பார்த்திபன் காதலி – 21 (2)

அவள் வீட்டின் தோற்றமே முற்றிலுமாக மாறியிருந்தது.

அங்கே கூடத்தில் சோஃபா இல்லை. உணவு மேஜையைக் காணவில்லை. வீட்டுக் கூடம் கலை நயத்துடன் காலியாகக் கிடந்தது.

அவள் கண்கள் மீண்டும் மீண்டும் சுழன்று அந்த அறையை ஆராய்ந்தன. அன்றைய தினம் அவள் இங்கே போராடியதற்கான தடயத்தையே காண முடியவில்லை.

அவன் சோஃபாவில் மூர்க்கமாகத் தள்ளியதை நினைத்தாள். சட்டென மூச்சில் வேகம் கூட மனத்தில் பாதிப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் கண் முன்னே அதன் சாட்சியம் இல்லை என்றதும் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள்.

“எப்படிப்பா?” என்று ஆச்சரியத்துடன் அப்பாவை பார்த்தாள்.

“என்ன பாரும்மா கேக்கற?” என்று புரியாதது போல நடித்தார் ரங்கராஜன்.

“காவேரி, விளக்கேத்தி சாமிய கும்பிட்டுட்டு புள்ளைய கவனிம்மா” என்று மனைவியை ஏவினார்.

“நீ இப்படியே நிக்காம ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுப்ப வா” என்று மகளை அழைத்துச் சென்றார்.

அவள் மாடியேறப் போகையில், அவளைத் தடுத்து நிறுத்தினார்.

“உனக்குக் கால்ல ரத்தக்கட்டு இன்னும் குறையல இல்ல பாரும்மா. அதோட எப்படி எல்லா நேரமும் மாடியேறி எறங்குவ? நீ கீழ் ரூம்ல இருந்துக்கோ. கால் சரியானதும் மேல போவ. என்ன?” என்று சாதாரணமாகக் கேட்டார்.

“சரிப்பா” என்று விட்டாள்.

அப்பாவோடு அவர்களின் அறைக்குள் நுழைந்தாள். அவளின் உடைகள், உடைமைகள் எல்லாம் இப்போது அந்த அறையில் இருந்தன. மனம் நெகிழ அப்பாவை பார்த்து புன்னகைத்தாள்.

ரங்கராஜன் திருமண மண்டப உரிமையாளர். அவர் மண்டபத்தில் நிகழும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் ஓரே நாளில் மணமேடைக்கு அத்தனை அலங்காரங்கள் நடக்கும். முழு மண்டபத்துக்கும் கூட ஒரே நாளில் அலங்காரம் செய்து அதன் தோற்றத்தையே மாற்றி விடுவார்கள். அதற்குத் தேவை அந்த வேலை தெரிந்த ஆட்களும், அதற்குத் தேவையான பணமும்தான். அவரிடம் இரண்டுமே இருக்க, ஒற்றை நாளில் அவரின் வீட்டுத் தோற்றத்தை மொத்தமாக மாற்றி விட்டார்.

காவேரி காஃபி போட்டு எடுத்து வர, வீட்டின் பின் பக்கமிருந்த தோட்டத்து வாசலில் சென்று அமர்ந்தார்கள்.

“ப்ரியூ, நீ பிரபஞ்சனை வரச் சொல்லி வீட்டுக்குக் கிளம்பு” என்று அவளுடன் அமர்ந்திருந்த தோழியிடம் சொன்னாள்.

“நான் எதுக்கு வீட்டுக்கு போகணும்? என்னை ஏன் துரத்துற? நான் இன்னும் நாலு நாளைக்கு உன்னோடதான் இருப்பேன்” என்று அவள் முகம் பார்த்து அழுத்தமாகச் சொன்னாள் பிரியதர்ஷினி.

“நீயும் எங்களோட ரெண்டு நாளா ஹாஸ்பிடல் வீடுன்னு அலைஞ்சுட்டம்மா. பாருவை நான் பார்த்துக்கறேன்‍, நீ வீட்டுக்குப் போடா தர்ஷினி” என்ற அவளிடம் சொன்ன காவேரி, கணவருக்குக் கண் காட்டி, “நீங்க போய்த் தர்ஷினிய அவங்க வீட்ல விட்டுட்டு வாங்க” என்றார்.

பிரியதர்ஷினி போகவே முடியாது என்று ஒரே பிடியாக, அங்கிருந்து நகரவில்லை.

“சொன்னா கேளு ப்ரி” என்று அவளை முறைத்த பார்கவி, பிரபஞ்சனை அழைத்து விட்டாள். அவன் வந்தும் தோழியை விட்டு செல்லவே மனமின்றி வீடு சென்றாள் அவள்.

இரவு உணவு முடித்துதான் அவர்களை அனுப்பினார்கள்.

அவளின் பெற்றோர் கூடத்தில் பாய் விரித்து அமர்ந்திருக்க, அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள் அவள்.

காவேரி மகளின் தலைக் கோதி கொடுத்தார். அவளுக்கு அப்படியே அம்மாவின் வயிற்றுக்குள் சென்று சுருண்டு விட மாட்டோமா என்றிருந்தது. அவரின் இடையைச் சுற்றி கைப் போட்டு கட்டி கொண்டாள்.

ரங்கராஜன் தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டே மனைவியோடு பேசிக் கொண்டிருந்தார்.

அந்நேரம் ஒளிபரப்பானது அந்தச் செய்தி துணுக்கு.

திருப்பூரை சேர்ந்த இளம்பெண் திருமணமான இரண்டரை மாதத்தில் தற்கொலை.

“வரதட்சணை கொடுமை, கணவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல். 300 பவுன் நகை போட்டு, நவீன ரகக் கார் கொடுத்து, 70 லட்சம் ரொக்கம் கொடுத்து, கோடி ரூபாய் செலவு செய்து திருமணத்தை நடத்தியிருந்தார்கள்” என்ற செய்தி துணுக்கு ஓட ஓட ரங்கராஜன் மார்பை அழுத்திக் கொடுத்தார்.

இப்படித்தானே அவர் மகளுக்கும் வரதட்சணை கேட்டார்கள். அவரும் செய்ய இருந்தாரே என்று நினைக்கையில் சட்டென்று மனம் கலங்கி விட்டது அவருக்கு. முகம் தெரியாத அந்தப் பெண்ணையும் தன் மகளாக நினைத்துக் கண்கள் கலங்கினார் காவேரி.

பார்கவிக்கு மறுநொடி உடல் அனிச்சையாக உதறி விட்டது. அந்தப் பெண் தன் அப்பாவுக்கு அனுப்பியிருந்ததாகச் சொன்ன குரல் வழி குறுஞ்செய்தியை கேட்க கேட்க அவளுக்கு மனம் பதறி விட்டது.

“பாரும்மா, நீ மாத்திரை போடணும் இல்ல? எந்திரிடா” என்று மகளின் தலைக் கோதிய ரங்கராஜன், மறுநொடி தொலைக்காட்சியை அணைத்து விட்டார்.

“உங்களுக்கு என்னப்பா பண்ணுது?” அவர் முகம் பார்த்தே கணித்துக் கேட்டவள், முதலில் அவருக்கு மாத்திரைகளை எடுத்து வந்து நீட்டினாள்.

“அப்பாக்கு ஒன்னும் இல்லடா” என்று மகளுக்குச் சமாதானம் சொன்னார் அவர்.

பார்கவிக்குச் சில நாள்களுக்கு உறக்கத்திற்கு மாத்திரை கொடுத்திருந்தார்கள். அதைப் போட்ட சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள் அவள்.

ரங்கராஜன் தரையில் விரித்துப் படுத்திருக்க, மகளுக்குப் பக்கத்தில் படுத்திருந்தார் காவேரி. முன்பொரு முறை கூட இப்படித்தான், “நான் இன்னைக்கு உங்களோட படுத்துக்கட்டுமா ம்மா?” என்று கேட்டு வந்து நின்றாள். அப்போதே என்னவென்று கேட்டு எல்லாவற்றையும் சரி செய்திருந்தால் மகளுக்கு இப்படி ஆகியிருக்காதே என்ற வருத்தம் அவரைக் கண்ணீர் விடச் செய்தது.

மனைவி அழுகையில் தேம்பும் சத்தம் கேட்டு, “காவேரி” என்று அவரை அதட்டினார் ரங்கராஜன்.

“நம்ம பொண்ணு எவ்வளவு தைரியமா அவனை அடிச்சு ரூம்ல அடைச்சு வச்சிருக்கா. நீ என்னன்னா அழுதுட்டு இருக்க? நாம தைரியமா இருந்தாதான் பாரு இதுல இருந்து சீக்கிரமா வெளில வருவா. அதுனால அவ முன்னாடி இப்பிடி அழுது வைக்காத சொல்லிட்டேன்” என்று அவரைக் கண்டித்தார்.

அப்போதும் அடங்காத கண்ணீருடன், “ம்ம்ம்ம்” என்றார் காவேரி.

பார்த்திபன் அமெரிக்கா செல்வது முடிவாகி விட்டது. இன்னும் ஐந்து நாள்களில் விமானம் ஏறுகிறான் அவன் என்ற தகவல் கிடைத்தும் அவனிடம் பேச மறுத்துப் பிடிவாதமாக இருந்தான் பிரபஞ்சன். அவன் கோபம் இன்னமும் குளிர்ந்திருக்கவில்லை.

பார்கவி தேவைப்பட்டால் மட்டுமே அலுவலகம் செல்கிறாள். சிறிய விபத்தில் சிக்கி கொண்டேன் என்று காரணம் சொல்லி வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

பிரியதர்ஷினி, அவளின் பெற்றோர் வீடு தவிர அவள் பெரிதாக எங்கும் செல்வதில்லை. அவசியத்துக்கு மட்டும் வெளியில் சென்றாள். அதை விட அழைத்துச் சென்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.

மறுநாள் அவளுக்குத் திருமணம் நடந்திருக்க வேண்டியது. அதை இப்போது நினைக்கையில் முட்டாள்தனமாக எத்தனை பெரிய முடிவை எடுத்திருந்தாய் என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் அவள்.

சில மோசமான முடிவுகளின் முடிவுகள் சுபமாக முடிவது காலம் நிகழ்த்தும் அதிசயம் போலும். அவளுக்கு நிகழ்ந்ததைப் போல.

இனி காலத்துக்கும் தவறான முடிவை எடுக்க மாட்டேனே என்ற ஆசுவாசத்துடன் அப்பாவை தேடிச் சென்றாள்.

ரங்கராஜன் வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார்.

“அப்பா..” என்று அருகில் சென்று அவரின் சட்டை கையைச் சீராக மடித்து விட்டாள் அவள்.

“என்ன பாரும்மா? வெளில எதுவும் வேலை இருக்கா சொல்லு. அப்பா பார்க்கறேன். உனக்கு எதுவும் வேணுமா? அப்பா வாங்கிட்டு வரணுமா?”

“அப்பா..” என்று அழுத்தமாக அழைத்து முறைத்தாள்.

“என்ன வாங்கிட்டு வரணும்னு சொல்லு பாரு. அதை விட்டுட்டு அப்பா அப்பான்னு முறைச்சு ஏலம் போட்டா எப்படி?” என்று காவேரி பின்னிருந்து கேட்க, “ப்ச், அப்பா” என்று மீண்டும் சலுகையாக அழைத்தாள்.

சன்னச் சிரிப்புடன், “என்ன காரியம் ஆகணும் என் பொண்ணுக்கு?” என்று கேட்டார் ரங்கராஜன்.

“நானும் உங்களோட மண்டபத்துக்கு வர்றேன்ப்பா” என்று அவள் சொல்லவும், காவேரி கண்ணை மறுப்பாக உருட்டி கணவரை மிரட்டினார்.

“எதுக்குடா உனக்கு வீண் அலைச்சல். அப்பா பார்த்துப்பேன். நீ வீட்ல இரு” என்றார்.

பார்கவி அவர் பேச்சை கேட்பதாக இல்லை. அவள் பிடிவாதமாக இருக்க, மகளைப் பாவமாகப் பார்த்து நின்றார் அவர்.

“வாங்கப்பா” என்று அப்பாவின் கை பிடித்து வாசலை நோக்கி இழுத்துப் போனாள்.

காவேரி அப்போதும் கணவரை கோபமாக முறைத்து வைக்க, மனைவியிடம் கண்களால் கெஞ்சினார் அவர்.

இடைப்பட்ட இந்த இரண்டு வாரங்களில் மகள் மனத்தால் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் அருகில் இருந்து பார்த்தவர்கள் ஆயிற்றே. அவள் அதில் இருந்து முழுமையாக வெளிவர மாட்டாளா என்று தினமும் ஏங்கி, வேண்டி கொண்டிருக்கிறார்கள்.

இப்போது அவளிடம் மாற்றம் தெரியும் போது அவர்கள் முறுக்கி கொண்டால் அது அவளை மீண்டும் முடக்கி விடுமே என்ற பயம் அந்தத் தகப்பனுக்குத் தோன்ற மனைவியைக் கண்களால் கெஞ்சி சமாதானம் செய்தார்.

“என்னங்க நீங்க புரியாம பண்றீங்க? நாளைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கு இல்ல? இப்போ போய் அவள நம்ம மண்டபத்துக்குக் கூட்டிட்டு போறேன்னு நிக்கறீங்க?” என்று காவேரி கடிய, “அது எனக்குத் தெரியாதா காவேரி? நம்ம பொண்ணை நான் பார்த்துக்க மாட்டேனா? நீ பயப்படாம இரு” என்று மனைவிக்குத் திடம் சொல்லி மகளுடன் வெளியேறினார்.

மகளை நேராக மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல அவருக்கு மனமில்லை. அதனால் அவர் பார்க்க வேண்டி வைத்திருந்த மற்ற வேலைகளுக்கு இன்று முக்கியத்துவம் கொடுத்து மகளை அழைத்துச் சென்று அந்த வேலைகளைக் கவனித்தார். அவர்களின் கேட்டரிங் குழு ஒரு பெரிய ஆர்டருக்கு சமைத்துக் கொண்டிருந்தார்கள். அதை மேற்பார்வை இட்டு அங்கேயே மதிய உணவை முடித்தார்கள்.

அதன் பிறகும் அங்கிருந்து நகராமல் ரங்கராஜன் வரவு செலவு கணக்கை எடுத்து வைத்து அமர, “அப்பா” என்று குறுநகையுடன் அவரை அழைத்தாள் பார்கவி.

“என்ன பாரும்மா? இந்தாடா கணக்கை நீ பார்க்கறியா?” என்று கோப்பை அவள் புறமாக அவர் நகர்த்தி வைக்க, “இதுக்கு நீங்க என்னை வீட்லயே விட்டுட்டு வந்திருக்கலாம்ப்பா” என்று முகம் சுருக்கினாள் அவள்.

“அது பாரும்மா, அப்பாக்கு வேலைடா” என்று சிரித்துச் சமாளித்தவர், மகளின் முறைப்பில் வாய் விட்டுச் சிரித்திருந்தார்.

அங்குப் பார்க்க வேண்டிய கணக்கு வழக்குகளைப் பார்த்து முடித்து இரண்டு மணி நேரங்கள் கழித்து நிதானமாகக் கிளம்பி மண்டபத்துக்குச் சென்றார்கள்.

மாலை வெயில் தாழ்ந்து இதமான வானிலை நிலவியது.

காற்றில் குளுமை கூடியிருக்க, அப்பாவின் காரை மண்டபத்துக்குள் செலுத்தினாள் பார்கவி.

அங்கே வாசலில் இருந்த திருமண அறிவிப்புப் பதாகைகள் அவளின் கவனத்தை ஈர்த்தன.

காரை அதன் இருப்பிடத்தில் நிறுத்தி விட்டு ஓர் ஆர்வத்தில் திரும்பி, மறுநாள் யாருக்குத் திருமணம் என்று அந்தப் பதாகையைப் பார்த்தாள்.

அதில் இருந்த மணப் பெண்ணின் புகைப்படம் அவளுக்குப் பரிட்சயமானதாகத் தெரிந்தது. அதனால் விழிகளை மணப் பெண்ணின் பெயருக்கு தழைத்தாள்.

“பிரபாவதி வெட்ஸ்..” என்ற வாசகம் முடியும் இடத்தில் பார்த்திபன் பெயர் இல்லை. அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தன.

மீண்டும் மீண்டும் மணப் பெண்ணைப் பார்த்து அவள் பெயரை வாசித்தாள். அந்தப் பதாகையில் இருந்த மணமகன் காவல்துறை உடையில் கம்பீரமாக இருந்தான்.

அப்படியென்றால் பார்த்திபன்? ஒரு கணம் அவள் மனம் படபடக்க, மறுகணமே இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற அவளின் முந்தைய மனநிலைக்கு வந்திட அப்பாவுடன் மண்டபத்துக்குள் நுழைந்தாள்.

அவளின் கவனம் துளியும் சிதறாமல் வேலையில் மூழ்கினாள்.

error: Content is protected !!
Scroll to Top