என் ஜீவனில் உறைந்திடு – 25 (1)

ரோஜா அழைப்பை ஏற்பதற்குள் முழுதாக அடித்து ஓய்ந்திருந்தது அலைபேசி.

அவர்கள் கண்ணசந்து பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் மாமியாரிடம் இருந்து அழைப்பு வர, அப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்த ரோஜா, பதறி போர்வையை எடுத்துப் போர்த்தி அலைபேசியை எடுக்க, அவளின் செய்கையைப் பாதித் திறந்த கண்களின் வழியே பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் இளமாறன்.

“சிரிக்காதீங்க இளா” என்று கத்தியவளின் தூக்கம் இப்போது காணாமல் போயிருந்தது.

“அம்மா நகை கடைக்கு மூனு மணிக்கு மேல தானே போகணும்னு சொன்னாங்க. இன்னும் டைம் இருக்குல்ல இளா? அதுக்குள்ள அத்தை ஏன் கால் பண்றாங்க?” அவளின் கேள்வியை அலட்சியம் செய்து, அவளை அணைத்துக் கண்களை மூடி தூங்கப் போனான் இளமாறன்.

“இளா, தூங்காதீங்க. எழுந்திருங்க, கடைக்குப் போகணும். நீங்க போய்க் குளிங்க. நான் அதுக்குள்ள அத்தைக்கிட்ட பேசிடுறேன்‌.” அவன் தோளை பிடித்து உலுக்கினாள். அவனோ கண்களைத் திறக்கவேயில்லை.

ரோஜா அத்தையை அலைபேசியில் அழைத்தாள்.

“ஹாய் அத்த, சாரி உங்க காலை மிஸ் பண்ணிட்டேன். சொல்லுங்கத்த”

“இட்ஸ் ஓகே ரோஜா. நாம கடைக்குப் போறதை பத்தி கேட்கதான் கூப்பிட்டேன். மாறன் வீட்டுக்கு வந்தாச்சா?”

“வந்துட்டார், அத்த”

“ஓகே. நான் உங்கம்மாவை உங்க வீட்டுக்குப் போய்ப் பிக் அப் பண்ணப் போறேன். நீங்களும் எங்க கூடவே வந்துடுறீங்களா?” சுகந்தி கேட்க, ரோஜா திரும்பி உறங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள்.

தாங்கள் கிளம்ப நேரமெடுக்கும் என்பதை உணர்ந்தவளாய், “இல்லத்த, நாங்க நேரா கடைக்கு வந்திடுறோம்” என்றாள்.

“அம்மாவையும் நானே பிக் அப் பண்ணிடுறேன்த்த. உங்களுக்கு ஏன் அலைச்சல்?” என்று அவள் சொல்லவும் சிரித்தார் சுகந்தி.

“எனக்கு அது வர்ற வழி தானே ரோஜா? அலைச்சல் எல்லாம் ஒன்னும் இல்ல. சரியா? அப்போ நான் உங்களைக் கடையில் பார்க்கறேன்” என்று சுகந்தி பேசி விட்டு வைக்க, ரோஜா கணவனை எழுப்பி விட்டு, தானும் எழுந்து தயாரானாள்.

இருவரும் ஒரு மணி நேரம் கழித்து நகைக் கடையில் இருந்தார்கள்.

சித்ரா மகளைப் பார்த்ததும் அவளிடம் வந்து விட்டார். தனியாக நின்ற சுகந்தி சாலையை வெறிக்க, ரோஜா அவரிடம் சென்றாள்.

“மாமா வரலையாத்த?”

“இல்ல ரோஜா. இதெல்லாம் லேடீஸ் வேலைன்னு சொல்லிட்டார். வெண்பா வரேன்னு சொன்னா, அதான் பார்க்கறேன். அவ இப்போ வந்துடுவா, அவ வந்ததும் நாம உள்ள போகலாம்” சுகந்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆட்டோவில் வந்து இறங்கினாள் வெண்பா.

பயிற்சி மருத்துவராக வேலை முடித்து நேராக அங்கு வந்தவளின் முகத்தில் சென்னையின் தூசோடு சேர்ந்து சோர்வும் அப்பிக் கிடந்தது.

“ஹாய்” என்றாள், அங்கிருந்த அனைவரையும் பொதுவாகப் பார்த்து.

“நல்லா இருக்கியாம்மா வெண்பா?” என்ற சித்ரா அவளிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினார்.

“நல்லா இருக்கேன்த்த. ரொம்பத் தேங்க்ஸ்” என்று புன்னகையுடன் வாங்கி அவசரமாகத் தண்ணீரை தொண்டைக்குக் கொடுத்தாள். இளமாறன் அமைதியாக ரோஜாவிற்கு நெருக்கமாக நின்றிருந்தான். தங்கையைப் பார்த்ததும் புன்னகைத்தான்.

“மாறா, போகலாம்” சுகந்தி சொல்லவும், கடைக்குள் நுழைந்தார்கள்.

எந்தப் பகுதி எனக் கேட்டு அவர்கள் செல்வதற்கு முன் சித்ரா மற்றும் வெண்பா அங்கிருந்தார்கள்.

“அத்த, அந்தச் செயின் நல்லாருக்குல்ல?” என்று சித்ராவிடம் சொன்ன வெண்பா, “அண்ணா அதை எடுங்க” என்றாள்.

அவள் கேட்டதை எடுத்து அவர்களின் முன் பரப்பி வைத்து, “இது ஏழு பவுன் மேடம்.” என்றார் விற்பனை பிரதிநிதி.

அதைக் கையில் ஏந்திப் பார்த்து, “ம்ம். நல்லாருக்கு, ஏழே வாங்கிக்கறோம். டிசைன் மட்டும் வேற காமிங்க. இது ரொம்ப உருட்டையா இருக்கு” என்ற சித்ராவை சுகந்தி அதிர்ந்துப் பார்த்தார்.

“அம்மா ஏழு பவுனா?” ரோஜாவும் திடுக்கிட்டு கேட்டாள். அவளை ஓரக் கண்ணால் முறைத்தார் சித்ரா. அந்தப் பார்வையில் ‘இதெல்லாம் உனக்குத் தெரியாது, பேசாத’ என்ற எச்சரிக்கை இருக்க, வாய் மூடிக் கொண்டாள் ரோஜா.

“என்ன ரோஜா?” இளமாறன் அவளிடம் கேட்க, “ஏழு பவுன்னா பெருசா, கனமா இருக்கும்னு தோணுது இளா.” என்றாள் குரலை தழைத்து.

“ரோஜாம்மா தப்பா நினைச்சுக்காதீங்க. ஏழு வேணாம். கம்மியா பாருங்க” சித்ராவின் அருகில் சென்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னார் சுகந்தி.

சித்ரா அவரைக் கேள்வியாகப் பார்த்து, திரும்பி மகளைப் பார்க்க, “தாலிக் கொடி அஞ்சு, இல்ல மூனு போதும் ரோஜாம்மா. நம்ம ஆசைக்கு வேணும்னா ரோஜாக்கு வேற நகை எடுத்துக் கொடுக்கலாம். அஞ்சு பவுனுக்கு ஒரு ஆரம் கூட எடுக்கலாம்” என்று வேகவேகமாகச் சொன்னார் சுகந்தி.

அவர்களுக்குப் பின்னால் வந்து நின்றனர் ரோஜாவும், இளமாறனும்.

“ரோஜா வேலைக்குப் போற பொண்ணு. எப்பவும் கழுத்துல இருக்கத் தாலி செயின் அவ்வளவு கனமா வேணாம்னு நினைச்சேன். வேற ஒன்னுமில்ல சம்பந்தி” இப்போது சுகந்தி சொன்னதின் அர்த்தம் சரியாகச் சித்ராவை சென்று சேர்ந்தது.

“ஓ, நான் அப்படி யோசிக்கல. ஆனாலும், மூனு ரொம்பக் கம்மி, மெல்லிசா இருக்கும். ஒரு அஞ்சு பவுன்ல பார்ப்போமே” என்றார் அவர்.

“நீயென்ன சொல்ற மாறா?” சுகந்தி மகனைப் பார்த்து கேட்க, “ம்ம், மூனு ஓகே” என்று மொட்டையாகப் பதில் சொன்னான் அவன்.

அந்நேரம், “அம்மா..” என்று சித்ராவின் கையை அழுத்தி, கண்ணால் அவரை மிரட்டி கொண்டிருந்த ரோஜாவிற்குக் கணவனின் பேச்சில் எதுவோ ஒன்று குறைந்த உணர்வு. சுகந்தியின் முகத்தில் சட்டென வந்து போன வித்தியாச உணர்வை அவளால் ஆராய முடியவில்லை என்றாலும், அதில் வலியின் சாயல் நிச்சயமிருந்ததைக் கண்டு கொண்டாள் அவள்.

“அம்மாக்கு என்ன?” சித்ரா சிரிப்புடன் மகளிடம் கேட்க, பளீரெனக் கணவனின் பேச்சில் என்ன குறைந்தது என அவளுக்குப் புரிந்தது.

“நீங்க செயின் செலக்ட் பண்ணுங்கம்மா” என்றவள், கணவனை நெருங்கி நின்றாள்.

“அதென்ன மொட்டையா மூனு ஓகே? அத்தய ஒழுங்கா அட்ரஸ் பண்ணி பேசுங்க இளா” கண்டிக்கும் குரலில் அவன் புறமாகச் சாய்ந்து சொன்னாள்.

இளமாறன் முகம் சட்டென இறுகியது. புருவங்களை நெரித்து, கண்களைச் சுருக்கி அவளைக் கேள்வியாகப் பார்த்தான். திடீரென்று மனைவி சொன்னதைக் காதில் வாங்கி மூளைக்குக் கடத்தவே அவனுக்குச் சில நொடிகள் எடுத்தது.

“உங்கத்தை உன்னையே பார்க்கிறாங்க பாரு. போய் என்னனு கேளு” என்று இயல்பாகச் சொன்னவனைப் பல்லைக் கடித்துக்கொண்டு கடுப்புடன் பார்த்து விட்டு மாமியாரிடம் சென்றாள் ரோஜா.

“ஒரே மாதிரி ரெண்டு ஜோடி வளையல் காட்டுங்க. ஒரு பத்து பவுனுக்குள்ள இருந்தா ஓகே.” விற்பனையாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் சித்ரா.

அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சுகந்தி, சித்ரா தேர்ந்தெடுத்திருந்த நான்கைந்து தங்கச் சங்கிலிகளைக் கையில் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“அம்மா இது நல்லாருக்கு. நீட்டா, நீளமா, அழகாருக்கு” வெண்பா ஒன்றை கையில் எடுத்துச் சொல்ல, சுகந்தி அதை வாங்கி ரோஜாவிடம் கொடுத்தார்.

“பிடிச்சிருக்கா, ரோஜா?” அவர் கேட்க, புன்னகையுடன் தலையசைத்தாள் ரோஜா.

சுகந்தி அதை விற்பனையாளரிடம் கொடுத்து விட்டு வேறு நகைகள் பார்க்கத் தொடங்கினார்.

ரோஜா சித்ராவிடம் சென்றாள்.

“இந்த வளையலை போட்டு காட்டு ரோஜா” என்றார் அவர்.

“அம்மா, எவ்வளவு நகைமா வாங்குவீங்க. ஏற்கனவே நீங்க வாங்கிக் கொடுத்ததையே போடாம பீரோவில் பூட்டி வச்சுருக்கோம். இதுல நீங்க இன்னும் பத்து பவுன் எடுக்கணும்னு சொல்றீங்க”

“பொன்னை வேணாம்னு சொல்லக் கூடாது பொண்ணே” என்று கண்டித்தார் சித்ரா.

“அம்மா, பிளீஸ். உங்களுக்கு ஏற்கனவே நிறையச் செலவு..” அவள் சொல்லி முடிக்கும் முன்பே, “ரோஜா” என்றார் சித்ரா, அழுத்தமாக.

மிகச் சாதாரணக் குரல்தான். ஆனால், அதில் இருந்த அழுத்தம் அவளை அமைதியாக்கியது.

“ரோஜா” அவர்களுக்குப் பின்னே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இளமாறன் அழைக்க, அவனிடம் சென்றாள் ரோஜா.

ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து அவரவருக்குப் பிடித்தமான நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சித்ரா இரு மகள்களுக்கும் சேர்த்து வளையல்கள் மற்றும் வேறு சில சிறிய நகைகள் வாங்கியிருந்தார்.

சுகந்தி அவர்களுக்கு முன்னே சென்று அவர் வாங்கியிருந்த நகைகளுக்குத் தனியாகப் பில் போட்டுப் பணம் செலுத்தி வந்திருந்தார்.

நித்யா, சித்ரா, கஸ்தூரி, சுகந்தி நால்வருக்கும் கம்மல் வாங்கியிருந்தாள் ரோஜா. இளமாறன் தங்கைக்கு ரூபி கற்கள் பதித்த கைச் சங்கிலி வாங்கியிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top