கோபத்தில் அந்நியமாகத் தெரிந்தவனின் முகம் சிரிப்பில் நெருங்கி அவளை வசீகரித்தது.
அவனை வங்கியில் பலமுறை புன்னகைத்து பார்த்திருக்கிறாள். வெற்றி வேந்தன் வாடிக்கையாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக வைத்திருக்கும் முகம் ஒன்று உண்டு. யாரையும் தூர நிறுத்தாத, இயல்பாக அணுக முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கும் புன்னகையுடனான தோழமை முகம் அது.
ஆனால், இப்படிச் சிரிப்பில் வசீகரித்த முகத்தை இப்போதுதான் பார்க்கிறாள். ஏனோ இந்த முகம் மேலாளர் முகமாக அல்லாமல் நெருக்கமாக உணர வைத்தது.
வங்கியின் சட்டத்திட்டங்கள் பற்றிய கவலைகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி விட்டு, அவனைப் பார்த்தாள் வேதா.
வேட்டி சட்டைக்கு என்று ஒரு தனி வசீகரம் இருக்கத் தானே செய்கிறது. மனதில் சிலாகித்துக் கொண்டாள்.
அவளின் பார்வையில் சிரிப்பை நிறுத்தி விட்டு, “ஓகே. இப்போ உண்மையைச் சொல்லுங்க” என்றான் வெற்றி.
“உண்மையைதான் சொன்னேன்”
“கதை விடாம காரணத்தைச் சொல்லுங்க தேவதர்ஷினி”
“இதுல என்ன கதை இருக்கு? ஏன் உங்களுக்கு எல்லாம் ஈர்ப்பு வராதா? புஷ்பா மிஸ், சாந்தி மிஸ்னு ஒரு லிஸ்ட் வச்சுருப்பீங்க தானே?” அவள் கேட்கவும், “அதெல்லாம் பெரிய லிஸ்ட் இருந்தது” உண்மையை ஒப்புக் கொண்டான் வெற்றி.
“ம்ம். எனக்கும் இருந்தது. நமக்குப் பிடிச்ச டீச்சர்ஸ் எல்லாம் ஸ்பெஷல் தானே? அதுலயும், சிலரை ரொம்பவே பிடிக்கும். ஸ்கூல், காலேஜ்னு லைஃப்ல முக்கால்வாசி நாட்களை அவங்க கூடத் தானே ஸ்பெண்ட் பண்ணி இருக்கோம். நமக்கு எவ்வளவு கற்றுத் தந்திருப்பாங்க. ரொம்பச் சிலர்தான் படிப்பு தாண்டிய வாழ்க்கையைக் கற்றுத் தருவாங்க. அப்படியொருத்தர் எங்க ப்ரோபஸர். க்ரஷ்னா, அது அவரோட தோற்றம் மேல இல்ல.”
“புரிஞ்சுது வேதா. சொல்லுங்க”
“ம்ம். எனக்கு அதுவரை டீச்சிங் கனவு இருந்தது. எப்படியாவது படிப்பை முடிச்சுட்டு டீச்சிங் ஜாப்க்கு போய்டணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.” அவள் சொல்ல, கேள்வியாகச் சுருங்கியது அவள் கண்கள்.
“அது வந்து…” சற்றே தயங்கினாள். சில விஷயங்களைப் பகிர்வதற்குப் பிடிக்கும். அதிலும் சிலரிடம் தானாகப் பகிரத் தோன்றும். அக்கணம் வெற்றி வேந்தன் அவள் கண்களுக்கு மாண்புமிகு மேலாளராகத் தெரியாத காரணத்தினால் தன்னைப் பற்றிச் சொன்னாள் வேதா.
“எங்க வீடு, எப்படிச் சொல்றது? ஒவ்வொரு குடும்பத்திலும் சில நம்பிக்கைகள் இருக்கும் இல்ல? அது போல எங்க வீட்டுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு. சில கோடுகள், சில எல்லைகள். அவங்களுக்கு ரொம்பப் பிற்போக்குச் சிந்தனை எல்லாம் கிடையாது. ஆனா, சிலது இப்படித்தான் இருக்கணும்னு நினைப்பாங்க. அதை மீற அனுமதிக்க மாட்டாங்க. எனக்கு அது வேணும்னா போராடித்தான் சாதிக்கணும் நான். எங்க வீட்ல பொம்பளை பிள்ளை வேலைக்குப் போறதுன்னா டீச்சர், பேங்க் வேலை இதெல்லாம் பாதுகாப்புன்னு நினைப்பாங்க.”
“என்னைச் சுத்தி இருக்கவங்களைப் பார்த்து பார்த்தே வளர்ந்த எனக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், இன்ஜினியர் கனவு எல்லாம் எப்பவும் இருந்தது கிடையாது. முதல்ல டீச்சராகணும்னு நினைச்சேன். ஆனா, நாள் முழுக்க நின்னு, தொண்டை வறண்டு போற அளவுக்குக் கத்தி பாடம் எடுத்து, எங்க ப்ரோபஸர் அதைச் சொல்லும் போதெல்லாம் அதுல இருந்த புலம்பல் மட்டும்தான் எனக்குத் தெரிஞ்சது. அதுவும் இல்லாம, டீச்சராக எம்எட், எம்ஃபில் எல்லாம் படிக்க, எங்க வீட்ல கண்டிப்பா என்னை விட்டிருக்க மாட்டாங்க. சோ, அதுக்கு அடுத்ததா பேங்க் வேலைக்குப் போகலாம்னு என் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு. அப்பவே என்ன படிக்கணும், என்ன எக்ஸாம் எழுதணும் எல்லாம் கேட்டு ஃபைனல் இயர் படிக்கும் போதே ரெடியாகிட்டேன்”
“இன்ட்ரஸ்டிங் வேதா” அவன் குரலும் கண்களும் அவளை மெச்சியது.
“எங்க அப்பா, அம்மா ரொம்ப அன்பானவங்கதான். அடக்குமுறை எல்லாம் கிடையாது. நாங்க ஆசைப்பட்டது நிச்சயமா நடக்கும். அப்படியே அப்பாவுக்குப் பிடிக்காத ஒன்னை ஆசைப்பட்டா, அவர்கிட்ட வாதாடி, போராடி, அவரோட அப்பா, அம்மாவை என் பக்கம் இழுத்து, எப்படியாவது சாதிச்சுடுவேன். இந்த வேலையும் அப்படிச் சாதிச்சதுதான். இதுக்காக நான் நிறையப் பர்னிச்சரை வீட்ல உடைச்சுருக்கேன்” அவள் சொன்ன விதத்தில் மீண்டும் சிரித்தான் வெற்றி.
“சின்னதில் இருந்தே என்னை ஒரு சட்டத்துக்குள் அடைச்சு வச்சு பழக்கிட்டாங்க. அதுல இருந்து வெளில வர நிறைய மெனக்கெட்டேன். அவ்ளோதான். மற்றபடி…” அவன் பார்வை அவள் மேல் அழுத்தமாகப் பதிந்தது. தனது உடையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான் என்று உணர்ந்து,
“நான் சொன்னேன் இல்ல. இதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காது. அதைச் செய்ய எனக்கும் பிடிக்காது. இங்கதான் அப்பா இல்லையே? அதுவுமில்லாம இது எங்க அண்ணா வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்தான். எனக்கு டிரெஸ்ஸிங் லிமிட்ஸ் தெரியும் சார். வாரத்தில் அஞ்சாறு நாள் பிடிச்சும், பிடிக்காமலும், வேலைக்காகச் சேலை கட்டுறேன். வேறொரு வேதாவா மாறி கஸ்டமர்ஸ் கிட்டபேசுறேன். அப்புறம் எப்போதான் நான், நானா இருக்கறது?” காற்றில் கூந்தல் எல்லாப் பக்கமும் பறக்க, கைகளை விரித்து, தோள்களைக் குலுக்கி, இயல்பாக மனம் திறந்து, யதார்த்தம் பேசிய அந்தப் பெண்ணை அவனுக்கு மிகவும் பிடித்தது.
சாலையில் பதியும் அவளின் பாத சுவடை பின் பற்றியது வெற்றியின் விழிகள். அவள் சொன்ன அந்த ஈர்ப்பு இப்போது அவள் மேலேயே வர, சட்டெனத் தலையை உதறி, அந்த எண்ணத்தையும் உதறி அவளோடு நடந்தான் வெற்றி.
“நாம பொதுவா பிடிக்காத வேலை, உணவு இதையெல்லாம் எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிடுவோம். ஆனா, ட்ரெஸ்? உடை நமக்குப் பொருந்தலைன்னா.. நான் ரொம்பப் பேசுறேன்” உதடு கடித்துப் பேச்சை நிறுத்தினாள் வேதா.
“அப்படியெல்லாம் இல்ல. உங்க இந்தப் பேச்சு, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை நான் உங்க மேல வச்சிருந்த அபிப்பிராயத்தை மொத்தமா மாத்தியிருக்கு.”
“அச்சோ..” என்று அவள் பதற,
“நல்ல விதமாதான்” என்று பதில் சொன்னவனின் குரல் சிரித்தது.
“அப்போ ஓகே. தப்பிச்சேன்” பற்கள் தெரிய புன்னகைத்தாள். அவனையும் அறியாமல் அவளிடம் பாய்ந்த பார்வையைக் கடினப்பட்டுத் திருப்பினான் வெற்றி.
அவர்கள் பேசிக் கொண்டே ஆட்டோ நிறுத்தம் வந்திருக்க, அதையும் பேச்சிலேயே கடந்தார்கள்.
அதுவரை அவர்களுக்குப் பக்கவாட்டில் நடந்த பலவகை மரங்கள் இப்போது காணாமல் போய் இருக்க, நிரந்தரத் துணையான வெயிலுடன் நடந்தார்கள்.
யாராவது துணையாக உடன் வந்தால், இந்த நடை பயணங்கள்தான் எத்தனை அழகாகி விடுகிறது!
வெற்றிக்கு சில மணி நேரங்கள் முன்பிருந்த மனநிலை இப்பொழுது முற்றிலுமாக மாறியிருந்தது. பதற்றம், கோபம், எரிச்சல் என அத்தனை உணர்வுகளும் காணாமல் போய் விட்டிருந்தது.
அதற்குக் காரணமானவளை பக்கவாட்டில் பார்த்து ஆராய்ந்தான்.
சாலையில் சீரான வேகத்தில் நடந்தவள், எதையோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது தெரிய, “தேவதர்ஷினி மேடம், என்ன பலத்த யோசனை போல?” கேலியாக விசாரித்தான்.
“ம்ஹூம். இல்ல சார். காலையில் நடந்ததைதான் யோசிச்சுட்டு இருந்தேன். இனிமே இப்படி நடக்காம..”
“நடக்காது. உங்களை நம்பறேன் நான். இந்த விஷயத்தை இத்தோட விடுங்க. ரொம்பத் திங்க் பண்ண வேணாம்” வெற்றி சொல்ல, தலையாட்டினாள்.
வண்டியை உருட்டிக் கொண்டிருந்தவனையே உற்றுப் பார்ப்பதும், பின் பார்வையை மாற்றுவதுமாக அவள் இருக்க, “என்கிட்ட என்ன கேட்கணும். கேளுங்க. தப்பா நினைக்க மாட்டேன்” என்றான் வெற்றி.
“இல்ல சார். ஒன்னுமில்ல”
“அட பரவாயில்ல கேளுங்க மேடம்” என்று அவன் ஊக்க, சற்றே தயங்கினாள் வேதா.
அச்சமயம் அவர்களைக் கடந்த பெண்மணிக்கு வெற்றியை வங்கி மேலாளராகத் தெரிந்திருக்க, அவர் பார்வை வேதாவின் மேல் பாய்ந்தது. அவளை இதுவரை சந்தித்திராதவர் அவர்களை ஒருவித சுவாரசியத்துடன் பார்த்தார்.
வேட்டி, சட்டை அணிந்த ஆணும், கேப்ரி, சட்டையில் இருந்த பெண்ணும் ரகளையான, ரசனையான கலவையாக இருந்தார்கள்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு கடந்து போனார் அவர்.
“இன்னைக்கு நான் சொதப்பினது போல, நீங்க எப்பவாவது சொதப்பி இருக்கீங்களா சார்? சொல்லணும்னு அவசியமில்ல. ஜஸ்ட் கேட்கணும்னு தோணுச்சு. ஒரு க்யூரியாசிட்டின்னு வெச்சுக்கோங்களேன்” தயக்கத்துடன் கேள்வியும் கேட்டு, பதில் தர வேண்டாம் என்று மறுக்கவும் செய்தாள் வேதா.
அவளின் கேள்வியினால் நொடியில் அவனை நிறைத்தது நினைவுகள். மலர்ந்து புன்னகைத்தான்.
“அப்போ நான் கடலூர் பிராஞ்ச்ல உங்களை மாதிரி அசிஸ்டன்ட் மேனேஜரா இருந்தேன். ஒரு வீக்கெண்ட் மேனஜர் அவரோட சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு ஃபேமிலியோட போய் இருந்தார். என்கிட்டதான் பேங்க்கோட மொத்த பொறுப்பும் இருந்தது”
“ம்ம்”
“எதுவுமே ஒரு தடவை நமக்கு நேரடியா நடக்காத வரை அதோட தீவிரம் நமக்குப் புரியாது இல்லையா? அன்னைக்கு நடந்தது அப்படியொரு சம்பவம்தான். நான், உங்களை விட மோசமா சொதப்பி, நிலைமையைக் கட்டுக்குள்ள கொண்டு வர நான் பட்டபாடு.. “
“என்ன நடந்தது சார்?”
“நான் என் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து வீக்எண்ட் தியானத்துக்குப் பாண்டிச்சேரி போய் இருந்தேன்” என்று அவன் சொல்ல,
“ஓ, தியானமா? புரிஞ்சுது” குறும்பு சிரிப்புடன் சொன்னாள் வேதா. அதுவரை அவனிடம் ஒரு எல்லைக் கோடு வரைந்திருந்தாள். அதின் விளிம்பில் நின்று பேசுவாள். இன்று அத்தனையும் மீறிக் கொண்டு வெளிப்பட்டது அவளின் இயல்பான குணம்.
“ஹேய். சத்தியமா தியானம்தான். நீ நினைக்கிற மாதிரி இல்ல” படபடத்து மறுத்தான் வெற்றி.
“பாண்டிச்சேரிக்கு எதுக்குப் போவாங்கன்னு பச்சப் பிள்ளைக்குக் கூடத் தெரியும் மேனேஜர் சார்” சிரித்தபடி சொன்னாள் வேதா.
“நோ, நோ. நிஜமா..” என்றவன், தலையைக் குலுக்கி கொண்டு தொடர்ந்து பேசினான்.
“அன்னைக்கு நைட் ரெண்டு மணிக்கு கண்டினியூஸா என் போன் அடிக்குது. ஆனா, தூக்கத்தில எடுக்கல நான்.”
“ஐயோ, அப்புறம்?”
“தொடர்ந்து மெசேஜ் வர்ற டோன் கேட்குது. அதோட கூடத் தொடர்ந்து போன் அடிச்சுட்டு இருக்கு. அந்தச் சத்தத்தில் தூக்கம் கலைஞ்சு நானும் அடிச்சு பிடிச்சு எழுந்தா, பேங்க் செக்யூரிட்டி அலாரம் அடிச்சுட்டு இருக்குனு காதுல கத்துறார் மேனேஜர். அந்த நேரம் பேய் வேகத்தில் வண்டியை ஓட்டிட்டு கடலூர் போனோம். அது ரூரல் பிராஞ்ச் வேற. லோக்கல் போலீஸ், அக்கம் பக்கமிருந்த ஜனங்கன்னு நான் போகும் போது கூட்டமா, பெரிய கலவரமா இருந்தது. அன்னைக்கு அவ்ளோதான் என் வேலை போச்சுனு நினைச்சேன்.” இப்போதும் கலவரத்துடன் சொன்னான்.
“தென்? எப்படி மேனேஜ் பண்ணீங்க?” என்றைக்கோ நடந்ததற்கு இன்றைக்கு அக்கறையுடன் கேட்டாள் வேதா.
“எப்படியா? அதெல்லாம் பெரிய கதை. மறுநாள் லோக்கல் நியூஸ் பேப்பரில் எல்லாம் செய்தி வர அளவுக்குக் கொஞ்சம் பெரிய சம்பவம்தான்”
“ஓ..” அதிர்ச்சியுடன் கேட்டாள் வேதா.
“இட்ஸ் ஆல் பார்ட் ஆஃப் அவர் ஜாப்” என்றான் வெற்றிச் சாதாரணமாக.
அவன் நடையை நிறுத்தி விட்டு, அவள் கண்களைப் பார்த்து, “என்னால இதுக்கு மேல நடக்க முடியாது தேவதர்ஷினி மேடம். இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் உங்களை வீட்ல ட்ராப் பண்ணட்டுமா? ரெண்டு நிமிஷ டிராவல் தானே?” என்று கேட்டான் வெற்றி. அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை. அவனோடு நடக்கப் பிடித்தாலும் விரைவாக வீடு செல்ல வேண்டும் போலிருக்க, சம்மதமாகத் தலையசைத்தாள்.