“உனக்கும் எனக்கும்
இடையில்
கூப்பிடும் தூரம்தான்
அழைக்கத் தெரியாமல்
விட்டு வைத்தேன்
அந்தக் குரல் தொடும் தூரத்தை” என்ற கவிஞர் பழநிபாரதியின் வரிகளை முணுமுணுத்தான் பார்த்திபன்.
பார்கவி அவன் உச்சரித்த கவிதையின் பொருள் விளங்க, அவனை அதிர்ந்து பார்த்தாள்.
“எனக்கும் உனக்கும் இடையில் தொட்டு விடும் தூரம்தான். ஆனால்..” என்று ஆழ்ந்த குரலில் இழுத்து ஒற்றை விரல் கொண்டு அவனது திரையைத் தொட்டான். அலைபேசி திரையில் குரலாக இருந்தவளின் முகத்தில் பதிந்தது அவன் விரல்.
பார்கவி பட்டென்று அவனது தொடுகையை உணர்ந்தது போலப் பதறி கண்ணை மூடினாள்.
ஒரு காலத்தில் அவனது நெருக்கம் அவளுக்குச் சிலிர்ப்பை தந்திருக்கிறது. ஆனால் இப்போதோ, இதயத்தில் இம்சையாய் ஓர் உணர்வு எழ, “ட்ராக் மாறாதீங்க பார்த்திபன்” என்று இறுகிய முகத்துடன் சொல்லி விட்டாள்.
“இப்பதான் ரைட் ட்ராக்ல வந்திருக்க ஃபீல் எனக்கு” என்றான், அலைபேசி திரையை வெறித்து.
“நோ” என்று மென்மையாய் அலறியே விட்டாள். இவனது காணொளி அழைப்பை ஏற்றதே தவறு எனக் காலம் தாழ்ந்து உணர்ந்தாள். நல்லவேளையாக அவள் பக்க காணொளியை அணைத்து வைத்திருந்தாள். இல்லையென்றால் அவளின் உணர்வுகளை எல்லாம் அவன் துல்லியமாகக் கண்டு கொள்வானே.
“பாரு”
சட்டெனச் சுதாரித்து, “அப்பவும் உங்களுக்கு உறுதியா தெரியல. ஃபீல்தான், இல்லையா? ” என்று அவள் முணுமுணுத்தது, அவனுக்குச் சரியாகக் கேட்டிருக்கவில்லை.
“என்ன பாரு சொன்ன?” என்று கண்களை அவள் மேலிருந்து அகற்றாமல் கேட்டான். அந்தப் பார்வை, அவன் பேச்சு என எல்லாமே அவளுள் பல வேதி வினைகளை நிகழ்த்தியது. அவனை மறந்து விட்டதாக, கடந்து விட்டதாக அல்லவா நினைத்தாள். இல்லையா? அப்படியென்றால் அவன் மீதான நேசம் அவளின் ஆழ் மனத்தில் அப்படியே புதைந்துதான் கிடக்கிறதா?
கோடையில் காய்ந்து போகும் தளிர்கள், வசந்தம் வந்ததும் மீண்டும் துளிர்ப்பதை போல மீண்டும் அவன் மேலான அவள் நேசம் துளிர்க்கிறதா? அதை முளையிலேயே கிள்ளி எரிய முனைந்தாள் அவள்.
அவனது ஆழ்ந்த குரலில் மீண்டும், “பார்கவி” என்றழைத்தான்.
“நீ என்ன சொன்னன்னு கேட்டேன். அதுக்கேன் அமைதியாகிட்ட?”
“நான் அமைதியா இருக்கறது நல்லதுன்னு நினைக்கறேன் பார்த்திபன்” என்று அவள் சொல்லவும் அவன் முகம் சட்டென இறுகியது.
“பாரு”
“அப்பா இப்ப வீட்டுக்கு வந்துடுவாங்க. நான் லஞ்ச் சமைக்கணும் பார்த்திபன்.” என்று படபடத்து, அலைபேசி திரையில் மாறிய அவனது முகபாவத்தைப் பார்த்தபடியே, அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது.
“இல்லை, அவளால் முடியாது” ஏற்கெனவே ஒரு முறை அவனால் மனம் உடைந்தது போதும்.
எத்தனை எளிதாக அவளைக் கடந்து போனான் அவன். அவனுக்கு அவள் ஒரு பொருட்டாகவே இல்லையே.
“பாரு” என்ற அவனது ஆழ்ந்த குரலின் அழைப்பில் அவள் விழுந்தது போதும். ஒவ்வொரு முறையும் அவன் நெருங்கி வருகையில் அதை நேசம் என மொழி பெயர்த்துக் கொண்டது அவளின் தவறுதான்.
அவளைக் காணும் போதெல்லாம் அவன் கண்களில் ஈர்ப்பை கண்டிருக்கிறாளே. அதை இல்லைவே இல்லையென்று அவன் வார்த்தையாகச் சொல்லியிருந்தால் கூட அவளால் தாங்கியிருக்க முடியும். ஆனால், அவள் மீது அப்படியொரு உணர்வே இல்லாதவனாக அல்லவா அவளைக் கடந்து போனான்.
அவளிடம் பழகியது போல அவன் வேறு யாரிடமும் பழகி இருப்பானா என்ன? மாட்டான்தானே? அப்படியென்ன அவனது அன்புக்கு அவள் தகுதியில்லாதவளாகிப் போனாள்? என்று தன் மனத்திற்குள் மறுகினாள்.
அன்றைக்கு அந்த வணிக வளாகத்தில் வைத்து எவ்வளவு ஆர்வமாக அவனிடம் அன்பைச் சொல்ல போனாள். ஆனால் அங்கு அவள் பார்க்க நேர்ந்த காட்சி, அதை எப்படி அவளால் மறக்க முடியும்?
“எனக்கு எங்கேஜ்மெண்ட் பார்கவி” என்ற அவனது உணர்ச்சி துடைத்த குரல் இப்போதும் அவள் செவியில் ஒலித்தது.
அதைத் தொடர்ந்து அவனிடம் தன் அன்பைச் சொன்னது.
அவனை மறக்க, கடக்க வேறு ஒருவனைத் திருமணம் செய்யப் பாரிவேந்தனுக்குச் சம்மதம் சொன்னது.
அவனது தொடுகை, அது தந்த அருவருப்பு.. இப்போதும் அவள் உடலில் படர்ந்து ஊறும் அவன் விரல்களை உணர்ந்தது போல அப்படியே விதிர்த்து சிலையென உறைந்து நின்று விட்டாள். அவள் கைகள் பதட்டத்தில் வியர்த்து பிசுபிசுக்க, அவள் கையில் இருந்த அலைபேசி நழுவிட, அதைச் சமையல் மேடை மீது வைத்து விட்டு அப்படியே மேடை மீது சாய்ந்து நின்றாள்.
அவளின் பார்வை கூடத்துப் பக்கம் பாய்ந்து மீள, மறுகணம் மடையைத் திறந்து விட்டது போல அன்றைய நாளின் மோசமான நிகழ்வுகள் எல்லாம் அவள் நினைவில் அலை மோதியது.
அவளை மூர்க்கமாகப் பிடித்துத் தள்ளி, கழுத்தை நெரித்து, மேலே படர்ந்து.. “நோ நோ நோ..” வேக வேகமாக மூச்சுகளை எடுத்தாள். வாயை திறந்து திறந்து மூடினாள். அவளால் மூச்சு விட முடியவில்லை. மூச்சு குழலை யாரோ நெரிக்கும் உணர்வில் தவித்தாள்.
எல்லாமே இப்போதுதான் நடப்பது போல வியர்த்து விழித்து, நடுங்கி நின்றாள்.
“நோ, பாரு. உனக்கு ஒன்னும் இல்ல. யூ ஆர் சேஃப்” என்று மனத்திற்குள் மறுபடி மறுபடி மந்திரம் போலச் சொல்லி தன்னைத்தானே மீட்டு எடுப்பதற்குள் முழுவதுமாகச் சோர்ந்து போய் இருந்தாள் அவள்.
மறுகணம் சமையல் அறை தரையில் சரிந்து அமர்ந்து விட்டாள்.
காவேரி சொன்னது போலவே ரங்கராஜன் ஒரு மணி நேரத்தில் வீடு வந்து விட்டார். அவரின் கார் சத்தம் கேட்டதும்தான் பார்கவி சுய நினைவுக்கே வந்திருந்தாள்.
படக்கென்று எழுந்து அங்கேயே முகம் கழுவி அப்பாவுக்குக் கதவை திறந்து விட்டாள்.
மகளின் முகம் பார்த்ததும் எதுவோ சரியில்லை என்று அந்தப் பாசக்கார தந்தைக்குப் புரிந்து போனது.
“என்னடா பாரும்மா?” என்று வாஞ்சையுடன் விசாரித்தார். கோபத்தை, வெறுப்பை, உதாசீனத்தைத் தாங்கிக் கொள்ள முடிந்த நம்மை, சமயங்களில் அன்புதான் உடைந்து போடுகிறது.
“அ..ப்பா” என்றவளின் உதடு அழுகையில் பிதுங்கியது.
“பாரும்மா” மகளின் தலையை ஆதூரமாகக் கோதி விட்டு, “என்னடா பிரச்னை? அம்மாவ உன் கூடவே இருக்கச் சொல்லியிருக்கலாம்ல?” என்று கேட்டார்.
“என் பொண்ணு எதுக்கும் அழ மாட்டாளே” என்று கலங்கி நின்ற அவளின் கண்ணீரை துடைத்து விட்டார். மகளின் முகத்தைக் கூர்ந்தவரின் கண்களில் கலக்கத்தைக் கண்டதும், மகளின் மனம் கலங்கியது.
“எனக்கு ஒன்னும் இல்லப்பா” என்று மிகவும் முயன்று புன்னகைத்தாள்.
“நீ எதுனாலும் அப்பாகிட்ட சொல்லலாம் பாரும்மா. அப்பா அதுக்காகத்தானே இருக்கேன்? ம்ம் அப்பா ஸ்ட்ராங்டா. அப்பா இதயம் கொஞ்சம் பலவீனமானதுதான். ஆனா என் பொண்ணுக்கு ஒன்னுன்னா அது தானாவே பலசாலி ஆகிடும். நீ சொல்லுடா” என்றார்.
அவள் கண்கள் மேலும் பனிக்க, அப்பாவின் தோளில் சாய்ந்து விலகினாள்.
“லஞ்ச் சமைக்கணும்ப்பா” என்று பேச்சை மாற்றினாள்.
அவரும் புரிந்துக் கொண்டவராக, “அப்போ நீ என்னோட கேட்டரிங் ஆஃபீஸ் வரலையா?” என்று கேட்டார்.
“வர்றேன்ப்பா. அம்மா நம்மள அங்க போய்ச் சாப்பிட்டுக்கச் சொன்னாங்க. ஆனா உங்களுக்கு அந்தச் சாப்பாடு சேராதுன்னு அவங்களுக்குக் கவலை. அதான் நானே வீட்ல சிம்பிளா செஞ்சுடலாம்னு நினைச்சேன்ப்பா” என்றாள்.
“சரிம்மா. அப்போ நீ சமையலை கவனி. அப்பா ஆபீஸ் ரூம்ல இருக்கேன் என்ன?” என்று அவரின் அலுவல் அறைக்குச் சென்றிருந்தார்.
அவள் சமையல் அறைக்குள் நுழைந்ததும் அழையாமலே அவன் நினைவு வந்தது.
அவனது உதட்டோர குழி தெரியும் புன்னகை. அவளின் சிரிப்பில் அவன் உறைந்து நின்றது என அவன் நினைவுகள் அனைத்தையும் உதறி, சமையலில் கவனம் பதித்தாள்.
ரங்கராஜன் அலுவல் அறையில் ஏதோ ஒரு கோப்பில் மூழ்கியிருந்தவர், மகளின் அரவம் உணர்ந்து அவளைத் திரும்பி பார்த்தார்.
“போகலாமா டா?” என்று அவர் கேட்க, அவர் முன்னே இருவருக்குமான உணவு இருந்த பையை வைத்தாள்.
“திடீர்னு ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு நடந்தது ஞாபகம் வந்திருச்சுப்பா. அதான் நீங்க வீட்டுக்குள்ள வரும் போது ஒரு மாதிரி இருந்தேன். வேற ஒன்னுமில்லப்பா” என்று அவரைச் சமாதானப்படுத்தும் விதமாகச் சொன்னாள். மகளின் இந்தக் காயம் ஆறவே ஆறாதா என்ற ஆற்றாமையுடன் அவளைப் பார்த்தார் ரங்கராஜன்.
“அன்னைக்கு அவ்ளோ தைரியமா இருந்த என் பொண்ணு, இன்னைக்குக் கலங்கலாமா?” என்று கேட்டு, அப்பா இருக்கிறேன் உனக்கு என்று அவளைத் தேற்றினார் ரங்கராஜன்.