பார்த்திபன் காதலி – 21 (1)

மாலை வீடு வந்த மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சத்யபாமா.

“என்னப்பா பார்த்திபா? உனக்கு வருத்தம் இருக்கும்னு தெரிஞ்சுதான் நான் உன்ன கிரிக்கெட் ஆட அனுப்பினேன். அதுக்குன்னு இப்படியா போய் அடிப்பட்டு வருவ?” என்று மகனின் முகத்தையும், கை காயத்தையும் கண்டு அங்கலாய்த்தார். முகமெல்லாம் வாடி, கண்கள் ஜீவன் இன்றி, கையில் கட்டுடன் வந்த மகனை காண அவருக்கு மனம் பதறியது.

அவர் கண்கள் மளுக்கென்று தளும்பி விட்டன.

“ம்மா, எனக்கு ஒன்னும் இல்லம்மா. நாள் முழுக்க வெயில்ல விளையாடிட்டு வந்தா வெள்ளையடிச்ச மாதிரியா மா இருப்பேன்? போம்மா” என்றான் முயன்று முறுவலித்து.

“அப்பாதான் வேணவே வேணாங்கறார். ஆனா உனக்கு அந்தப் பொண்ணதான் கட்டணும்னா, அம்மா வேணா அவங்க கிட்ட போய்ப் பேசட்டும்மா பார்த்திபா?” மகனை வாஞ்சையுடன் பார்த்து கேட்டார். மகனை இப்படி மனம் உடைந்த நிலையில் அவரால் பார்க்க முடியவில்லை.

பதிலுக்கு, “ம்மா” என்று அதட்டினான்.

“இல்ல, தெரியாமதான் கேட்கறேன். என்னன்னும்மா அவங்ககிட்ட போய்ப் பேசுவீங்க? அதுவும் அந்த ஆளுகிட்ட?” என்று கோபமாகக் கேட்டான்.

“இல்லப்பா”

“வேணாம்மா. அவங்களே வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் போய்க் கெஞ்சி கல்யாணம் பண்ணி.. அதெல்லாம் செட்டாகாதும்மா. நல்லாருக்காது” என்றான் முடிவாக.

அந்நேரம் துரைராஜ் கூடத்துக்கு வரவும், பெற்றோர் இருவரையும் சேர்த்து வைத்தே தான் அமெரிக்கா செல்வதாக எடுத்திருக்கும் முடிவை சொல்லி விட்டான்.

ஏற்கனவே அலுவலகத்தில் சம்மதம் தெரிவித்திருந்தான். ஆறு மாசம் அங்குச் சென்று வருகிறேன் என்றான்.

சத்யபாமாவிற்கு மகன் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால், இப்படியொரு சூழ்நிலையில் செல்வதைத்தான் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“உனக்கு வேற பொண்ணு பார்க்கவா பார்த்திபா? நீ கல்யாணம் பண்ணிட்டு வெளிநாடு போயேன்” என்று சொன்னார்.

“கல்யாணமா? ம்மா, நானா சொல்ற வரை பிளீஸ் எனக்குப் பொண்ணு பாக்கறேன்னு எறங்காதம்மா” என்றான் தீர்க்கமாக.

“உங்க புள்ளை என்ன பேசுறான் பாருங்க” என்று அவர் கணவரை துணைக்கு இழுக்க, “உன் அவசரத்துக்கு அவன் கல்யாணம் பண்ண முடியாது சத்யா. அந்தப் போலீஸ் அவர் பொண்ணுக்கு உடனே கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்டா, போட்டியா நாமளும் இவனுக்குச் செய்யணுமா? இது நம்ம பையன் வாழ்க்கை. நாம ஏற்கனவே தப்பான முடிவு எடுத்தாச்சு. திரும்பவும் அதே தப்ப செய்ய வேணாம். அவன் விருப்பப்படி வெளிநாடு போய்ட்டு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்” என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.

அப்பாவை பார்த்து மென்னகை புரிந்தவன், தன் கிரிக்கெட் பையுடன் தனதறைக்குச் சென்றான்.

நன்றாகக் காயம் பட்டிருந்த மோதிர விரலை அழுத்திக் கொடுத்தான். அந்த விரலில் இப்போது நிச்சயதார்த்த மோதிரம் இல்லை. அதைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து விட்டு வந்தான். அன்றைய நாளின் அலுப்பு தீர குளித்து, உடை மாற்றி மாடிக்கு வந்தான்.

அவனுக்குப் பிரபஞ்சனை பார்க்க வேண்டும் போலிருந்தது. அவனுக்கு நடக்கவிருந்த திருமணம் முறிந்திருக்கிறது. அதை நண்பனிடம் பகிர வேண்டும். மருத்துவமனையில் இருக்கும் பார்கவியைப் பார்க்க மனம் பரபரத்தது அவனுக்கு. அவளின் நலம் வேண்டினான். அவன் நேராக மருத்துவமனை சென்றால் யாரும் தடுக்க மாட்டார்கள்தான். ஆனாலும் ஏதோ ஓர் உணர்வு அவனைப் போக விடாமல் தடுத்தது. அவர்களைச் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தான்.

வானில் வெள்ளி நிலா வலம் வர, அவனும் அதைப் போலவே தேய்ந்து, தரையில் சரிந்தான்.

அவன் கண்கள் சோர்வினால் மூடின. அந்நேரம் அவன் கருவிழிகளில் பிரபாவதியின் பிம்பம் வந்தது.

கடைசியாய் இன்று காலை அவளை அழுத முகமாகக் கண்டது அவன் கண்களை விட்டு அகலவில்லை.

உடனே கீழே சென்று அம்மாவின் அலைபேசியை வாங்கி வந்தான்.

நல்லவேளையாக இன்னும் சத்யபாமாவின் எண்ணை முடக்கியிருக்கவில்லை அவள். அம்மாவின் எண்ணில் இருந்து அவளை அழைத்து விட்டான்.

“பிரபா..வதி..”

“பிளீஸ் எனக்குக் கால் பண்ணாதீங்க. அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்” என்று எடுத்ததும் பதறினாள் அவள்.

“உங்கப்பாக்குத் தெரிஞ்சா தெரியட்டும். என்னை என்ன பண்ணிடுவார் உங்கப்பா? என் மேல பொய் கேஸ் போடுவார். அவ்ளோதானே? போடட்டும்” என்றான் அசட்டையாக.

“நீ எப்படி இருக்கியோன்னு.. ப்ச், நான் அப்படி யோசிக்கிறதே தப்புன்னு திரும்பத் திரும்ப ப்ரூவ் பண்ற நீ. உனக்கு உங்கப்பா மட்டும்தான் முக்கியம் இல்ல? உன் உலகம் அவரைச் சுத்தி மட்டும்தானே சுத்துது? எங்க நீ ஹர்ட் ஆகியிருப்பியோன்னு நினைச்ச என்னைச் சொல்லணும்.”

“இப்படியெல்லாம் பேசாதீங்க”

“எப்படிப் பேசக் கூடாது? உனக்கு வருத்தமே இல்லையா? கொஞ்சம் கூட?” என்று அழுத்தமாகக் கேட்டான். அவளோ மௌனமாக இருந்தாள்.

“உங்கப்பா உன்னை மிரட்டுனாரா? அடிச்சாரா பிரபாவதி? ம்ம், என்கிட்ட தைரியமா சொல்லு.” என்று கேட்டான்.

“ச்சே ச்சே இல்லயில்ல” என்று வேகமாக மறுத்தாள்.

“அப்புறம் ஏன் பிரபாவதி? என்னோட ஆன் சைட் வர நீதானே ஓகே சொன்ன? இன்னும் எத்தன காலத்துக்கு இப்படி உங்கப்பா நிழல்லயே இருக்க முடியும்னு நீ நினைக்கற?”

பதிலுக்கு, “உங்களால உங்கப்பாம்மா இல்லாம இருக்க முடியுமா? அவங்களை விட்டுட்டு நீங்க என்னோட வருவீங்களா?” என்று கோபமாகக் கேட்டாள் அவள். அவனுக்கு அந்த வார்த்தைகளின் பின்னே கோவிந்தன்தான் தெரிந்தார். கசப்பாகப் புன்னகைத்துக் கொண்டான்.

“ம்ம், வர மாட்டேன்தான். என்னமோ நான் உங்கப்பாகிட்ட இருந்து உன்னைப் பிரிக்கறது போலவே பேசுற நீ..”

“பார்த்திபன், நீங்க எதுக்குத் தேவையில்லாம பேசுறீங்க?”

“எப்படிப் பிரபாவதி? சுவிட்ச் போட்டது போல உன்னால ஒரே நாள்ல இப்படி மாற முடிஞ்சது? என்னாலயும் அப்படி மாற முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்” என்று புலம்பினான். நேற்றிரவுதான் என்னைக் கடற்கரை அழைத்துச் செல் என்று கேட்டிருந்தாள். அந்தப் பெண்ணா இவள் என்று அவனுக்கு ஆச்சரிய அதிர்ச்சியாக இருந்தது‌.

“நான் பேசுறது தேவையில்லாத பேச்சு, ம்ம். சரிதான். எனக்கு இந்த ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லிடு பிரபாவதி” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“என்னது?”

“எங்க குடும்பத்தைப் பத்தி உங்கப்பாவோட எண்ணம்தான் உனக்குமா?” என்ற அவனின் கேள்விக்கு அவள் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

சரியான நேரத்தில் சொல்லப்படாத பதில்கள் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன.

“குட் பை பிரபாவதி” என்றான் ஆழ்ந்த குரலில். அவள் திகைத்து அவன் பெயரை அழைக்கும் போதே அவளின் நல்வாழ்க்கைக்கான வாழ்த்துகளைச் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான். பல வகையில் இந்தப் பேச்சு அவனுக்குத் துல்லியமான தெளிவை தந்திருந்தது.

காலத்துக்கும் தங்களைக் கீழாகப் பார்க்கும் ஒருவரிடம் அவன் சிக்கியிருந்தால், வாழ்க்கை நகரமாகி இருக்கும் அல்லவா!

மனத்தில் இருந்த வருத்தத்தை மீறி விடுதலையை உணர்ந்தான் அக்கணம்.

அவனது அலைபேசியை எடுத்து அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினான்.

ஆனால் நினைவுகள்? அவை நிரந்தரமாக அழியாது என்றாலும் அதில் இருந்து நகர்ந்து விடலாம்தானே? அதற்கான முயற்சியில் இறங்கினான்.

அவனது விஷயம் கேள்விப்பட்டு அவன் தங்கை ரேணுகா குடும்பம் வீடு வந்திருந்தார்கள். தங்கை குழந்தையுடன் அவனைத் தேடி மாடிக்கு வந்தாள்.

குழந்தையை வாங்கி மார்பில் போட்டு விளையாடியவன், “அழாத ரேணு” என்று தங்கைக்கு ஆறுதல் சொல்லி தன்னையும் சேர்த்தே தேற்றிக் கொண்டான்.

அமெரிக்கா செல்லும் முடிவில் இன்னும் உறுதியானான்.‌ அவனுக்கு ஒரு மாற்றம் தேவை என்று உணர்ந்த அவன் குடும்பம் அவனது முடிவுக்குத் துணை நின்றது.

ஆனாலும் இந்தப் பாரிவேந்தனை ஒன்றுமே செய்யவில்லையே என்பது மட்டும் ஏன் அவனை இத்தனை தொல்லை செய்கிறது?

***

பார்கவியை இரண்டு நாள்கள் கழித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள்.

அவர்கள் கார் அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே பார்கவி பதட்டமாகி விட்டாள். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவள்.

பொதுவாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் நடந்த இடத்தை நாம் இன்னொரு முறை கடக்கவே விரும்ப மாட்டோம். அந்த இடம் அந்த மோசமான நிகழ்வை, அந்தத் தருணத்தை, நினைவுகளைத் தூண்டி விடக் காரணமாக அமையும் என்பதால் நம் மனம் அந்த இடத்தைத் தவிர்க்கவே அறிவுறுத்தும்.

மருத்துவர் கூட, “கொஞ்ச நாள்களுக்கு வேறு இடத்தில் அவளைத் தங்க வையுங்கள்” என்றுதான் அறிவுறுத்தியிருந்தார்.‌ ஆனால் அதைக் கணித்திருந்த பார்கவிதான், “நான் நம்ம வீட்லதான் இருப்பேன்ப்பா” என்று அப்பாவிடம் தெளிவாகச் சொல்லி விட்டாள்.

சொந்த வீட்டிலேயே பாதுகாப்பாக உணர முடியாதது எல்லாம் பெரும் கொடுமை. இப்போது பார்கவியின் உள்ளங்கை வியர்த்திட, அவள் கரத்தை ஆதரவாக மென்மையாக அழுத்திக் கொடுத்தாள் பிரியதர்ஷினி.

ரங்கராஜன் இப்போதும் மனம் கேளாமல், மகளைத் திரும்பி பார்த்து, “பாரும்மா, கொஞ்ச நாளைக்கு நம்ம ஊருக்கு போயிட்டு வருவோமாடா?” என்று கேட்டார்.

“வேணாம்ப்பா, அங்க போய்ட்டு நீங்க எப்படி மண்டப வேலை, கேட்டரிங் வேலையெல்லாம் கவனிப்பீங்க?” என்று கேட்டாள்.

“அதுவா இப்போ அப்பாக்கு முக்கியம்? அது எங்க இருந்துனாலும் பார்த்துக்கலாம் பாரும்மா” என்றவர், மீண்டும் ஊருக்கு போய் வருவோமா என்று கேட்டார். அவள் மறுப்பாகத் தலையசைக்க, “அப்போ, நம்ம தர்ஷினி வீட்டுக்கு?” என்று அதே தெருவில் இருந்த பிரியதர்ஷினியின் வீட்டை குறிப்பிட்டார்.

“வேணாமா? உங்க அத்தை? நம்ம அடையார் ஃப்ளாட்?” என்று அவர் அடுக்க, அவள் எதற்கும் சம்மதிப்பதாக இல்லை. அவளால் எங்கிருந்தாலும் பாரிவேந்தன் போன்ற பதரை இதே போலத் தைரியமாகக் கையாண்டிருக்க முடியும்.

அவளுக்கு மிகப் பிடித்த இடமான வீட்டை, ஒற்றை நிகழ்வினால் வெறுத்து விடப் போகிறாளா என்ன? அவளுக்குத் தேவையான பாதுகாப்பை தந்ததும் அதே வீடுதானே? அதனால் அவள் முடிவு மாறவில்லை.

அப்பா முன்னே சென்று கதவைத் திறக்க, அம்மாவுடன் வீட்டினுள் நுழைந்தாள். அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அன்றைய நிகழ்வின் தாக்கம் நொடி பொழுதில் அவளை ஆக்கிரமிக்க, ஆழ்ந்த மூச்செடுத்துக் கண்களை இறுக மூடித் திறந்தவளின் கண்கள் கண்ட காட்சியில் அதிர்ந்து விரிந்தன. மெலிதாக இதழ்களில் புன்னகை அரும்பியது.

error: Content is protected !!
Scroll to Top