அவர்கள் வெளியே சென்ற சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி, ராதா இருவரையும் அவர்களின் வீட்டில் இறக்கி விட்டு வீடு திரும்பினார் காவேரி.
மகள் அவருக்காகப் பொறுப்பாகச் சமைத்து வைத்திருப்பதைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை பரவியது.
அன்பும் பாசமுமான மகள். அவரால் அவளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்ற வருத்தம் அவர் மனத்தைப் பாரமாய் அழுத்தியது.
கணவருக்கு அழைத்துத் தான் வீடு வந்து விட்டதைத் தெரியப்படுத்தினார்.
சரளாவை வரச் சொல்லியிருந்தார். அவர் வந்த உடனேயே, “மதிய சமையல பாரும்மா செஞ்சுருச்சு. நீங்க மேல் வேலையெல்லாம் செஞ்சிட்டு சும்மா எதுக்கும்மா என்னைய கூப்பிட்டீங்க?” என்று சடைத்துக் கொண்டார். அவரை அமர்த்தி உலகக் கதை பேசி, தன் கவலைகளைச் சிறியதாக்கி கொண்டார் அவர்.
மாலை வீடு திரும்பிய பார்கவியின் முகம் நன்றாகத் தெளிந்திருந்தது.
இரவு உணவுக்குப் பின் எப்போதும் போல அப்பாவுடன் நடை பயின்றாள். எதிர்புறத்தில் இருந்து பிரபஞ்சனும் பிரியதர்ஷினியும் நடந்து வர, அவர்களை நோக்கிச் சென்றாள் பார்கவி.
பிரபஞ்சனின் கண்கள் அவளை ஆராய்ச்சியுடன் நோக்கின.
“அப்புறம் பார்கவி, என்ன ஸ்பெஷல்?” என்று கேட்டான்.
“என்ன ஸ்பெஷல்ன்னா? எதைக் கேட்கறீங்கண்ணா?” என்று அவள் புருவங்களைச் சுருங்க, “டின்னரா கேட்கறீங்க?” என்று கேட்டாள் பிரியதர்ஷினி. பிரபஞ்சன் திரும்பி தன் பிரியத்தை முறைத்தான்.
“லைஃபை கேட்டேன்ம்மா” என்று அவன் சொல்ல, “லைஃபா? அது பாட்டுக்கு போகுதுண்ணா..” என்று சாதாரணமாகச் சொன்னாள்.
‘பார்த்திபா உன் பாடு திண்டாட்டம்தான் டா’ என்று நண்பனுக்காக மனத்தில் புலம்பி வருந்தினான் அவன்.
ரங்கராஜன் தனியாக நடப்பதை கண்டதும் வேகமாக வீட்டுக்குள்ளிருந்து வந்து அவரோடு இணைந்து கொண்டார் காவேரி.
“என்ன காவேரி, நீ போன காரியம் என்னாச்சு?”
“எங்க உங்களைத் தனியா பிடிக்க முடியாம போய்டுமோன்னு பார்த்து பார்த்திட்டு வீட்டுக்குள்ள சுத்திட்டு இருக்கேன் நானு. உங்க மக வீட்ல இருந்தா இன்னும் நாலு வயசு குழந்த மாதிரி உங்களை வால் பிடிச்சுட்டே சுத்துறா” என்று அலுத்துக் கொண்டார்.
“சரி, சரி. என் பொண்ணைப் பார்த்து புகையாம என்னான்னு சொல்லு” என்றார்.
“அதையேன் கேட்கறீங்க.. நா ஒன்னு நினைச்சிட்டு அங்க போனா, அவங்க என் தலையில குண்ட தூக்கி போட்டு அனுப்பிட்டாங்க” என்றார் கண்கள் கலங்க.
“ப்ச், காவேரி. என்ன நடந்ததுன்னு சொல்லு முதல்ல” என்று அதட்டினார்.
“அவங்க மகனுக்கு அவங்க சாதியில பொண்ணு பார்க்கறாங்களாம். வெளில இருந்து பொண்ணு எடுக்கற எண்ணமே இல்லையாம். அவங்க வீட்டுக்காரர் சாதியில கூடப் பார்க்கலயாம்”
“சரி. அதுக்கா இப்படி ஆர்ப்பாட்டம் பண்ண? அதெல்லாம் நாம பேசி சம்மதிக்க வச்சுடலாம்” என்றார் அலட்டிக் கொள்ளாமல்.
“அட யாருங்க நீங்க.. கூறு இல்லாம பேசிட்டு..”
“காவேரி..” என்று கண்டிப்புடன் அழைத்தார்.
“நா பேசுறத பேசாம கேளுங்க நீங்க” என்று பதிலுக்கு அதட்டினார்.
பார்த்திபனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் குடும்பம் சத்யபாமாவை தரக் குறைவாகப் பேசியது, நடத்தியது அவரை மிகவும் காயப்படுத்திருந்தது.
“என் முன்னால உட்கார கூட உனக்குத் தகுதியில்லை” என்று பெண்ணின் தகப்பன் சொன்னது அவர் மனத்தை ஆழமாய்த் தாக்கியிருந்தது.
“காலத்துக்கும் அவங்க எங்களைக் கீழா நினைச்சு.. அப்படித்தான் நடத்தியிருந்திருப்பாங்க இல்ல? எங்க பையனும் எங்களுக்காகப் பொறுத்து போயிருந்துருப்பான். அவர் பேசினது இப்ப நினைச்சாலும் எனக்கு மனசு கூசி போகுது” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கண்கள் கலங்க சொல்லியிருந்தார் சத்யபாமா.
அவர் பெண்ணை அவரின் தூரத்துச் சொந்தத்தில் மணமுடித்துக் கொடுத்ததால் இந்தப் பிரச்சனை எல்லாம் எழவில்லை.
மேலும் மணப் பெண்ணின் வீட்டார்தான் பார்த்திபனை விரும்பி கேட்டு வந்தது.
ஆனால் அவர்களின் வசதியை குறைத்து தரக் குறைவாகப் பேசியது, தனிக் குடித்தனம் பற்றிப் பேசியது, வரதட்சணை கேட்டதாக உன் மேல் வழக்கு பதிவேன் என்று பெண்ணின் தகப்பன் போலீஸ்காரர் மிரட்டியது, மகனின் வெளிநாடு செல்லும் ஆசையை எதிர்த்தது என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் அவர்களிடம் மனம் திறந்து பகிர்ந்திருந்தார்.
“எப்பவும் நாம பொண்ணு எடுக்கிற வீடு நமக்குக் கீழ இருக்கணும். அப்போதான் நமக்கு மரியாதைன்னு என் மாமியா சொல்லும். அது சொன்னது சரியா போச்சு” என்று அவர் சொன்னதைச் சொல்லும் போதே கலங்கினார் காவேரி.
“அவங்க சாதியில, அவங்க சொந்தத்தில, அவங்கள விட வசதியில குறைஞ்சவங்களத்தான் பார்க்கறாங்களாம்.”
“அவ்ளோதானே?”
“என்ன அவ்ளோதானேன்னு அசால்ட்டா கேக்கறீங்க? நம்ம பொண்ணு வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா போச்சா? அவ ஆசைப்பட்ட பையன். ஏற்கெனவே ஒரு முறை தட்டி போச்சு. அவ ஆசைப்படி இப்போ அவனுக்கே கட்டி வைக்கலாம்னா அந்தம்மா ஆயிரம் கண்டிஷன் போடுது. அவங்க சொல்ற எல்லாமே நம்ம பொண்ணுக்கு எதிரா இருக்குது” என்று புலம்பினார்.
“அவங்க கண்டிசன் போட்டா என்ன? நீ பேசி பார்க்கலையா?”
“அதெல்லாம் நான் நல்லாத்தான் பேசினேன். நான் என்ன சொன்னாலும் பதிலுக்கு அவங்க இது பண்ணாங்க, அது பண்ணாங்கன்னு அவங்க சொல்லும் போது என்னால மேற்கொண்டு பேசவே முடியலங்க. நமக்கும் அவங்களைப் போல ஒரு மோசமான அனுபவம் இருக்குல்ல? எனக்கு அவங்க நிலைமை புரிஞ்சது. அதான் ஓரளவுக்கு மேல நானும் பேச முடியாம விட்டுட்டேன்”
“அவங்ககிட்ட நம்ம தர்ஷினி அம்மா பேசினாங்க. என் பொண்ணுக்கு நாங்க ஜாதி, வசதி எல்லாம் பார்க்கலயேன்னு அவங்க கேட்டா.. உங்க மருமகன் பதினஞ்சு வருஷமா உங்க மகள லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காரு. எனக்குத் தெரியாதா, நீங்க அதையும் இதையும் ஒப்பிட்டு பேசாதீங்கன்னு மூஞ்சில அடிச்சா போலச் சொல்லிட்டாங்க” என்றார். அவர் முகம் வருத்தத்தில் வாடி விட்டது.
“அவங்க இடத்துல நாம இருந்தாலும் அப்படித்தானே யோசிப்போம் காவேரி” என்றவர், மகள் இன்று அழுகையுடன் நின்றதை மனைவியிடம் பகிரவில்லை.
“எனக்குப் பார்த்திபன்தான் நம்ம மருமகனா வரணும்னு மனசு கிடந்து அடிச்சுக்குதுங்க. நீங்க ஏதாவது செய்ங்களேன்” என்று நடந்து கொண்டே அவரின் கையைப் பிடித்தார்.
“காவேரி, எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடி வரணும்மா.”
“அப்படியெல்லாம் என்னால பொறுமையா காத்துட்டு இருக்க முடியாதுங்க. இன்னொரு முறை நம்ம பொண்ண யாரோ எவனோ நமக்குத் தெரியாத ஒருத்தன் முன்னால என்னால கொண்டு போய் நிறுத்த முடியாது. இனிமே எவனையும் என்னால மனசார நம்ப முடியாது. அவன் நம்ம பொண்ணை என்ன பண்ணுவானோன்னு தினம் தினம் பயந்து சாக எனக்குத் தெம்பில்லங்க” தெருவில் இருப்பதை மறந்து கணவரின் மேல் சாய்ந்து கதறினார்.
“ஷ்ஷ்ஷ் காவேரி” என்று அவரை அரவணைத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் அவர்.
“பார்த்திபன் நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்த பையன்ங்க. நாம வேணும்னா அவனைப் பத்தி நல்லா விசாரிக்கலாம். என்ன சொல்றீங்க? நம்ம பொண்ணு ஆசைபட்டவன் நல்லவனாதான் இருப்பான்ங்க. அவளுக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுட்டா போதுங்க எனக்கு” என்று கண் கலங்கினார்.
“அன்னைக்கு நம்ம பொண்ணுக்காக அம்புட்டு துடிச்சாப்ல அந்தத் தம்பி. அவர் மனசுல என்னா இருக்குன்னு யாருக்குத் தெரியும். நீங்க பேசி பார்க்கலாம் இல்ல?”
“நீ புரியாம பேசுற காவேரி. நாம புள்ளைங்களுக்குக் கொஞ்சம் டைம் கொடுப்போம்.” என்றார்.
“நம்மைக் கைய மீறி எதுவும் நடக்காது. என்னை நம்பு” என்று அவர் உறுதியாகச் சொல்லவும்தான் அமைதியானார் காவேரி.
அன்றிரவு அழுகையுடன் உறங்கியவர் மறுநாள் சற்று தெளிந்து விட்டார்.
மறுவாரமும் தவறாமல் சத்யபாமாவை சந்திக்க, அவர் வாரா வாரம் செல்லும் கோவிலுக்கு இவரும் சென்றிருந்தார்.
பார்கவிக்கு அன்றிரவே குறிஞ்செய்தி அனுப்பியிருந்தான் பார்த்திபன். ஒற்றை வரியில் பதில் அனுப்பி அதன் பிறகு அவனைத் தவிர்த்திருந்தாள் அவள்.
ஆனால் விடாமல் மறுவாரமும் பேச்சை தொடர்ந்தான் அவன்.
“பார்த்திபன் என்ன வேணும் உங்களுக்கு?” சனிக்கிழமை காலையில் கடுமையான தொனியில் கேட்டு விட்டிருந்தாள்.
“சிக்கன் குழம்பு வேணும். அதுவும் எங்கம்மா செய்யுறது போல. கிடைக்குமா?” என்று பாவமாக முகத்தை வைத்திருக்கும் ஸ்மைலியை அனுப்பிக் கேட்டிருந்தான்.
“உங்கம்மாவை கேட்டு நீங்க செஞ்சு சாப்பிட வேண்டியதுதானே?”
“அதெல்லாம் செய்யாம இருப்பேனா? அம்மா சொன்ன மாதிரிதான் செஞ்சேன். ஆனா வாய்ல வைக்க வெளங்கல” என்று வாந்தி எடுக்கும் ஸ்மைலி போட்டு அனுப்பியிருந்தான். கூடவே அவன் செய்த சிக்கன் குழம்பு புகைப்படமும் இருந்தது.
அதைப் பார்க்கவே சுமாரா இருக்கிறது என்று அவள் சொல்ல, “சுவை சுத்த மோசம்” என்று பதில் அனுப்பினான்.
“டிரை திஸ் ரெசிபி” என்று யூடியூப் லிங்க் எடுத்து அனுப்பினாள். அவன் கடுப்பாகி விட்டான்.
“இத அஞ்சு நிமிஷத்துல செஞ்சுடலாம்னு சொல்றானுங்க. ஆனா எனக்கு வெங்காயம் உரிச்சு அத வெட்டவே ஆறு நிமிஷம் ஆகுது. இந்த லட்சணத்துல இவனுங்க ரெசிபிய ஃபாலோ பண்ணி.. நான் சமைச்சு.. சாப்பிட்ட மாதிரிதான்” என்று அவன் சலிக்க, அவளுக்குப் பாவமாகி போனது.
“ஓகே. நான் ரெசிபி சொல்றேன். ஆனா இது எங்கம்மா ரெசிபி” என்றாள்.
“அது போதும் பாரு” என்று இதயம் சுமந்த ஸ்மைலிகளை அனுப்பியவன், அடுத்த நிமிடம் அவளை அழைத்து விட்டான்.
அவன் அழைப்பை ஏற்பதா, தவிர்ப்பதா என்ற குழப்பம் அவளைக் குழப்பியது. குறுஞ்செய்தியாகச் செய்முறையை அனுப்ப நினைத்திருந்தாள். ஆனால் அவனோ காணொளி அழைப்பில் வந்திருந்தான்.
“உனக்கும் எனக்கும்
இடையில்
கூப்பிடும் தூரம்தான்
அழைக்கத் தெரியாமல்
விட்டு வைத்தேன்
அந்தக் குரல் தொடும் தூரத்தை” அவளுக்கு அந்நேரம் அவன் சொன்ன பழநி பாரதியின் கவிதை நினைவில் வந்தது.
அந்தத் தூரத்தை கடக்கும் துணிவு அவளிடம் இல்லை. என்ன செய்ய?!