ரோஜாவின் கண்கள் புகைப்படத்தின் மேலேயே நிலைத்திருந்தது. இமைக்க மறந்து பார்த்து நின்றிருந்தாள் அவள்.
அது அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.
ரோஜாவின் விருப்பத்தின் பேரில் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்த ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் அவை. சிலவற்றில் ரோஜாவின் மொத்த குடும்பமும் இருந்தது. ஆனால், அந்நிமிடம் அவள் சுவரில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த புகைப்படத்தில் அவளும், இளமாறனும் மட்டுமே இருந்தார்கள்.
இளமாறனின் உணவகத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அந்தி வானம் சிவந்திருக்க, அதன் காலடியில் நீளமாய் நீலம் பூசிய கடலின் பின்னணியில் இருவரும் நீல நிற உடையில் இருந்தனர். ரோஜாவின் சேலையின் நிறத்தில் சட்டை அணிய கட்டாயப்படுத்தப்பட்டிருந்தான் இளமாறன்.
ஆனால், இப்போது புகைப்படத்தைப் பார்க்கையில் மிக அழகாக வந்திருந்தது. ரோஜாக்கு பிடித்த அளவுக்கு இளமாறனுக்கு அப்புகைப்படம் பிடிக்கவில்லை.
மனைவியின் இடையில் கைக் கோர்த்து அணைத்து நின்ற புகைப்படம்தான் அவனை ரசனையாய் கட்டி இழுத்தது.
அதிலும் அவர்களின் படுக்கை அறை சுவரை அலங்கரிக்க அதை விடப் பொருத்தமான வேறு புகைப்படம் இல்லை என்றே சொல்வான் அவன்.
அவனை நன்றாக உணர்ந்தும் அலட்டிக் கொள்ளாமல் புகைப்படத்தில் மூழ்கியிருந்த மனைவியின் இடையில் கைக் கோர்த்து நெருக்கமாக இழுத்தான் அவன்.
எந்தவித பிடிமானமும் இன்றி இருக்கையின் மேல் நின்றிருந்தவள் மிரண்டு, “இ…ளா” என்று அலறி, அவன் மேல் விழுந்தாள்.
“என்னடி இல்ல இல்லன்னுட்டு.. ம்ம், நான் இங்கதானே இருக்கேன்” அவள் காதில் கேலி பேசி இறுக அணைத்தான்.
கையில் இருந்த புகைப்படத்தை நழுவ விடக் கூடாதென்ற நடுக்கத்தில் அதை இறுகப் பற்றினாள் ரோஜா.
மனைவியைக் கீழே விழ விடாமல் தன் மேல் சாய்த்துப் பிடித்திருந்தான் இளமாறன்.
புகைப்படத்தை அவன் முதுகுக்கு மாலையாகப் போட்டு இறுக பிடித்தபடி மனைவி நிற்க, அந்த நெருக்கத்தைக் கண் சிமிட்டி ரசித்தான் இளமாறன்.
“ப்ச், இளா. என் கையில ஃபோட்டோ இருக்கு. விடுங்க என்னை” சிணுங்கினாள்.
“அச்சோ நான் பார்க்கலையே. எங்க, அந்தப் போட்டோவை காட்டு பார்ப்போம்” என்று தீவிரமாகக் கேட்டவனைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்து தொலைத்தது.
“இந்த ஃபோட்டோஸ் வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. நான் கேட்கும் போதெல்லாம் வேலை, பிஸின்னு சொல்லிட்டீங்க. இப்போ இன்னைக்கு மட்டும் நீங்க ஹெல்ப் பண்ணல. அப்புறம் நான்..”
“அப்புறம், நீ என்ன பண்ணுவியாம்” என்று குறுநகையுடன் வம்பு செய்தவனை வம்பாய் அவளுக்குப் பிடித்துத் தொலைத்தது.
அத்தனையும் கை விட்டு, “இளா, பிளீஸ்” என்று கெஞ்சினாள்.
“ஓகே” என்று அவளை இறக்கி விட்டு அவளோடு சேர்ந்து புகைப்படங்களைக் கையில் எடுத்தான்.
கிட்டத்தட்ட இருபது புகைப்படச் சட்டங்கள். அவர்களின் திருமணப் புகைப்படத் தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்த சில படங்கள் சட்டமிடப்பட்டிருந்தது. மற்றவை அனைத்தும் ரோஜா குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்கள்தான்.
“ஃபேமிலி ஃபோட்டோஸ் ஹால்ல வச்சுடலாமா இளா? இல்லனா இங்க டைனிங் ஏரியா வால்ல வைக்கலாமா? எது சரியா வரும்?”
“நீ எங்க சொல்றியோ அங்க வைக்கலாம்” என்று விட்டுச் சுவரில் சட்டங்கள் பொறுத்த தேவையான உபகரணங்களை எடுக்கச் சென்றான் அவன்.
“ம்ம்” என்ற யோசனையுடன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள் ரோஜா.
“முடிவு பண்ணிட்டியா இல்லையா?” அவளின் பின்னால் வந்து நின்று தாடையில் கன்னம் பதித்துக் கேட்டான்.
“எஸ்” என்றவள் முன்னே நடக்க, அவளைப் பின் தொடர்ந்தான்.
சமையல் அறைக்கும், படுக்கை அறைக்கும் நடுவில் இருந்த, சிறிய ஹாலில் உணவு மேஜை போடப்பட்டிருந்தது. அதன் எதிர் சுவர் முன் சென்று நின்றாள் ரோஜா.
அதில் நடுநாயகமாக அவர்களின் திருமணப் படத்தை அவள் வைக்க, அதைப் பொருத்தினான் இளமாறன்.
அதைச் சுற்றிலும் அவர்கள் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வைத்தாள்.
வலப்பக்கம் முழுவதும் ரோஜா, இளமாறனுடன், சித்ரா, சிவஹரி, நித்யா, சசிகுமார், மித்ரன் என அவர்கள் இணைந்தும், தனித்தும் இருந்த புகைப்படங்கள் அலங்கரித்தது.
மறுபக்கத்திற்கு அவள் எடுத்து நீட்டிய முதல் புகைப்படமே இளமாறனின் முகத்தில் கண நேரம் என்றாலும் கனமான உணர்வினை காணச் செய்தது.
அவர்களின் திருமணப் புகைப்படம் அது. ரோஜாவின் பக்கம் நின்றிருந்த சுகந்தி முன்பக்கமாக மெல்ல நகர்ந்து மகனை எட்டிப் பார்க்கும் படம் அது. சுகந்தியின் கண்களில் தெரிந்த மகனுக்கான அந்த வாஞ்சை அவ்வளவு அழகாக இருந்தது. மற்றவர்கள் இயல்பாகக் கடக்கும் புகைப்படம்தான். ஆனால், அதில் இருந்த உணர்வுகளை அதில் தொடர்புடையவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இளமாறன் அதைச் சுவரில் மாட்ட, ரோஜா சற்றே அவனுக்கு நெருக்கமாக நகர்ந்து நின்று அப்புகைப்படத்தை ரசித்தாள்.
“ம்ம். அடுத்ததை எடுத்துக் கொடு ரோஜா” என்று அவன் கேட்க,
“கல்லுளிமங்கன்” என்று முணுமுணுத்து அடுத்ததை எடுத்து நீட்டினாள்.
ஒன்றில் கஸ்தூரி, வைத்தியநாதன், மற்றதில் சுகந்தி, சங்கரன், வினோத், வெண்பா என அனைவரும் இருக்க, முன்னும் பின்னுமாகச் சுவரில் அழகாக அடுக்கப்பட்டது படங்கள்.
ஒரு கணம் வீடு முழுதும் உறவுகளால் நிறைந்தது போன்ற பிரம்மை ரோஜாவிற்குத் தோன்றியது.
“நல்லாருக்கு இல்ல இளா?” தானாகக் கணவனின் கைகளுக்குள் நுழைந்து அவள் கேட்க, அவளையே இமைக்காமல் பார்த்தபடி, “ம்ம்” என்றான் அவன்.
“இருங்க, இதையும் ஃபோட்டோ எடுத்து வைப்போம்” என்று அலைபேசியை எடுத்து வந்து புகைப்படங்களைப் புகைப்படம் எடுத்து நித்யாவிற்கு அனுப்பி வைத்தாள்.
இளமாறன் படுக்கை அறைக்குள் செல்ல அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவள் நீட்டிய புகைப்படத்தை விடுத்து, அவனே ஒன்றை தேர்ந்தெடுத்துச் சுவரில் வைத்துப் பார்த்தான்.
அவர்களின் திருமணப் புகைப்படம் அது.
ரோஜா புன்னகையில் மலர்ந்திருந்தாள். அவளின் இடையில் கைப் பதித்திருந்தான். ஆனால், அத்தனை கூட்டத்தின் முன் அணைக்கக் கூச்சப்பட்டு லேசான இடைவெளி விட்டு நின்றிருந்தான் இளமாறன்.
ஆனாலும், புகைப்படத்தில் அவர்களின் நேசம் அதிநெருக்கமாக நிறைந்திருந்தது.
இளமாறன் முகத்தில் சிரிப்பே இல்லையென்று நித்யா தங்கையிடம் குறைப்பட்டுக் கொள்வாள். ஆனால், அவன் உதடுகளுக்குள் ஒளித்திருந்த சிரிப்பை கண்கள் ஒளிர்ந்து ரோஜாவிற்கு மட்டும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.
மின்னும் அந்தக் கண்களைப் பார்த்து, கண் சிமிட்டினாள்.
“நான் இங்கதான் இருக்கேன். என்னைப் பாருடி” என்று அவள் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிச் சுவரில் மாட்டினான் அவன்.
இரண்டு அடிகள் தள்ளி நின்று இருவரும் பார்க்க, மனதை கொள்ளை கொண்டது புகைப்படம்.
ரோஜா அந்தப் படத்தைப் பார்த்தபடியே அறையைச் சுற்றி நடந்தாள். இளமாறனின் கண்கள் இமைக்காமல் அவளையே பார்த்தது.
“அச்சோ.. என்னால முடியாது” என்று ஓடிப் போய் அந்தப் புகைப்படத்தை அவள் நீக்கப் போக, அவளை விட வேகமாக முன்னேறி அவளைத் தடுத்துப் பிடித்தான்.
“எதுக்குடி, அதை எடுக்கப் போற இப்போ?” முறைத்தபடி அவன் கேட்க,
“அது.. எந்தப் பக்கம் திரும்பினாலும் நீங்க என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்கு. அதுவும் இது நம்ம பெட்ரூம்.. அதான்” என்று அவள் தடுமாற, இளமாறனின் கண்களில் குறும்பும், அப்பட்டமான ரசனையும் கலந்த பார்வை. அதில் மேலும் தடுமாறினாள் ரோஜா.
“என்னை விடுங்க” அவள் கெஞ்ச, அவன் கொஞ்சத் தயாரானான்.
“நீ கூடதான் அந்த ஃபோட்டோல என்னையே பாக்குற. ஆனா, நான் என்ன உன்ன மாதிரியா அழுறேன். ம்ம்?” அவளை அணைத்துத் திருப்பிக் கண்களைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.
அவளால் அந்தக் கண்களைச் சந்திக்க முடியவில்லை. வெட்கமும், கூச்சமும் போட்டி போட அவனிடம் இருந்து பார்வையைத் திருப்ப முயன்றாள்.
“என்னடி பண்ற?” ஒற்றைக் கரம் உயர்த்தி, ரோஜாவின் முகத்தைத் தன்னை நோக்கி பிடித்து வைத்துக் கொண்டான்.
“என்ன சொன்ன நீ? எந்தப் பக்கம் திரும்பினாலும் நீங்க என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்கு. அதுவும் இது நம்ம பெட்ரூம்னு தானே? நம்ம காதலை…” அவன் கண்களில் வழிந்த குறும்பில் அவன் ஏடாகூடமாக ஏதும் சொல்லும் முன், அவள் திணறி அவன் வாய் மூடினாள்.
அவளின் உள்ளங்கையில் வெப்பமாய் வேகமாய்த் தொடர் முத்தங்களைப் பதித்தான்.
ரோஜா அப்போதும் கையை விலக்கவில்லை. அடக்கிய சிரிப்பில் அவன் உடல் குலுங்க அவளை இழுத்தபடி பின்னே நடந்து, அப்படியே படுக்கையில் சரிந்து அவளைப் புரட்டிப் போட்டான்.
இப்போது எங்கும் அவனே நிறைந்திருந்தான். அவளுக்கு மிக நெருக்கத்தில் இருந்தவனின் பார்வையைத் தவிர்க்க அவள் முகத்தைத் திருப்பினால், சுவரில் இருந்தும் அதே பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் இளமாறன்.
“ஆஆஆஆ.. அந்தப் பார்வை..” என்று கண்களை மூடி அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.
“ஒய், என்ன? என் கண்ணைப் பாரு ரோஜா” தோளை உரசி அவளின் நாடிப் பிடித்து, முகத்தை அவனை நோக்கி திருப்பினான்.
“என்ன பார்க்கணும். என்னை மட்டுமே பார்க்கணும். கண்ணை மூடக் கூடாது” கட்டளையிட்டு காதல் செய்தான்.
“இளா..” இமைகளை இறுக மூடப் போனவளின் வெட்கத்தை முத்தமிட்டான்.
“என்ன இல்ல? இங்கதான் இருக்கேன்” காதில் முத்தமிட்டு கிசுகிசுத்தவன், மொத்தமாய் அவளைக் கொள்ளையிட்டான்.
நொடிகளை நிமிடங்கள் விழுங்கி, மணி துளிகள் ஜீரணித்திருக்க, அப்போதுதான், “போதும்” என்று அவளை இமை மூட அனுமதித்தான் இளமாறன்.
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரோஜாவின் அலைபேசி ஒலியெழுப்பி அவளை எழுப்பியது.
ரோஜா கலைந்திருந்தாள். அவளுக்கு உடையாகப் போர்த்தியிருந்த கணவனின் கரங்களை அவள் மெல்ல நகர்த்த, “ரோஜா..” தூக்கத்திலும் அலுத்தான்.
ரோஜா அவனைத் தாண்டி கை நீட்டி எட்டி அலைபேசியை எடுத்தாள். அதன் திரை, “அத்தை காலிங்” என்று காண்பிக்க, அவசரமாகப் போர்வையை எடுத்துப் போர்த்தியவளை பார்த்தவனுக்குச் சிரிப்பு பீறிட்டது.
“வீ ஆர் மேரிட் ரோஜா” என்று குறும்பாகக் கண் சிமிட்டி அவன் சொல்ல, ரோஜா சிரித்து அவன் தோளில் அடித்தாள்.