நற்காதல் நெய்திடவா – 2 (2)

அப்பா, “நீ வேலைக்கே போக வேணாம்” என்றதும் மகளும் வீம்பாக, “நான் கண்டிப்பா வேலைக்குப் போவேன். என்னை வேலைக்கு அனுப்பினாதான் கல்யாணமே பண்ணிப்பேன். இல்லனா, எனக்குக் கல்யாணமே வேணாம்” மென்மையான குரலில் அழுத்தமாக அவள் சொல்ல, மகளைக் கூர்ந்து பார்த்தார் வானமாமலை.

“சரி மா, வேதா. இப்படிப் பண்ணலாம். நீ வேலைக்குப் போ. அப்பா உன் ஆசையைத் தடுக்கல. ஆனா, இப்போ சொன்ன பார்த்தியா?

என்னை வேலைக்கு அனுப்பினாதான் கல்யாணமே பண்ணிப்பேன். அதை நீ காப்பாத்தணும். சரியா?” மகளை மட்டுமல்லாது பெற்றோரையும் பார்த்து அவர் கேட்க, மூவரும் சொல்லி வைத்தது போலத் தலையாட்டி சம்மதம் சொன்னார்கள்.

“உங்க அண்ணனுக்கு வயசு ஏறிட்டே போகுது. அவனுக்கு இப்பவே 27 வயசாச்சு. முதல்ல தங்கச்சிக்கு முடிங்கன்னு அவன் சொல்றான். அதுவும் நியாயம் தானே? சின்னப் பிள்ளை நீ இருக்கும் போது அவன் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” அவளின் அருகில் அமர்ந்து அம்மா சொல்ல, “ம்ம்” கொட்டினாள் வேதா.

“உங்க அண்ணனுக்கு, உங்க அத்தை வீடு பொண்ணு கொடுக்க ரெடியா இருக்காங்க. உன்னைக் காரணம் சொல்லி கல்யாணத்தை ரொம்ப நாள் தள்ளிப் போட முடியாது. புரியுதா டி?”

“புரியுது மா. ஆனா, உன் புள்ளைக்கு முதல்ல கல்யாணத்தைப் பண்ணி வை. நான் வேணாம்னா சொல்றேன்”

“வாயை குறை” மகளின் தொடையில் வலிக்காமல் கிள்ளி அவர் சொல்ல, “ஆ” வென்று கத்தினாள் அவள்.

கிட்டத்தட்ட மூன்று மாத போராட்டம், பேச்சு வார்த்தைக்குப் பின்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்.

வேதவர்ஷினி வேலைக்குச் சென்றதும் திருமணம்.

அதைத்தான் இன்றைக்கு நினைவுப்படுத்தினார் வானமாமலை.

அவளின் பெற்றோர், மகளுக்காக மட்டுமின்றி வயது ஏறிக் கொண்டே போகும் மகனுக்காகவும், அவனுக்காக உறவிலேயே காத்திருந்த மருமகளுக்காகவும்தான் யோசிக்கிறார்கள் என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தாலும், ஏனோ தற்போது கல்யாணத்தின் மேல் பெரிதான விருப்பமில்லை.

சில மாதங்கள் வேலைப் பார்த்து, ஊர் சுற்றி, சுதந்திரமாக முடிவுகள் எடுத்து, நிறைய அனுபவங்களைச் சேர்த்த பின்பு கல்யாண சுழலில் சிக்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள் அவள்.

“ம்ம்” தானாகப் பெருமூச்சு வந்தது.

“என்ன வர்ஷி” அந்த அழைப்பே, அது அண்ணன் என்று சொல்ல, “போடா அண்ணா” அவனைத் திரும்பிப் பார்க்காமல் சொன்னாள்.

“உன் விருப்பம் இல்லாம நம்ம வீட்ல எதுவும் நடக்காது வர்ஷி.” அவன் உத்திரவாதம் தர, “நீ பேசாத. எல்லாம் உன்னாலதான். எந்தக் காலத்துல இருக்க நீ? இப்பவும் அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு? அதுவும் அந்த அலட்டல் அத்தையும், அவங்க அதிமேதாவி பொண்ணும்..” அத்தை குடும்பத்தை, நாளையே அண்ணனின் குடும்பமாகப் போகும் உறவுகளைக் குறை சொல்ல மனமின்றி முணுமுணுப்புடன் பேச்சை நிறுத்திக் கொண்டாள் அவள்.

“எந்தக் காலத்திலும் அத்தை பொண்ணு மேல ஈர்ப்பு வந்தா என்ன செய்யுறதாம்?” அவளின் காதை திருகி விஜய் கேட்க, அண்ணனின் கையைத் தட்டி விட்டாள்.

“உறவுக்குள்ள கல்யாணம் பண்ண கூடாதுனு மெடிக்கல் சயின்ஸ் சொல்லுது. நீயெல்லாம் என்ன..” தங்கையை முடிக்க விடாமல், இம்முறை அவளின் காதை வலிக்கத் திருகினான் விஜய்.

“ஆ..” என்று கத்தி, கையால் காதை தேய்த்து விட்டுக் கொண்டாள்.

அன்றைய தினத்தின் அத்தனை உணர்வுகளையும் மனதில் கொண்டு வந்து அண்ணனின் முதுகில் மொத்தினாள் அவள்.

“என்ன பேங்க்ல முதல் நாள் அமோகமா இருந்துச்சு போல. உன் அடியிலேயே தெரியுதே?” சிரிப்புடன் தங்கையின் கையை மடக்கி பிடித்து அடியில் இருந்து தப்பித்தபடி அவன் கேட்க,

“என்னைப் பார்த்து எஜுகேஷன் லோன் வேணுமான்னு கேட்டுட்டார் டா” உதடு பிதுக்கி சோகமாகச் சொன்னாள்.

அதைக் கேட்டதும் சட்டெனச் சத்தமாகச் சிரித்து விட்டான் விஜய். வம்புக்கு வயிறை பிடித்துக் கொண்டு அப்படியொரு சிரிப்பு, குலுங்கி குலுங்கி சிரித்தான்.

அந்தக் கேள்வியை, அதைக் கேட்டவனைக் காலத்துக்கும் மறக்க முடியாது என்று அவளுக்குச் சர்வ நிச்சயமாகத் தெரிந்தது.

முதல் வேலையின், முதல் நாளில் நடந்த அந்தச் சம்பவத்தை எப்படி அத்தனை எளிதில் மறக்க முடியும்?

“யா.. யாரு கேட்டது? வாசலில் இருந்த செக்யூரிட்டியா?” சிரிப்பின் ஊடே அவன் கேட்க, வாயை இறுக மூடி, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி அழுத்தமாக நின்றாள் வேதா.

“ப்ச், சொல்லு வர்ஷி. கிண்டல் பண்ண மாட்டேன்” அதையே கிண்டலாகதான் கேட்டான் அவன்.

“ரொம்பப் பிகு பண்ணாம சொல்லு. யாரு?” இம்முறை சிரிப்பை நிறுத்தி விட்டு, தீவிரமாகக் கேட்க, “பேங்க் மேனேஜர்” என்றாள்.

அவ்வளவுதான். மீண்டும் சிரிக்கத் தொடங்கி இருந்தான்.

“அசிங்கப்பட்டாள் வேதவர்ஷினி” என்று அவன் நக்கலாகச் சொல்ல, அவளுக்கு வெற்றி வேந்தனின், “தேவதர்ஷினி” எனும் அழைப்பு நினைவில் வந்தது.

“டோட்டல் டேமேஜ்” மெல்ல முணுமுணுத்தாள். தங்கையின் முகம் பார்த்து ஒருவழியாகக் கஷ்டப்பட்டுச் சிரிப்பை சிந்த விடாமல் உதட்டில் அடக்கினான் விஜய்.

“வீட்ல எங்க எல்லோரையும் எப்படிப் போட்டு படுத்தி எடுக்கற? எம்புட்டு வாய் பேசுற? ஆனா, புதுசா வேலைக்குச் சேரும் போது ஒழுங்கா உன்னை இன்ட்ரடியூஸ் பண்ணிக்கலையா நீ? உனக்கெல்லாம் அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் போட்டு ஆர்டர் அடிச்சு அனுப்பினவனைச் சொல்லணும். உன்னை விடப் பெரிய அறிவு வாளியா…”

“விஜய் ண்ணா, போதும், போதும்..” கையை வீசி அவள் சொல்ல, அந்தக் கையைப் பிடித்து, அவள் கையாலேயே அவள் கன்னத்தில் அடித்தான் விஜய்.

“வலிக்குது டா அண்ணா”

“சாரி. சாரி. அப்புறம் நாளைக்கு நான் உன் கூட வர்றேன். பேங்க்குள்ள வந்து ஒரு பார்வை பார்த்திட்டு எல்லோர்கிட்டயும் ஒரு வார்த்தை பேசிட்டு வர்றேன்” முன்பு இதையே அப்பா சொன்ன போது எதிர்த்து, மறுத்து பேசியவள் இப்போது மௌனமாய்ச் சம்மதம் சொன்னாள்.

“கல்யாண பேச்சு வார்த்தை மட்டும் உன் பிரச்சனை இல்லை போலயே. வேற என்னமோ இருக்க மாதிரியே இருக்கே. என்னனு சொல்லு அண்ணா ஹெல்ப் பண்ண முடியுதா பார்க்கறேன்.” சுவரில் சாய்ந்து நின்று அவன் பொறுப்பாகக் கேட்க,

“நான் ப்ரோபேஷனரி ஆபீசர் (Probationary Officer). எனக்கு ரெண்டு வருஷம் ட்ரைனிங் பீரியட் இருக்கு.”

“ம்ம். முன்னாடியே சொன்னியே”

“ஆனா, வீட்ல சொல்லலையே” அவள் உள்ளே போன குரலில் சொல்ல, மெலிதாகச் சிரித்து, “ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் வேலை பர்மனென்ட் ஆகிடும் தானே?. இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று கேட்டான் விஜய்.

“இல்ல, இவங்க பாட்டுக்கு பொண்ணு பெருமை, எருமை எல்லாம் பேசுறேன்னு ஊரெல்லாம் எனக்குப் பெர்மனென்ட் வேலைன்னு எதையும் அடிச்சு விட்டுச் சொல்லிட கூடாதே. அதுக்காக…”

“ஓ. உன் வருங்கால மாப்பிள்ளை வீட்ல சொல்லக் கூடாதுன்னு சொல்ற. கவலையைப் பாரேன். இன்னும் மாப்பிள்ளை பார்க்கவே ஆரம்பிக்கல..”

“சத்தியமா நீ என் கூடப் பிறந்த அண்ணன் தானா டா?” கடுப்புடன் அவள் கேட்க, மற்ற நேரமாக இருந்தால் கேலி செய்து தங்கையைக் கோபப்படுத்தி விட்டிருப்பான்.

இப்போது அவளை நேராகப் பார்த்து, “அப்பாகிட்ட நான் சொல்றேன். யூ டோண்ட் வொர்ரி” என்றான்.

அவள் புன்னகைக்க, “சரி, அடுத்தப் பிரச்சனையைச் சொல்லு” என்றான்.

“அது.. அது…” என்று அவள் தடுமாற, “என்ன பீடிகை பலமா இருக்கு?” கேள்வியாகப் புருவம் உயர்த்தினான்.

“இல்ல, என்னால இங்க இருந்து அவ்ளோ தூரம் டிராவல் பண்ணி வேலைக்குப் போகக் கஷ்டமா..” என்று அவள் இழுக்க, அவனுக்குப் புரிந்தது.

அரும்பாக்கம், ஆவடி இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத் தூரம். அதுவும் காலை, மாலை வேலைக்குச் செல்லும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீடு வருவதற்குள் சோர்ந்து விடுவாள் என்பது புரிந்து, “அத்தை வீட்ல இருந்து போறியா? அம்பத்தூர் தானே?” என்று கேட்டான்.

அவளோ பரிதாபமாக முழித்தாள்.

இன்று ஒரு நாள் காலை, மாலை எனச் சேர்த்து மூன்று மணி நேரத்திற்கும் மேல் பயணித்ததே அவனுக்கு ஊருக்கு சென்று வந்தத்தைப் போலிருக்க, தங்கையைக் கனிவாகப் பார்த்தான்.

“நடிக்காம, என்னனு வாயை திறந்து சொல்லு” பரிவான பார்வைக்கு மாறாக வந்து விழுந்தது பேச்சு.

“அத்தை வீட்ல இருந்து போகவும் அரை மணி நேரம் ஆகும். பேங்க்ல அவ்ளோ தூரம் எல்லாம் செட்டாகாது. ஆவடி பக்கமா வரச் சொன்னாங்க” தயங்கி தடுமாறி சொன்னாள்.

அவள் முதலில் வங்கி பணியில் சேர அனுமதி வாங்கப் போராட வேண்டியிருந்தது. அதற்குச் சம்மதம் வாங்கியதும் தங்குமிடம், உணவு குறித்து விவாதிக்கத் தொடங்கினார்கள் வீட்டினர்.

அரும்பாக்கம் சித்தி வீடு, அண்ணா நகர் பெரியப்பா வீடு, அம்பத்தூர் அத்தை வீடு என அனைத்தையும் சீட்டு குலுக்கி போட்டுச் சாதகப் பாதகங்களை அலசி ஆராய்ந்து, உறவு முறை, ஏற்கனவே அங்கே வீட்டில் யார் இருக்கிறார்கள், வீடு எவ்வளவு பெரிது? வசதி எவ்வளவு பெரிது என ஒன்றையும் விடாமல் கவனத்தில் கொண்டு வந்து, கணக்கில் வைத்தே முடிவை எடுத்தார்கள்.

இறுதியாக அரும்பாக்கம் சித்தி வீடுதான் வசதிப்படும் என்றார்கள்.

“தெய்வங்களே, நான் பேங்க் பக்கத்தில் குடியிருக்கணும். அப்போதான் எனக்கும், அவங்களுக்கும் வசதி” என்று மனதில் மட்டுமே அலற முடிந்தது அவளால்.

அப்பொழுது எதையும் சொல்லி காரியத்தைக் கெடுத்து விடக் கூடாது என்றே அமைதி காத்தாள் அவள்.

இதை முன்னமே சொல்லியிருந்தால், “என்னது வயசு புள்ளை வெளில தங்குறதா? நீ வேலைக்கே போக வேணாம்” என்று ஒரேடியாகச் சோலியை முடித்து விடுவார் வானமாமலை என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அப்போதைக்குச் சித்தி வீட்டில் இருந்து கொள்கிறேன் என்று சமாளித்திருந்தாள்.

காலையில் பணியில் சேருகையில் வெற்றி வேந்தன் கேள்வி கேட்டது நினைவில் வந்தது.

“மேடம் எங்க தங்கியிருக்கீங்க? வீடு பக்கம் தானே?” என்று அவன் கேட்க, புரியாத பாவனையில் முழித்தாள் வேதா.

“சென்னையில் இருந்து விருதுநகர் பக்கம் தானே?” என்ற பதிலை உதட்டோடு விழுங்கி, “அது.. அது.. அரும்பாக்கம்..” என்று ஆரம்பிக்கும் போதே அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

“பேங்க் பக்கமா வீடு பாருங்க. பேங்க் சாவி உங்ககிட்ட ஒரு செட் கொடுப்பாங்க. நீங்க ஸ்டேஷனில் எப்பவும் இருக்கணும். தெரியும் தானே?” கறாராக அவன் கேட்க, அவளுக்கு எங்கே தெரிந்தது? ஆம் என்று பதில் சொல்ல.

“இல்லை, தெரியாது” என்று சொன்னால், “வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி இதெல்லாம் விசாரிக்க மாட்டீங்களா?” என்று கேட்பானோ எனத் தோன்ற வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“தேவ.. வேதவர்ஷினி மேடம். உங்ககிட்டதான் பேசிட்டு இருக்கேன்” சொடக்கிட்டது அவன் குரல்.

“ஆ.. எஸ் சார். இப்போதைக்குச் சித்தி வீட்ல இருக்கேன். அடுத்த வாரம் ஆவடில வீடு பார்த்து.. இல்ல, ஆவடி வந்துடுவேன் சார்” இறுதி வார்த்தைகளை முடிவாகச் சொல்லியிருந்தாள்.

அதை மனதில் எண்ணியபடி அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ம்ம். அதுவும் பாய்ண்ட் தானே வர்ஷி. அவங்க சொல்றதும் சரி தானே?” விஜய் கேட்க, “டேய் விஜய் ண்ணா. உன்கிட்ட இப்போ நான் சரியா, தப்பா சொல்லக் கேட்டேன்?. தீர்வு சொல்லுடா, தீர்வு” அவள் சிடுசிடுக்க, சிரித்தான் அவன்.

“ஓகே. நான்…” என்றவனின் பேச்சை நிறுத்தியது, “எம்மாடி, இந்த மாடிப் படி ஏறி வர்றதுக்குள்ள..” என்ற அப்பத்தாவின் குரல். கால் முட்டியை கையால் பிடித்தபடி சிரமத்துடன் மேலேறி வந்த முத்துமாரியிடம் ஓடினாள் வேதா.

“நீ எதுக்கு அப்பத்தா மேல ஏறி வர்ற? ஒரு குரல் குடுத்தா, நான் கீழ இறங்கி வந்திருப்பேன் இல்ல?” அவள் கரிசனத்துடன் சொல்ல, “நீதான் என் மேல கோபமா இருந்தியே?” பேத்தியின் கன்னம் பிடித்துச் சொன்னார் அவர்.

“இல்லையே” வேகமாக மறுத்தாள் வேதா.

“கல்யாணம் எல்லாம் அம்புட்டு சுலபமில்ல ஆத்தா. உங்கப்பா இப்போ பார்க்க ஆரம்பிச்சாதான் ஆறு மாசத்தில் நமக்குப் பிடிச்ச மாதிரி ஒன்னு, ரெண்டு அமையும். அப்புறம், அதுலயும் உங்கப்பன் கொண்டு வர்றவனை உனக்குப் பிடிக்கணும். நீ வேணாம் சொன்னா, வேற பார்க்கணும். அப்படி இப்படின்னு இழுத்து, தள்ளிப் போய்.. மாசம் என்ன, ஒரு வருசம் கூட ஆகும். அதுக்குள்ள நீ புது வேலையைக் கத்துக்கிட மாட்ட?”

“அப்படியா சொல்றீங்க அப்பத்தா? நிஜமா ஒரு வருஷம் ஆகிடுமா?”

“அன்னப்பறவை. எப்படி அவளுக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கிறா பாரு.” தங்கையின் பின்னலை பிடித்து இழுத்துச் சொன்னான் விஜயகுமார். அவன் கையில் ஓங்கி அடித்தாள் வேதா.

“ஆமான்றேன். ஆறு மாசத்தில் இருந்து ஒரு வருஷம் ஆகிடும்னு வச்சுக்கோயேன். அதுக்கு மேல எதுவும் வந்தா, நாங்க இருக்கோம் உனக்கு. நீ கவலைப்படாத” அப்பத்தா அவளைத் தேற்ற, நன்றாகத் தெளிந்தது அவள் முகம்.

அன்றிரவு உணவின் போது பெரியவன் விஜயகுமாருக்கு முதலில் திருமணத்தை முடித்து விடலாம் என்று அய்யனார் சொல்ல, வானமாமலை யோசனையுடன் மகனைப் பார்க்க, வேதவர்ஷினியின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு.

மனதிற்குள் மகிழ்ச்சியுடன் வட்டமடித்து நடனமாடிக் கொண்டிருந்தாள் அவள்.

மறுநாள் அவள் முகம் தெளிந்திருக்க, ஆவலுடன் எழுந்து பணிக்கு கிளம்பிச் சென்றாள்.

சென்னையின் போக்குவரத்து நெரிசல் சதி செய்ய, வங்கி பணியாளர் நேரத்திற்குச் செல்லாமல், வாடிக்கையாளர் நேரத்திற்குச் சென்று சேர்ந்தாள் அவள்.

“விஜய் ண்ணா, நான் ரொம்ப லேட். நீ என்ன பண்ற, உன் விசாரணையை நாளைக்கு.. இல்லயில்ல ஈவ்னிங் வந்து வச்சுக்கோ. இப்போ நீயும் கிளம்பு. நானும் கிளம்பறேன்” தந்தியின் வேகத்தில் சொல்லி விட்டு உள்ளே ஓடினாள்.

வங்கி முழுக்க வாடிக்கையாளர்கள் நிறைந்து நின்றிருந்தார்கள். அங்கிருந்த இருக்கைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

ஓட்டமும், நடையுமாக அவள் தன் இருக்கைக்குச் செல்ல, உடன் பணிபரியும் யாருக்கும் அவளிடம் பேச நேரமிருக்கவில்லை.

“குட் மார்னிங்” என்று வரிசையாக ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டே தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

பயண அலுப்புத் தண்ணீர் கேட்க, கைப்பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து, குடிக்கப் போனவளின் கைகள் அப்படியே அந்தரத்தில் உறைந்து நின்றது.

தனது அறையில் இருந்த கண்ணாடித் தடுப்பின் வழியே அவள் கண்களைப் பார்த்து, பின்னர்க் குனிந்து தன் மணிக்கட்டை பார்த்தான் வெற்றி வேந்தன். அவன் கண்கள் மட்டும் நகர்ந்து வங்கி சுவரில் இருந்த பெரிய கடிகாரத்தையும் பார்த்து விட்டு, அவள் முகத்தில் நிதானமாக நிலைத்தது.

“சாரி சார்” அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே உதடசைத்து சொன்னாள் வேதவர்ஷினி.

அவள் சொன்னதின் அர்த்தம் புரியாதது போலப் புருவங்களைச் சுருக்கினான் வெற்றி வேந்தன்.

error: Content is protected !!
Scroll to Top