பார்த்திபன் காதலி – 23 (1)

பார்த்திபன் கைக் கொள்ளா பொருட்களுடன் அலுவலகத்தின் கடைசிப் படியில் கால் வைத்தவன், தடுமாறி கீழே விழப் போகையில் வலிய கரமொன்று நீண்டு அவன் கைப் பிடித்து நிறுத்தியது.

அந்தத் தொடுகையில் யாரென உணர்ந்து, “பிரபா” என்று அதிர்ந்து திரும்பினான். பிரபஞ்சன் அவன் கையில் இருந்த பாதிப் பொருட்களை வாங்கிக் கொண்டு, “சாரிடா” என்றான்.

பார்த்திபன் நண்பனை கடுமையாக முறைத்து நின்றான். ‘நீயே என்னைக் கை விட்டு விட்டாயே’ என்ற குற்றச்சாட்டும், கோபமும் அந்தக் கண்களில் இருக்கப் பிரபஞ்சன் தடுமாறினான்.

“நான் உனக்கு முக்கியமே இல்லைன்னு நிரூபிச்சுட்ட இல்லடா பிரபா?”

“பார்த்திப் பிளீஸ்..”

“கள்ளக் காதலியை கை விடுறதுலாம் உலக வழக்கம்தானே?” பிரபஞ்சனின் பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென்று முன்னே நடந்து விட்டான்.

“பார்த்திப் பிளீஸ் நில்லுடா.”

“பேசாதடா பிரபா. ச்சை இப்போல்லாம் உன் பேரை சொல்லவே எனக்குப் பிடிக்கல.”

“டேய்” என்று எட்டி நண்பனின் கையைப் பிடித்தான் பிரபஞ்சன்.

“சாரின்னு சொல்றேன் இல்ல?”

“நானும் சாரி சொன்னேனே பிரபா. ஒரு டைம் ரெண்டு டைம் இல்லடா, ஓராயிரம் சாரி சொல்ல ரெடியா இருந்தேன். அத்தனை முறை மன்னிப்புக் கேட்டேன். ஆனா அன்னைக்கு நீ என்னை என்ன செஞ்ச? உன்னால என்னை மன்னிக்க முடியல இல்ல? அவ்ளோதான் நம்ம பிரெண்ட்ஷிப்பா டா பிரபஞ்சா? மத்தவங்கள விடு, நீ என்னை நம்பல இல்ல?” என்று கரகரத்த குரலில் கேட்டான்.

“பார்த்தி, என் இடத்துல இருந்து யோசிச்சி பேசுடா”

“உன் இடத்துல இருந்து யோசிச்சதாலதான் அன்னைக்கு நீ கொடுத்த அடியை எல்லாம் அமைதியா வாங்கிட்டு போனேன். அது உனக்குப் புரியல இல்ல?”

“பார்த்திப் பிளீஸ் டா”

“போடா பிரபா” என்று நடையைக் கட்டி விட்டான்.

அவன் அமெரிக்கா செல்வதால் இங்கே அலுவலகத்தைக் காலி செய்திருந்தான். அந்தப் பொருட்களும், நண்பர்கள் அவனை வழியனுப்பும் பொருட்டுக் கொடுத்த பரிசு பொருட்களும் அவன் கையில் இருந்தன.

அவன் முறைத்துக் கொண்டு முன்னே செல்ல, பிரபஞ்சன் அவனைக் கெஞ்சி, சமாதானம் செய்து தன் காரில் ஏற்றியிருந்தான்.

பார்த்திபனின் வீடு வரும் வரை இருவருக்கும் இடையே மௌனம்தான் பேசிக் கொண்டிருந்தது.

“தேங்க்ஸ் ஃபார் த லிப்ட் மிஸ்டர் பி” என்று காரில் இருந்து இறங்கி அவனைத் திரும்பியும் பாராமல் வீட்டை நோக்கி நடந்தான் பார்த்திபன்.

“டேய் டேய் சின்ன வீடு மாதிரி முறுக்குக்கிட்டு திரியாதடா. என் பொண்டாட்டிய சமாதானப்படுத்துறது கூட ஈஸி போல. என்னால உன்னைச் சமாளிக்க முடியலடா” என்று புலம்பினான் பிரபஞ்சன்.

“என்ன சொல்லு, பொண்டாட்டி ஸ்பெஷல்தான். இல்ல?”

“சாரிடா, பார்த்தி” என்று அவன் கெஞ்ச, அந்நேரம் வாசல் கதவை திறந்த சத்யபாமா, “வாப்பா, என்ன உன்னைய ஆளே பார்க்க முடியல?” என்று பிரபஞ்சனை நலம் விசாரித்தார்.

“உள்ள வாப்பா” என்று அவர் அழைக்கவும், பார்த்திபனை முந்திக் கொண்டு வீட்டினுள் சென்றான் பிரபஞ்சன்.

சத்யபாமா அவனை அமர சொல்லி, அவனுக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தார்.

“மோரை குடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பு நீ” என்று பார்த்திபன் அவனை மிரட்ட, பிரபஞ்சன் அதைக் காதில் வாங்காமல் சத்யபாமாவிடம் பேசினான்.

“என்ன தம்பி உன்னை ரொம்ப நாளா ஆளையே காணோம். என் பையன் வாழ்க்கையில என்னென்னமோ நடந்து போச்சு. நீங்களெல்லாம் அவனுக்குத் துணையா இருப்பீங்கன்னு நினைச்சா..” என்று சத்யபாமா சொல்லி முடிக்கும் முன், “அம்மா” என்று அவரை அதட்டி அவன் கையில் இருந்த பொருள்களைக் கூடத்து மேஜையில் வைத்தான் பார்த்திபன்.

பிரபஞ்சன் எழுந்து சென்று நண்பனின் கையைப் பிடித்தான்.

“பிரியா ப்ரெக்னன்ட்டா இருக்காடா பார்த்தி” என்றான். சட்டென்று பார்த்திபனின் முகம் கனிய புன்னகைத்து விட்டான் அவன்.

“கங்கிராட்ஸ் டா மச்சா” என்று நண்பனின் தோளில் தட்டினான்.

“டாக்டர பார்த்தீங்களா? எத்தனை மாசம்?” என்று ஆவலுடன் அவன் கேட்க, பிரபஞ்சன் திரும்பி அந்தச் சந்தோஷ செய்தியை சத்யபாமாவிடம் பகிர்ந்தான்.

“ரொம்பச் சந்தோஷம் தம்பி. பிரியாவை ஒருநாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா. நானும் சொல்லிட்டே இருக்கேன். நீங்க வர்ற மாதிரி இல்ல” என்று கோபித்துக் கொண்டார் அவர்.

“இவன்தான் இப்போ ஊருக்குப் போறான் இல்லம்மா. இனிமே பாருங்க. நானும், என் பொண்டாட்டியும் இங்க வந்துடுறோம்” என்றான் புன்னகைத்து.

“டேய்” என்று பார்த்திபன் முறைக்க, “இவனுக்குப் பொண்ணு கொடுக்க என் தம்பி ரெடியா இருக்கான்ப்பா. ஆனா உன் ஃப்ரெண்ட்டுதான் ஒத்துக்க மாட்டேங்கறான். நீ கொஞ்சம் இவனுக்கு எடுத்துச் சொல்லலாம் இல்ல?” என்று சத்யபாமா புலம்ப, நண்பனை திரும்பிப் பார்த்தான் அவன்.

“டேய் எனக்கு நாலு நாள்ல ஃப்ளைட்டா. என்னை என்ன பார்க்கற?” என்று பார்த்திபன் கோபமாகச் சொல்ல, “உன்னைய என்ன இப்பவே தாலி கட்டி அவளைக் கூடக் கூட்டிட்டுப் போன்னா சொல்றாங்க? இப்போ பூ வச்சு, பரிசம் போட்டுட்டு நீ அமெரிக்கா என்ன ஆப்பிரிக்கா கூடப் போயிட்டு வா. வந்து பொறுமையா கல்யாணம் பண்ணிக்கோன்னுதானே உன் மாமன் சொல்றான். நீ இவனுக்கு எடுத்துச் சொல்லுப்பா பிரபா” என்றார் சத்யபாமா.

பிரபஞ்சன் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்க, “ம்மா, நான் திரும்பி வர ரெண்டு வருசம் ஆகும்மா” என்று சலிப்புடன் சொன்னான் பார்த்திபன்.

“ஏன் உனக்கு நடுவுல லீவ் தர மாட்டாங்களா?”

“புரியாம பேசாதம்மா. அந்தப் புள்ளைய மொத எனக்குப் பிடிக்கணும் இல்ல? உன் தம்பி மக இப்பத்தான் மா காலேஜ் முடிச்சுருக்கா..”

“அதுக்கு என்னடா? ஏதாவது ஒரு சாக்க சொல்லிடுவியே. அந்தப் போலீஸ்காரன் மகளுக்கு இன்னைக்குக் கல்யாணம். அந்த ஆளு வம்படியா நம்ம வீடு தேடி வந்து பத்திரிக்கை வச்சுட்டு போய் இருக்காரு. அவள விட நீ என்னத்துல குறைஞ்சுட்ட? சரி இப்போ அவசரமா கல்யாணம் வேணாம். நிச்சயம் பண்ணிட்டுப் போன்னா கேட்கறியா நீயி”

“ம்மா, எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கல. பிடிக்கவும் பிடிக்காது. என்னை விட்ரு.” என்று கத்திய நண்பனை கூர்ந்து நோக்கினான் பிரபஞ்சன்.

சத்யபாமா மேலும் புலம்ப, “அவன ஃப்ரீயா விடுங்கம்மா. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்.” என்று அவருக்கு நம்பிக்கை வார்த்தைகளைச் சொன்னான் பிரபஞ்சன்.

சத்யபாமா அவர் போக்கில் புலம்பிக் கொண்டே தொலைக்காட்சி முன் அமர, நண்பர்கள் இருவரும் வீட்டின் பின் பக்கம் சென்றார்கள்.

பார்த்திபனை எப்படிச் சமாதானப்படுத்துவது எனப் பிரபஞ்சனுக்குத் தெரியாதா என்ன?

“நீ ரொம்ப நல்லவன்டா பார்த்தி. உனக்குக் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்” என்று பிரபலமான சினிமா வசனத்தைச் சொன்னான்.

பார்த்திபன் எகிறி நண்பனின் கழுத்தை நெரித்து, “எப்போ வந்து என்னத்தடா சொல்ற?” என்று கத்தினான்.

“உன்னாலதான் நான் இப்படி இருக்கேன். என் அம்மாப்பா லவ் மேரேஜ்டா. நானும்.. வேணாம் விடு. உன்னைப் பார்த்து லவ்னாலே அலர்ஜி ஆகிடுச்சு போல எனக்கு. பார்கவிய பார்க்காத பேசாதன்னு என்னை வார்ன் பண்ணவன் நீதானே டா?” என்று பல்லைக் கடித்தான்.

“கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து விடாதடா பயந்தாங்கொள்ளி பார்த்தி”

“கழுத்த நெறிக்கும் போதும் பேச்சா பேசுற?” என்று அவன் கழுத்தில் அழுத்தம் கொடுத்தான் பார்த்திபன்.

“டேய் பார்த்தி, என் பொண்டாட்டிய யோசிடா. ப்ரெக்னன்ட்டா இருக்கா வேற. இப்போ நீ என்னைக் கொன்னா கள்ளக் காதலன் கழுத்தை நெரித்துக் கொலைன்னு நியூஸ் வரும்டா”

“ச்சைக்” என்று கையை விலக்கினான்.

இருவரும் மூச்சு வாங்க தோட்டத்துத் தரையில் சரிந்து அமர்ந்தார்கள்.

“சாரி” ஒன்று போலவே மன்னிப்பையும் முன் வைத்தார்கள்.

“பாரு எப்படி இருக்கா?” உணர்ச்சி மேலிட கரகரத்த குரலில் கேட்டான் பார்த்திபன்.

பட்டென்று திரும்பி, “நீ எப்படி இருக்கப் பார்த்தி?” என்று நண்பனை கேட்டான் பிரபஞ்சன். அவனுக்கு நொடியில் கண்கள் கலங்கி விட்டன.

“டேய் பார்த்தி” என்று அவன் தோளில் கைப் போட்டு அழுத்தினான்.

“பார்த்தா தெரியல. இருக்கேன்டா. லைஃப் என்னை இழுத்துட்டு போற பக்கமெல்லாம் இழுபட்டுட்டு இருக்கேன் நான். ஆனா ஐ மிஸ்டு யூ டா. எங்க நான் யூஎஸ் போனாலும்.. நீ பேசாம இருந்துடுவியோன்னு.. அப்படிப் பேசாம இருந்துருப்பியா பிரபா?” என்று குரல் உடைய கேட்டான்.

“எனக்கு உன் மேல ஆரம்பத்துல கோபம் இருந்தது உண்மை பார்த்தி. ஆனா பொறுமையா யோசிச்சா உன் பக்க நியாயமும் புரிஞ்சது. உன் கல்யாணம் நின்னது தெரிஞ்சு… சாரிடா.” என்றான் உளமார.

“பொய்யை விடப் பாதி உண்மை பேராபத்துன்னு புரிஞ்சிதான் நீ அந்தப் பாரியை பத்தி உடனே என்கிட்ட சொல்லலன்னு புரிஞ்சதுடா. ஆனா அந்த நேரம் பார்கவிய அப்படிப் பார்க்கும் போது என் கோபம் நியாயமா இல்லையான்னு நீயே சொல்லுடா?” என்று கேட்டான்.

பார்த்திபன் மௌனமாக அவன் பேச்சை ஆமோதித்து, “பாரு எப்படி இருக்கா?” என்று மீண்டும் கேட்டான்.

“ம்ம். முதல் ஒரு வாரம் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டா. இப்போ ஓரளவு ஓகே” என்றான்.

“அந்தப் பொறுக்கி நாயை அடிச்சு கொல்லாம விட்டுட்டோமேன்னுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்று பார்த்திபன் சொல்லவும், “டேய்” என்றான் பிரபஞ்சன்.

“நீதான் ஏதேதோ பிளான் பண்ணி அவனுக்கு வேலை இல்லாம பண்ணிட்ட போல?”

“ஏதேதோ பிளான் பண்ணல பிரபா. உண்மையா நடந்ததைச் சொல்ல எதுக்குப் பிளான்? இவனைப் போலத் திருட்டு நாய்ங்கல்லாம் தடயம் இல்லாம தப்பு பண்ண மாட்டாங்க. அந்தத் தடயம் நம்ம கண்ணுல சிக்கிட்டா போதும் செத்தானுங்க” என்றான் கோபத்துடன்.

பாரிவேந்தன் அமெரிக்காவில் இருக்கும் போது அவன் காதலித்த பெண்ணும் அவனும் ஒரே நிறுவனத்தில்தான் பணி புரிந்திருக்கிறார்கள்.‌ அந்தப் பெண் சென்னை வந்ததும் அவன் மேல் அலுவல் ரீதியான பாலியல் துன்புறுத்தல் என அலுவலகத்தில் புகாரளித்து விட்டாள். அவளிடம் போதுமான ஆதாரங்கள் இருந்தும் கூட, அவர்கள் சேர்ந்து வாழ்ந்ததைக் குறிப்பிட்டு, அதை அலுவல் ரீதியான குற்றமாகக் கருத முடியாது என்று விட்டார்கள். அவள் விடாமல் போராட, பாரிவேந்தனிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கினார்கள். அந்தப் பெண் வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்துக்கு மாறியிருந்தாள்.

பாரிவேந்தன் போன்றவர்களால் எங்கும் நியாயமாக இருக்க முடியாது என்று கணித்துத் தற்போது இருக்கும் சென்னை அலுவகத்தில் அவன் மாமன் மகன் அசோக்கை விசாரிக்கச் சொன்னான்.

அங்கும் அவனது குழுவில் பணிபுரியும் பெண்ணிற்கு அவன் தொல்லை கொடுத்தது தெரிய வர, பின்னர்க் காரியங்கள் எல்லாம் அவர்களுக்கு எளிதாகப் போனது.

இம்முறை இந்தப் பெண், அவனது, “சாட், வீடியோ கால், மொபைல் அழைப்புகள்” என ஒன்று விடாமல் பதிவு செய்து வைத்திருந்தாள். ஆகவே அவளுக்குத் தைரியம் சொல்லி அவளை வைத்தே ஆதாரத்துடன் புகாரளிக்க வைத்தார்கள். ஏற்கெனவே அவன் மேல் ஒரு புகார் வந்திருக்க, முதல் முறை போல மன்னிப்புக் கடிதம் கேட்காமல் இம்முறை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். அது இத்தனை விரைவாக நடக்கும் என்று பார்த்திபன், அசோக் இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

பாரிவேந்தன் திருமணம் நின்ற விஷயம், அது குறித்த தகவல்கள் அலுவகத்தில் வதந்தியாகப் பரவ, நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top