பார்த்திபன் காதலி – 24 (2)

அது வார இறுதி என்பதால் பிரபஞ்சன் கிரிக்கெட் மைதானத்தில் இருந்தான்.

அப்போது அவனுக்குப் பார்த்திபனிடம் இருந்து அழைப்பு வந்தது. இன்னமும் ஆட்டம் ஆரம்பித்திருக்கவில்லை. ஆகையால் அலைபேசி அவன் கையில் இருக்கவும், அழைப்பை உடனே ஏற்றான். அது காணொளி அழைப்பு.

நண்பனின் முகம் பார்த்து, “சொல்லுடா பார்த்தி, பளபளன்னு இருக்கியேடா” என்று வம்பிழுத்தான்.

“அடச்சை அடங்குடா.” என்று சிரித்தான் பார்த்திபன்.

“உனக்குலாம் கல்யாணமாகியும் அடங்காம கிரிக்கெட் விளையாட போற பார்த்தியா? உன் பொண்டாட்டி சரியில்லடா. நான் அவகிட்ட உன்னைப் போட்டு கொடுக்கறேன் இரு”

“பொண்டாட்டி மட்டும் இல்லடா. என் கள்ளக் காதலி கூடச் சரியில்லடா. என்னை விட்டுட்டு அமெரிக்கா போயிட்டான். அதான் என் சோகத்த மறக்க கிரிக்கெட் ஆடிட்டு இருக்கேன் நான்” என்று சோகமாகச் சொன்னான் பிரபஞ்சன்.

“அடிங்க” என்று போலிக் கோபத்துடன் நாக்கை கடித்தான் பார்த்திபன்.

பிரபஞ்சன் சத்தமாகச் சிரித்து, “சொல்லுடா” என்றான்.

“எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிட்ட இல்லடா? உன்னையெல்லாம் பெரிய காதல் மன்னன்னு நினைச்சிருந்தேன்டா.”

“பார்த்தி இப்பவும் சொல்றேன். உன் மனச உன்னை விட அழகா யாராலயும் வெளிப்படுத்த முடியாது. உனக்குப் பிடிக்கலன்னு எப்படி அவ முகம் பார்த்து சொன்னியோ, அதே போலப் பிடிச்சிருக்குன்னும் நேரா சொல்லுற தைரியம் உனக்கு இருக்கணும்”

“பிடிச்சிருக்குன்னு எப்படிடா கண்டுபிடிக்கறது?” என்று அப்பாவியாகப் பார்த்திபன் கேட்க, “நீயெல்லாம் தேற மாட்ட, போடா” என்று கத்தினான் பிரபஞ்சன்.

“இந்த டைம் நீ அவளை ஹர்ட் பண்ணா..” என்று அவன் எச்சரிக்க, “அடேய் பிரபா, நீ என் ஃப்ரெண்ட்டுடா” என்று கத்தினான் பார்த்திபன்.

“எனக்கு உன்னை விட என் காதல் பொண்டாட்டி ரொம்ப முக்கியம். கள்ளக் காதலிக்காக என் அருமை பொண்டாட்டிய விட நான் முடியாது” என்றான் திட்டவட்டமாக.

“அடப்பாவி பிரபா” என்று சிரித்திருந்தான் பார்த்திபன்.

“பாருக்கு நேத்து நைட் மெசேஜ் பண்ணேன். அவ பதில் அனுப்பியிருக்கா” என்று மலர்ந்த முறுவலுடன் சொன்னான்.

“நான் ஏற்கனவே சொன்னதுதான் பார்த்தி. உன்னோட பீலிங்ல நீ தெளிவா இல்லன்னா பார்கவியைத் தேவையில்லாம நெருங்காத” என்று இம்முறை தீவிரமாக எச்சரித்தான்.

“பிரபா, பிளீஸ். எனக்கு இதெல்லாம் புதுசு. ஆனா கண்டிப்பா அவளை ஹர்ட் பண்ண மாட்டேன். அது மட்டும் கன்பார்மா சொல்லுவேன்டா. என்னை நம்பு” என்றான் உறுதியாக. பிரபஞ்சன் நண்பனை நம்பினான்.

பார்கவிக்கு வீடே வெறிச்சென இருந்தது என்னவோ போலிருந்தது.

அப்பா வர நேரமாகும் என்பதால் அதற்குள் மதிய சமையலை முடித்து விடலாம் என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

குளிர் சாதனப் பெட்டியை ஆராய்ந்து தேவையான காய்கறிகளை எடுத்து வெளியில் வைத்தாள்.

அவளின் அலைபேசி சமையல் மேடையின் மேல் இருக்க, அதில் குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாகத் திரை ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்தது.

கையை எட்டி அதை எடுத்தாள்.

“குட் மார்னிங். என்ன பண்ற? பிஸியா?” என்ற செய்தி திரையை நிறைத்தது. வேறு யார்? பார்த்திபன்தான்.

அவள் பதில் அனுப்ப யோசித்த பத்து நொடிகளில், “எனக்குப் பேசணும்” என்று அடுத்தச் செய்தி வந்து விழுந்தது.

ஆங்கிலம் என்பதால், “பேசிக்கோங்க. அதுக்கு ஏன் என்கிட்ட பெர்மிஷன் கேட்கறீங்க?” என்று இடக்காகக் கேட்டுப் பதில் அனுப்பி வைத்தாள்.

அதற்குச் சிரிக்கும் ஸ்மைலிகளை அனுப்பி வைத்தான்.

“பாரு பிளீஸ்” என்று தொடந்து கெஞ்சலாக அவன் கேட்க, “நான் சமைச்சுட்டு இருக்கேன்.” என்று பதில் போட்டாள்.

“நான்லாம் நல்லா சாப்பிட்டே ஒரு மாசம் ஆச்சு. தெரியுமா?” அந்தச் செய்தி, அச்சோ பாவம் எனச் சட்டென அவளைத் தடுமாற வைத்தது.

“என்ன சமைக்கற?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டு அனுப்பினான்.

“பூண்டு குழம்பு, கீரை கூட்டு, புடலங்காய் பொரியல்”

“வெஜ்ஜா?” என்று முகம் சுளிக்கும் ஸ்மைலியை அனுப்பினான்.

“இன்னைக்குச் சனிக்கிழமை”

“அதுக்கு? சனிக்கிழமைன்னா சாப்பிட மாட்டீங்களா? பசிக்காதா உங்களுக்கு எல்லாம்?” என்று கிண்டலாகக் கேட்டு அவன் அனுப்ப, “ஹலோ..” என்று ஒற்றை வார்த்தையில் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள்.

“எனக்கும் பதில் ஹலோவ் சொல்ல ஆசைதான் பார்கவி. அதுக்கு நீ என் கால் அட்டென்ட் பண்ணி பேசணுமே” என்ற அவனது பதிலில் அவள் இதழ்கள் தாமாகப் பிரிந்து புன்னகைத்தன.

“என்ன பேசணும்?”

“அது பேசும் போதுதானே சொல்ல முடியும்?” என்று கேட்டான்.

“சரி பேசுங்க” என்று அவள் பதில் அனுப்பிய மறுகணம் அவளை அழைத்து விட்டான். அவள் பதற்றத்துடன் அலைபேசியை இறுக்கமாகப் பிடித்தாள். ஏதோ ஓர் உந்துதலில் அழைப்பு நிற்க போகும் நொடி அழைப்பை ஏற்றிருந்தாள். அப்போதுதான் கவனித்தாள், அது காணொளி அழைப்பு. பட்டென்று தன் பக்க காணொளியை அணைத்து விட்டாள்.

ஆனால் அடுத்தக் கணம் அவளின் திரையைச் சிரித்த முகமாக நிறைத்தான் பார்த்திபன்.

“எப்படி இருக்கப் பாரு” அவனும் சமையல் மேடையில் சாய்ந்து நின்று கேட்க, அவன் முகம் பார்த்து அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவனைப் பார்க்காதே என்று மனம் அறிவுறுத்தியது. விழிகள் அதன் சொல் பேச்சுக் கேளாமல் அவன் முகத்தில் அழுத்தமாகப் பதிந்தன.

“பார்கவி லைன்ல இருக்கியா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.

“இருக்கேன்” என்றாள்.

“என்கிட்ட பேசிட்டே குக் பண்ணு”

“அதெப்படி..” என்று அவள் தயங்க, “இதுக்கு முன்னாடி செய்யாத மாதிரி பேசாத பாரு” என்றான்.

அவள் சட்டென்று அமைதியாக, “நான் என்ன சொல்ல வந்தேன்னா..” என்று அவன் விளக்கம் கொடுக்கப் போக, “நீங்க பேசி முடிச்சுட்டா நான் என் வேலையைப் பார்ப்பேன்” என்றாள் கடினமான குரலில்.

“சாரி” என்றான். எதற்கென்று அவள் கேட்கவில்லை.

இருவரும் சில நொடிகளை மௌனத்தில் கடக்க, அவனுக்குப் பின்னிருந்து கசிந்து வந்த பாடல் வரிகள் அவளின் கவனத்தை ஈர்த்தது. கடல் கடந்து காதல் பாடல் அவள் காதில் ஒலித்தது.

“அருகில் இருந்தும் காதல், பிரிவில் பெருகிடுமே” சட்டென்று கோபத்தில் மூச்சடைக்கும் உணர்வு அவளுக்கு.

“ஒரு முறை தெரியுது, மறுமுறை மறையுது, தொலையுது உன் பிம்பம்..”

அவளுக்குப் பிம்பம் மட்டுமா, நிஜமும் அல்லவா தொலைந்து போனது.

“பார்கவி” என்றழைத்தான்.

“இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்” அடுத்த வரியை கேட்டதும் அவளின் கோபம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றிருந்தது.

“என்ன பாட்டுலாம் பலமா இருக்கே?” என்று கோபத்தை மறைத்த குரலில் கிண்டலாகக் கேட்டாள்.

“என்ன பண்ண பாரு. இங்க வீக் என்டுன்னு எல்லாவனும் பார்ட்டி பண்ண வெளில போயிட்டான். நமக்குத் துணைக்கு இசை இளையராஜாவை விட்டா வேற யார் இருக்கா சொல்லு?” என்று சோகமாகக் கேட்டான்.

அவளுக்குக் கோபமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது.

“இது இளையராஜா பாட்டில்ல. இந்தப் பாட்டோட மியூசிக் டைரக்டர் ஜீவி பிரகாஷ்”

“அப்படியா? நமக்கு இசைன்னா இளையராஜாதான்” என்றான் வீம்பாக.

“இதை அவர்கிட்ட சொல்லி பாருங்களேன்” என்றாள் நக்கலாக.

“ஐயோ ஏன் உனக்கு இந்தக் கொலை வெறி” என்று அவன் கேட்க, சத்தமாகச் சிரித்து விட்டாள். அந்தச் சிரிப்புச் சத்தத்தில் அவன் உறைந்து நின்றது இவளின் திரையை நிறைத்தது.

அவளின் இதயத்தைப் பயமும், விழிகளை அவனும் நிறைத்திட, பார்கவி மீண்டும் பலமாகப் பின் வாங்கத் தயாரானாள்.

error: Content is protected !!
Scroll to Top