பார்த்திபனிடம் பிடித்தங்கள் பேச விரும்பிய காலங்கள் எல்லாம் அவள் கண் முன் வந்தது. அவனைப் பிடிக்க வைத்த பேச்சும் அவள் நினைவில் அலையென மோதியது. ஆனால் இடைப்பட்ட காலங்களில் இருவரும் எதிரெதிர் திசையில் பிரிந்து போன பிறகு, அவனை முயன்று மனத்தின் பின்னே தள்ளியிருந்தாள். இப்போது மீண்டும் அவனின் குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இம்முறை எல்லாவற்றையும் நிதானமாகக் கையாள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள் பார்கவி.
“நான் பார்த்திபன்” என்ற அவனது செய்தியை கண்டதும், “ஆமா, இவரு பார்த்திபன்னு எங்களுக்குத் தெரியாது பாரு” என்று மனத்திற்குள் புலம்பி, உதடு சுழித்துக் கொண்டாள்.
அவளின் முகத்தைக் கூர்ந்து, “என்ன பாரும்மா” என்று ரங்கராஜன் கேட்க, “ஆ, ஒன்னுமில்லப்பா. அது தெரிஞ்சவங்க ரொம்ப நாள் கழிச்சி மெசேஜ் போட்டிருக்காங்க” என்று உண்மையை உளறி சமாளித்திருந்தாள்.
“ம்ம், ஃப்ரெண்ட்ஸ் கூடலாம் முன்ன மாதிரி பேசுடா. அவங்களோட வெளில போயிட்டு வா. யாரையும் அவாய்ட் பண்ணாத” என்று அவர் அறிவுரை சொல்ல, ‘அய்யோ அப்பா’ என்று அவரைப் பார்த்து மெதுவாகத் தலையசைத்து வைத்தாள்.
இரவு படுக்கைக்கு வந்த பிறகும் அவனுக்குப் பதில் அனுப்பவில்லை அவள்.
ஆனால் அடி மனத்தில் அவன் நினைவே ஆக்கிரமித்திருந்தது. கண்ணை மூடி உறங்க முயன்றாலும் உறக்கம் கைக்கு எட்டாமல் கண்ணாமூச்சி ஆடியது.
“ரொம்ப நாளா உன்கிட்ட பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.” என்று ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தான். ஆங்கிலத்துக்கு என்று ஒரு தளுக்கு இருக்கத்தானே செய்கிறது. இதையே தமிழில் சொல்லியிருந்தால் வேறாக அர்த்தம் வந்திருக்கும். இப்போது அந்த மொழிப் பெயர்ப்பு அவளை மிகவும் தொல்லை செய்தது.
அவள் எத்தனையோ முறை புரண்டு படுத்தும் உறக்கம் அவளை நெருங்குவதாக இல்லை. இப்போதும் அம்மாவுடன்தான் படுத்திருந்தாள்.
“பாரும்மா தூக்கம் வரலையா?” என்று காவேரி தூக்க கலக்கத்துடன் அவளிடம் கேட்க, “தூங்கிட்டேன்ம்மா” என்று முணுமுணுத்துக் கண்ணை மூடினாள். பத்து நிமிடங்களில் காவேரி ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருக்க, அலைபேசியைக் கையில் எடுத்தாள்.
“நான் நல்லாருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?” என்று கேட்டு செய்தி அனுப்பினாள்.
மறுநொடியே அவனிடமிருந்து, “தூங்கலயா?” என்ற கேள்வி வந்து விழுந்தது. அதை எதிர்பார்த்திருக்கவில்லை அவள்.
“தூங்கிட்டேன். குட் நைட். சாரி குட் டே டு யூ” என்று பதில் அனுப்பி விட்டு படபடக்கும் மனத்துடன் போர்வைக்குள் ஒளிந்தாள். அவனது புன்னகை முகம் அவளது மனக் கண்ணில் வந்து நின்றது. அந்த உதட்டோர குழியுடனான புன்னகை முகம் நிரம்பத் தொல்லை செய்ய, தாமாகப் பிரிந்து புன்னகைத்த உதடுகளுடன் உறங்கி போனாள் அவள்.
காலையில் எழுந்ததில் இருந்து காவேரி ரொம்பப் பிஸி. முதல் வேலையாகப் பிரியதர்ஷினியை வீட்டுக்கு அழைத்து விட்டார் அவர்.
“நீங்க மண்டபத்துக்குக் கிளம்பலையா இன்னும்?” என்று வீட்டுக்குள் உலாத்தி கொண்டிருந்த கணவரை முறைத்தார்.
“என்னை ஏன் காவேரி இப்படி விரட்டுற? என்ன விஷயம்? எங்கயாவது வெளில போறியா?” என்று ரங்கராஜன் கேட்க, “ம்க்கும், வெளில போறாங்க. உங்களை நம்பினா ஒன்னும் வேலைக்காகாதுன்னு நானே களத்துல குதிச்சுட்டேன்” என்றார்.
“நீ சொல்லி எந்த வேலையாவது நான் செய்யாம இருந்திருக்கேனா காவேரி?”
“இந்தப் பேச்சுக்கு ஒன்னும் குறையில்ல. நம்ம பொண்ணு கல்யாண விஷயமா காட்டு கத்தல் கத்துறேன். நீங்க அதுக்காக ஏதாவது செஞ்சீங்களா?” என்று முறைத்தார்.
“காவேரி” என்று மனைவியின் கைப் பிடித்து இருக்கையில் அமர வைத்து, “சூழ்நிலை புரியாம பேச கூடாது” என்று மென்மையாக மனைவியைக் கடிந்து கொண்டார்.
“அந்தப் பையனை நம்ம பொண்ணு மட்டும்தான் விரும்பியிருக்கா. பார்த்திபனுக்கு அது தெரியாம கூட இருந்திருக்கும். அந்தப் பையன் வீட்ல சொன்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க இருந்திருக்கான். அவனுக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்காமயா கல்யாணத்துக்குச் சம்மதிச்சுருப்பான்? நீயே சொல்லு?” என்று அழுத்தமாகக் கேட்டார்.
“இல்லங்க..”
“காவேரி, நம்ம பொண்ணும் ஒருத்தனை கல்யாணம் பண்ண இருந்தா. அதை மறந்துட்டு பேசக் கூடாது. ரெண்டு கல்யாணமும் நின்னதால மட்டும் ரெண்டு பேரையும் உடனே சேர்த்துடலாம்னு நீ நினைக்கிறதுலாம் நடக்காத காரியம். நம்ம பொண்ணைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவ முடிவெடுக்கற வரைக்கும்தான் ரொம்பக் குழம்புவா. ஒரு முடிவெடுத்துட்டா அப்புறம் நீயோ நானோ நினைச்சாலும் அவ முடிவை மாத்த முடியாது. தெரியும்ல?” என்று கேட்டார்.
“ஆமா, எனக்கு அப்படியே தெரியாது பாருங்க” என்று கோபித்துக் கொண்டார் காவேரி.
“நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க. ஆனா அதுவா நடக்கட்டும்னு சும்மா வேடிக்கைப் பார்த்திட்டு கைய கட்டிட்டு என்னால உட்கார்ந்திருக்க முடியாது.” என்று முடிவாகச் சொன்னார்.
“உன்னைப் போலத்தான் உன் பொண்ணுக்கும் அவசர புத்தி. எதைச் செஞ்சாலும் யோசிச்சு செய் காவேரி. என்கிட்ட சொல்லிட்டு செய்” என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு வெளியில் கிளம்பினார் ரங்கராஜன்.
அன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பார்கவி இன்னமும் எழுந்திருக்கவில்லை.
ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு வந்து விட்டாள் பிரியதர்ஷினி.
அவளின் அம்மா வீடு வந்தவள், அப்படியே இங்கு வந்து விட்டாள்.
பார்கவி அப்போதுதான் எழுந்து வந்தவள், “வா பிரி” என்று சோம்பல் முறித்தபடி வெளியில் வந்தாள்.
“என்ன வா பிரி. போய்க் குளிச்சுட்டு வா” என்று மகளை விரட்டினார் காவேரி.
“காஃபி குடிச்சுட்டு போறேன்ம்மா”
“உன்னைக் குளிச்சுட்டு வான்னு சொன்னேன்” என்று அவர் சீற, “இரு பிரி. வர்றேன்” என்று அறைக்குள் சென்று மறைந்தாள் பார்கவி.
இட்லியும், தக்காளி தொக்கும் செய்திருக்க, அதைத் தட்டில் பரிமாறி பிரியதர்ஷினிக்கு நீட்டினார்.
“என்கிட்ட என்னமோ சொல்லணும்னு சொன்னீங்களேம்மா?” என்று அவள் கேட்க, “நீ சாப்பிடு மொதல்ல” என்று அவளின் பக்கத்தில் அமர்ந்தார்.
அவள் ரசித்து உண்ணத் தொடங்கவும், “எனக்கு நம்ம போஸ்ட் மாஸ்டர் வீட்டம்மா கிட்ட பேசணுமே. எப்படிப் பேசுறது?” என்று ரகசியம் போல அவளிடம் கேட்டார்.
“பார்த்திபன் அப்பா போஸ்ட் மாஸ்டர் இல்லம்மா, அவர் கிளார்க்”
“இப்ப அதுவா முக்கியம்?” என்று அவர் முறைக்க, “சாரிம்மா. உங்களுக்குப் பார்த்திபன் அண்ணாவோட அம்மாகிட்ட பேசணும், அவ்ளோதானே? அவங்க நம்பர் பிரபஞ்சன் கிட்ட இருக்கும். வாங்கித் தரவா?” என்று கேட்டாள். காவேரி அவளை முறைத்து, “அவங்க நம்பர் என்கிட்டேயே இருக்கு” என்றார்.
“ஓ, அப்படின்னா..”
“அவங்களை நேர்ல பார்த்து பேசணும். ஆனா நாம பிளான் பண்ணி பார்த்தா மாதிரி இல்லாம பார்க்கணும்” என்றார்.
“ஓ, அப்படி” என்று கண் சிமிட்டி சிரித்தாள் அவள்.
“புரிஞ்சுதும்மா. நான் பிரபாகிட்ட பேசிட்டு வர்றேன்” என எழப் போனாள்.
“முதல்ல சாப்பிட்டு முடி” என்று அவளின் கையைப் பிடித்து அமர்த்தினார். அவள் உண்டு முடித்துப் பிரபஞ்சனை அழைத்துப் பேசி விட்டு வந்தாள்.
“ம்மா, அவங்க எல்லாச் சனிக்கிழமையும் பெருமாள் கோவிலுக்குப் போவாங்களாம்” என்று சொல்லி எந்தப் பகுதி என்றும் குறிப்பிட்டாள்.
அவர்கள் பகுதியில் இருந்து அது கொஞ்சம் தூரம்தான் என்றாலும், “சரி அப்போ வா நாமளும் அந்தக் கோவிலுக்குப் போகலாம். இன்னைக்குச் சனிக்கிழமை வேற..” என்று பரபரத்தார் காவேரி.
“இல்லயில்ல நீ வர வேணாம். அது ரொம்பத் தூரம், நா மட்டும் போயிட்டு வர்றேன்” என்றார்.
“ம்மா, இப்படிச் சொல்லியே யாரும் என்னைய எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேங்கறீங்க.” என்று அவள் முகத்தைச் சுருக்கவும், “எனக்கு நீயும் பார்கவியும் ஒன்னுதான்டா. நீ வீட்ல அவளோட இரு. நான் மட்டும் போய் அவங்ககிட்ட பேசிட்டு வர்றேன்” என்றார்.
ஆனால் பிரியதர்ஷினி அவர் பேச்சை கேட்பதாக இல்லை. அவளின் அம்மா ராதாவை அழைத்து விட்டாள். அவரும் உடன் வருவதாகச் சொல்லவும், “எங்கம்மாவும் வர்றாங்கம்மா. நாம மூனு பேரா போயிட்டு வரலாம். ஒத்த படையா போனா ராசிம்மா” என்று அவள் அடித்து விடவும், அவருக்குச் சிரிப்பு வந்தது.
“மூனு பேரா போகக் கூடாது மக்கு” என்றார்.
“ஆமால்ல. என் வயித்துல இருக்கப் பாப்பாவையும் கணக்குல சேர்த்தா நாலு பேர்தானே?” என்று அவள் கேட்க, “இப்படிப் பேசியே அவரையும் சரின்னு சொல்ல வைக்கிற. சரியா?” என்று கேட்டார். பிரியதர்ஷினி வேகமாக மண்டையை ஆட்டினாள்.
சற்று நேரத்தில் ராதாவும் வந்து விட, ரங்கராஜனுக்கு அழைத்துத் தங்களின் திட்டத்தைச் சொல்லி விட்டார் காவேரி.
“நீ அவங்ககிட்ட எது பேசுறதா இருந்தாலும் நிதானமா பேசு காவேரி. அந்தக் கல்யாணம் நின்னதுக்குக் காரணம் அந்தப் பொண்ணோட வீட்டு வசதி, அவங்க செஞ்ச அராஜகம்னு பேசிக்கறாங்க. அதுனால நீ பார்த்து பேசு” என்று கவனம் சொல்லி அனுப்பினார்.
பார்கவி நிதானமாகத் தலைக் குளித்து வெளியில் வர, அவளைக் கண்டதும் மூவரும் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.
“அப்பா கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்து உன்னை நம்ம கேட்டரிங் ஆஃபீஸ் கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு பாரும்மா. அதுனால நீ வீட்ல இரு. நாங்க மூனு பேரும் கோவிலுக்குப் போறோம். ஒரு வேண்டுதல்” என்று விரைவாக அவளிடம் சொல்லி முடித்திருந்தார் காவேரி.
பார்கவி அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“கோவிலுக்குன்னா நானும் வரவாம்மா?”
“இல்ல நீ வீட்ல இரு. உன்னையும் கூட்டிட்டு போனா வேண்டுதல் பலிக்காது” என்று தீவிரமாகச் சொன்னார்.
அவள் தோழியைத் திரும்பி பார்க்க, அவளோ தீவிரமாக ராதாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“அப்படியென்னம்மா வேண்டுதல்?”
“வேண்டுதலை வெளில சொன்னா பலிக்காது பாரு” என்று அவர் சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“சரிம்மா. நீங்க போய்ட்டு வாங்க” என்று விடைக் கொடுத்தாள்.
“இட்லியும், சட்னியும் இருக்கு போட்டு சாப்பிட்டுரு பாரு. மதியத்துக்கு அப்பாவோட அங்கேயே சாப்பிட்ரு. என்ன? அப்பாவ பார்த்துக்கோ. அவரு பொறிச்சதுலாம் சாப்பிட விடாம பார்த்துக்கோ” என்றார். எப்போது, எங்குச் செல்வதாக இருந்தாலும் அப்பாக்கு பார்த்து பார்த்துப் பத்தியமாகச் சமைத்து வைக்கும் அம்மாவின் இன்றைய போக்கு அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
“சரி, நாங்க வர்றோம்” என்று மூவருமாக வெளியேறி இருந்தார்கள்.
கோவிலை அடையும் முன்னமே, “இன்னைக்கு அவங்க கண்டிப்பா கோவிலுக்கு வருவாங்க இல்ல தர்ஷினி? ஒருவேளை வரலைன்னா என்ன செய்ய? பேசாம அவங்க வீட்டுக்கே போய்ப் பேசிடுவோமா?” என்று கேட்டார் காவேரி.
“அவங்க வீட்டுக்கு போய்ட்டு எதுக்கு வந்தோம்னு என்ன காரணம் சொல்றது?” என்று ராதா கேட்க, “அதுவா, அது சும்மா பார்க்க வந்தோம்னு சொன்னா.. நம்ப மாட்டாங்களா?” என்று கேட்டுச் சங்கடமாகப் புன்னகைத்தார்.
“அவங்களுக்கு ஏதோ வேண்டுதலாம்மா, அதுனால கண்டிப்பா வாரா வாரம் இந்தக் கோவிலுக்கு வந்துடுவாங்கன்னு பிரபா சொன்னார்” என்று பிரியதர்ஷினி அழுத்தமாகச் சொல்லவும், மெல்லத் தலையசைத்து, “ஒருவேளை இந்த வாரம் வரலைன்னா?” என்று கேட்டார். அதற்குள் கோவில் வந்திருந்தது.
“அவங்க வந்திருக்கணும்” என்று மனத்தில் வேண்டிக் கொண்டே அவர் உள்ளே செல்ல, அவர் குடும்பிட போன தெய்வம் அவரின் முன்னே சென்று கொண்டிருந்தார்.
பிரியதர்ஷினி, பார்த்திபனின் அம்மா சத்யபாமாவை முதலில் பார்த்து விட்டுக் கைக் காட்டவும் சின்னப் பிள்ளை போல மலர்ந்து சிரித்தார் காவேரி.
அப்படியே சாமி கும்பிட செல்வது போல முன்னே நடந்து, அவர் முன் சென்று நின்று, “நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்று நலம் விசாரித்துப் பேச்சுக் கொடுத்தார்.
அவரை எதிர்பாராமல் அங்குச் சந்திந்து விட்டது போல அப்படியொரு முகபாவமும் நடிப்பும் இருக்க, சத்யபாமாவும் நம்பி விட்டார்.
சில காலம் முன்பு வரை அவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசித்தவர்கள் அல்லவா? ஆகையால் பேச்சு எளிதானது.
அவர்கள் நால்வரும் நிறைவாகச் சாமி தரிசனம் செய்து ஓரமாகச் சென்று அமர்ந்தார்கள்.
பிள்ளை சுமக்கும் பிரியதர்ஷினியின் உடல் நலத்தைக் குறித்து விசாரித்தார் சத்யபாமா.
அடுத்து பேச்சு எப்படியோ அவர்களின் பிள்ளைகளைப் பற்றி வர, இருவரும் அவரவர் பிள்ளைகளின் நின்று போன திருமணத்தைப் பற்றி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்கள்.
மகனின் திருமணத்துக்காக வேண்டிக் கொள்கிறேன் என்றார் சத்யபாமா. அடுத்து அவர் சொன்னவை அனைத்தையும் கேட்க கேட்க, காவேரியின் முகமே மாறிப் போனது.
அவரால் அவர் நினைத்து வந்ததைப் பேசவே முடியவில்லை. ஒரே வருத்தமாகி போனது அவருக்கு. அவரால் மட்டுமல்ல ராதா, பிரியதர்ஷினி இருவராலும் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அடுத்து பொதுவாகப் பேசி இனி அடிக்கடி சந்திக்கலாம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள்.
“நான் என்னெல்லாமோ நினைச்சுட்டு போனேன். ஆனா அந்தம்மா என்னன்னா.. இன்னும் எந்தக் காலத்துல இருக்காங்க இவங்கல்லாம்” என்று காவேரி காரில் ஏறியதும் புலம்பத் தொடங்கி விட்டார்.
“ம்மா, நாம பொறுமையா அவங்ககிட்ட பேசலாம்” என்று பிரியதர்ஷினி அவரைச் சமாதானம் செய்ய, “ம்க்கும், இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ அவர்கிட்ட பேசினத நான்தான் பார்த்தேனே” என்று அவளை முறைத்தார் அவர்.
அதற்கு ராதா சிரிக்க, காவேரியும் சோகமாகச் சிரித்து வைத்தார். அவரின் ஆசை மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் ஆசை மட்டுமே அப்போது அவர் மனத்தில் அதிகமாக இருந்தது.