“இருக்கா இவரு போன் பண்றாரு. என்னான்னு கேட்டுட்டு வர்றேன்” என்று சாக்கு சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு, சிந்தனையில் சுருங்கிய புருவங்களுடன் திரும்பி பிரியதர்ஷினியை பார்த்தார். காவேரியும் எத்தனையோ முறை அவளிடம் இது குறித்துப் பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் மகளின் உடல்நிலை தேறிக் கொண்டு வரும் போது, இதைப் பற்றிப் பேசுவதா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. பிரியதர்ஷினிக்கு நிச்சயமாக உண்மை தெரிந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பினார் அவர்.
அவள் சற்று முன் உண்ட சோறு வெளியில் வரும் போலிருக்க, கையில் எலுமிச்சையை வைத்து முகர்ந்து கொண்டிருந்தாள்.
“தர்ஷினி” என்று வாஞ்சையாக அவளை அழைத்தார்.
“சொல்லுங்கம்மா”
“நம்ம பார்கவி லவ் பண்ண பையன் இருக்கான் இல்ல?” என்று அவர் இழுக்க, “யாரம்மா கேட்கறீங்க?” என்று அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் அவள்.
“அப்போ உனக்கு யாருனு தெரியாது? ம்ம்ம்? தெரிஞ்சாலும் அம்மாகிட்ட சொல்ல மாட்ட?”
“இல்லம்மா” என்று அவள் திக்க, “நான் பேசினதக் கேட்டதான நீ? அந்தப் பாரிக்கு வேலை போய்டுச்சாம். அதுக்குக் காரணம் பாரு விரும்புன பையன்னு அந்தப் பொம்பளை எங்கக்கா வீட்டுக்கு வந்து கத்திட்டுப் போய்ருக்கு” என்றார்.
“அப்படியாம்மா? நிஜமா அவனுக்கு வேலை போச்சா? அவனுக்கெல்லாம் ஆவணும்” என்று புன்னகைத்தாள்.
“அம்மா மேல சத்தியமா சொல்லு. உனக்குப் பாரு விரும்பனது யாருன்னு தெரியாதுன்னு?”
“ம்மா, பாரு என்கிட்ட யாருன்னு சொல்லலம்மா. இப்போ வரை அவளா சொல்லல.”
“ஆனா உனக்கு யாருன்னு தெரியும். அப்படித்தானே?” அப்படியாகப் போட்டு வாங்கி விட்டார்.
அவளும் பொய் பேச விரும்பாமல் மண்டையை ஆட்டினாள்.
“யாரு அந்தப் பையன்? அவளோட வேலை பார்க்கற பையனா? அவனைப் பத்தி என்னமோ சொன்னா.. எனக்கு மறந்து போச்சு. நீ சொல்லு யாரு அவன்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கினார்.
“ம்மா” என்று அவள் தயங்க, “சரி, விடு. நீ சொல்ல வேணாம்” என்று சோர்வுடன் சொல்லி எழுந்து கொள்ளப் போனார். அவரின் கைப் பிடித்துத் தடுத்து, “பார்த்திபன்” என்றாள் பிரியதர்ஷினி.
“யாரு? யாரச் சொல்ற நீ? நம்ம பார்த்திபனையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் அவர்.
“போஸ்ட் மாஸ்டர் பையன் பார்த்திபனா?” நம்ப இயலாத அதிர்வுடன் அவர் அழுத்திக் கேட்க, ஆமென்று தலையசைத்தாள்.
“அந்தப் பையன் கல்யாணம் நின்னு போச்சுன்னு இப்போத்தானே அப்பா சொல்லிட்டு போறாரு?” அதற்கும் தலையசைத்து வைத்தாள்.
“அப்போ.. இப்போ போய் அவங்க வீட்ல நாம பேசினா.. சரியா இருக்காதோ?” என்று யோசனையுடன் கேட்டார். சட்டென்று அவரைப் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
“பார்த்திபனா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டு ஊர்ஜிதம் செய்து கொண்டார்.
அன்று பார்கவி மருத்துவமனையில் இருந்த போது கடைசியாக அவனைப் பார்த்தது.
விதி எத்தனை விசித்திரமானது.
அவர் கண் முன்னே மகள் விரும்பியவன் இருந்திருக்கிறான். அன்றைக்கு அவர் தவற விட்டிருக்கலாம். ஆனால் இனிமேல் அப்படியொரு வாய்ப்பை அவர் தவற விட மாட்டார்.
காவேரி அவசரம் அவசரமாக ரங்கராஜனை அழைத்து, அதை விட அதிஅவசரம் என்று பரபரத்து அவரை வீடு வரச் சொன்னார்.
“அப்பாவ எதுக்கும்மா வரச் சொன்னீங்க?”
“பின்ன, அவருக்கு உண்மை தெரிய வேணாமா? எனக்கு அவர்கிட்ட இப்பவே சொல்லியாகணும் இல்லன்னா என் மண்டை வெடிச்சுடும். அவன் யாரா இருப்பான்னு எம்புட்டுத் தரம் கேட்டு கேட்டு புலம்பி இருப்பார். இப்போ நம்ம போஸ்ட் மாஸ்டர் பையன் பார்த்திபன்னு தெரிஞ்சா ஏதாவது செய்வார் இல்ல?” என்று படபடத்தார்.
“ம்மா” என்று தயக்கத்துடன் அழைத்தாள் பிரியதர்ஷினி. .
“என்ன தர்ஷினி? வேற எதுவும் விஷயம் இருக்கா என்ன? ஆமா அந்தப் பையன் கல்யாணம் ஏன் நின்னுச்சு. உன் புருஷன் பிரபஞ்சன் பிரெண்ட்டுதானே அந்தப் பையன். அவன் கல்யாணம் ஏன் நின்னுச்சு?”
“பார்த்திபன் அண்ணா ரெண்டு வருஷத்துக்கு அமெரிக்கா போறார். ஆன் சைட்னு ஆஃபீஸ்லருந்துதான் அனுப்பறாங்க”
“என்ன தர்ஷினி சொல்ற.. எப்போ போறாப்ல?”
“அந்தப் பொண்ணு வீட்டுக்கு அது பிடிக்கல. அதான் கல்யாணத்தை நிறுத்திட்டாங்க” என்றாள்.
“இதெல்லாம் ஒரு காரணமா?” என்று சடைத்த காவேரி, “ஆமா, அந்தப் பையன் எப்போ அமெரிக்கா போறாப்ல” என்று வேகமாகக் கேட்டார்.
“இன்னும் நாலு நாள்லம்மா”
“நாலு நாள்லயா? அப்போ போய்ட்டு எப்போ திரும்பி வருவார்?”
“ரெண்டு வருஷம் கழிச்சும்மா” என்று அவள் சொன்னதும் தலையில் கை வைக்காத குறையாகச் சோர்ந்து அமர்ந்து விட்டார் அவர்.
மகள் இப்போது இருக்கும் நிலையில் அவளின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சை எடுக்கவே முடியாது. ஆனால் பார்த்திபன் தற்போது அமெரிக்கா சென்றால் இரண்டு வருடங்கள் கழித்துத்தான் திரும்புவான் எனும் போது என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் நின்றார் அவர்.
ரங்கராஜன் வீடு வரவும் அவரிடமும் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“பார்த்திபனா? என் பொண்ணு கண்ணு முன்னாடியே இருந்திருக்கான். என் பொண்ணு அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவ மனசு என்னா பாடுபட்டிருக்கும்?” என்று மகளுக்காக வருந்தினார் அவர்.
பார்கவிக்கு இப்போது திருமணம் எல்லாம் சாத்தியமே இல்லை. அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். அவள் சம்மதம் இல்லாமல் இனிமேல் எதையும் செய்ய மாட்டேன் என்று ஒரே பிடியாக நின்றார் அவர்.
அதிலும் பார்த்திபனுக்கு இப்போதுதான் நிச்சயித்த திருமணம் நின்றிருக்கிறது எனும் போது அதுவே கூடுதல் சிக்கல் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். மனைவிக்கு அதை எடுத்துச் சொன்னார்.
“இல்லங்க, நான் என்ன சொல்றேன்னா நாம அவங்க வீட்ல போய்ப் பேசுவோம். அவங்களுக்குச் சரின்னா நமக்குள்ள பேசி வச்சுட்டு… அந்தப் பார்த்திபன் தம்பி திரும்பி வந்ததும், அவங்க விருப்பப்படி நாள் பார்த்துக் கல்யாணம் வச்சுக்கலாம்” என்றார்.
“காவேரி இதெல்லாம் நடக்கற பேச்சா?”
“ஏன் நடக்காது? அதெல்லாம் நீங்க மனசு வச்சா நல்லாவே நடக்கும்.”
“அதுக்கு முதல்ல நம்ம பொண்ணு சரின்னு சொல்லணும் இல்ல?” என்று கேட்டார்.
“இந்தா அவ பிரெண்ட் தர்ஷினி கிட்டயே யார்னு சொல்லாத நம்ம பொண்ணு. எப்படி இந்தப் பேச்சுக்கு சரின்னு சொல்லுவான்னு நீ எதிர்பார்க்கற?”
“ஏங்க, நீங்க கூறும் இல்லாம குப்பையும் இல்லாம பேசிட்டு இருக்கீங்க. நான் நமக்குள்ள பேசி வச்சுப்போம்னுதானே சொல்றேன்?” என்று கணவரை முறைத்தார்.
“நீங்க காலையில சொன்னா மாதிரி உங்க பொண்ணைப் பேசி சரி பண்ணி யூஎஸ் அனுப்பிடுவோம்.” என்று அவர் திட்டம் தீட்ட, “அப்புறம்.. போம்மா அங்குட்டு.” என்று மனைவியைக் கடிந்து கொண்டார் அவர்.
“இல்லங்க அங்க போய் ரெண்டு பேரும் பார்த்து பேசி.. பழகி..”
“உன்னைய கொல்ல போறேன் நான்” என்று சிரிப்புடன் விரல் நீட்டி எச்சரித்தார்.
அதைக் கேட்டு பிரியதர்ஷினியும் சிரிக்க, “நீ என்னடா சொல்ற?” என்று அவள் புறமாகத் திரும்பினார் காவேரி.
“பாரு இதுக்கு ஒத்துக்க மாட்டாம்மா” என்று அவள் சொல்லவும், புலம்பத் தொடங்கினார் காவேரி. அவரைச் சமாதானம் செய்து மாலை மகள் வந்ததும், நானே அவளிடம் பேசுகிறேன் என்று மனைவியைச் சரி கட்டினார் ரங்கராஜன்.
ஏழு மணி போல அசந்து போய் வீடு வந்தாள் பார்கவி.
வீட்டில் அனைவரும் அவளையே ஆவலாகக் குறுகுறுவென்று பார்க்க, “என்னம்மா?” என்று அம்மாவை இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
பிரியதர்ஷினியின் மடியில் இருந்த உப்பு, மிளகாய் தூள் போட்ட மாங்காயை எடுத்து ருசித்தாள்.
“காலையில அப்பா சொன்னேன் இல்லடா? அது நீ யூஎஸ் போறது பத்தி ஆஃபீஸ்ல பேசினியா?” என்று ரங்கராஜன் அவளிடம் கேட்க, மாங்காயை கடித்த அவள் முகம் அதன் புளிப்பில் சுருங்க, “நான் பேசலப்பா. எனக்கு.. எங்கேயும் போக விருப்பம் இல்ல” என்றாள்.
“இல்லம்மா. இப்பவே இல்லன்னாலும்.. கொஞ்ச நாள் கழிச்சி.. ஒரு ஆறேழு மாசம் கழிச்சு போகலாம்ல?”
“ஆறேழு வருஷம் ஆனாலும் நான் போறதா இல்லப்பா. பிளீஸ் என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க” என்று முடிவாகச் சொல்லி முடித்து விட்டாள் பார்கவி.