என் ஜீவனில் உறைந்திடு – 21 (1)

ரகுவரன் வேக நடையுடன் உள்ளே நுழைந்தான். இளமாறன், ரோஜா இருவரையும் பார்த்து புன்னகைத்து, கையில் இருந்த பொருட்களை அங்கிருந்த பணியாளரிடம் கொடுத்து விட்டு, “ஆட்டத்துக்கு நானும் வரவா?” என்று விளையாட்டாகக் கேட்டான்.

இளமாறன் கை நிறைய எலுமிச்சையை எடுத்து அவனிடம் நீட்டினான்.

“லெமன் செஸ்ட் (Lemon Zest) எடுங்க” என்ற இளமாறன் தன் வேலையில் மூழ்கி விட, எலுமிச்சை பழங்களைக் கேள்வியாகப் பார்த்து முழித்தான் ரகுவரன்.

அவன் ரோஜாவை உதவிக்குப் பார்க்க, அவளோ கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரகு வேறு வழியின்றி ஒரு எலுமிச்சையையும், கத்தியையும் கையில் எடுத்தான். இம்முறையும் பரிதாபமாக அவன் கையில் அகப்பட்டது வெண்ணெய் வெட்டும் கத்திதான்.

“ரகு…” என்று ரோஜா அவனைத் தடுக்கும் முன் இளமாறன் பார்த்து விட்டான்.

“நீங்க கையில வச்சுருக்கறது பட்டர் நைஃப் (Butter knife) மிஸ்டர் ரகுவரன்” என்று ஆங்கிலத்தில் அமைதியாகச் சொன்னான் இளமாறன்.

“சாரி கவனிக்கல” என்ற ரகுவரன், “நான் வெங்காயம் வெட்டவா?” என்று கேட்க, “ம்ம், ஓகே” என்று தலையசைத்தான் இளமாறன்.

“தின் ஸ்லைஸஸ் கொஞ்சம் வேணும். மிச்சத்தைப் பைஃன் சாப் பண்ணுங்க.” எனவும், வேகமாய்க் கத்தியை எடுத்தவனின் கைகள் தடுமாறியது.

“இளா, பிளீஸ்” கணவனின் கரம் பற்றி முணுமுணுத்தாள் ரோஜா.

“அவருக்குத் தனியா ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணனுமாம் ரோஜா. அதுவும் பைன் டைனிங், மல்டி க்யூசைன் (Multi cuisine). அப்படிக் கனவிருக்கிறவருக்குக் கிச்சென் அடிப்படை கூடத் தெரியலைன்னா எப்படி?” இம்முறை சத்தமாகதான் கேட்டான்.

ரகுவரன் தன் கையில் இருந்த கத்தியை கீழே வைக்க, “ரகு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சு, ட்ரெய்னிங் எடுத்திருக்கார் செஃப்” ரோஜா ரகுவரனுக்காகப் பரிந்து பேசினாள்.

“ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது” என்று ரகுவரனை பார்த்தே சொன்னான் இளமாறன்.

“இளா..” ரோஜா பதற,

“உங்க ஃபேமிலி பிசினஸ்ல இருந்து நீங்க வெளில வர நினைக்கிறது, தனியா சாதிச்சு காட்ட விரும்புறது எனக்குப் புரியுது. பெருசா ஏசி போட்ட கட்டிடமும், எட்டிப் பார்த்ததும் எச்சில் ஊற வைக்கிற உணவும் மட்டுமில்ல சாப்பாட்டுக் கடை. காய்கறி, மளிகை வாங்குறதில் இருந்து, பாத்திரம் தொடங்கிப் பாத்ரூம் சுத்தம் வரைனு நாம பார்க்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. எனக்குத் தெரியாது, என்னால முடியாதுன்னு நீங்க ஒதுங்கிப் போனா தொழில் நடத்த முடியாது ரகுவரன்” என்று இளமாறன்தான் சொல்ல விரும்பியதை சொல்லியே முடித்தான்.

“இளா, அமிர்தா பவன் வீட்டு பையன் அவர்” ரோஜா கண்டிப்புடன் சொல்ல, “சரி, ரோஜா. நான் இல்லைனு சொல்லலியே. அவர்கிட்ட, அவங்க அடையார் பிராஞ்ச்ல தினமும் எத்தனை லிட்டர் பால் வாங்குறாங்க கேளு? தினம் எத்தனை கிலோ வெங்காயம், தக்காளி..” இளமாறன் முடிக்கும் முன், “செஃப் பிளீஸ்” என்றான் ரகுவரன்.

“என் கூட வாங்க” என்ற இளமாறன் முன்னே நடக்க மற்ற இருவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் உணவகத்தின் ஒரு மூலையில் சென்று அமர்ந்ததும், “நான் ஒரு ஸ்டார் ஹோட்டல் செஃப். என்கிட்ட நீங்க ரெசிபி கேட்கிறது சரியா ரகுவரன்?” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான் இளமாறன்.

“இல்ல செஃப், அது..”

“நான் என்னோட சொந்த ரெசிபி கொடுத்தா கூட நான் வேலை பார்க்கிற ஹோட்டலுக்கு நான் நேர்மையா இல்லாததா தானே அர்த்தம்? உங்க செஃப் ஒருத்தர் இப்படிச் செய்றதை நீங்க ஆதரிப்பீங்களா?”

“…..”

“இதோ, இது என் சொந்த ரெஸ்டாரண்ட். இங்க வந்து என் மனைவிகிட்ட உங்க ஹோட்டலுக்கு மெனு டிசைன் பண்ணித் தர சொல்றீங்க? அது சரியா?”

“……”

“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசியிருந்தாங்க. நீங்க இப்படி ரோஜாவை அடிக்கடி சந்திக்கிறது…”

“ரோஜா என்னைப் பிடிக்கலன்னு ஆரம்பத்திலயே சொல்லிட்டா செஃப். எங்க ரெண்டு குடும்பத்துக்கும் ரொம்ப வருஷமா நல்ல பழக்கம் இருக்கு. ரோஜாவை சின்ன வயசில் இருந்தே எனக்குத் தெரியும். அது உங்களுக்கும் தெரியும்” கோபத்துடன் படபடவெனச் சொன்னான் ரகுவரன்.

“எனக்குத் தெரியும் ரகுவரன். ஆனா, உங்க அடையார் பேலஸ் பொண்ணுக்கு இது தெரியுமா? நாளைக்கே ரோஜா உங்க கூடச் சேர்ந்து வேலை பார்த்தா, அவங்க என்ன சொல்வாங்கன்னு யோசிச்சீங்களா?” இளமாறனின் கேள்வியில் நியாயமிருக்க, ரகுவரன் தடுமாறினான்.

“சாரி செஃப்.” என்றான்.

‘இன்று என் விடுமுறை நாள். ஆனால், என் அனுமதி பெறாமல் அதிரடியாக இங்கு வந்து நின்று தொழில் பேச நீ முயல்வது தவறு’ என அடுத்து சொல்ல வந்ததை அப்படியே விழுங்கினான் இளமாறன்.

அன்றைய நாளின் அர்த்தமற்ற கோபங்களை எதிரில் இருந்தவன் மேல் இறக்கி வைத்தது அவனுக்குக் குற்ற உணர்வு தந்தது.

“ரொம்ப ரூடா பேசிட்டேன் ரகு. சாரி” என்றான்.

ரகுவரன் ராஜா வீட்டு கன்னுக்குட்டி. அவன் தொழில் படிக்க, அவன் தாத்தா சற்றுக் கடுமை காட்டினார்தான். ஆனால், அவனுக்கு மற்றபடி கேட்டது அனைத்தும் கிடைத்து விடும். இப்போது அவனது தொழில் ஆசையைத் தாத்தா தடுக்கவும்தான் என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறி நிற்கிறான் அவன். தற்போது இளமாறனும் கறாராகப் பேச அவனுக்குச் சங்கடமாகப் போனது. ஆனாலும், தன் பக்க தவறும் புரிந்தது.

“நான் எந்தக் கம்பனிகிட்ட பிசினஸ் பேசினாலும் அவங்க நேரா தாத்தாகிட்டதான் போறாங்க செஃப். என் ஐடியா, என் கனவு, அதை மதிக்காம தாத்தா சொல்றதை கேட்க வேண்டியதா இருக்கு. என் கூடப் படிச்சவன், ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அகல கால் வைக்கதான் பிளான் சொல்றாங்க. அதான் உங்களுக்கு இதுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. என்னைச் சரியா கைட் பண்ணுவீங்கன்னு வந்தேன் செஃப். சத்தியமா ரோஜாவை, உங்க உறவை எல்லாம் நான் யோசிக்கவேயில்ல. நமக்குள்ள இருக்க இந்த ஃப்ரெண்ட்ஷிப்பை மட்டும்தான் பார்த்தேன் நான்.” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவன் முன்பு காஃபியை வைத்தாள் ரோஜா.

கணவனுக்கும் கொடுத்து விட்டு, தானும் ஒரு கோப்பையுடன் அவள் அமர, இளமாறன் திரும்பி அவள் முகத்தையே பார்த்தான்.

“எங்களுக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க ரகு. உங்க பிளான் என்னனு தெளிவா சொல்லுங்க. ரோஜா ஹெல்ப் பண்ணுவா. உங்க டீம் கூடச் சேர்ந்து அவ வொர்க் பண்ணித் தருவா, ஓகே?” இளமாறன் சொல்ல, ரகுவரன் முதலில் அதிர்ச்சியைக் காட்டி பின் பெரிதாகப் புன்னகைத்தான்.

“நீங்க பேசிட்டு இருங்க. எனக்குக் கிட்சன்ல வேலையிருக்கு.” இளமாறன் எழுந்து கொள்ள, எட்டி அவன் கைப் பிடித்து, “தேங்க்ஸ் செஃப்” என்றான் ரகுவரன்‌ மனதார.

“இட்ஸ் ஓகே ரகு. ஆல் த பெஸ்ட்” என்று அழுத்தமாய்க் கைக் குலுக்கி சொன்னான் இளமாறன். மனைவியை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு, காஃபி கோப்பையுடன் சமையல் அறையை நோக்கி நடந்தான் அவன்.

“ஐ ஆம் ரியலி சாரி ரோஜா. உங்களுக்குள்ள குழப்பம் பண்ணனும்னு நான் நினைக்கல. சாரி” ரகுவரன் சொல்ல,

“எனக்கு உங்க நிலைமை புரியுது ரகு. அமிர்தா பவன்ல இருந்து வெளில வந்து புதுசா ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கறது அவ்ளோ ஈஸி இல்லதான். இளா பேசினது உங்களை ஹர்ட் பண்ணியிருந்தா..” என்று அவள் கணவனுக்காக மன்னிப்பு கேட்கும் முன், “அச்சோ. தப்பு என் மேலதான் ரோஜா. நீ சாரி சொல்லாத” என்றான் ரகுவரன்.

இருவரும் அமைதியாகக் காஃபியை குடித்தனர்.

“நான் இப்போ இது பத்தி பேசுறது தப்புதான். ஆனா, என்னால சொல்லாம இருக்க முடியல ரோஜா. பிளீஸ், தாத்தாவை தப்பா நினைக்காத. உன்னைப் பிசினஸ் மோட்டிவ்காக மட்டும் தாத்தா பெண் கேட்கல. அவருக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். உங்கப்பா மேல ரொம்ப மரியாதை அவருக்கு.”

“எனக்குத் தெரியும் ரகு. அவரோட காரணங்கள் நியாயமானதா இருக்கலாம். ஆனா, இனி அதைப் பத்தி நாம பேச வேண்டாமே. உங்க குடும்பத்து மேல எங்களுக்கு நிறைய மரியாதை இருக்கு. நீங்களும் சரியான நேரத்துக்கு வந்து எனக்காக உங்க தாத்தாகிட்ட பேசினீங்க. நானும் அதை மறக்க மாட்டேன். நாம இதையெல்லாம் கடந்து வந்தாதான் சேர்ந்து வேலை பார்க்கறது சாத்தியமாகும் ரகு”

“கண்டிப்பா கண்டிப்பா ரோஜா. இனிமேல் இதைப் பத்தி பேசல” என்று உறுதியாகச் சொன்னவன், தன் மடிக்கணினியை திறந்து, தொழில் குறித்த திட்டங்களை அவளுக்கு விவரிக்கத் தொடங்கினான்.

முதல் பத்து நிமிடங்கள் அவனது திட்டங்களில் கேள்வி கேட்ட ரோஜா, அதன் பின்னர் அதில் முழுமையாய் மூழ்கி விட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top