சட்டென மாறும் வானிலை போல வேதாவின் மனநிலையும் மாறியிருந்தது. கையில் இருந்த புத்தகத்தை வெற்றியின் முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்து, “எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் புத்தகங்கள் நான் படிக்கறேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” கோபத்தை மறைத்துக் கேட்டாள் வேதா.
“கூல் வேதா. நான் தலைப்பை பத்திதான் கேட்டேன்” அவள் நீட்டிய புத்தகத்தை வாங்கிப் பிரித்தது அவன் விரல்கள்.
“ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தைக் கொண்டு, அந்தப் புத்தகத்தை ஜட்ஜ் பண்ணக் கூடாதுன்னு சொல்வாங்க. அதே போலத் தானே தலைப்பும்? தலைப்பை வச்சு எப்படிப் புத்தகத்தை எடை போடுவீங்க?” அமைதியான, ஆழ்ந்த அழுத்தம் அவள் குரலில். வெற்றி புன்னகை முகம் மாறாமல் நின்றான்.
“நான் தப்பா எதையும் மீன் பண்ணல வேதா. புனைவு (Fiction) மட்டுமில்லாம அபுனைவும் (Non fiction) வாசிக்கலாம் இல்லையா? ஏன் இந்தக் காதல் கதைகளுக்குள்ள உங்க வாசிப்பை அடைக்கறீங்க? இதை விட்டு வெளில வந்து வாசிப்பை பெரிதுபடுத்தி, இலக்கிய…” சட்டென அவன் முன் கையை நீட்டி அவனை மேலே பேச விடாமல் செய்தாள் வேதா.
அவள் உதடுகள் ஏளன சிரிப்பில் வளைய, வெற்றியின் முகத்தில் புன்னகை இன்னுமிருந்தது.
“வாசிப்பை எப்படித் தரம் பிரிக்கிறீங்க சார்? எந்த ஒரு நல்ல வாசகனும் இன்னொருத்தனின் ரசனையைக் கேலி பண்ண மாட்டான். கேள்விக் கேட்கவும் மாட்டான்.”
“ஹேய் வேதா. பிளீஸ், நான் கேலி பண்ணல. உங்க வாசிப்பை விரிவாக்குங்க அப்படின்ற அர்த்தத்தில்தான் சொன்னேன்”
“என்னது?” என்று அதிர்ந்து, “ஓ சார் பிளீஸ். முதல்ல இந்த வாசிப்பை பற்றி உங்களோட குறுகலான எண்ணத்தை மாற்றுங்க.” என்றாள் கோபமாக.
“வேதா…”
“நாம் வாழ முடியாததொரு வாழ்வை வாழ்ந்து பார்ப்பது தானே வாசிப்பு. இதைச் சொன்னது உங்க கதைச் சொல்லி பவா செல்லத்துரை. எனக்கு எஸ்.ராவை காட்டிலும் பவித்ரா, தமிழ் நிவேதாவின் எழுத்து நெருக்கமா இருக்கு. நான் வாழாத வாழ்வை அவங்க எழுத்தின் மூலமா வாழ்ந்துட்டு போறேனே. என்பதுகளின் சென்னையையும், அலாஸ்காவின் பனியையும், குளிரையும், சுந்தரத் தெலுங்கையும் வாசிக்க வாசிக்க எனக்கு அவ்வளவு பிடிக்குது. அதில் தப்பெதுவும் இல்லையே?”
“நான் தப்புனு சொல்லலையே வேதா”
“உங்க பார்வை சொல்லுச்சு வெற்றி சார்” முதல் முறையாக அவன் பேரை சொல்கிறாள். கணத்தில் அவன் கண்களில் வந்த ரசிப்பை லாவகமாக மறைத்தான் வெற்றி.
“ஐ அம் சாரி. நான் உங்களை ஹர்ட் பண்ணனும் அப்படிக் கேட்கல.”
“ஆனா, எனக்கு வருத்தமா இருக்கு. என் ரசனையை நீங்க கேலி பண்ணது போல இருந்தது.”
“இல்ல வேதா…” என்று மறுக்கக் கூட அவனுக்கு நேரம் வழங்கவில்லை அவள்.
“என் வாசிப்பு பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நான் இலக்கியம், குடும்ப நாவல், கவிதை, கட்டுரைன்னு எல்லாத்தையும் வாசிக்கிறேன் சார். லக்ஷ்மி சரவணகுமார் தொடங்கிச் சரவணக் கார்த்திகேயன், சரவணச் சந்திரன் எல்லோரையும் வாசிக்கிறேன். மூத்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ரா, அவ்வளவு ஏன் அம்மா வந்தாள் தி. ஜானகிராமனையும் வாசிக்கிறேன். நீங்க வாசிப்புக்கு எப்படி எல்லைக்கோடு வரையறீங்க? நான் எல்லாத்தையும் தொட்டு பார்த்திட்டுதான் எனக்குப் பிடிச்சதை நோக்கி நகர்ந்துட்டேன். என் ரசனை இதுதான். இந்த வரையறையைத் தீர்மானிக்க வேண்டியது நான் மட்டும்தான் என்பது என் ஒப்பீனியன். என் வாசிப்பு எனக்கு அமைதியை தரணும்.”
அவன் மீசைக்கடியில் ரகசிய ரசனை சிரிப்பு. மெல்ல தலையசைத்தான் வெற்றி.
“என்னைப் புரட்டி போடும் புத்தகம் எனக்குப் பிடித்ததா இருக்கணும்னு நான் நினைக்கிறேன் சார். இலக்கியம் நிறைய நேரங்களில் என்னால் ஜீரணிக்க முடியல. பல நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியலை. ஆனா, என் ரசனைக்கு ஒத்து வந்தா நான் படிக்காம விட்டதும் இல்ல.” இரு கைகளையும் காற்றில் வீசி சொன்னாள் வேதா.
“யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்குன்னு அருந்ததி ராய் சொல்றாங்க வேதா. கற்பனைகளை மட்டும் ரசிக்காம, யதார்த்த வாழ்க்கை…”
“வெற்றி சார்.” சட்டென இடை புகுந்து அவன் பேச்சை நிறுத்தினாள்.
“அந்த யதார்த்த கதைகள் என் மனசுக்கு ரொம்பத் தொந்தரவாக இருக்கக் கூடாது, இல்லையா? நீங்க வாசிப்பு, எழுத்து, ரசனை இப்படி எல்லாத்தையும் போட்டு ரொம்பக் குழப்பறீங்க. எங்க வாசிப்பு ரசனையை வச்சு எங்களை ஈசியா ஜட்ஜ் பண்றீங்க. அது தப்பில்லையா?
கதை என்பது நேரடி யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிப்பது அல்ல. அதை ஒரு ஒளிப்படக் கருவி செய்து விடுமே? கதையென்பது சற்றே மிகை கலந்தது. கற்சிலைக்குச் செய்யும் சந்தனக் காப்பைப் போல. இதைச் சொன்னதும் உங்க இலக்கியவாதிதான், எழுத்தாளர் சரவணசந்திரன் அவர்கள்.” தெளிவாக, திமிராகச் சொன்னாள்.
“இதுக்குப் பேருதான் பாய்ண்ட் பாய்ண்ட்டா பேசுறதா வேதா?” சிரிப்புடன் அவன் கேட்க, சீறினாள் அவள்.
“இப்பவும் நக்கல்தான் பண்றீங்க பார்த்தீங்களா?”
“கடவுளே, இல்ல வேதா. ஏதோ தெரியாம கேட்டுட்டேன்.” அவனது இரு சக்கர வாகனத்தில் சாய்ந்து நின்று அவன் கண்களைச் சுருக்கி பேச, கோபத்தை இழுத்துப் பிடித்தாள் வேதா.
“எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் சிறந்த நூறு நூல்களில், ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய “திருவரங்கன் உலா” சரித்திர நாவலும் இருக்கு. புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலும் இருக்கு. இதுக்கு என்ன சொல்றீங்க? புஷ்பா தங்கதுரை கதைகள் பற்றித் தெரியும் தானே? அவர்தான் திருவரங்கன் உலா எழுதினதும். இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? ரெண்டையும் பரிந்துரைத்தவர் உங்க ஆசான், ஜெயமோகன்.”
வெற்றி நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளை மலைத்துப் போய்ப் பார்த்தான் அவன்.
அவன் கண்களை நேராகப் பார்த்து, முகத்தை உயர்த்தி, வார்த்தைகளில் வாள் வீசிய வேதாவின் மேல் அதுவரை இருந்த மெலிதான ஈர்ப்பு, இப்பொழுது அதன் அளவை கூட்ட, வெற்றித் தடுமாறினான்.
அவளைப் பார்த்த கண்களில் அதிர்ச்சி, ஆச்சரியம், வியப்பு எனக் கலவையான உணர்வுகள் நிறைந்திருந்தது. அவனுக்குப் பேச்சு மறந்த நிலை. அவளைக் குறை சொல்ல நினைக்கவில்லை அவன். அவளிடம் பேச விரும்பினான். புத்தகம் பற்றிய பேச்சில் அவளைப் பிடித்து வைக்க விரும்பினான். ஆனால், அதைக் குறையாகச் சொல்லி அவளைக் குறைத்துப் பேச நினைக்கவில்லை அவன்.
அவளிடம் பேச விரும்பியவன் வார்த்தைகளைச் சற்று யோசித்துக் கையாண்டிருக்கலாம்.
“உங்க வாசிப்பு அடுத்தவன் ரசனையைக் கேலி பண்ற அளவுக்குதான் இருக்கு. இல்ல சார்?” நக்கலாக வேதா கேட்க, தன்னிரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, “சரண்டர் வேதா. ஐ அம் சாரி. பிளீஸ்” என்றான் வெற்றி.
“என் வாசிப்பு எனக்கு மன்னிக்கக் கத்துக் கொடுத்திருக்கு. அதுனால இன்னைக்குப் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விடுறேன் நான்.” பெருந்தன்மையாகச் சொல்வது போலக் காட்டிக் கொண்டாள்.
அவளின் பாவனையில் அவனையும் மீறி சிரித்து விட்டான் வெற்றி. அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் அவளின் கட்டுப்பாட்டையும் உடைத்துக் கொண்டு பிரிந்தது அவளது உதடுகள்.
“கன்னி நாவல் பத்திய ஒரு கலந்துரையாடலுக்குப் போறேன் வேதா. நீங்களும் வர்றீங்களா?” அவன் பேச்சு சமாதான கொடியை அவள் பக்கமாக நீட்ட, அதைப் பிடிக்க மனதின்றி மௌனமாய் அவனைப் பார்த்தாள் வேதா.
“சாரி, உங்களுக்கு வேற வேலைகள் இருக்கும். நான் யோசிக்காம கூப்பிட்டுருக்கக் கூடாது” சொன்னவன், வேகமாகத் தன் வண்டியை நகர்த்த முற்பட்டான்.
“இன்னொரு நாள் வர்றேன் சார். இன்னைக்கு எங்கேயும் போகப் பிடிக்காத ஒரு மனநிலையில் இருக்கேன். எனக்கு ரெஸ்ட் எடுக்கணும். நீங்க போய்ட்டு வாங்க. அங்கயாவது நல்லதா பேசுங்க” நமுட்டு சிரிப்புடன் சொன்னாள். அவள் கடைசியாகச் சொன்னது அவனை ஓங்கிக் குட்டியது.
ஒரு கண்ணை மூடி, பல்லைக் கடித்துக்கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, “ஷ்ஷ்ஷ்..” என்று வலித்தது போல நடித்தான் வெற்றி.
அதைப் பார்த்ததும் பீரிட்ட சிரிப்பை சிதற விடாமல் உதட்டில் அடக்கி, முன்னே நடந்தாள் வேதா.
வெற்றி தன் வாகனத்தை நகர்த்தி அவளைப் பின் தொடர்ந்தான்.
பல மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் இருவருக்கும் ஒன்றாக நடை பயிலும் வாய்ப்பு.
மரங்கள் அடர்ந்த சாலை அது. சாலையின் இரு பக்க மரங்களும் ஓங்கி, உயர்ந்து வளர்ந்து, சாலையை மறைத்துக் குடைப் பிடித்து நின்றது.
வெயிலை மரங்கள் தடுத்து நிறுத்தியிருக்க, இருவருக்கும் இதமான மனநிலையைத் தந்தது காலநிலை.
“வேதா, நிறைய வாசிப்பீங்க போல?” வெற்றியே பேச்சைத் தொடங்கினான்.
“ம்ம். அம்மா குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் வாசிப்பாங்க. அதுல இருந்து, தொட்டு தொடர்ந்து எல்லாத்தையும் வாசிச்சு பார்த்துட்டேன்.”
“ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான பொண்ணு நீங்க வேதா” என்றவனைத் திரும்பி ஓரக் கண்ணில் பார்த்தாள்.
தன் வண்டியை நகர்த்தியபடி நடந்தவனை மேலிருந்து கீழாகப் பார்த்து, “நீங்க கூடதான் வாசிக்கிறீங்க. இலக்கியக் கூட்டத்துக்கு எல்லாம் வேற போறீங்க.” என்று அவள் சொல்ல, “ஆனா, நீங்க என்னை இன்ட்ரஸ்டிங்கான ஆள்னு சொல்லலையே.” போலியான வருத்தத்துடன் அவன் சொல்ல, “அதைச் சொல்லிட்டுதான் அடுத்த வேலைப் பார்ப்பேன் சார்” நக்கலாகச் சொன்னாள் வேதா. சிரித்தான் வெற்றி.
“எங்க மேம் ஒருத்தவங்க ரைட்டர். ரொம்ப நார்மலா, நம்ம வீட்ல நடக்கிற கதைகள்தான் எழுதுவாங்க. ஆனா, அவங்க எழுத்து அப்படி இருக்கும். அவங்க கதைகள்ல வர்ற பெண்கள் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வாசிப்பை நேசிக்க வச்சது அவங்க எழுத்துதான். ஆன்லைனில் அவங்க ரொம்பப் பேமஸ்.” மரங்களின் ஊடே விழுந்த வெளிச்சத்தை வேடிக்கைப் பார்த்து மெல்ல நடந்து கொண்டே சொன்னாள்.
“ஓ, ரைட்டர் ப்ரோபசர் மேல கூட உங்களுக்கு க்ரஷ் போலயே?” வெற்றி கேட்க, “ஹா.. ரொம்பவே. மயக்கும் எழுத்து அவங்கது. அதை அவங்ககிட்டயே சொல்லியும் இருக்கேன்.” என்றவளின் குரலில் அப்பட்டமான மகிழ்ச்சி.
“அது மட்டுமில்ல வெற்றி சார், உங்க தேசாந்திரி, எஸ். ராமகிருஷ்ணன் எங்க ஊர்தான். விருதுநகர். எங்க, இப்போ பேசுங்க. பார்ப்போம்”
“வேதா, வேதா, வேதா.. தெரியாம சொல்லிட்டேன். என்னை விட்டுடுங்க” மொத்தமாகப் பின் வாங்கினான் வெற்றி. மனதிற்குள் துள்ளி குதித்துச் சிரித்தாள் வேதா.
“என்கிட்ட ஆர்கியூ பண்ணி ஜெயிக்கிறவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் வேதா.” பக்கவாட்டில் அவள் முகம் பார்த்து அவன் சொல்ல,
“அட, என்கிட்ட எல்லாம் பேசி யாரும் ஜெயிக்கவே முடியாது வெற்றி சார். சோ, தேங்க்யூ” அவன் முன்னே இடை வளைத்து குனிந்து நன்றி சொன்னாள் வேதா.
இப்போது தன் ரசனையை மறைக்கவில்லை வெற்றி. சாதாரணச் சுடிதாரில் இருந்த பெண்ணை அழகாக்கியது அவன் பார்வை.
அவர்களை வெறித்துக் கொண்டு சாலையில் விரைந்து கடந்து போன வாகனங்களைச் சட்டை செய்யாமல் பேசியபடியே நடந்தார்கள் இருவரும். அப்போதுதான் வீடு செல்லும் வழிக்கு எதிர்ப்புறம் நடப்பதையே உணர்ந்தாள் வேதா.
“அச்சோ, நான் வீட்டுக்குப் போகணும். உங்க கூடப் பேசிட்டே இந்தப் பக்கம் வந்துட்டேன்” நடையை நிறுத்தி விட்டு சொன்னாள்.
“நான் வடபழனி போகணும். அதான் இந்தப் பக்கம் வந்தேன். வாங்க, உங்களை வீட்ல ட்ராப் பண்றேன்” அவன் சொல்ல, வேகமாக மறுத்தாள் வேதா.
“இட்ஸ் ஓகே வேதா. ஃபைவ் மினிட்ஸ் கூட ஆகாது எனக்கு. உங்களை வீட்ல விட்டுட்டு நான் போறேன். எனக்குப் புரோகிராம் ஈவ்னிங்தான்.” அவன் வற்புறுத்தி சொல்லவும், தயக்கத்துடன் சம்மதித்தாள் வேதா.
அவள் வீடிருந்த தெருவில் இறக்கி விட்டான் வெற்றி.
“தேங்க்யூ சார்” என்றாள். புன்னகைத்து விடைபெற்ற வெற்றியின் வண்டி நேராக அவன் வீட்டின் முன் சென்று நின்றது.