என் ஜீவனில் உறைந்திடு – 20 (2)

அவரின் பின்னே இளமாறனும் வர, அவனைக் கண்டதும் அவனை நோக்கி நடந்து விட்டாள்.

“மாறன் வீட்டுக்கு கிளம்பறேன்னு சொல்றான் சுகந்தி” சங்கரன் சொல்ல,

“ஏன்? இன்னைக்கு உனக்கு லீவ் தானே மாறா? நைட் வரை இங்க இருக்கலாம் இல்ல? நாளைக்கு இங்கருந்தே வேலைக்குப் போகலாம் இல்லையா? அப்படிப் பிளான் பண்ணித் தானே வந்தீங்க ரோஜா?” சுகந்தி படபடத்தார்.

“எனக்கு ரெஸ்டாரண்ட்ல வேலையிருக்கு.” மொட்டையாகப் பதில் சொன்னான் இளமாறன்.

“நீயே போய்தான் பார்த்தாகணுமா?”

“ஆமா” என்றவன், “பிளீஸ்ப்பா, வேலையிருக்குச் சொன்னா புரிஞ்சுக்கோங்க” என்று சுகந்தியின் முகம் பார்க்காமல் சொல்ல, அவர் மறுக்கவில்லை.

ரோஜாவின் கைப் பிடித்து ஹாலை நோக்கி நடந்தான் இளமாறன்.

“சாரி ண்ணா” அதுவரை ஒதுங்கியே இருந்த வினோத் வந்து மன்னிப்பு கேட்க, “எதுக்குச் சாரி? எந்த ஒரு வார்த்தையையும் காரணம் இல்லாம சொல்லாத தம்பி” என்று அவனின் தோளில் தட்டினான் இளமாறன்.

அவன் பேச்சில் பல அர்த்தங்கள் இருந்தது போலிருந்தது.

சங்கரன் வந்து இளமாறன் முன் நிற்க, ரோஜா ஒதுங்கிக் கொண்டாள்.

“பால்கோவா, பால் பாயாசம் எனக்குப் பிடிக்கும் அண்ணி” வினோத் சொல்ல, அந்தக் கூடுதல் தகவலை அவன் சொல்லியிருக்க வேண்டாம் என்று நினைத்தாள் ரோஜா.

ஆக, மகனுக்குப் பிடித்ததாகதான் சமைத்திருக்கிறார் சுகந்தி. அது எந்த மகன் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் அவர். ரோஜா ஒரு பெருமூச்சுடன் வினோத்தை பார்த்தாள்.

“அப்பாதான் எப்பவும் அண்ணாவை பார்க்கப் போவாங்க. அப்பா அளவுக்கு நாங்க யாரும் அண்ணா கூட க்ளோஸ் இல்ல” என்று விளக்கம் சொன்ன வினோத்தை வெறுப்புடன் பார்த்தாள் ரோஜா.

“அவரை அண்ணா, அண்ணா சொல்றீங்க. ஆனா, அந்த அண்ணாக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க முயற்சி கூடப் பண்ணதில்லையா நீங்க?” கடுப்புடன் கேட்டாள்.

“அது, இல்லண்ணி..”

“நமக்குப் பிடிச்சவங்க, நாம நேசிக்கிறவங்க, நம்ம பக்கத்துல இருக்காங்களா? தூரத்துல இருக்காங்களா? அவங்களைப் பார்க்கறோமா? பார்க்கலையா? அடிக்கடி பேசுறோமாங்கறது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை வினோத். நாம உண்மையா நேசிச்சா, அவங்களைப் பத்தி அடி முதல் நுனி வரை தெரிஞ்சு வச்சுருப்போம். இல்லையா, அவங்ககிட்ட வாய் விட்டு கேட்டாவது அவங்களுக்குப் பிடிச்சதை செய்வோம்” அடர்ந்த குரலில் சொன்னாள் ரோஜா.

“நம்மை நேசிக்கறவங்க தெரியாம செய்ற தப்பையும் மன்னிக்கிறது தானே நாம அந்த அன்புக்கு செய்யற பதில் மரியாதை அண்ணி?” வினோத் கேட்க,

“ம்ம். மன்னிக்கிறது, மறக்கிறது எல்லாம் எப்போ சாத்தியம் தெரியுமா? முதல் முறை தெரியாம செய்யும் போது? ரெண்டாம் முறை, மறதியா செய்திடும் போது?. ஆனா, மூன்றாம் முறையா நடந்தா, அதுக்கு என்ன அர்த்தம்? அப்போ அது அன்பில்ல, அலட்சியம்” அழுத்தமாகச் சொன்னாள்.

சட்டென இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, “அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்ணி.” என்றான் வினோத்.

“நீங்க இப்படிப் பிடிக்கும்னு சொல்ற சூழல் வர்றதே அபத்தம் வினோத்” பெரியவர்களிடம் காட்ட முடியாத ஆதங்கத்தை அவனிடம் கொட்டினாள் ரோஜா.

அன்பு, அக்கறை, அனுசரணை இதைச் சொல்லில் காட்டாமல், செயலில் காட்டும் போதுதான் உரியவரை சென்றடையும் என்பது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?

“ரோஜா..” இளமாறன் வந்து மனைவியின் கைப் பிடித்தான். அவன் கண் காட்ட, இருவரும் வீட்டினரிடம் விடை பெற்று வெளியில் வந்தார்கள்.

அவர்கள் புறப்படும் முன் மாமனார் அவர் பங்கிற்குப் பேசவே செய்தார்.

உணவில் நேர்ந்த சிறிய தவறை அவள் பெரிதுபடுத்தக் கூடாது என்பது போல அவர் பேச, “அத்தைக்குதான் ஞாபகம் இல்ல. ஆனா, அவருக்குப் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும் தானே மாமா? நீங்க ஏன் அத்தைக்கிட்ட சொல்லல. எங்களுக்காக விருந்து சமைக்கறீங்க. அதில் எங்களுக்குப் பிடிச்சது இருக்கணுங்கற அவசியம் இல்லதான். ஆனா, பிடிக்காதது இல்லாம உங்களால பார்த்துக்க முடியலையா? உங்க மகனுக்கு நீங்க கொடுக்கிற முக்கியத்துவம் அவ்ளோ தானா?” என்று முகத்திற்கு நேரே கேட்டே விட்டாள்.

தம்பியுடன் பேசிக் கொண்டிருந்த இளமாறனுக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை. ஆனால், அப்பாவின் முக மாற்றம் பார்த்து, “ரோஜா” என்று அதட்டலாக அழைத்தான்.

“இட்ஸ் ஜஸ்ட் புஃட். அப்படினு அசட்டையா சொல்லாதீங்க மாமா. உணவு இல்லைனா நாம உயிர் வாழ முடியாது. உலக அரசியல்ல, உணவு அரசியல்தான் ரொம்ப மோசமானது, பெருசானது.” அவள் சொல்ல, வாயடைத்துப் போய் மருமகளைப் பார்த்தார் சங்கரன்.

தான் பேசியதற்காக, “சாரி மாமா” என்று உணர்ந்து சொன்னவள், அவரின் முகம் பாராமல் நடந்து கணவனிடம் சென்று நின்றாள் ரோஜா.

அவர்கள் காலையில் கிளம்பிய போது இருந்த மனநிலை என்ன? தற்போது இருக்கும் மனநிலை என்ன? அன்றைய நாள் இப்படி முடிந்திருக்க வேண்டாம் என நினைத்து நொந்து கொண்டாள் ரோஜா.

பயணம் முழுவதும் மாமனார் மற்றும் வினோத்திடம் அப்படிக் கடினமாகப் பேசியிருக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தினாள்.

கணவனின் உறவுகளைச் சீர் செய்து அவனிடம் சேர்க்காமல் இப்படிச் செய்து விட்டோமே என்ற தவிப்பு அவளை அலைக்கழித்தது.

அரை மணி நேரத்தில் அவர்களுக்குச் சொந்தமான உணவகத்தை வந்தடைந்தார்கள். இளமாறன் காரை பார்க்கிங்கில் நிறுத்தியதும், மெல்ல நகர்ந்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அதுவரை அவனைப் பார்வையால் அணைத்து பயணித்தவளின் மனம் இப்போது அவன் ஸ்பரிசம் வேண்டி பரிதவித்தது. அன்பை அணைப்பால் வெளிப்படுத்த விரும்பினாள்.

அவளின் கன்னத்தை மென்மையாய் தட்டி விட்டுக் கீழிறங்கினான் இளமாறன். அவனின் வேக நடையையும், கதவை திறக்கும் அவசரத்தையும் பார்த்து அவசரமாகக் காரில் இருந்து இறங்கி, ஓடி அவனைப் பின் தொடர்ந்தாள்.

இளமாறன் நேராகச் சமையல் அறைச் சென்றான். கை கழுவி, முகம் துடைத்து, தலை முடியை தொப்பிக்குள் அடைத்து, சட்டைக்கு மேலாக ஏப்ரன் அணிந்து, காலை பின்னால் உயர்த்தி வேட்டியை பிடித்து மடித்துக் கட்டினான்.

அந்த ஒற்றைச் செய்கையில் அவளின் கலக்கம் சற்றே மறைந்து, கணவனின் கவர்ச்சியைக் கைக் கட்டி, கண் நிறைத்து ரசிக்கச் செய்தது.

இளமாறனுக்குச் சமையல் என்பது சரணாகதி. உலகை மறந்து, தன்னை மறந்து அதில் மூழ்க விரும்பியவனாக வேலையில் இறங்கினான் அவன்.

சமையல் கலையைக் கணவன் தேர்ந்தெடுத்ததின் காரணம் இப்போது புரிந்தது ரோஜாவிற்கு.

அங்கிருந்த பணியார்களிடம் பேசிக் கொண்டே, செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து விசாரித்துக் கொண்டே கத்திகளை எடுத்து மேஜையில் பரப்பி வைத்தான் அவன்.

“டின்னருக்கு தேவையான வெஜிடபிள்ஸ் எடுத்துட்டு வாங்க” அவன் ஆணையாகச் சொல்ல, “செஃப்” என்று தயங்கினார் அவனின் முதன்மை செஃப்.

ரோஜா சட்டெனக் கணவனிடம் சென்றாள்.

“டின்னர் மிஸ் அம் பிளா (mise en place) ஆல்ரெடி ரெடி போலச் செஃப்” என்றாள்.

அவனோ நிமிராமல் கத்தியை தீட்ட, அடுத்த நிமிடம் அவன் முன்னே காய்கறிகளைக் கொண்டு வந்து வைத்தனர்.

கணவன் மனதின் உளைச்சலை உடலுக்குக் கடத்தி வருத்தப் போகிறான் என்பது புரிந்து, அவனை நெருங்கினாள்.

“நான் என்ன பண்ணட்டும் செஃப்?” ரோஜா கேட்க,

காய்கறிகளை அவள் புறமாக நகர்த்தி வைத்து, “சாப், ஸ்லைஸ், பைஃன் டைஸ், ஜூலியன் (Chop, Slice, Fine Dice, Julienne)” என்றான் இளமாறன் தீவிரமாக.

ரோஜா ஒரு நொடி அவனை மிரண்டு பார்த்தாள். அவள் கல்லூரியில் படிக்கும் போது, பின்னர்த் தொழில் நுட்ப பயிற்சியின் போது கேட்ட வார்த்தைகள் அவையெல்லாம். அதன் பின் மறந்தே போனவைகளை இப்போது கேட்கையில் அவளுக்கு அந்நியமாகப்பட்டது.

அவர்களின் கேன்டீனில் தினமும் சாம்பார், பொரியல், கூட்டு என அதற்கேற்ப காய்களை நறுக்குவார்கள். இப்படி அளவாக, அழகாக எல்லாம் அவர்கள் வெட்டுவது கிடையாது.

அவள் தடுமாறி நிற்பதை கண்டு கொள்ளாமல், இளமாறன் வேலையில் இறங்கியிருந்தான்.

ரோஜா பட்டெனப் பணியாளர் நீட்டிய ஏப்ரனை வாங்கிச் சேலைக்கு மேல் அணிந்து, தலைமுடியை கொண்டையிட்டு, கைகளைக் கழுவி, துடைத்து பின்னர் மின்னல் வேகத்தில் மேஜையில் இருந்த கத்தியை எடுக்க, “என்ன பண்ற?” என்று அவளைப் பாராமல் கேட்டான் இளமாறன்.

“கேரட்டை ஜூலியனா கட் பண்ணலாம்னு செஃப்..”

“எது? இந்தக் கார்விங் நைஃப் (Carving knife) வச்சா?” அடர்ந்த அவன் குரலில் அழுத்தமான கேலியிருந்தது. சட்டெனக் கையில் இருந்த கத்தியை அவள் கீழே போட, செஃப் கத்தியை அவள் பக்கமாக நகர்த்தி வைத்தான் இளமாறன்.

புன்னகையுடன் அதைக் கையில் எடுத்தாள் ரோஜா.

அடுத்தச் சில நிமிடங்கள் இருவரும் பேச்சின்றிக் கத்திக்கு வேலை கொடுத்தனர்.

இளமாறன் விரைவாகவும், தொழில் முறை துல்லியத்துடனும் காய்களை நறுக்க, ரோஜா தனக்குத் தெரிந்ததைப் பிழையின்றிச் செய்ய முனைந்தாள்.

அரைக் கிலோ கேரட்டை நறுக்கி விட்டு, வெங்காயத்தை அவள் கையில் எடுக்க, அவள் கைப் பிடித்துத் தடுத்தான் இளமாறன்.

“உனக்குப் பழக்கம் இல்லாத வேலை. வேணாம்” என்று தடுத்தான்.

“உங்களுக்கு மட்டும்…” அவளைப் பேச விடாமல், “ரோஜா” என்று அதட்டினான்.

“வீட்டுக்குப் போகலாமா செஃப்” அவன் கண் பார்த்து கேட்டாள் ரோஜா.

“எதுக்கு?”

“எனக்கு உங்களைக் கட்டிக்கணும். அது இங்க முடியாது” இமைக்காமல் அவனைப் பார்த்து குரலை தழைத்துச் சொன்னாள். அவனோ முறைத்தான். ஆனால், அவனின் இறுக்கமான உடல் மொழியை மீறி கண்ணில் தெரிந்தது இதமான காதல்.

“நீ வெளில போய் வெயிட் பண்ணு. கிட்சன்ல நின்னு இப்படிப் பேசாத” கடுமையாகச் சொன்னான்.

“ரொம்பத்தான்” கடுப்புடன் முணுமுணுத்தாள்.

அப்பொழுது, “ஹாய் செஃப்” என்று சமையல் அறை வாயிலில் வந்து நின்று பலியாடு தானாகத் தலையைக் கொடுத்தது மட்டுமல்லாமல், சத்தம் போட்டு கத்தி தன் இருப்பைக் காட்டியும் கொடுத்தது.

இளமாறனின் தற்போதைய மனநிலை தெரிந்திருந்ததால், ரோஜா நமுட்டு சிரிப்புடன் நிமிர்ந்து, “ஹல்லோ மிஸ்டர் ரகுவரன்” என்று ராகம் இழுத்தாள்.

அந்தக் குரலில் அவன் சுதாரித்து இருக்கலாம். எங்கே?

“ஹாய் ரோஜா, நீயும் இங்கதான் இருக்கியா? நான் எதிர்பார்த்தேன்தான்” மொத்த பற்களையும் காட்டி புன்னகைத்தபடி உள்ளே வந்தான் ரகுவரன்.

“ஹாய் ரகுவரன்..” என்ற இளமாறனின் கரங்கள் வேகமாகக் கத்தியை கூர்தீட்டியது.

error: Content is protected !!
Scroll to Top