கொண்டு படுக்கையறை சென்றான்.
கண்களில் நீரும் முகத்தில் இயலாமையோடு… கெஞ்சலும் கோபமுமாக கத்திக் கொண்டிருந்தாள், அவன் விழி! அடுத்த இரண்டு நிமிடங்களில் அழைப்பு துண்டிக்கப் பட்டிருக்க, செய்வதறியாது நின்றிருந்தாள் பெண்.
“விழி?” என்றவனைப் பார்த்தாள். பதிலில்லை அவளிடம். ‘உன் மேல நம்பிக்கை வச்சு, உன் ஆசைக்கெல்லாம் மதிப்பு கொடுத்த உன் பெத்தவங்க உனக்கு முக்கியம்னா… அந்த இடத்தையும் அவனையும் தலை முழுகிட்டு வா. இல்ல, எங்களைத் தலை முழுக வேண்டி இருக்கும்’ அம்மா கூறியது எதிரொலித்தது.
‘உனக்கு, ஊனமா பிறந்த உன் தங்கை பத்தி நினைப்பிருந்தா… இந்தக் காரியம் செய்வியா? இவ்வளவு சுயநலவாதியையா அன்பெல்லாம் கொட்டி வளர்த்தோம்?’
தான் சுயநலம் பிடித்தவள் தானோ? அக்காவாய், மகளாய் தவறி விட்டேனோ? அம்மா அவள் தலையில் ஏற்றி நிறுத்திய பாரம் அழுத்தியது.
“என்ன டி பட்டு?” கட்டிலில் அமர்ந்திருந்தவள் நாடி பிடித்து முகம் தூக்கியவனைப் பார்த்தாள். “என்ன விழி… ஏன் ஒரு மாதிரி இருக்க? அம்மா கூட சண்டையா? நம்ம அம்மா தானே, எல்லாம் சரி ஆகிடும். வருத்தப்படாத”
என்னவென்றே தெரியாமல் தலை வருடி நின்றவனை இடையோடு கட்டிக் கொண்டவளுக்குப் பேச்சு வரவில்லை. அழுகை வெடித்தது. “என்ன விழி… சொன்னா தானே தெரியும்?” தலையை வருடி விட… அழுகை அதிகமே ஆனது. “அழாத டி. முதல்ல எழுந்திரி,” கை பிடித்து எழுப்பியவன் முகத்தைப் பார்த்தாள். ‘இவன் இல்லாத ஒரு வாழ்வா?’
மனோ இல்லாத ஒரு வாழ்வை நினைக்க முடியவில்லை. “நீங்க இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன் மனோ…” நெஞ்சில் முகம் புதைத்துக் கதற மட்டும் தான் முடிந்தது பெண்ணால்.
தன்னிலிருந்து அவளைப் பிரித்து, கண்ணீர் துடைத்து, “நான் எங்க போகப் போறேன் உன்ன விட்டுட்டு? இங்க தான் உன் கூடவே இருக்கேன். வீட்டுல விஷயத்தை சொல்லிட்டியா? ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாங்களா? அதுக்குத்தான் இந்த அழுகையா? இவ்வளவு தான் உன் தைரியமா விழி? இத நாம எதிர்பார்த்தது தான?” என்று முகம் பார்த்து நின்றவனிடம்,
“என்ன டி? அசால்ட்டா சொல்ற? நம்மள பெத்தவங்களுக்கு கொடுக்கிற மரியாதையா இது? ஒருத்தரை விரும்பறது தப்பில்ல விழி. அதுக்காக வீட்டுக்குத் தெரியாம எல்லாம்… என்ன விழி? உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லற என் மேலயாது நம்பிக்கை வை. பேசுவோம்… போராடுவோம்… முடியாதுன்னு சாதிச்சா அப்போ கல்யாணம் பண்ணுவோம்!
சினிமால பார்க்குற மாதிரி கோவில்ல வச்சு கட்டுற தாலியோ, சர்ச்சுல வச்சு போடற மோதிரம் எல்லாம் சட்டபடி செல்லாது விழி. நம்மளது ஸ்பெஷல் மேரேஜ்! கண்டிப்பா ஒரு மாசம் நோட்டீஸ் கொடுத்து, ரெஜிஸ்டர் பண்ணனும். ஒண்ணு இங்க இல்ல அங்க”
அவன் தீர்மானமாய் இருந்தான், பேசி இரண்டு குடும்ப சம்மதமும் வாங்கி விடலாம் என்று! அவன் கனவு, விழித்ததும் மறந்துவிடும் பகல் கனவு என்று அம்மாவிடம் பேசிய பெண்ணிற்குப் புரிந்தது.
“போகறதுக்கு ஒரு மாசம் முன்ன நோட்டீஸ் கொடுக்க அரேஞ்ச் பண்றேன். வீட்டுல பேசுவோம். எல்லாம் ஒத்துப்பாங்க! பெத்தவங்க முன்னால நம்ம கல்யாணம் நல்ல படியா நடக்கும் விழி! எதுவுமே ஒத்து வராட்டி, திரும்ப வரதுக்கு முன்ன ரெஜிஸ்டர் பண்ணிப்போம்”
வீட்டை நினைத்து பயமாக இருந்தாலும் அதுவே சரி என்று பட அதற்கு மேல் அவளும் அலட்டிக் கொள்ளவில்லை. நினைத்தது போல் உடனே ஒரு மாத விடுப்பு பெண்ணிற்கு கிடைக்கவில்லை! “மேஜர் ரிலீஸ் இருக்கு மா. அது முடிஞ்சதும் ஒரு மாசம் இருக்கற மாதிரி வரேன். வேலைய இப்போ விட முடியாது மா, ரெண்டு வாரம் லீவ், ரெண்டு வாரம் வீட்டுல இருந்து வேல பார்க்கற மாதிரி வரேன்,” என்று கூறி வைத்தாள்.
எந்த மாற்றமும் இல்லாமல் அடுத்த இரண்டு வாரங்கள் சென்றது. அலர்விழி எதிர்பார்த்தது போல் அவளைப் பெற்றவர்கள், அவள் காதலைப் புரிந்து கொள்வதற்கான அறிகுறி இல்லாமற்போனது. பேசினாலே வீட்டில் சண்டை என்ற நிலை. அவள் ஆசை நிராகரிக்கப் பட்டது. சத்தம் எடுபடவில்லை. கண்ணீர் ஒருவரையும் இளக வைக்கவில்லை. இவள் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் அப்பாவும் கூட அம்மா கட்சிக்கு மாறியிருக்க, பெண் தனித்துப் போனாள். பாட்டியின் வயதும் பலகீனமும் அவரை படுக்கையிலேயே வைத்திருக்க, அவளுக்காக பேச ஆள் இல்லாமல் போனது!
வீட்டு சம்மதத்தோடு திருமணம் சாத்தியம் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆனது! மனோவோடு முகம் கொடுத்துப் பேசி இருவாரங்கள் ஆகியிருக்க, “என்னைப் பெத்தவங்களும் என் மனச புரிஞ்சுக்கல, நீங்களும் என் பயத்த புரிஞ்சுக்கல! உங்க யார் கிட்டயும் பேசிப் புரிய வைக்க எனக்கும் தெரியல. கடைசில நீங்க யாரும் வேண்டாம்ன்னு எங்கேயாது கண்காணா பரதேசத்துக்கு கிளம்பப் போறேன்!” என்றவள் அதற்கு மேல் எபியோடு திருமணம் பற்றிப் பேசவில்லை. நேரில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று அவனும் விட்டு விட்டான்.
வியாழன் அல்லது செவ்வாய்க் கிழமை அரசு விடுமுறை வரும் வேளைகளில், இடையில் இருக்கும் வெள்ளி / திங்கட் கிழமையையும் சேர்த்து நான்கு நாள் விடுப்பு கொடுத்து விடுவர். இம்முறை வியாழன் விடுமுறை வரவே, நான்கு நாட்கள் விடுப்பைக் கொண்டாடலாம்.
வேலைக்கென்று சில வருடங்கள் வெளி தேசங்களுக்குப் போகும் இந்தியர்களுக்கு அங்கிருக்கும் தோழர்களே குடும்பம் ஆகி விடுவர். இப்படி விடுப்பு கிடைக்கும் வேளைகளில் குடும்பமாய் இல்லாத இளவட்டங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டில் ஒன்றோ இரண்டோ தினங்கள் தங்கிச் செல்வதெல்லாம் அங்கு வழமை!
இதுவும் அது போல் ஒரு வாரம் என்பதாலும், எபி-அலர்விழி, இந்தியா செல்லவிருப்பதாலும், மார்க், ஆட்ரே, இலக்கியா, பாயல் என்று அவர்கள் நெருங்கிய வட்டத்தை அலர்விழியின் இருப்பிடத்திற்கு அழைத்திருந்தனர்.
மார்க்-ஆட்ரே எபியின் அறையிலும், எபி, அலர்விழியின் அறையிலும், பாயலோடு, இலக்கியாவும் அலர்விழியும் தங்கிக் கொள்வதாக இருந்தது. இம்முறை புது விருந்தாளியாய் பிரவீனும் வருகை தர இருக்க, ஆட்ரே பெண்களோடும், மார்க் சோஃபாவிற்கும் இடம் பெயர வேண்டிய நிலை!
“சனிக்கிழம நைட் ஃப்ளைட் அலர்விழி. ஊருக்கு போகறதுக்கு முன்ன உங்கிட்ட கொஞ்சம் பேசணும். எங்க மீட் பண்ணலாம்” என்று பிரவீன் கேட்க, “ஃபிரீனா வீட்டுக்கு வாங்க டாக், கெட்-டுகெதர் இருக்கு. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணு இல்ல ரெண்டு நாள் தங்கிட்டுப் போவாங்க! நீங்களும் ஒரு நாள் தங்கிட்டு இங்க இருந்தே ஊருக்குக் கிளம்புங்களேன்” என்று அழைத்தாள்.
அதையே புதன் இரவு வீட்டிற்கு வந்த மனோவிடம் கூற, எதிர்பார்த்ததற்கு மாறாக, “வரட்டுமே. அவருக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்” என்று விட்டான்.
“என்ன மனோ? நீங்களா சொல்றீங்க?”
“ஹ ஹ! என்ன டி! அவர் கூட நீ வீக்-எண்ட் வெளியில போறதனால உன் கூட என்னால இருக்க முடியலன்னு கடுப்பு வரும். மத்தபடி அவர் மேல எனக்கு என்ன விரோதம்?
மோர் ஓவர், நம்ம நகு வாழ்க்கைப்படப் போற வீட்டுப் பையன்! பிடிச்சாலும் பிடிக்காட்டாலும், அவர் நம்ம நெருங்கின சொந்தம், ஒத்துப் போக கத்துக்க வேண்டாமா? சொல்றதுக்கில்ல, நேர்ல பார்த்துப் பேசினா பிடிச்சுப் போய் நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆனாலும் ஆகிடலாம்!” அதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றது மறுநாள் பிரவீன், எபியைப் பார்த்த பார்வை!