மூன்று வாரப் பிரிவு இன்றோடு முடிந்து விடும். காணொளியில் கண்டிருந்தாலோ, கண் சொக்கி இமை மூடும் வரை ஆசை தீரப் பேசி இருந்தாலோ இவ்வளவு தாக்கம் இருந்திருக்குமா தெரியவில்லை. இது இரண்டுமே நடவாது போகவே பிரிவின் தாக்கம் அதிகம் இருவரிடமும்.
“மிஸ். அலர்விழி… வாட்ஸ் கோயிங் ஆன்?”
வேறு யார்? ஷிவானியேதான்! மீட்டிங்கில் அமர்ந்து கொண்டு கனவு கண்டால்? இன்று வருவான். விமான நிலையம் செல்லலாம். என்ற ஆசை எல்லாம் குழி தோண்டிப் புதைத்தது வேறு இல்லாமல், ‘வாட்ஸ் கோயிங்?’ என்ற கேள்வி வேறு! பிசாசு பிசாசு… மனதிற்குள் திட்டிக் கொண்டாலும், முகத்தில் புன்னகையைப் பூசி, “நோ, நத்திங் ஷிவானி,” என்று கூற கற்றுக் கொடுத்திருந்தது கார்ப்பரேட் உலகம்!
நேரம் சென்று கொண்டே இருந்தது. ஆனால் சந்திப்பு முடிந்த பாடில்லை. வெள்ளி மாலையில் இப்படி எல்லாம் நடக்காத நிறுவனத்தில் இன்று அவளை சோதிக்கவென்றே இழுத்தடித்தது மீட்டிங்! மணி ஏழைத் தொடவும் பீட்சா, டோனட், பாஸ்தா என்று உணவு வகை மேசையை நிறைத்தது.
மணி ஒன்பதைத் தொடவும் சிலர் கிளம்பி விட, சிலருக்கு இருந்து முடிக்க வேண்டிய வேலை இருந்தது. தங்கி முடிக்க வேண்டிய ஆட்களில் இவளும் ஒருத்தி! இதெல்லாம் இந்தியாவில் சகஜமாக நடக்கும் ஒன்று. இங்கு இது வரை அவளுக்கு நடந்ததில்லை. இந்தியர்கள் எங்கு சென்றாலும் இது தான் கதி போலும்!
மணி பத்தரை. ஒரு வழியாய் பிரச்சனை ஓய்ந்தது. அடுத்து…? ஐந்து நிமிடம் அந்த பாழாய்ப் போன தெருவில் நடக்க வேண்டுமே! அமெரிக்காவோ இந்தியாவோ… பெண்களுக்கு இரவும், தனிமையும், பாதுகாப்பில்லை!
“ஒரு அஞ்சு நிமிஷம். நான் கொண்டு விடுறேன்”என்ற ‘லீ’ வரும் வரை காத்திருந்து, அரை மணி நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த அலர்விழிக்குள் படிந்து கிடந்த இன்பமெல்லாம் வடிந்து போயிருந்தது.
கதவைத் திறந்து உள்ளே சென்றவளை வரவேற்றது இருட்டு வீடு. படுக்கையறைக்குள் சென்று வெளிச்சத்தை உயிர்ப்பிக்க, சார்ஜில் மறந்து விட்டுச் சென்ற கைப்பேசி பல்லிளித்தது. மாலை நான்கு மணிக்கு எபி தரையிறங்கி இருப்பான் போலும், ஏகப்பட்ட அழைப்புகள் இருந்தது. ‘தூக்கம் வருது. படுக்கப் போறேன்’ என்ற செய்தியைப் பார்த்த பின் மனோவை அழைக்க மனம் வரவில்லை.
மனம் முழுவதும் ஏமாற்றம் கொட்டிக் கிடக்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஷவரின் கீழ் அலுப்பு தீரும் வரை நின்று குளித்து விட்டுப் படுத்தவள், இருந்த களைப்பில் உறங்கிப் போனாள்.
காலை எழுந்ததும் மனோவிடமிருந்து ஏதேனும் செய்தி வந்திருக்குமோ என்ற ஆவலோடு கைப்பேசியை எடுத்துப் பார்க்க… ம்ம்கூம்! ஏமாற்றமே மிச்சம். மீண்டும் அழுகை வருவேனா என்று முட்டிக் கொண்டு வந்தது. ஒரு கப் காபியோடு அவனை அழைத்து சண்டை போட வேண்டும்! இனி என்று மனோவை பார்க்க? நான்கு நாள் விடுப்பு அடுத்த மாசமும் இருப்பதாய் தோன்றவில்லை. தனிமையை விரட்டக் கைப்பேசியை பாட விட்டாள்.
காலைக் கடன்களை முடித்து ஏனோ தானோவென்று அடுக்களைக்குள் நுழைய, காற்றில் அலை அலையாய் ஆடிக்கொண்டிருந்த கேசமும் பரந்த முதுகும் அவளை வரவேற்றது.
‘மனோ?’ நொடி நேரம் முடியும் முன் ஒடிச் சென்று பின்னோடு கட்டிக் கொண்டவளுக்கு வார்த்தை பஞ்சமாகிப் போனது.
‘விழி!’ மனதை நிறைத்தவளின் காதல் தீண்டல் ஆயிரம் மிஸ் யூக்களை பூ மழையாய் பொழிய, தவித்த மனம் தவிப்பைக் கூட்டியது.
கையைப் பிரித்து மெல்ல அதில் இதழ் பதிக்க, பெண்ணவள் உயிர் பெற்றாள்.
“வந்து எழுப்பினா என்ன?” பின்னிருந்தே நெஞ்சில் செல்ல அடிகள் விழ, “தூங்கிட்டு இருந்த டி, எழுப்ப மனசு வரல. பாட்டு கேட்டுதேன்னு வந்தா, நீ வாஷ் ரூம்ல!”
“ரொம்ப மிஸ் பண்ணினேன் மனோ…”
முகம் புதைந்திருந்த முதுகுக்குக் கிடைக்கும் முத்தங்கள் முகத்தில் கிடைத்தால் இனிக்குமே! ஆசை கொண்டவன் பெண்ணை முன்னுக்கு இழுக்க, அவன் இழுப்புக்கெல்லாம் இசைந்து கொடுக்கும் அளவிற்கு ஏக்கம் கொண்டவள் முன்னுக்கு வந்தாள்.
“தெரியும் டி”
இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். இருவர் கண்களிலும் ஏக்கம் கொட்டிக் கிடந்தன. அடக்க முடியா உணர்வுகளை இருவர் முகமும் காட்டிக் கொடுத்தது. கன்னம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டவன், “நல்லாத் தூங்கினியா?” என்று சகஜமாக ஆரம்பித்தான். அவளுக்குத்தான் சகஜ நிலைக்கு வரமுடியவில்லை.
நெற்றியில் பட்டுச் சென்ற இதழ் ஒற்றல் போதவில்லை. மூன்று வாரத்தின் தவிப்பை அணைக்க அணைப்பும் ஆறுதலும் தேவைப்பட்டது.
“நேத்து செல் ஃபோன வீட்டுலயே விட்டுட்டுப் போயிட்டியாக்கும்? நல்ல வேள ‘ஸ்பேர் கீ’ பேக்லயே இருந்துது. இல்ல ஹோட்டல் புக் பண்ணிப் போயிருப்பேன். அவ்வளவு டையர்ட்!”
அவன் பேசிக் கொண்டே இருந்தாலும், அவன் கையிலிருந்த கத்தி ஒரு ரிதத்தோடு ஆப்பிளை வெட்டிக் கொண்டிருந்தது. அடுப்பில் ஆப்பிள் சாஸ் தயாராகிக் கொண்டிருக்க, இவன் மெலிதாக ஆப்பிளை நறுக்கும் அழகில், பெண்ணின் கண்கள் லயித்து நின்றன.
“ஏதோ ஸ்டார் ஹோட்டல் செஃப் மாதிரி வெட்டுறீங்க மனோ.”
“மார்க் புண்ணியம்” முகம் பார்த்துப் புன்னகைத்தவனை அள்ளிக் கொள்ளத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு தானும் சகஜ நிலையிலிருப்பதாய் காட்டிக் கொண்டாள், மனோவின் விழி.
“நான் நான்…” கத்தியைக் கையில் வாங்கிக் கொண்டவளுக்கு அந்த ரிதம் வரவில்லை.
“என்ன மனோ நீங்க இப்டி தானே பண்ணினீங்க? எனக்கு வர மாட்டேங்குதே”
“ம்ம்… ஓரளவுக்கு இப்படித்தான்! ட்ரை பண்ணினா வரும். காய பிடிக்கிற விரல் நுனி வெளியில இருந்தா, ஸ்பீடா வெட்டும் போது கத்தி விரல வெட்டிடும். லைட்டா விரல மடிச்சு வச்சுக்கோ… முட்டி வெளியில வரட்டும்… இப்போ பொறுமையா கத்தி நுனிய கட்டிங் போர்ட விட்டு லிஃப்ட் பண்ணாம, விரல் முட்டிய தேச்சுகிட்டே வெட்டு. மென்மையா வயலின் வாசிக்கிற மாதிரி,” என்று பின்னோடு நின்று கைபிடித்துப் பாடம் எடுத்தான்.
அவனளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு வெட்ட ஆரம்பித்தாள். நிமிடங்கள் கரைந்தன. இருவர் கவனமும் கண்டிப்பாக ஆப்பிளில் இல்லை என்பதால் ஒற்றைத் துண்டு ஆப்பிள் அவளிடம் மாட்டிக் கொண்டு விழித்தது.
மீசை வருடிய கன்னம் குறுகுறுத்தது.
“மனோ…”
“ம்ம்…” மார்போடு அணைத்துப் பிடித்திருந்தவனுக்கு மனம் கட்டுப்பாட்டில் இல்லை.
“…”
“விழி”
“ம்ம்…” மார்போடு ஒன்றிக் கொண்டவளுக்கு வார்த்தைகள் இல்லை.
நாசி தீண்டிய நறுமணம் நாடி நரம்பை மீட்டியது. “மயக்குற டி”
“ம்ம்ம்”
தன்னைக் கொன்று கொண்டிருந்த கத்தி ஓரம் சென்று விழவும் ஆப்பிளிற்கு உள்ளுக்குள் குளிர்ந்திருக்க வேண்டும், ஹப்பாடா என்று ஒய்யாரமாய் சரிந்து விழுந்தது.
“பட்டு…” காது மடலில் உராய்ந்த மீசையின் குறுகுறுப்போ, காதல் கொண்ட ஆண்மகனின் உதட்டின் வருடலோ… இம்முறை ‘ம்ம்ம்’ கூட மறந்து போனது பெண்ணிற்கு.
காதலோடு காமம் கலக்கும் பொழுது எழும் உணர்வுகளை வார்த்தையால் வரைய முடியுமா? முடியுமென்றால் அவர்கள் இருவரின் புல்லட் ரயிலின் வேக இதயத் துடிப்பை வார்த்தையால் வடிக்கலாம். குடிக்க குடிக்க தாகம் தணிந்து போகாமல் உலரும் உதடுகளின் துடிப்பை எழுத்தில் எழுதலாம். விரல் தீண்டலில் எழும் மின்சாரம் இருவரையும் ஏன் பொசுக்கவில்லை என்று விளக்கலாம். சிலிர்க்கும் உடலில் எழும் உணர்வுகள், வார்த்தையில் அடங்கா உணர்வுகள் என்பதால், அவைகளை விளக்காமல் அவரவர் கற்பனைக்கு விட்டுவிடலாம்.
அடுத்த பாடல் ஆரம்பமானது.
“மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன், அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ…
எதை நான் கேட்பின், உனையே தருவாய்…”
கேட்காமலே என்னைத் தருவேன் என்ற நிலை அங்கு! மின்னதிர்ச்சி இருவரையும் விலக்கவில்லை, மாறாக இணைத்தது. மூன்று வாரத் தவிப்பு, மூன்று யுக தவிப்பாய்… தாகமாய் மாற, தாகம் தணியாமல் போக, நீண்ட இதழ் இணைப்பு, என்ன தேடுகிறோம் என்று தெரியாத தேடலாய் மாறியது.
குளிரைப் பரப்ப ஆரம்பித்திருந்த இலையுதிர் காலக் காற்றால் தணிக்க முடியா வெப்பம் அங்கு. எரிந்து கொண்டிருந்த அடுப்போ இல்லை அவர்கள் நிலையோ… அங்கு உஷ்ணம் சற்று அதிகம் தான்!
சில நீண்ட முத்தங்களோடு ஏக்கம் முடியும் என்று ஆரம்பிக்க, சத்தமில்லா முத்தங்கள் அவ்வளவு எளிதில் முடியக்கூடியவை அல்ல என்பது புரியும் நிலையைக் கடந்திருந்தனர். நிமிடங்களோடு பல பாடல்களும் காற்றோடு கலக்க, இன்ப முனகல் ஓசையில் அது கேட்காமலே போனது.
அடுத்தடுத்த கட்டமென்று கைகளும் உதடுகளும் முன்னேற, அங்கு நடந்ததெல்லாம் மற்றவர் கண்களுக்கு அத்துமீறல்கள். கண்டிப்பாகப் பெரிய சூரியகாந்தி மலர் போதாது… திரை சீலை கொண்டு மூட வேண்டிய காட்சிகள் அரங்கேற, இருவருக்கும் ஏகாந்தத்திலிருந்து வெளிவர முடியவும் இல்லை. வெளிவர மனமும் இல்லை.
அடுப்பிலிருந்த தண்ணீரும் அவர்களைப் போலவே கொதிநிலையை அடைந்து கொண்டிருந்தது. யாருமற்ற தனிமையில், கட்டிக்காத்து வைத்திருந்த கட்டுப்பாடுகள் காற்றில் ‘மனோ… விழி…’ என்ற பிதற்றல்களோடு பறக்க, மோகத் தீயில் லயித்த நேரம் அடுக்களையில் புகை மூட்டம். கண்டிப்பாக அவர்கள் ஏற்படுத்திய அனலால் இல்லை என்பது திண்ணம்.
கண்ணைக் கரித்து நாசியில் நுழைந்த கருகிய வாசம் கத்தரிக்கோலாக மாறியது! மோகக் கயிறு முதலில் மனோவிற்கு தான் அறுபட்டது. கரிந்து தீய்ந்து போன பாத்திரம் புகையைக் கிளப்பி விட்டிருக்க, மெல்ல விழியிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டவன், அடுப்பை அணைத்தான்.
மூச்சு வாங்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், இருவருக்குமே அந்த நிமிடத்தை கையாளத் தெரியவில்லை. விட்ட இடத்தில் தொடர ஆசை. இருவர் கண்களிலும் ஏக்கம் கொட்டிக் கிடந்தாலும், விட்டதைத் தொடர முடியா நிலை. தவிப்பு தான்! வேண்டும் தான்! ஆனால்? ம்ப்ச்! தங்கள் நிலையை இருவருமே வெறுத்தனர்.
அவள் கண் கொட்டாமல் அவனையே பார்க்க, மெல்ல அணைத்து, நெற்றியில் முத்தம் பதித்து, கலைந்த முடியை ஒதுக்கி, “நீ வேலைய பார். நான் ரூம்க்கு போறேன் விழி,” என்று மென்று விழுங்கிச் சென்றவனுக்கு இதயம் முன்பை விட அதிகமாய் அடித்துக் கொண்டது.
‘தள்ளி நின்று காதல் செய்’ என்ற கோட்பாடெல்லாம் அவள் ஓரப் பார்வையில் அன்றோடு பொடிந்து போனது மனோவிற்கு.
நாட்கள் நகர்ந்தன. கருவில் இருக்கும் குழந்தைக்கு மெல்ல மெல்ல ஒவ்வொரு உறுப்பாகத் தோன்றுமாம். பத்து மாதத்தில் முழு உருவம் பெற்று முழுமை பெற்றுவிடும். அவர்கள் காதலும் அப்படித்தான்… மெல்ல மெல்ல முழு உருவம் பெற்றுக் கொண்டிருந்தது.
நான்கு நாள் விடுப்பிற்கு மட்டும் வருபவன் வாரம் தவறாமல் வெள்ளி இரவு வந்துவிட்டு, திங்கள் விடியற்காலை நேரே அலுவலகம் சென்று விடுவான்.
சனிக்கிழமையானால், ஒரு வாரத் துணியை துவைப்பதிலிருந்து அடுத்த வாரத்திற்கான மாவரைத்து, குழம்பு, கூட்டு வகைகளைச் செய்து, தேதி வாரியாக டப்பாக்களில் போட்டு, இருவரும் அதை ஃப்ரீசரில் வைத்து அந்த வாரத்தை ஓட்டிவிடுவார்கள்.
“வேண்டாம் விழி, ஏன் சிரமப் படுற? விடு நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிப் பார்த்து அலுத்துப் போனான்.
“எனக்கு தெரியும். உங்க வேலையைப் பாருங்க!” என்று விடுவாள்.
அவனும் வீட்டைச் சுத்தம் செய்து, அந்த வாரத்திற்கான காய்களை வாங்கி, கழுவி, நறுக்கிக் கொடுத்து விடுவான். ஒரு வாரத்திற்கான இருவரின் உடையும் அவனே இஸ்திரி போட்டு வைத்து விட, வார நாட்கள் இருவருக்குமே அவதியின்றிச் செல்லும்.
சனிக்கிழமை ஸ்பெஷல் சமையல், வீட்டு வேலை! ஞாயிறன்று, தேவாலயம் சென்று அது முடிந்ததும் பிரிட்ஜ்வாட்டரில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அப்படியே அங்கேயே இருக்கும் கேன்டீனில் மதிய உணவை முடித்துவிட்டு வந்துவிடுவார்கள்.
“சர்ச்சுக்கு வா” என்று அவன் அழைத்ததில்லை. அவளுக்கு அவனோடு போவது பிடித்திருக்கவே, மதம் பெரிய விடயமாக இருக்கவில்லை. அவன் கோவிலுக்குள் சென்றாலும் வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை. மேலே கோவிலுள் ஐந்து நிமிடம் அவளோடு நின்றுவிட்டு கீழே இருக்கும் கேன்டீன் சென்று விடுவான். “என்னோடே முழு நேரமும் இரு” என்று அவளும் கேட்டதில்லை.
ஆக… மதம், கடவுள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு நடுவே சுவராய் எழும்ப இருவரும் விடவில்லை. உன் நம்பிக்கை உன்னோடு என்றளவில் இருவரும் இருந்து விட்டனர். இருமனமும் ஒன்றிய பின்னும் படுக்கையறை ஒன்றாயிருக்கவில்லை என்பதால் 99 விழுக்காடு கணவன் மனைவியாக மட்டுமே மாறியிருந்தனர் இருவரும்.
“என்னங்க…” அவள் அறையிலிருந்து அழைக்க,
“என்ன டீ…” அவன் சோஃபாவிலிருந்து எழுந்தானில்லை.
“கூப்பிட்டா வர வேண்டியது தானே… அது என்ன அங்க இருந்தே கேள்வி? வாங்க!” மனைவியின் முழு உரிமையோடு இப்பொழுதெல்லாம் வரும் சத்தம் தான் இது!
“இவ ஒருத்தி, மனுஷன உக்கார விட மாட்டா! கீழ இருக்க அவ ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போக இந்த மேக்கப் தேவையா இவளுக்கு!” சராசரி கணவன் போலவே புலம்பிக் கொண்டே உள்ளே சென்றான்.
முழு அலங்காரத்தில் நின்றிருந்தவள், தலை வாரிக் கொண்டிருந்தாள்.
“என்ன டி?” என்றவன் குரலில் சலிப்பு.
“இந்த பிளீட்ஸ்ச அடுக்கி, கொஞ்சம் அமுக்கி விடுங்களேன்!” அவன் மனமறிந்து, கண் சுருக்கி கெஞ்சலாய் கேட்டு நிற்பவளிடம் மாட்டேன் என அவனால் கூற தான் முடியுமா?
“இதுக்கு தான் இந்த பட்டுப் புடவை எல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன்… சும்மா வேல வாங்கிட்டே இரு. இப்போ புடவை கட்டியே ஆகணும்ன்னு என்ன இருக்கு?” புலம்பல் நின்ற பாடில்லை என்றாலும் ஒற்றை முழங்காலில் நின்று சொன்ன வேலையைச் செய்தான்.
“கடைசி நாள் கொலுங்க! பாயல் ஒரே கலர்ல எங்க எல்லாரையும் புடவ கட்டிட்டு வரச் சொன்னா… அது தான்! நல்லா இருக்கேனா?”
“ம்ம் ம்ம்ம் இருக்க இருக்க! போதுமா பாரு!”
“பக்கா! என்னங்க, குனிஞ்சா, இந்த முந்தி முன்ன வந்து விழும்.”
“தெரியும் தெரியும்! பிளவுஸ் பின்னாடி, முந்திய சேத்து வச்சு ஒரு பின் குத்தணும்! போடி சும்மா வேல வாங்கிட்டு!”
“ப்ளீஸ் டா பையா…” அவள் மீண்டும் கண் சுருக்கி கொஞ்சலாய் கெஞ்ச,
“குடு… அப்பிடியே உன் சதையோட குத்தி விடுறேன்!”
“ஏன் டாமா… ஏன் இவ்வளவு கோபம்?”
“ஒரு மண்ணும் இல்ல… போ டி”
“சும்மா சொல்லுங்க…”
“நீ அங்க போய் தான் ஆகணுமா? ஒரு நாள் பூரா வேஸ்ட் பண்ற!”
“எப்பவோ ஒரு நாள் தானே… இதுக்கு போய் கோவிச்சுப்பீங்களா?”
“நான் என்ன வேண்டாம்ன்னா சொன்னேன்? நான் ரெடி தான். இப்போ கூட நேரம் இருக்கு ஆரம்பிப்போமா?” அவள் கண் சிமிட்டி சிரித்துக் கொண்டே உதட்டுச் சாயத்தைக் கையில் எடுக்க…
“நான் நல்லவனா இருக்கவே, வாய் கொழுப்பு டி உனக்கு. எப்பவும், கையும் வாயும் என் பேச்சக் கேட்டு சும்மா இருக்காது. சொல்லிட்டேன்!”
“அம்மாடியோ… என்ன ஒரு மிரட்டல்! க்கும்!”
சாயத்தை உதட்டில் வைக்கவும், அதைப் பிடுங்கி மேசையில் வைத்தவன், இடையோடு கட்டிக் கொண்டு, “அது எதுக்கு?” என்று செல்லம் கொஞ்ச,
“ம்ம்ம்… தெரியாதாக்கும்! உதடு சிவக்க தான்,” என்றவள் இதழ் விரிய ஆரம்பிக்க, “சிவக்கணும் அவ்வளவு தானே… அதுக்கு, அது எதுக்கு?” என்று கேட்டவன், பெண்ணவளின் இதழோடு கன்னமும் சிவக்க என்ன செய்திருப்பான் என்பது நாம் அறிந்ததே!