பார்த்திபன் காதலி – 20 (1)

கோவிந்தன் இப்படிக் குடும்பத்தோடு வந்து நிற்பார் எனப் பார்த்திபன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதுவும் முன்தின இரவே அவன் அப்பா துரைராஜ், கோவிந்தனை அழைத்துத் தாங்கள் குடும்பத்துடன் வீடு வருகிறோம் என்று அவரிடம் தகவல் சொன்ன பிறகும் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் காலையிலேயே வீட்டில் வந்து நின்றால் என்ன அர்த்தம் கொள்வது என்று அவரைத் திகைப்புடன் பார்த்தான்.

அவரும் தனியாக வந்திருக்கவில்லை. தன் குடும்பத்துடன் வந்திருந்தார்.

பிரபாவதி அவனைப் பார்த்துச் சங்கடமாகப் புன்னகைக்க, அந்தப் புன்னகை அவனுக்கு ஏதோ செய்தி சொன்னது போலிருந்தது.

“வாங்க, உக்காருங்க” என்றான். பிரபாவதி அப்பாவை பார்ப்பதும் பின் அவனைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

கோவிந்தனும், அவளின் அம்மாவும் அமரவும், பிரபாவதியும் பெற்றோர் அருகில் அமர்ந்தாள்.

சத்யபாமா, “வாங்க” என்று அவர்களை வரவேற்றவர், அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.

“நீ போய்க் குளிச்சுட்டு வாடா” என்று மகனை விரட்டியவர், “நீங்க காஃபி குடிக்கறீங்களா? இல்ல டிபன் சாப்பிடுறீங்களா? இது டிபன் சாப்பிடுற நேரம்தானே? அப்போ டிஃபனே சாப்பிடுங்க” என்று வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பதில் மூழ்கினார்.

அவர், “போ” என்று பார்த்திபனுக்குக் கண் காட்ட, அங்கே துரைராஜ் வந்து விட்டார். பெற்றோரை ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் சென்றான் அவன்.

அவனது எண்ணங்கள் முந்தைய நாளின் நிகழ்வுகளை அசைப் போட்டது.

“டீய குடி பார்த்திபா” என்று அவன் கையில் தேநீர் கோப்பையைத் திணித்தார் சத்யபாமா. அவன் கையில் இருந்த பனிக் கட்டி பொதியை வாங்கி அவன் கன்னத்தில் வைத்து அழுத்தினார்.

“ஷ்ஷ்ஷ்” என்று வலியில் கண்ணைச் சுருக்கினான் அவன். பிரபஞ்சன் அடித்த போது அவனுக்கு வலிக்கவேயில்லை. ஆனால் இப்போது வலித்தது.

பிரபஞ்சன் அவனது உயிர் நண்பன். அவனுக்காக என்னவெல்லாமோ செய்திருக்கிறான். இருவரும் விளையாட்டு வீரர்கள் என்பதால் மற்றவருக்கு அடிபட்டால் எல்லா உதவியும் யோசிக்காமல் செய்வார்கள்.

உடுக்கை இழந்தவன் கைபோலதான் அவர்களின் நட்பு எப்போதும் இருக்கும்.

அவர்களது கிரிக்கெட் குழுவினர் இவர்களின் நட்பை கண்டு பொறாமை கொண்டு, “டேய், அவனுங்களாடா நீங்க?” என்று கேலி கூடச் செய்திருக்கிறார்கள்.

பிரபஞ்சன் மட்டும் பிரியதர்ஷினியை மணம் புரிந்திருக்கா விட்டால் இவர்களைக் கேலி செய்தே காலி செய்திருப்பார்கள்.

அப்படியான நண்பனிடம் அடி வாங்கியிருக்கிறான். தன் பக்க நியாயங்களை நண்பன் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலுடன் மௌனமாய் அமர்ந்திருந்தான். அந்நேரம் அம்மாவின் பேச்சு அவனுக்கு எரிச்சலைத்தான் தந்தது.

அவர் நீட்டிய தேநீரை வாங்கி அருந்தினான். அவர் பேச்சை செவிக்குக் கொடுத்தான்.

“பொண்ணோட அப்பா பத்திரிக்கை அடிக்கப் பேர் எழுதி கொடுக்கச் சொல்லி கேட்டார்னு சொன்னேன் இல்ல பார்த்திபா?”

“ம்ம், நாளைக்குச் சொல்லுங்கம்மா. நான் எழுதித் தர்றேன்” என்றான்.

“அட இருடா. நான் என்ன சொல்ல வர்றேன்னு கேட்டுட்டு அப்புறமா பேசுவ” என்று சடைத்துக் கொண்டார் அவர்.

“சரி சொல்லும்மா” என்று சுவரில் சாய்ந்து அமர்ந்தான்.

“அந்தப் போலீஸ்காரருக்குப் பத்திரிக்கை அடிக்க நம்ம பேரு மட்டும் போதுமாம். நம்ம ஊரு, குல தெய்வ பேரு, இன்னார் பேரன் அப்படிங்கற தகவல்லாம் வேணாமாம்.”

“ஓ? அப்படியா சொன்னார்? ஏனாம்? அதில்லாம எப்படிம்மா பத்திரிக்கை அடிப்பாங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஆமாங்கறேன். என்னவோ நீ வானத்துல இருந்து தொபுக்கடீர்னு குதிச்சது போல, யார் பேரையும் போட கூடாதுன்னா எப்படிப் பார்த்திபா?”

“என்ன காரணமாம் ஏன் அப்படிச் சொன்னார்?”

“அதைத்தான் அவர்கிட்ட உங்கப்பா கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்கறார்டா. சும்மா சுருக்கமா அடிச்சுப்போம்னு சொல்லி மழுப்பறாராம். இதென்னா நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்கத் தனிப்பட்டு அடிக்கிற பத்திரிக்கையா? சும்மா பொண்ணு மாப்பிள்ளை பேரை மட்டும் போடுறதுக்கு? தாய் வழி, தகப்பன் வழி ஊரு பேரெல்லாம் போட வேணாமா?”

“….”

“நாம தனியா பத்திரிக்கை அடிச்சுக்கறோம்னு சொன்னா அதுக்கும் சரிப்பட்டு வராம, எதுக்கு ரெண்டு செலவு பொதுவுல பத்திரிக்கை அடிச்சுக்கலாம்னு சொல்லிப்புட்டு இப்ப இப்படிக் கண்டிஷன் போட்டா நல்லாவா இருக்கு. எனக்கு ஒன்னும் பிடிச்சுக்கல” என்று தன் அதிருப்தியை வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

“அப்பா என்ன சொல்றாரு?”

“ம்ம், உங்கப்பாக்கும் இதுல விருப்பமில்ல. உங்க அப்பத்தா அப்புச்சி பேர போட கூடாதுன்னு சொன்னா அவர் சும்மா விடுவாரா? அப்பா வந்ததும் அவர்கிட்ட நீயே என்னான்னு கேட்டுக்கோ” என்றார்.

“பொண்ணோட அப்பா.. அவரு ஏற்கெனவே பொண்ணுக்கு வீடு வாங்கித் தர்றேன், அதை அவ பேர்ல பதிஞ்சு கொடுக்கறேன். நீங்களும் ஒரு தரம் வந்து வீட்டை பார்த்துடுங்கன்னு சொல்லவுமே இவருக்குக் கோபம் வந்திருச்சு. இதுவே நாள பின்ன அவங்க மகளுக்கு வீடு வாங்கிக் கொடுத்திருந்தா தப்பா தெரிஞ்சுருக்காது. இப்பவே வாங்கிக் கொடுப்பேன்னு குதிக்கவும்தான் உங்கப்பாக்கு ஒப்பல” என்றார் விளக்கமாக.

அம்மா சொன்னதை மனத்தில் ஓட்டி பார்த்தவனுக்கு எங்கோ சுதி தப்பும் உணர்வு. மெதுவாக நெற்றியை கீறினான்.

“அப்பா வரவும் பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க. நீயி தனிக்குடித்தனம் போறதுலலாம் அம்மாக்கு ஒன்னுமில்ல. நீங்க எங்கிட்டு இருந்தாலும் நல்லா இருந்தா போதும் எனக்கு. ஆனா, ஊரு பேரு இல்லாம பத்திரிக்கை அடிக்க நா ஒருநாளும் ஒத்துக்க மாட்டேன்” என்று பிடிவாதமாகச் சொன்னார்.

“நாளைக்கு நாம அவங்க வீட்டுக்கு நேரா போய்ப் பேசிடுவோம்மா” என்றான் ஒரு முடிவுடன்.

“அப்பா வரட்டும் பார்த்திபா”

“அப்பாவே இதைத்தான் சொல்லுவார். நாளைக்கு நாம அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசுறோம்” என்று முடித்து விட்டான்.

அப்போதுதான் பிரபாவதியை அழைத்துப் பேசினான்.

அந்தக் குரலில் இருந்த எதிர்பார்ப்பு அவனை உடைத்து போட்டது. அவளிடம் இருந்த அந்தச் சிறுபிள்ளை தனமான, “நீங்க பீச் கூட்டிட்டு போவீங்கன்னு நினைச்சேன்” என்று ஆர்வமும், ஆசையும் அவன் மனத்தைக் கடினமுற செய்தது.

பார்த்திபனும் கோவிந்தனும் ஆடப் போகும் ஆட்டத்தில் பலியாகப் போகிறாள் பிரபாவதி என்று அவனது உள்ளம் சொல்லியது.

கோவிந்தனின் ஒவ்வொரு சிறு சிறு செய்கையும் அவனைக் கட்டி போடுவதாக இருந்தது. அவருக்குக் கட்டுப்பட அவன் ஒன்றும் பிரபாவதி இல்லையே! அவர் சொல்வதில் நியாயமான காரணங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்வான். அதை விட்டுவிட்டு இப்படி அவனைக் கட்டுப்படுத்தினால் அவ்வளவுதான், அவன் ஒரு போதும் அடங்க மாட்டான். அன்பிற்கும், அடக்குமுறைக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறதுதானே!

“பிரபாவதி” என்று அழுத்தமாக அழைத்தான். அவளின் பேச்சு நிற்க, “சொல்லுங்க” என்றாள்.

“உங்கப்பா உனக்கு வீடு வாங்கித் தர போறாராமே உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஆங் அது..” என்று அவள் தடுமாற, “அப்போ உனக்கு ஆல்ரெடி தெரியும்?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“இல்ல, அப்பா சொன்னாங்க”

“ஆனா நீ என்கிட்ட சொல்லவே இல்லையே..”

“அப்பாதான் உங்ககிட்ட… நான் சொல்ல வேணாம்னு சொன்னார். அப்பாவே உங்ககிட்ட சொல்லப் போறதா சொன்னார்” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

“ஓகே. உங்கப்பா எதுக்காக அந்த வீட்டை வாங்கித் தர்றார்னு உன்கிட்ட சொன்னாரா?” அவன் குரலில் கூர்மை கூடியது.

“அது நமக்காக.. நாம கல்யாணத்துக்கு அப்புறம் அந்த வீட்ல..”

“ஓஹோ” என்றான் நக்கலாக. அவளுக்குப் புரியவில்லை, பாவம்!

“அப்போ எங்கம்மாப்பா? அவங்க தனியா இருக்கணுமா?”

“எங்கம்மாப்பா கூட நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தனியாதானே இருப்பாங்க?” என்று அவள் இழுக்க, “யாரு, உங்கப்பா சொன்னாரா இதை?” என்று கடுமையாகக் கேட்டான்.

“ஆமா.. ஆ.. இல்லங்க. நானேதான்..” என்று அவள் தடுமாற, இத்தனை படித்துப் பெரிய வேலையில் இருக்கும் பெண் இப்படி அப்பாவின் பேச்சை வேதவாக்காக எடுக்கிறாளே என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு.

“உனக்கு எங்கம்மாப்பா கூட இருக்கப் பிடிக்கலையா? அது உனக்குச் செட்டாகாதுன்னு நினைக்கறியா?” என்று அவன் கேட்டு முடிக்கவில்லை, “ஐயையோ” என்று பதறினாள்.

“அப்படியெல்லாம் நான் யோசிச்சதே இல்ல. நான் போய் அப்படி நினைப்பேனா?”

“ஆனா உங்கப்பா சொல்லவும் அதுக்குத் தலையாட்டி இருக்கியே”

“அச்சோ அது..”

“எனக்கு ஆன் சைட் ஆஃபர் வந்திருக்கு பிரபாவதி. அல்மோஸ்ட் ஓகேவாகிடுச்சு. நீ என் கூட யூஎஸ் வருவன்னு பார்த்தா, உனக்கு அந்த ஐடியாவே இல்ல போலயே..”

“அச்சச்சோ. நான் அதை மறக்கல. நான்தான் உங்களுக்கு அப்பவே ஓகே சொல்லிட்டேனே?”

“ஆனா உங்கப்பா வீடு வாங்கித் தர்றதுக்கும் ஓகே சொல்லிட்டியே.‌‍ உங்கப்பா ஒன்னும் அதை வாடகைக்கு விட வாங்கிக் கொடுக்கல. அப்படித்தானே?”

“ம்ம், நாம இருக்க நமக்காக வாங்கித் தர்றார்” என்றாள்.

அவனுக்கு அப்படியே தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

“பிரபாவதி, ஏதாவது ஒரு பக்கம் பேசு” என்றான் கோபத்தைக் கட்டுப்படுத்தி.

“நான் அப்பாகிட்ட பேசறேன். நான் சொன்னா அப்பா கேட்டுப்பாங்க.” என்றாள் திடமாக. இவனுக்குதான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நீங்க அப்பாக்கு போன் பண்ணீங்களாம். எதுக்குன்னு கேட்டார்” என்று அவள் எதுவும் நடக்காதது போலப் பேச்சை நீட்டிக்க, “நாளைக்கு நாங்க நேர்ல வந்து பேசுறோம்” என்று முடித்து விட்டான் இவன்.

இப்போதும் குளித்து உடை மாற்றுகையிலும் இதுவரை அவளுடனான செலவழித்த பொழுதுகள் எல்லாம் அவன் மனத்தில் வந்து போனது.

ஒரு பெருமூச்சுடன் கூடத்துக்குச் சென்றான்.

அங்கே சத்யபாமா அவர்களுக்குக் காஃபி, தேநீர் கொடுத்திருந்தார்.

பத்திரிக்கையில் பெயர் போடும் விவரம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இவனைக் கண்டதும் கோவிந்தன் வேகமாக, “வெறும் பேர் மட்டும்தான் போட முடியும். ‍இப்போ என்னாங்கறீங்க?” என்று எகிறினார்.

“ஏன் வெறும் பேர் மட்டும்தான் போட முடியும்? உங்களுக்கும் அப்படித்தான் போட போறீங்களா, என்ன?” என்று இவன் அலட்டிக் கொள்ளாமல் கேட்கவும், “நான் ஏன் அப்படிப் போட போறேன்? எங்களுக்கு என்ன தலை எழுத்தா?” என்று கத்தினார்.

error: Content is protected !!
Scroll to Top