பார்கவிக்கு முன்பெல்லாம் தினம் அலுவலகம் செல்வதே அத்தனை சோர்வாக இருக்கும். வேலை, வீடு என ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோமே எனப் பல நாள்கள் சலிப்பாக உணர்ந்திருக்கிறாள். அப்பாவிடம் அது பற்றி அவள் புலம்பியது கூட உண்டு.
ரங்கராஜன், “அப்போ நம்ம கேட்டரிங் பிசினஸை பார்த்துக்கோ பாரும்மா. கூடவே மண்டப வேலையையும் சேர்த்து பார்த்துருடா, அதுனால நான் என்னங்கறேன்னா நீ பேசாம வேலையை விட்ரு” எனத் தீவிரமாகச் சொல்வார். அப்பாவுக்குத் தொழிலில் உதவுவதில் அவளுக்கும் ஆசைதான்.
“ஒருநாள் நீங்க சொன்னதைதான் செய்யப் போறேன் பாருங்கப்பா” என்று சிரிப்புடன் சொல்வாள். ஆனால் இப்போது அவளுக்கு அலுவலகம் செல்ல வேண்டும் போலிருந்தது. இப்படியே வீட்டுக்குள் அடைந்து கிடந்தால் அவளின் மூளையும், உடலும் துரு பிடித்து விடும் என்றே நினைத்தாள்.
ஆகவே அன்றே அலுவலகம் செல்வது என முடிவு செய்தாள்.
முந்தைய இரவு அவளின் உறக்கத்தைத் தன் நினைவுகளால் திருடிக் கொண்டான் பார்த்திபன். அவளின் விருப்பமின்றியே அவளின் மனத்தை ஆக்கிரமித்திருந்தான். அவர்களுக்கு இடையே எல்லாம் நடந்து ஒரு மாதம்தான் ஆகிறதா? அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. சில தவறுகளை, தவறான முடிவுகளைத் திருத்த முடிந்தால் எத்தனை நலமாக இருக்கும்.
“கா.. கா..கா” என்று காகம் கரையும் சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது.
காவேரி சமையல் அறையில் இருந்து, “பாரு” என்று குரல் கொடுத்தார்.
“இதோ வர்றேன்ம்மா” இரண்டு நிமிடங்கள் கழித்து அவள் அம்மாவின் முன் சென்று நிற்க, “இந்தா உன்னைய கத்தி கூப்பிடுது பாரு காக்கா, அதுக்குப் போய்ச் சாப்பாடு வச்சுட்டு வா” என்று பொங்கல், சாம்பார், சட்னி, உளுந்து வடை வைத்து நீட்டினார்.
“ஸ்வீட்க்கு கேசரி இல்லம்மா?” என்று அவள் தீவிரமாகக் கேட்க, “அதுதான் டெய்லி வந்து இப்படிச் சோறு போடுன்னு கரையுதுன்னா, நீ அதுக்கு மேல இருக்க” என்று அவளை முறைத்தார் காவேரி.
“நீ செய்யுறத கேட்டு வாங்கிச் சாப்பிடுற ஜீவனைப் போய் இப்படிக் குறை சொல்றியேம்மா”
“அடி போட போறேன் உனக்கு. வாயாடாம போய் அதுக்குப் பொங்கலை வச்சுட்டு வா” என்று அவளை விரட்டினார்.
அவள் புன்னகையுடன் திரும்பி மொட்டை மாடி செல்ல படிகளில் பாதம் பதித்தாள். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு கிட்டத்தட்ட ஒரு வாரம் அவள் மாடி பக்கமே செல்லவில்லை. அந்தப் படிகளில் பதறி ஓடியது, அவளைப் பாரி துரத்தியது எனப் பல கசப்பான நினைவுகள் அவளைத் துரத்தியதால் அந்தப் பக்கமே அவள் செல்லவில்லை.
இப்போது மெதுவாகப் படியேறினாள். முதல் தளத்தை அடைந்ததும் அவள் கண்கள் அனிச்சையாகக் கூடத்தின் பக்கம் திரும்பி அங்கிருந்த ஊஞ்சலை தேடின. இப்போது அங்கேயும் எதுவும் இல்லை. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அந்த ஊஞ்சல் அவர்கள் வீட்டில் இருந்திருக்கிறது. இப்போது அந்த இடம் வெறிச்சோடி கிடந்தது.
ஒரு பெருமூச்சுடன் மொட்டை மாடிக்குச் சென்றாள். காகம் அவளைக் கண்டதும் கரைந்தது. அவள் முன்னேற அது தத்தி தத்தி விலகி நடப்பதை காண அவளுக்குச் சிரிப்பாக வந்தது.
“இந்தா பொங்கல், வடை காம்போ. ம்ம், சாப்பிடு. நெக்ஸ்ட் டைம் காவேரியை கொஞ்சம் வேகமா பாயச் சொல்லி கேசரியும் செய்யச் சொல்லி உனக்குக் கொண்டாந்து வைக்கறேன்” என்று அவள் சொல்லிக் கொண்டே வைக்க, காகம் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்ப்பதே ரசனையாக இருந்தது. அதன் கிண்ணத்தில் தண்ணீரை மாற்றி வைத்து விட்டு ஒதுங்கி நின்றாள்.
இன்றும் அவளுக்காக எதையோ தூக்கி வந்திருந்தது.
“உனக்கு எத்தன தரம் சொல்றது? நான், நான் வெஜ்தான். ஆனா உன் அளவுக்கு இல்ல. புரிஞ்சுதா? தவளையெல்லாம் தூக்கிட்டு வரியே. இது உனக்கே நியாயமா இருக்கா?” என்று நியாயம் பேசிக் கொண்டிருந்தாள். அது பறந்து மா மரத்துக்குச் செல்வதும் பின் இறங்கி வருவதுமாக இருந்தது.
“நீ ஒரு ஆள்தான் என்னை நார்மலா ட்ரீட் பண்ற” என்று அதனிடம் சொல்லி விட்டு கீழிறங்கினாள். மறுகணம் காகம் வந்து உணவை கொத்தியது.
அவள் கரம் அவளின் நெற்றியை வருடியது. இப்போது அங்கே தையல் போட்ட தடயம் மட்டும் இருந்தது. கழுத்து, கை என அவளின் காயங்கள் ஆறியிருந்தாலும் அது விட்டுச் சென்ற வடு மறைவதாக இல்லை.
காயங்கள் எப்போதும் ஆறா வடுக்களை அதன் சாட்சியங்களாக விட்டுத்தானே செல்கிறது.
“பாரும்மா” என்று ரங்கராஜன் அழைக்க, “சொல்லுங்கப்பா” என்று அவரின் அலுவலக அறைக்குச் சென்றாள்.
“என்னடா எங்கயும் வெளில போறோமா நாம?” அவள் பளிச்சென்று நிற்பதை பார்த்ததும் கேட்டு விட்டார்.
“நான் இன்னையில இருந்து ஆஃபீஸ் போகலாம்னு இருக்கேன்ப்பா” என்றாள்.
“இன்னைக்கா?” என்று அவள் பின்னால் இருந்து அதிர்ச்சியுடன் கேட்டார் காவேரி. இன்று அவளுக்குத் திருமணம் நடந்திருக்க வேண்டியது. இப்போது அது நின்றிருக்க, சரியாக இன்றைய தினம் பார்த்து அவள் அலுவலகம் சென்றால் பேசுபொருள் ஆவாளே என்ற கவலை காவேரிக்கு.
“எப்படியும் நான் ஒருநாள் போய்த்தானேம்மா ஆகணும்? அது இன்னைக்காவே இருக்கட்டுமே? நாளைக்குப் போனாலும் அதே கேள்வியைதானே கேட்க போறாங்க?”
“ஆமாதான். இல்லைங்கள ஆனா..” என்று அவர் இழுக்க, “நீ போயிட்டு வா பாரும்மா. நம்ம டிரைவரை வரச் சொல்லி அப்பா உன்னை ஆபீஸ்ல ட்ராப் பண்ண சொல்லவா?” என்று கேட்டார் ரங்கராஜன்.
“நான் ஆட்டோ எடுத்துப்பேன்ப்பா”
“சரிம்மா. ஈவ்னிங் கிளம்பும் போது கால் பண்ணு” என்று விட்டார் அவர். காவேரிக்கு அதில் உடன்பாடில்லை. ஆகவே கணவரை முறைத்து நின்றார்.
பார்கவி பல நாள்களுக்குப் பிறகு கண்ணாடி முன் நின்றாள்.
“நீ கொள்ளை அழகு தெரியுமா?” என்று காதோரம் கிசுகிசுத்த குரல் அவள் உடலை அருவருக்கச் செய்து உதற செய்தது.
சைத்தான், நானே என்னை ரசிக்க முடியாமல் செய்து விட்டானே என்று புலம்பிக் கொண்டு கண்ணாடியை விட்டு நகர்ந்தாள்.
ஆரம்பத்தில் இதே கண்ணாடியில் தன் முகம் பார்த்து, வெறுத்து கண்ணாடியை உடைக்கப் போனது நினைவில் வர சிரித்துக் கொண்டாள்.
பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு அலுவலகம் புறப்பட்டாள். ரங்கராஜன் அவளை ஆட்டோ ஏற்றி விடத் தெரு முனை வரைக்கும் அவளோடு நடந்தார்.
மகளுக்கு இட மாற்றம் வேண்டும் என்றுதான் அவள் அலுவலகம் செல்வதைத் தடுக்கவில்லை அவர்.
அவள் இன்னமும் இரவுகளில் உறக்கம் வராமல் தவிப்பதையும், அப்படியே உறங்கினாலும் நள்ளிரவுகளில் மோசமான கனவு கண்டு வியர்த்து விழிப்பதுமாக இருப்பதை அவரும்தானே அனுதினமும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாரம் எங்காவது குடும்பமாக வெளியூர் சென்று வரலாம் என்றாலும் அவள் ஒப்புக் கொள்ளவில்லை.
அவர்களது சொந்த வீடு எனும் போது அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. மகளுக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் அவருள் எழ, “ஏன் பாரும்மா, நீ ஏன் ஏற்கனவே பிளான் பண்ண மாதிரி யூஎஸ் போகக் கூடாது?” என்று கேட்டார்.
“யூஎஸ்ஸா? எனக்கு அப்பவே அங்க போக அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லப்பா” என்று உண்மையைச் சொன்னாள்.
“சரிம்மா, அப்போ போக விருப்பமில்ல புரியுது. ஆனா இப்போ போயிட்டு வரலாம் இல்ல? சும்மா ஒரு வருஷத்துக்குப் போய்ட்டு வாயேன். உனக்கும் ஒரு மாற்றமா இருக்கும் இல்லடா?” என்று பாசமும் பரிதவிப்புமாகக் கேட்டார்.
“எனக்கு மாற்றம் எல்லாம் வேணாம்ப்பா. எனக்கு உங்களோட இருந்தா போதும்.” என்றாள் புன்னகையுடன்.
ரங்கராஜன் சிரித்து, “நாங்க எப்பவும் உன்னோட இருப்போம் பாரும்மா. நீ யூஎஸ் போனா உன்னைச் சாக்கா வச்சு நானும் அம்மாவும் கூட அங்க வருவோம் இல்ல?” என்று கேட்டார்.
“ப்பா” என்று அவள் முறைக்க, “அப்பாக்காக யோசி பாரும்மா. ரொம்ப வேணாம். ஒரு வருஷம். ஓகே? என்ன சொல்ற? இன்னைக்கு ஆஃபீஸ்ல கேட்டுட்டு வர்றியா?” என்று கேட்டார்.
“ஓகேப்பா” என்று இரு மனதாகப் பதில் சொன்னாள் அவள்.
ஆட்டோவில் ஏறிய மறுகணம் பிரியதர்ஷினியை அழைத்து அவளுடன் பேசி கொண்டே பயணித்தாள்.
“அப்புறம் ப்ரியூ, இன்னைக்கு ஆஃபீஸ் போகலையா நீ?”
“எங்க பாரு? பெட்ட விட்டு எழுந்தாலே தலை தனியா சுத்துது தெரியுமா? காலையில இப்படித்தான் இருக்குமாம். எங்கம்மா, உங்கம்மா, எங்கத்த..”
“உன் டாக்டரை விட்டுட்டியே..” என்று இவள் எடுத்துக் கொடுக்க, “ஆமா, என் டாக்டர் எல்லோரும் சொல்றாங்க. ஆனா என்னால முடியல பாரு. தலை சுத்தாம, வாந்தி எடுக்காம புள்ளை பெத்துக்க முடியாதா?” என்று சோகமாகக் கேட்டாள் பிரியதர்ஷினி.
“உனக்குச் சந்தேகம் வருது பாரு. உன் மிஸ் கிட்ட கேளு, பதில் சொல்லுவாங்க” என்று சிரித்தாள் பார்கவி.
அவள் சிரிப்பதை கேட்டு ஒரு நொடி அமைதியான பிரியதர்ஷினி, “நான் இன்னைக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம். உங்க வீட்டுக்கு வரவா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“ஆனா நான் ஆஃபீஸ் போறேனே.”
“என்னாதே..?”
“ஷாக்க குறை ப்ரி.” என்று மீண்டும் சிரித்தாள்.
“ஓகே. ஆபீஸ்ல எவனாவது தேவையில்லாத கேள்வி கேட்டா, உன் வேலையைப் பார்த்துட்டு போடான்னு சொல்லிடு” என்றாள்.
“ம்ம், ப்ரி. அப்பா என்னை யூஎஸ் போகச் சொல்றாங்க”
“நானும் அதைத்தான் சொன்னேன். உனக்கொரு சேஞ்ச்சா இருக்கும்னு. ஆனா நீதான் கேட்க மாட்டேங்கற” என்று பிரியதர்ஷினி கோபிக்க, “என்ன பிரி நீ, புரியாம பேசாத. என்னால போக முடியும்னு நான் கண்டம் தாண்டி கண்டம் போயிட்டா, நான் இல்லாம அம்மாவும் அப்பாவும் என்ன செய்வாங்க? அவங்களும் தனியா இருக்கணும் இல்ல? அங்க போய் நானும் தனியா கஷ்டப்பட்டுத் தேவையில்லாதத எல்லாம் யோசிச்சு என்னைக் குழப்பிக்கறதுக்கு நான் இங்க அவங்களோட இருந்தாவே பெட்டரா ஃபீல் பண்ணுவேன்” என்று தெளிவாகப் பேசினாள்.
“ம்ம், சரிதான். ஆனா அப்பாவும் கேட்டிருக்காங்க. சோ நீ கொஞ்சம் யோசிக்கலாம்” என்றாள் அழுத்தமாக.
அவளுடன் பேசிக் கொண்டே அலுவலகத்தை அடைந்திருந்தாள்.
பார்கவி பேசி வைத்த பத்தாம் நிமிடம் பிரியதர்ஷினிக்கு காவேரியிடமிருந்து அழைப்பு வந்தது.
அவளிடம் நலம் விசாரித்தவர், “உனக்கு வாய்க்கு நல்லா இருக்கும்னு புளிக் காய்ச்சலும், நெல்லிக்காய் ஊறுகாயும் செஞ்சேன்டா. நீ ஈவ்னிங் ஆஃபீஸ்ல இருந்து வரும் போது ஒரு எட்டு வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போறியா? இல்ல, நான் பாரு அப்பாகிட்ட குடுத்து விடவா?” என்று கேட்டார்.
“அச்சோ அம்மா, நானே வந்து வாங்கிக்கறேன். இன்னைக்கு நான் லீவ்தான்” என்றாள் அவள். அவரிடம் சொன்னது போலவே அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் அவரின் வீடு வந்து விட்டாள்.
பிரபஞ்சன் அவளைக் கொண்டு வந்து விட்டவன், அவனுக்கு வெளி வேலைகள் இருக்கிறது என்று சொல்லி சென்று விட்டான்.
“இந்தா சூடா செஞ்சதும் கொஞ்சம் சோறு போட்டு கிளறி வச்சேன். சாப்பிடு” என்று புளியோதரையைப் பரிமாறி நீட்டினார்.
உருளை வறுவல், வடகம், தேங்காய் துவையல் எனத் தொடு உணவுகளுடன் அட்டகாசமான சுவையுடன் இருக்க, அவரிடம் பேசிக் கொண்டே ரசித்து உண்டாள் அவள்.
ரங்கராஜன் மண்டபத்தில் இருந்து வீடு வந்தவர், “நம்ம போஸ்ட் மாஸ்டர் பையன் பார்த்திபன் கல்யாணம் நின்னு போச்சாம் காவேரி” என்று மனைவியிடம் தகவல் சொன்னார்.
அதைக் கேட்டு சட்டென்று பிரியதர்ஷினிக்கு புரையேறி விட்டது. அவளின் தலையைத் தட்டி, அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார் காவேரி.
பார்த்திபனுக்காக வருந்தினார்கள்.
“அவனுக்கு நிச்சயம் பண்ணியிருந்த பொண்ணுக்கு இன்னைக்கு வேற ஒருத்தன் கூடக் கல்யாணம். நல்ல பையன். அவனுக்கு இப்படியாகியிருக்க வேணாம்” என்று வருத்தத்துடன் சொன்னார் ரங்கராஜன்.
பிரியதர்ஷினி மேலும் விவரங்கள் பகிர, “போ, எல்லாக் கேடும் நல்லவன்களுக்குதான் வரும்” என்று புலம்பினார் காவேரி.
“சரிம்மா. நான் பேங்க் போய்ட்டு அப்படியே கேட்டரிங் ஆர்டரை பார்த்துட்டுச் சாயந்தரம் வந்துருவேன். எனக்காக வெயிட் பண்ணாம நீ நேரத்துக்குச் சாப்பிடு” என்று மனைவியிடம் சொல்லி விட்டு, பிரியதர்ஷினியை பார்கவி திரும்பி வரும் வரை வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு சென்றார்.
பிரியதர்ஷினி உணவை முடித்துக் காவேரியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவருக்கு அக்கா யமுனாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அக்காவின் மேல் இன்னமும் கடுங்கோபத்தில் இருக்கிறார் அவர்.
பாரிவேந்தன் பற்றிய உண்மை தெரிந்ததும் அக்காவை பேசியே ஒரு வழியாக்கி விட்டார்.
“இந்த நல்லவனைப் போய் என் பொண்ணுக்குக் கொண்டு வந்தியாக்கா நீ. நம்ம பாருவை என்ன பண்ணி வச்சுருக்கான் பாரு” என்று மகளைக் கைக் காட்டி கத்தினார்.
“சத்தியமா அவன் இம்புட்டு மோசம்னு எனக்குத் தெரியாது காவேரி”
“அதெப்படி தெரியாம இருக்கும்ங்கறேன். அங்கருக்கையில ஒரு புள்ளை கூடக் கல்யாணம் பண்ணாம குடித்தனம் நடத்தியிருக்கான். அவங்க வீட்டுக்கு அது தெரியாதாக்கும்? எதையும் சொல்லாம நம்மள ஏமாத்தி..”
“நம்ம பார்கவி கூடத்தான் யாரையோ லவ் பண்ணாளாம். அவனை மறக்கத்தான் இந்தக் கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னா. அவ ஒன்னும் எங்க புள்ளைய பிடிச்சு இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கல. அதுனாலதான் எங்க பையன் மேல வீண் பழி போட்டுட்டான்னு அவங்க சொல்றாங்க காவேரி” என்று யமுனா சொல்ல, காவேரிக்கு கொலை வெறியானது.
“நம்ம புள்ளைய இந்த நிலைமையில பார்த்திட்டு உனக்கு எப்படிக்கா இப்படியெல்லாம் பேச மனசு வருது?” என்று கண்கள் கலங்கி தொண்டையடைக்கக் கேட்டார். மருத்துவமனை படுக்கையில் பார்கவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளைப் பார்த்த யமுனாவிற்கும் கண்கள் கலங்கின. அவரும் பெண் பிள்ளை வைத்திருக்கிறாரே.
“என் பொண்ணு பார்கவி ஒன்னும் அந்தப் பொறுக்கி போலக் கிடையாது. அவ ஒரு பையனை விரும்புனத எங்ககிட்ட எப்பவோ சொல்லிட்டா. எங்க பொண்ணு எதையும் எங்ககிட்ட மறைக்கல” என்று பெருமையாகப் பொறுமினார்.
இன்றும் அதே நினைவுகளுடன் அக்காவின் அழைப்பை அவர் தவிர்க்க, யமுனா அவரை மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டேயிருந்தார்.
அதற்கு மேல் தவிர்க்க முடியாமல், “என்னக்கா?” என்று அழைப்பை ஏற்றுக் கோபமாகக் கேட்டார்.
“அந்தப் பாரி பய அம்மா நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டு போகுது காவேரி” என்று கோபமாகச் சொன்னார் யமுனா.
“ஏன்க்கா, என்னவாம் அந்த அம்மாக்கு? நம்மகிட்ட புடுங்கினது போதாதுன்னு திரும்பவும் எதுக்கு வந்துருக்கு?”
“உனக்கு விஷயம் தெரியாதா? அந்தப் பாரி பயலுக்கு வேலை போச்சாம். அவனை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்களாம். அமெரிக்கா போக வேண்டிய பய வாழ்க்கையை நாம கெடுத்து விட்டுட்டோமாம்.”
“என்னக்கா சொல்ற?” பற்கள் தெரிய புன்னகைத்து கேட்டார். பிரியதர்ஷினி பக்கம் திரும்பி, “அந்தப் பாரி பயலுக்கு வேலை போச்சாம் தர்ஷினிம்மா” என்று சின்னப் பிள்ளை போலச் சிரித்தார்.
“அவனுக்கு இனிமே வேலையே கிடைக்காதாம். இதுவே பெரிய பிளாக் மார்க்காம். என் பொண்ணு சொல்றா. ஆனா அந்தப் பாரிய பெத்தது இருக்கே. எம் புள்ளைய உச்சாணி கொம்புல கொண்டு போய் நிறுத்திருவேன் நானுன்னு என்கிட்ட சபதம் விட்டுட்டு போகுது காவேரி” என்று நொடித்தார்.
“அதானே, அத ஏன் உங்கிட்ட வந்து சொல்லுச்சு?”
“நாமதான் ஏதோ பண்ணி அவனுக்கு வேலை போக வச்சுட்டோமாம். அவன் மேல் வீண் பழி போட்டு அவன் பேரை கெடுத்துட்டோமாம். அதோட தங்க மவனுக்கு, சீக்கிரமா தங்கமான மருமகள கொண்டு வர போகுதாம்”
“என்னமோ பண்ணட்டும். நீ விஷயத்துக்கு வாக்கா”
“அதான் சொல்றேனே. நாமதான் ஆள் செட் பண்ணி அவன் மேல பொய் கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சு பழி தீர்த்துக்கிட்டோமாம். மனசாட்சி இல்லாம பேசுது தெரியுமா”
“பொய் கம்ப்ளைன்ட்னா பொய்னு ப்ரூப் பண்ண சொல்ல வேண்டியதுதானே? அது ஆளும் மூஞ்சியும்..”
“அது பொய்னு சொல்ல முடியாத அளவுக்குக் கம்பெனி உள்ளயே ஆள் ரெடி பண்ணி செஞ்சுட்டான்னு சொல்லுது”
“செஞ்சுட்டான்னா?”
“நம்ம பாருவைதான் சொல்லுது.”
“அந்தப் பொம்பளையை என்ன செஞ்சா தகும்ங்கறேன்” என்று காவேரி பல்லைக் கடிக்க, “பாருவ லவ் பண்ண பையன்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லுது காவேரி” என்றார்.
அதைக் கேட்டு காவேரி அதிர்ந்து விழிக்க, “யாரு அந்தப் பையன்?” என்று கேட்டார் யமுனா. அந்தக் கேள்விக்குக் காவேரிக்கே விடை தெரியாதே.