“அவனுக்கு வேலை போய்டுச்சு நியூஸ் வந்ததும்தான்டா பிரபா எனக்கு நிம்மதியா இருந்தது” அவனுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை வாங்கிக் கொடுத்த நிம்மதி அவன் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
“தேங்க்ஸ் பார்த்தி. பாரு..”
“அவகிட்ட சொல்ல வேணாம்டா”
“இல்ல அவங்க வீட்டுக்கு தெரிஞ்சா.. உன்னைப் போல அவங்களும் நிம்மதியா ஃபீல் பண்ணுவாங்கன்னு சொல்ல வந்தேன். இந்நேரம் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றான் பிரபஞ்சன்.
“ம்ம்ம். என்னைப் போல அவங்களும் சந்தோஷப்படட்டும்” என்றான் புன்னகைத்து.
“ஓகே. சரி, வா. நாம ஷாப்பிங் போவோம். நீ அமெரிக்கப் போக ரெடியாவோம்”
“என்னைத் தூர தேசத்துக்குத் துரத்தி விடுறதுல அவ்ளோ சந்தோஷம். இல்ல பிரபா?” என்று முறைத்தான்.
“அதான் ஏற்கெனவே என்னைக் கை விட்டுட்டியே” என்று மனம் நொந்து சொன்னான்.
“சும்மா அதையே சொல்லாத பார்த்தி. ஆல்ரெடி உன் மனசு பார்கவி பக்கம் சாஞ்சுருச்சுன்னு எனக்குத் தெரியாதா? பிரபாவதியை வேணாம்னு சொல்லி ஹர்ட் பண்ண பயந்த நீ. சரியா? பார்கவி மனசுல நீ பதிஞ்சு போற அளவுக்கு நீ நடந்துக்கிட்டன்னு அந்தக் குற்ற உணர்ச்சி வேற உனக்கு இருந்தது. அதை நீ என்கிட்டயே சொல்லி புலம்பின. இப்போ அவளுக்கும் கல்யாணம் நின்றுச்சு. அதே போல உனக்கும்.. இந்நேரம் நான் வந்தா.. உன் மனசு தானா பார்கவி பக்கம் சாயும். ஆனா அது சரியா இருக்காது பார்த்தி”
“ம்ம்ம், கரெக்ட்தான். அது சரியா இருக்காது.”
“லவ் பரிதாபம் பார்த்து வரக் கூடாது பார்த்தி”
“அதுவும் பார்கவி மாதிரி ஒரு பொண்ணு, பரிதாபம் பார்த்து வர்ற காதலை ஏத்துப்பான்னு நீ நினைக்கிற?” என்று கேட்டு கசப்பாகச் சிரித்தான் பார்த்திபன்.
“நான் அவளை மட்டும் யோசிக்கலடா. எனக்கு நீங்க ரெண்டு பேருமே ரொம்ப முக்கியம். அதுலயும் நீ..” என்று கரகரத்த தொண்டையைச் செருமி சரி செய்தான் பிரபஞ்சன்.
பார்த்திபன் அவன் தோளில் கைப் போட, “லவ்லாம் யார் சொல்லியும், வற்புறுத்தியும் வரக் கூடாதுடா. அதுதானா பூ பூக்கிறது போல நடக்கணும். அவ இல்லாம உலகமே இல்லன்னு, உனக்கு மூச்சு முட்டி போகணும். அப்படி ஒரு ஃபீல் வந்தா மட்டும்.. உனக்குப் புரியுதா?” என்று நண்பனை பார்த்துக் கேட்டான் பிரபஞ்சன்.
“பார்கவி போல்ட்டான பொண்ணு. அவ சீக்கிரம் நார்மலாகி மூவ் ஆன் ஆகிடுவா. அதுனால நீயும் அவளைப் பத்தி ரொம்ப யோசிச்சு மனச குழப்பிக்காம யூஎஸ் கிளம்பு.” என்றான்.
அதற்கு மேல் அது குறித்து அதிகம் பேசவில்லை அவர்கள்.
இருவரும் மதிய உணவை முடித்துக் கொண்டு பார்த்திபனின் பயணத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்க வெளியே சென்றார்கள்.
அவனுக்கு அலுவலகத்துக்கு அணியும் உடைகள், காலணிகள், குளிருக்கு இதமாக ஜாக்கெட் என நண்பனுக்கு வாங்கிக் குவித்து விட்டான் பிரபஞ்சன்.
“டேய் போதும்டா பிரபா” என்று பார்த்திபன் தடுக்க, “கள்ளக் காதலிக்கு கணக்கு பாக்க கூடாதுடா” என்று குறும்பு சிரிப்புடன் சொல்லி கண்ணடித்தான் அவன்.
“இதெல்லாம் உன் பொண்டாட்டிக்கு ரெக்கார்ட் பண்ணி அனுப்பணும்டா”
“பார்த்தியா, கள்ளக் காதலிங்கள போலவே நீயும் மிரட்டுற?” என்று பிரபஞ்சன் கோபிக்க, அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த நபர் குபீரென்று சிரித்து விட, நண்பர்களால் சிரிப்பை அடக்க முடியாமல் போனது.
பார்த்திபனுக்குப் பெட்டி அடுக்க உதவி செய்து, அவன் விமானம் ஏறும் தினமன்று சந்திக்க வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினான் பிரபஞ்சன்.
அவன் காரில் ஏறப் போகும் போது அவனை நிறுத்தினான் பார்த்திபன்.
“என்னடா?”
“எனக்குப் பார்கவிய ஒரே ஒரு டைம் பார்க்கணும்”
“எதுக்குடா? அதெப்படி முடியும்?”
“பிளீஸ், பிரபா. எனக்கு அவ மேல பரிதாபம்லாம் இல்ல. என்னை நேசிச்ச பொண்ணுடா அவ. அவளைக் கடைசியா நான் எப்படிப் பார்த்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்குத்தானே? நம்ம பாருடா. அவளை நினைச்சாலே.. எனக்கு.. அவ உடைஞ்சு போய் நின்ன ஞாபகம்தான் வருது.”
“போடாங்க. அவ செம்ம ஸ்ட்ராங்கா ஹேண்டில் பண்ணா..”
“நான் இல்லங்கள. அந்தச் சிட்டுவேஷனை அவ ஹேண்டில் பண்ணத நினைக்க நினைக்க எனக்கு ஆச்சரியமா பிரமிப்பா.. பெருமையா இருக்குடா. ஆனாலும் அந்த முகம் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. பிளீஸ் புரிஞ்சுக்கோயேன்”
என்று நண்பனை முறைத்தான்.
பிரபஞ்சன் ஆழ்ந்த மூச்செடுத்து, “எனக்குப் புரியுது பார்த்தி. ஆனா இப்போல்லாம் அவ எங்கேயும் வெளில வர்றது இல்லடா. நாம அவ வீட்டுக்கு போய் நிக்கிறதுலாம் நல்லாருக்காது. அவ உன்னை மீட் பண்ண விரும்புவாளான்னு..” என்று அவன் தயங்க, “விரும்ப மாட்டா, எனக்குத் தெரியும்” என்று நண்பன் சொல்லத் தயங்கியதை தான் சொல்லி முடித்தான் பார்த்திபன்.
“எனக்கு அவ நல்லா இருக்கான்னு தெரியணும் பிரபா. அவ்ளோதான். அவளை ஒரே ஒரு முறை சிரிச்ச முகமா, பழைய பார்கவியா பார்த்துட்டா போதும் எனக்கு” என்றான் அடர்ந்த குரலில்.
“பழைய பார்கவி திரும்பி வர பல மாசங்கள் எடுக்கும்” என்று ஒரு வேகத்தில் சொல்லி விட்டு நாக்கை கடித்தான் பிரபஞ்சன்.
“சாரிடா. எனக்கு அதைத் தவிர வேற என்ன சொல்லன்னு தெரியல” என்று நெற்றியை கீறினான் பார்த்திபன்.
“விடுடா. சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துடும். சும்மா உன்னை நீயே எல்லாத்துக்கும் ப்ளேம் பண்ணிட்டு இருக்காத” என்று ஆதரவாக அவன் தோளை அழுத்தினான்.
“நீ ஓகேவா? இல்ல நான் உன்னோட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கவா?” என்று அவன் முகம் பார்த்து பிரபஞ்சன் கேட்க, புரியாமல் புருவம் சுருக்கினான் அவன்.
“இல்ல, இன்னைக்கு அந்தப் பிரபாவதிக்கு கல்யாணம்..”
“ப்ச், அடுத்தவன் பொண்டாட்டி பத்தி நமக்கென்ன பேச்சு” என்று சாதாரணமாகச் சொன்னவன், “அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும். அவ்ளோதான் என் வேண்டுதல். அதுக்கு மேல அந்தப் பொண்ணைப் பத்தி நான் யோசிக்கல. யோசிக்கவும் மாட்டேன்” என்று முடித்தான்.
மெலிதாக முறுவலித்த பிரபஞ்சன், “நான் முடிஞ்சா நாளைக்கும் ஒர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துட்டு வர பார்க்கறேன்டா” என்று சொல்லி விடை பெற்றான்.
பிரியதர்ஷினியை அழைக்கப் பார்கவியின் வீட்டுக்குச் சென்றான்.
“அமெரிக்காலாம் ஒரு நாடா? நம்ம சிங்கார சென்னை போல வருமா?” என்ற பார்கவியின் குரலை கேட்டபடியே அவள் வீட்டினுள் நுழைந்தான்.
அவனைக் கண்டதும் அந்தப் பேச்சுப் பாதியில் நிற்க அவன் புறம் திரும்பினார்கள்.
“பேசாம நாம யூஎஸ் போவோமா பிரபா?” என்று பிரியதர்ஷினி கேட்க, “உனக்கெல்லாம் அவன் விசா தர மாட்டான் பிரி” என்று அவளின் வயிற்றைக் கண் காட்டினாள் பார்கவி.
சட்டென அங்கே சிரிப்பலை பரவியது.
அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் மாமனார் வீட்டுக்கு நடந்தார்கள்.
பார்கவி அவர்களுக்குக் கையசைத்து விட்டு ரங்கராஜனுடன் பேசிக் கொண்டே அவர்கள் தெருவில் நடைப் பயிற்சி மேற்கொண்டாள்.
அந்நேரம் பிரபஞ்சனை அழைத்து விட்டான் பார்த்திபன். அதுவும் காணொளி அழைப்பின் வழியே இணைந்திருந்தான்.
பிரபஞ்சன் காதொலிப்பானை பொறுத்தி, “என்னடா பார்த்தி?” என்று திரையைப் பார்த்துக் கேட்டான்.
“பார்கவி பக்கத்துல இருந்தா அவள வீடியோல காட்டேன்”
“டேய்..” என்று பல்லைக் கடித்தான்.
“எனக்காக இது கூடச் செய்ய மாட்டியா பிரபா..”
“ஐயோ என் பொண்டாட்டி வேற பக்கத்துல நிக்கறாளேடா..”
“ப்ளூடூத் போட்டுருக்கடா நீ. உன் பொண்டாட்டிக்கு கேட்காது”
“அடேய், ஸ்கிரீன்ல உன்னைப் பார்த்துட்டா அவ”
“பார்த்தா என்ன? பரவாயில்ல டா, நீ போனை திருப்பு” என்றான் அடமாக.
“அய்யோ” என்று இவன் புலம்ப, “இதெல்லாம் ரொம்பக் கம்மிடா பிரபா. உனக்காக நான் எவ்ளோ செஞ்சுருப்பேன்” என்று அவர்களின் வரலாற்றை நினைவுப்படுத்தினான்.
“அதுக்குத்தான் இப்போ சேர்த்து வச்சு செய்யறியே” என்று புலம்பிய பிரபஞ்சன் அலைபேசியைப் பார்கவி பக்கமே திருப்பவில்லை. அதில் பார்த்திபனுக்கு மிகுந்த மன வருத்தம்.
“அவ நல்லா இருக்கான்னு எனக்குத் தெரியணும்டா பிளீஸ்” என்று தொடந்து வந்த நாள்களும் அவன் சொல்ல, நண்பனின் கோரிக்கையை மனைவிக்குச் சொல்லி, அவள் பார்கவியோடு இருக்கும் போது, அவளிடம் பேசுவதற்கு அழைத்தது போலக் காணொளி அழைப்பில் சென்றான் பிரபஞ்சன்.
இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி திரைப்படத்தின் நகைச்சுவை துணுக்குகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க, அதைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
அப்படி அவளைக் காணவே அவனுக்கு மனம் கனிந்தது. கண்களில் நீர் கோர்க்க சிரித்துக் கொண்டிருந்தாள்.
“தண்ணிய குடி பாரு” என்று மகளுக்குத் தண்ணீரை நீட்டி அவளின் கண்ணீரை துடைத்து விட்டார் காவேரி.
அந்தச் சில நொடிகள் அவள் முகம் தெரியாமல் போக, பொறுமையாகக் காத்திருந்தான்.
சில நொடிகள் கழித்து அவனது அலைபேசி திரையை மீண்டும் அவள் ஆக்கிரமித்தாள்.
நெற்றியில் தழும்பு, கழுத்தில் விரல் நீள கீறல் என எதுவும் அவன் கண்ணில் இருந்து தப்பவில்லை. மனம் சட்டென்று கசங்கியது. ஆனால் மறுநொடியே அவளின் அந்தச் சிரிப்பு அவனை ஆசுவாசப்படுத்தியது.
அக்கணம் அவனது குற்ற உணர்வு நிரம்பவும் குறைந்திருந்தது.
அந்தத் தெளிவான மனத்துடன் அமெரிக்கா சென்றிருந்தான் அவன்.
இப்போது பார்கவி அலுவலகம் செல்லத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகி இருந்தது.
அவளுக்கு அலுவலகம், உறவினர்கள் என எல்லாப் பக்கமும் கேள்விகள் குறைந்திருந்தன. அனுதாப பார்வைகள் இப்போது இல்லை.
அவளின் உலகம் சற்றே இயல்பாக இயங்கத் தொடங்கி இருந்தது.
அன்றிரவு இரவு உணவுக்குப் பிறகு அன்றாட வழக்கமாக அப்பாவுடன் தெருவில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தாள். அப்போது அவளது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பொலி தொடர்ந்து வந்தது.
அப்பாவுடன் பேசிக் கொண்டே அலைபேசியை எடுத்து திறந்தாள், திரையில் தெரிந்த செய்தியை வாசித்த மறுகணம் அவள் விழிகள் கேள்வியாக விரிந்தன.
“ஹலோ பார்கவி, எப்படி இருக்கீங்க?” என்று ஆங்கிலத்தில் வந்திருந்தது கேள்வி.
“நல்லா இருப்பேன்னு நம்புறேன்.” என்று அடுத்தச் செய்தி வந்து விழ, அந்தப் புதிய எண்ணை புருவங்கள் சுருங்க புதிராகப் பார்த்தாள். அது இந்திய எண் அல்ல. ஏதோ வெளிநாட்டு எண் என்பதை உணர்ந்து, “எந்த நாடாக இருக்கும்?” என்று மனத்தில் யோசித்தபடியே அந்த எண்ணை தொட்டாள்.
அந்த வாட்ஸ்அப் செயலியின் முகப்புப் படத்தில் புன்னகையுடன் நின்றிருந்தான் பார்த்திபன்.
அவனது உதட்டோர குழி தெரியும் அளவுக்கு மலர்ந்த புன்னகையுடன் நின்றிருந்தான். அவள் விழிகள் அதிர்ந்து விரிய, “நான் பார்த்திபன்” என்று பதில் வந்து திரையில் விழுந்தது.
அவன் முகத்தில் இருந்து விழிகளை விலக்கியவள், அவனுக்குப் பதில் அனுப்பவில்லை.