33.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

இரவு உணவை அவள் தயாரிக்க, அடுக்களை ஓரத்தில் நின்று கதை பேசினான். 

“எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும் போது வரேன் அலர்விழி. எங்கேயாவது போய் வருவோமே!” 

அவன் மென்மையான பேச்சும், மரியாதையான பார்வையும் அலர்விழிக்கு பிடித்துப் போக, “வாங்க அத்தான். மென்ஹட்ன்ல இருந்து நியூ ஜெர்சிக்குள்ள வர… 20 நிமிஷம் ஆகுமா? இங்க வர ஒரு பத்து, பதினைஞ்சு நிமிஷம் தானே! அடிக்கடி வாங்க அத்தான். வீக் எண்ட் வந்தீங்ன்னா இந்த ஊரைப் பூரா சுத்திக் காட்டுறேன். ஓகேவா?” என்றாள்.

உணவை அவள் பரிமாற, “நீயும் உக்காரு. ஒண்ணா சாப்பிடுவோம்…” என்றவனோடு அடுத்த அரை மணி நேரம், அவன் இங்கு வந்ததின் நோக்கம் பற்றிப் பேசினாள்.

“நூறு டாக்டர்ஸ்சா?” வாய் பிளந்து, கண்கள் விரிந்தது. 

“இல்லடாமா, மொத்த ஸ்டாஃப்” 

“எப்படி இண்டியன் டாக்டர இங்க அலோ பண்ணினாங்க, சர்ஜரி பண்ண? அது முடியாது தான?” 

“அது மகாதேவன் பிரச்சனை” 

“மகாதேவன்?” 

“குழந்தைகளோட தாத்தா! நம்ம எம்.பி!” 

“ஓஹ்… இங்கேயும் பாலிடிக்ஸ்! ரொம்ப செலவாகுமே…” 

“பதினைஞ்சு… இருபது கோடி! அவர் சேர்த்து வச்சிருக்க காசுக்கு, இது யானைக்கு போடுற ஒரு கவளம் அளவு தான்!”

“வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின்

தூங்குங் களிறோ துயருறா – ஆங்கதுகொண்

டூரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால்

ஆருங் கிளையோ டயின்று” அவள் கூற,

 அவனுக்குப் புரியவில்லை. “என்னவோ சொல்ற. எனக்கு ஒண்ணும் புரியலை” வியந்த பார்வை பார்த்தான். 

“அப்படினா, யானை, பல கவளம் சாப்பிடும். ஒரு கவளம் கீழ விழுந்தா அதுக்கு நஷ்டம் இல்ல. ஆனா கோடி எறும்புங்க பயன்படும்! நீங்க, ‘யானை… கவளம்…’ அப்பிடின்னு சொல்லவும் சம்மந்தம் இல்லாம இது தோணிச்சு!”

“அப்போ அவர் உங்களையும் நல்லா கவனிச்சிருப்பாரே! இதோட சொந்த ஹாஸ்பிட்டல்ன்னு நீங்களும் செட்டில் ஆகிடலாம் தான?” 

“ஓ… நான் தான் எறும்பா?” மெல்லச் சிரித்தான். புரையேற்றிக் கொண்டவன் தலை தட்டி, குடிக்க நீர் கொடுத்தாள். ஆசை கொண்ட ஆண் மனம் அவளை மனைவியாய் பார்க்கப் பேராசை கொண்டது. ஆரோக்கியமான ஆணுக்கு வரும் நியாயமான ஆசை தான் என்பதால், ஆசையில் தவறேதும் இல்லை. மனோவா எபெனேசர் என்ற ஒருவன் அலர்விழி வாழ்வில் இல்லாமல் போயிருந்தால், பிரவீன் என்ற ஒருவனின் ஆசை, பேராசைப் பட்டியலில் வந்திருக்காது! பிரவீன் என்ற நல்லவனுக்கு, அலர்விழியின் காதலன் வில்லனாய் போனது பரிதாபம்! 

இவர்கள் வாரக் கடைசி அழகான பேச்சு வார்த்தைகளோடும், பல இடங்களை சுற்றிப் பார்ப்பதிலும் கழிய, எபியின் நாட்கள் அவ்வளவு உவகையாய் இல்லை. மகனைக் கண்ட ஆனந்தத்தில் ஆசையாய் ஓடிவந்த தாய் தடுக்கி விழ, அவன் வீட்டுக்குள் நுழைந்த அன்றே அன்னை மூட்டு வேதனையில் விழுந்தார். 

“டாக்டர பாப்போம் மா” என்ற மகனோடு செலவிட வேண்டிய நேரம் எல்லாம் வீணாய்ப் போகுதே என்ற வருத்தம் அவரிடம். ஆனால் வேறு வழி இருக்கவில்லை. மறுநாள் எழுந்து நிற்க முடியவில்லை. எபியின் மூன்று வாரங்களும் அம்மாவும் மருத்துவமனையுமாக முடிந்தது. 

“ஜானகி ஹாஸ்டல்ல ஒரு மலையாளிப் பொண்ணு தங்கியிருக்கா எபி, அவ அப்பா ஆயூர்வேதா டாக்டராம். தாம்பரத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஆயூர்வேதா ஹாஸ்பிட்டல் வச்சிருக்காராம். ஜானகி கூட கழுத்து வலிக்கு வாரம் வாரம் போய் மசாஜ் பண்ணிட்டு இருந்தா. இப்போ வலி இல்லியாம். அங்க பாருன்னு என்ட்ட சொன்னா. வலி தான் இல்லியேன்னு பார்க்கல. அங்க போவோமா?” 

ஆங்கில மருத்துவ முறையில் நம்பிக்கை இழந்து வருடங்கள் ஆகியிருக்க, எஸ்தரோடு ஆயூர்வேதா மருத்துவமனைக்குச் சென்றனர், கணவனும் மகனும். குறைந்தது இரண்டு வாரமேனும் தங்க வேண்டும் என்று மருத்துவர் கூறிவிட, எபியின் நாட்கள் மருத்துவமனைக்கும், கணினி மையத்திற்குமாக சென்றது. ஆகஸ்ட் 15 எல்லாம் அவன் சிந்தனையில் இல்லை. அம்மாவின் வலியின் அலறல் முன் எதுவுமே நினைவில் இல்லை. இரவு ஒரு முறை அலர்விழியோடு 10 நிமிடங்கள் தூங்கிக் கொண்டே பேசுவதோடு சரி. அவள் கூறிய பிரவீனும், அவன் மருத்துவ சாதனைகளும், அவனோடு ஊர் சுற்றுவதும், காற்றோடு கரைந்தது.

இன்றும் எபிக்கு மிகுந்த களைப்பு, அங்கு பகல் என்றாலும், அமெரிக்காவின் இரவு, அவன் உடல் தூக்கத்திற்கு ஏங்கியது. ஆனால், தூங்க முடியாது. மருத்துவமனை செல்ல வேண்டும். அப்பாவிற்கு இன்று விடுப்பு எடுக்க முடியா சூழல். சென்று அம்மாவை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். நாளை முதல், வாரம் இரண்டு முறை மருத்துவமனை சென்று வந்தால் போதும். அடுத்த ஐந்தாவது நாள், அமெரிக்காவிற்கு மீண்டும் பயணம்! திருமணம் பற்றிப் பேச நினைத்து வந்த அனைத்தும் மறந்து போனது விழியின் மனோவிற்கு! 

சென்டரில் ஆடிட்டரோடு வேலை குவிந்து கிடக்க, எபிக்கு தலை வெடிக்கும் அளவு வலி. மதிய உணவை முடித்து விட்டு, ஓட்டுநரும் இல்லாது போகவே அவனே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்பினான். சுமார் இரண்டு மணி நேரம் பிடித்தது, அரவமில்லா அந்த பெரிய சாலையில் மருத்துவமனை கண்முன் தெரிய. ‘இன்னும் இரண்டே நிமிடங்கள் தான்…’ சொல்லிக் கொண்டான். 

அதனால் மூடும் இமைகளை மிகுந்த கடினத்தோடே திறந்து வைத்திருக்க முயன்றான். தன்போல் கண்கள் மூட சட்டென்று அவன் தூங்கி விழுவது அவனுக்கு உரைக்க… தலையை உலுக்கவும் அவன் எதிரில் சாலையைக் கடந்து கொண்டிருந்தார், அம்மா வயதுப் பெண்மணி. இருவருக்குமே அதிர்ச்சி தான்! 

ஸ்டியரிங் வீலை சட்டென்று திருப்ப, அது அங்கிருந்த கம்பத்தில் இடித்து நின்றது. கார் இடித்த வேகத்திற்கு, அவன் முகத்தில் வந்து அறைந்தது வாகனத்தின் காற்றுப் பை(air bag). சரியான வலி. சிவந்த முகத்தை தேய்த்துக் கொண்டவனுக்கு, ‘போதுமே’ என்றிருந்தது. 

யாரைக் குற்றம் சொல்ல? சாலை விதிமுறையை மீறி, வாகனம் வருவதை கவனியாமல், அவசரமாய் சாலையைக் கடக்க நினைத்தவரையா? தூக்கத்தின் நடுவே வாகனம் செலுத்துவதும், குடித்துவிட்டு வாகனம் செலுத்துவதும் ஒன்று தான் என்று தெரிந்தும், உடல் ஒத்துழைக்க மறுத்த பின்னும் அதை வதைத்தவனையா? 

வாகனத்தை ஓரம் கட்டி வெளிவந்தவன் கண்களில் விழுந்தார் பெண்மணி, பயத்தில் இடறி விழுந்ததில் காலில் அடிபட்டிருக்கும் போல… அவரால் நிற்க முடியவில்லை. நேரே அவரிடம் சென்றான். 

“என்னை உங்க மகனா நினைச்சுக்கோங்க ம்மா,” என்றான். அவர் உணரும் முன்னே, சட்டென்று குழந்தையை ஏந்துவது போல் ஏந்தியிருந்தான். வெட்கமாகப் போக, அவருக்கு அவன் முகம் பார்க்க முடியவில்லை. மருத்துவமனைக்குள்ளே நுழையவும் அங்கிருந்த காத்திருப்பு இருக்கையில் இறக்கி விட்டவனுக்கு அவரைத் தெரியும் என்ற உணர்வு. ஆனால் தெரியவில்லை. 

“ரொம்ப சாரி ப்பா. என் பொண்ணு சொன்னாளேன்னு இன்னைக்கு தான் மாமியாருக்கு ட்ரீட்மென்டுக்கு இங்க வந்தோம். மாமியார் தனியா இருக்காங்கன்னு, எதிர் கடையில சாப்பிட்டுட்டு அவசரமா ஓடி வந்தேன்… உங்க கார் வந்ததை கவனிக்கல,” 

“உங்க மகன மாதிரி என்னை நினைச்சுக்க சொன்னேன். என் கிட்ட சாரி எல்லாம் எதுக்கு? என் மேலயும் தப்பிருக்கு ஆன்ட்டி. கண்ணைத் திறந்து, கொஞ்சம் பார்த்து வந்திருக்கணும். உண்மையாவே ரொம்ப ரொம்ப சாரி”

“புதுக் காரா இருக்கு. முன் பக்கம் உடைஞ்சிடுச்சே! அத சரி பண்ண ரொம்ப செலவாகுமே பா? எவ்வளவு ஆகும்ன்னு சொன்னா, நான் கொடுத்துடுறேன்.” 

“தப்புன்னு பாத்தா… எனக்கும் அதுல பங்கிருக்கே ஆன்ட்டி. நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் ஆகல. கடவுள தேங்க் பண்ணுவோம். பணம் வரும், போகும்! அதப் பத்தி எதுக்கு நினைச்சுகிட்டு?” என்றவன் அங்கிருந்த செவிலியை அழைத்து, அவர் கணுக்காலின் சுளுக்கு நீங்கி அவர் நடக்க ஆரம்பித்த பின்னரே அம்மாவைக் காணச் சென்றான். ‘நல்ல வேளை இடிக்கவில்லையே’ என்ற நிம்மதி அவனிடம். 

எபியின் முதுகு மறையும் வரை பார்த்து நின்றவர், மெல்ல அவர் மாமியார் இருக்கும் அறை நோக்கிச் சென்றார். 

“மகன் மாதிரின்னு சொன்னான் அந்தப் பிள்ள. மகனாகவே கூடவே இருந்தான் அத்த. எண்ணெய்ய தேச்சுட்டு கால் சுளுக்கு எடுக்கும் போது உயிரே போயிடுச்சு. முழு நேரமும் கையப் பிடிச்சுகிட்டு பேச்சு குடுக்குறான், வலி தெரியாம இருக்க. பேச்சு பூரா அம்மா அம்மா தான். கொடுத்து வச்ச அம்மா! அவன் அம்மாக்கு ரெண்டு வாரத்துல வலி நல்லா குறைஞ்சுடுச்சாம். பிடிமானம் இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டாங்க போல. இன்னைக்கு வீட்டுக்குப் போறாங்களாம்.

எபேனேசர்ன்னு அவன் பேரு சொன்னப்போ, அவன் வேற ஆளுன்னு தோணவே இல்லத்த. ஆனா, முதல் முறையா எனக்கு இப்படி ஒரு மகன் இல்லியேன்னு நினைச்சேன்,” நெகிழ்ச்சியோடு சகுந்தலா பாட்டியிடம் கூறிய சௌந்தர்யாவின் குரல் கரகரத்து. 

(குழந்தைகள் அறுவை சிகிச்சை – லண்டன், கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் குழந்தைகள் மருத்துவமனையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்.)

error: Content is protected !!
Scroll to Top