அப்படிக் கத்தி பேசுவார் என்று எதிர்பார்த்திராத சத்யபாமா, “என்னன்னு தன்மையா சொல்லுங்கன்னுதானே கேட்கறோம்” என்றார்.
“அப்பா..” என்று அதுவரை அமைதியாக இருந்த பிரபாவதி கோவிந்தனின் கைப் பிடித்துத் தடுக்க, “என் பொண்ணை எனக்கு எதிரா திருப்பறியா நீ?” என்று கொதித்துப் போய்க் கேட்டார்.
பார்த்திபனின் கண்கள் கேள்வியாகச் சுருங்க, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு அவரின் எதிரே இருந்த சுவரில் சாய்ந்து நின்றான்.
“நான் சொன்ன சொல்லை மீறாம என் கைக்குள்ளயே இருப்பன்னு உன்னை மாப்பிள்ளையா கொண்டு வரணும்னு நான் நினைச்சா. நீ எனக்கே தண்ணி காட்டுறியா?” என்று அவனை நோக்கி கத்தினார்.
“என்ன சொல்றீங்க புரியல?” என்றான் புருவம் சுருக்கி.
“என்னடா புரியல. என் பொண்ணு என் பக்கத்திலேயே இருக்கணும்னு உன் குடும்பம் எங்க வசதிக்கு இல்லைன்னாலும், நீயி அடக்கமா என் கைக்குள்ள இருப்பன்னு பார்த்தா, இப்பவே ஓவரா ஆடுற?” நீங்களே பேசி முடியுங்கள் என்று அவரைப் பார்த்து நின்றான்.
“என்ன இப்படிப் பேசுறீங்க, மரியாதை இல்லாம..” என்று அவன் பெற்றோர் வருந்த, ஒற்றைப் பார்வையில் அவர்களை அடக்கினான் பார்த்திபன்.
ஏதோ விரும்பத்தகாதது நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த சத்யபாமாவின் கண்கள் கலங்கி விட்டன.
அம்மாவை முறைத்தான் பார்த்திபன். அதற்காகவெல்லாம் கண்ணீர் அடங்கி விடுமா என்ன?
“என் பொண்ணை வச்சே என்னைப் பேசி சமாளிக்கப் பார்க்கறியா? நீ அமெரிக்கா என்ன அமைஞ்சக்கரக் கூட என் அனுமதி இல்லாம போக முடியாது. இதுல என் பொண்ணு வந்து கேட்டா நான் சரின்னு சொல்லிடுவேன்னு பகல் கனவு கண்டியோ? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணை எனக்கு எதிரா திருப்பி விடுவ. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு செய்யுற நீயி..” என்று அவர் பெருங்கோபத்துடன் பேச, ஒரு விதத்தில் இதை எதிர்பார்த்திருந்தவன் அமைதியாக அவர் பேச்சை கேட்டு நின்றான். அவன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.
“அப்பா..” என்று பிரபாவதி அழுகுரலில் அவரின் கையைப் பிடிக்க மகளின் கையை வேகமாக உதறினார் அவர்.
“என்னையே எதிர்த்து பேசுவியா நீ?” என்று ஆங்காரத்துடன் கேட்டார். அவரின் மனைவி மெளனமாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
“உங்க பொண்ணு மேல தப்பில்ல. ஆன் சைட் போறது பத்தி நானே உங்ககிட்ட நேரடியா பேசுறதா இருந்தேன். நான் ரெண்டு வருஷம் ஆன் சைட் போயிட்டு வந்தா எனக்கு ரொம்பவே ஹெல்ப்புல்லா இருக்கும். ஒர்க்ல மேல வருவேன். அப்படியே பைனான்சியலாவும் ..” என்று பார்த்திபன் முழுதாகப் பேசி கூட முடிக்கவில்லை, “டேய்..” என்று கத்தி விட்டார் கோவிந்தன்.
“இப்படிப் பேசிப் பேசித்தான் என் பொண்ணை வளைச்சியா நீ, அதே போல என்னையும் சரிக்கட்டலாம்னு நினைக்காத. நான் போலீஸ்காரன்டா. உன் ஆட்டம்லாம் என்கிட்ட எடுபடாது, பார்த்துக்கோ” என்று எச்சரித்தார்.
“நானும் பொறுமையா இருக்கணும்னு பேசாம இருந்தா, நீங்க பாட்டுக்கு உங்க இஷ்ட்டத்துக்குப் பேசிட்டுப் போறீங்களே? என்னங்க நினைச்சுட்டு இருக்கீங்க? எங்க பிள்ளைய பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு?” என்று துரை ராஜ் கடிய, “என் பையனை இம்புட்டுக் குறைவா பேசுறவர், எதுக்காக எங்க வீட்ல சம்மந்தம் பண்றீங்க?” என்று மனம் கேளாமல் கேட்டே விட்டார் சத்யபாமா.
“அதான் தப்புப் பண்ணிட்டேன். இவன் எங்க வீட்டுக்கு சரிபட்டு வர மாட்டான். இந்தக் கல்யாணம் நடக்காது. என்னா உங்களுக்குப் பத்திரிக்கை அடிக்கிறதுதானே பிரச்சினை? அதுக்கு இனிமே அவசியமே இல்லை போங்க. இந்தக் கல்யாணம் நடக்காது” என்று கையை வீசி கத்தினார்.
“என்ன பேசுறீங்க நீங்க..” என்று சத்யபாமா பதற்றத்துடன் கேட்டு முன்னே வந்தார்.
“நீங்களாவது என்னனு கேட்கலாம் இல்ல? இப்படிப் பேசாம பார்த்திட்டு இருக்கீங்களே” என்று பிரபாவதியின் அம்மாவை அவர் கேட்க, “இந்தாம்மா. எதுனாலும் என்கிட்ட பேசணும். என் பொண்டாட்டி கிட்ட என்னா பேச்சு வேண்டியிருக்கு?” என்று அவர் எகிற, பார்த்திபனின் பொறுமை பறந்திருந்தது.
“எங்கம்மாக்கு மரியாதை குடுத்து பேசுங்க முதல்ல. இந்தாம்மான்னு ஏக வசனத்துல நீங்க பேசுறதை எல்லாம் கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்றான் தீர்க்கமாக.
“என்னடா பண்ணுவ? என்ன பண்ணிடுவ என்னை நீ? என்ன செய்ய முடியும் உன்னால? நேத்து உங்களால ஒரு போலீஸ் கேஸ் ஒழுங்கா குடுக்க முடிஞ்சதா? ஆனா நான் நினைச்சா உன்னைக் கொத்தா குடும்பத்தோட உள்ள தூக்கி வைக்க முடியும், தெரிஞ்சுக்கோ. என்கிட்டயே டவுரி கேட்டேன்னு கம்ப்ளைண்ட் பண்ணி உன் கதையை முடிச்சு விட்டுடுவேன். என்கிட்டயே குரல உசத்தறியா நீயி? ஹான், நான் வீடு வாங்க சுளையா அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். அது நீங்க கேட்டதுன்னு திருப்பி விட்டுருவேன்” என்றவரை அதிர்ந்து போய்ப் பார்த்தார்கள் பார்த்திபன் பெற்றோர். ஆக நேற்றைய நிகழ்வும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவனைக் கண்காணிப்பு வட்டத்திலேயே வைத்திருக்கிறார் மனிதர். அந்த எண்ணமே அவனுக்கு உவப்பானதாக இல்லை.
“அப்பா, என்னப்பா இப்படிப் பேசுறீங்க?” என்று கண்ணீருடன் அவரின் கையைப் பிடித்து இழுத்தாள் பிரபாவதி.
“பேசாம அம்மாவோட உக்காரு” என்று மகளை அதட்டினார்.
“நாங்க, உங்க மகளைக் கட்ட உங்ககிட்ட ஒத்த பைசா கூடக் கேட்கல. எங்க மேல இப்படி அபாண்டமா பழி போடுறீங்களே?” என்று சத்யபாமா மனத்தின் குமுறலை வெளியிட, “என் தகுதிக்கு நீங்கல்லாம் ஒரு ஆளா? நீங்க பொத்திட்டு பேசாம பத்திரிக்கைய அடிச்சிருந்தா இவ்வளவு பிரச்னை வந்திருக்குமா?, எனக்குச் சமமா உக்கார கூடத் தகுதியில்லா உங்க வீட்ல எதுக்குப் பொண்ணு குடுக்கறேன்னு நினைச்சீங்க?” என்று கேட்டவரின் முகத்தை அருவருப்புடன் பார்த்தான் பார்த்திபன். ஆகப் பூனை குட்டி வெளியே வந்தே விட்டது.
“உங்கம்மா சாதிய பத்திரிக்கையில பெருமையா போட்டு ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடிக்கணுமோ நானு? உங்கப்பன் எங்க சாதின்னுதான் இந்தக் கல்யாணத்துக்கு நான் உடன்பட்டது, நீயி என் கைக்குள்ள அடக்கமா இருப்பன்னு நினைச்சா, நீ பெரிய ஆகாவாலியா இல்ல இருக்க?” என்று அவனை முறைத்தார்.
“இந்தக் கல்யாணம் நடக்காது. உங்கம்மா எல்லாம் எங்களுக்குச் சமமா உக்கார கூடத் தகுதி இல்லாத…”
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க, போலீஸ்ன்னு கூடப் பார்க்க மாட்டேன். அவ்ளோதான்” என்று கடுமையாக எச்சரித்தான் பார்த்திபன். கோப மிகுதியில் கையை மடக்கி அவரை நோக்கி நகர்ந்தும் விட்டான். பிரபாவதி பார்வையால் வேண்டாம் எனக் கெஞ்ச, சத்யபாமா மகனைத் தடுத்து பிடித்தார்.
“உன்னால என்னை ஒன்னும் புடுங்க முடியாது போடா” என்று திமிராகச் சொன்னார் கோவிந்தன். மகளையும், மனைவியையும் திரும்பிப் பார்த்தார்.
மனைவி உடனே எழுந்து அவருக்குப் பின்னே நிற்க, பிரபாவதி கலங்கிய கண்களுடன் பார்த்திபனை பார்த்தாள்.
மனிதர் ஏதோ பிரச்சினை செய்யப் போகிறார் என்று நினைத்தான். இவ்வளவு மோசமாக நடந்து கொள்வார் என அவன் நினைத்திருக்கவில்லை.
அவனது பெற்றோர் காதல் மணம் புரிந்தவர்கள். ஆகக் கலப்புத் திருமணம். அதெல்லாம் தெரிந்துதான் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார் கோவிந்தன். பின்னே காவல்துறை அதிகாரி இதெல்லாம் நுட்பமாக விசாரிக்க மாட்டாரா என்ன?.
“சாதியெல்லாம் இப்போ யாரு பார்க்கறாங்க? எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுதான்” என்று அன்று வசனம் பேசியவர்தான் இன்று அப்படியே மாற்றிப் பேசுகிறார்.
“உங்ககிட்ட பத்திரிக்கை கூட்டா அடிக்கலாம்னு எதுக்குச் சொன்னேன்னு கூடப் புரியாம, தேவையில்லாம என்னைக் கேள்வி கேட்டு நீங்களே உங்க பையன் வாழ்க்கையைக் கெடுத்துக்கிட்டீங்க. என் பொண்ணுக்கு இவனை விட நல்லவனா ஒருத்தன குறிச்ச தேதியில நான் கட்டி வைக்கல. நான் கோவிந்தன் இல்ல” என்று அவர்களிடம் விரல் சொடுக்கி சவால் விட்டார்.
“வாம்மா, போகலாம்.” என்று மகளை அழைத்தார். அவள் கண்கள் பரிதவிப்புடன் பார்த்திபனின் பக்கம் தாவின.
“உங்க பொண்ணு மனசு பத்தின கவலையெல்லாம் உங்களுக்கு இல்லவேயில்ல இல்ல சார்?” என்று பார்த்திபன் கேட்கவும், மீண்டும் கொதித்தார்.
அவரை அசட்டை செய்து பிரபாவதியின் பக்கம் திரும்பினான் அவன்.
“பிரபாவதி..” உன் அப்பாவின் எண்ணம்தான் உனக்குமா? என் மீது இன்னமும் பிரியம் இருக்கிறதா சொல்? எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கேட்க நினைத்திருந்தான்.
ஆனால் அவளோ எப்போதும் போல, “அப்பா..” என்றே ஆரம்பித்தாள். அப்படியே திரும்பி அவரைப் பார்த்து விட்டு பரிதாபமான முகத்துடன் அவனை ஏறிட்டாள்.
“பொறுமையா யோசிச்சு சொல்லு பிரபா” என்று சொன்னவனை அடிக்கப் பாய்ந்தார் கோவிந்தன்.
“அப்பா, வாங்கப்பா போகலாம்” என்று இம்முறை தீவிரமாகச் சொல்லி அவரை வாசலை நோக்கி நகர்த்தினாள் பிரபாவதி. கோவிந்தன் முகத்தில் வெற்றி புன்னகை. அவனைத் திரும்பி ஏளனமாகப் பார்த்து, சிரித்து விட்டே வெளியேறினார் அவர்.
அவர்கள் வீட்டு வாசலுக்குச் செல்லும் வரை பிரபாவதியை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.
அவளோ அவனைத் திரும்பியும் பார்க்காமல் போய் விட்டாள். இனி திரும்பி வரப் போவதில்லை என்று தெளிவாகச் சொல்லி விட்டே சென்றிருந்தாள். அவள் திரும்பி வருவாள் என்று துளி நம்பிக்கை கொண்டிருந்தான். அதை முழுதாக உடைத்து போட்டாள் அவள்.
மகனின் நிச்சயித்த திருமணம் நின்று விட்டது என்பதை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார்கள் அவன் பெற்றோர். கோவிந்தன் பேச்சுக்கு அவர்களும் பதிலடி கொடுத்திருந்தார்கள். ஆனாலும் மனம் ஆறவில்லை அவர்களுக்கு.
“மனசுல நம்மள இவ்ளோ கீழா நினைச்சிட்டா இத்தன நாள் நம்மளோட பேசினார் அந்த மனுஷன்? காலம் முழுக்க யாருக்கும் தெரியாம என் சாதியை மறைச்சுடுவாராமா இவரு? நம்ம பையன் மட்டும் வேணுமாம். ஆனா நாம மட்டமாம். இது நல்லாருக்கே. அவர் கைக்குள்ள வச்சுக்க எதுக்கு மகளுக்குக் கல்யாணம் பண்றார் இவரெல்லாம்..” என்று சத்யபாமா மனத்தின் அழுத்தத்தைப் பொறுமி தள்ள, “ம்மா” என்று அவரை அதட்டி அடக்கினான் பார்த்திபன்.
“இந்தப் பேச்ச இத்தோட விடுங்க” என்றான் அழுத்தமாக.
“அதெப்படி பார்த்திபா..”
“வேற என்னம்மா பண்ண சொல்ற? அந்த ஆள் உன்னை அசிங்கப்படுத்திப் பேசுறத கைய கட்டிட்டு பார்த்துட்டு நிக்கவா நான்?” என்று கத்தினான்.
“சத்யா” என்று மனைவியை மென்மையாக அழைத்த துரைராஜ், “அவர் நம்ம மேல விழுந்து பொண்ணு குடுக்கும் போதே நாம யோசிச்சுருக்கணும். விடு, எல்லாம் விதி” என்றார்.
“நம்ம தகுதியை மீறி வரும் போதே நாம சுதாரிச்சுருக்கணும்” என்று அவர் வருத்தத்துடன் சொல்ல, “ப்பா..” என்று அவரிடம் சென்றான் பார்த்திபன். அந்நிலையிலும் பெற்றோரை அவன்தான் தேற்ற வேண்டியதாக இருந்தது.
“சண்டே பீச் போகலாமா?” என்று அவனுக்கு நேற்று இரவு கேட்டு செய்தி அனுப்பியிருந்த பிரபாவதியின் வாட்ஸ்அப் குறுஞ்செய்தியை திறந்து பார்த்தான். அதில் அவளின் முகப்புப் படம் அவனுக்குக் காண்பிக்கவில்லை. அவனைப் பிளாக் செய்து விட்டாள். அவ்வளவுதான், எல்லாம் முடிந்தது என்று முடிவுரையாக அதைப் பார்த்தான் பார்த்திபன்.
அவன் பெற்றோர் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து அவர்களுக்குள் பேசி ஆறுதல் கொள்ள, அவனோ அவனது புகலிடமான கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றான்.
சத்யபாமா மகனைத் தடுக்கவில்லை.
பார்த்திபன் மனத்தளவில் உடைந்து நொறுங்கி போய் இருந்தான். அவனுக்குத் தெரியாமலே ஒருத்தி மனத்தை அவன் உடைத்தான் என்றால், அவன் மனத்தை ஒருத்தி உடைத்து நொறுக்கி விட்டு சென்றிருந்தாள்.
அவனுக்குப் பிரபஞ்சனிடம் பேச வேண்டும் போலிருந்தது. ஆனால் நண்பன் அவனது அழைப்பை ஏற்பானா? என்ற கேள்வி அவன் முன் தொக்கி நிற்க, மைதானத்தில் அவனை நோக்கி வந்த பந்துகளை அடித்து நொறுக்கினான்.
அவன் இருந்த மனநிலையில் விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை கழற்ற மறந்து விட்டான். ஒரு பக்கம் கிரிக்கெட் மட்டை, மறுபக்கம் அவன் எதிர்கொள்ள வேண்டிய கிரிக்கெட் பந்து என இரண்டும் ஒரே நேரத்தில் அவனைத் தாக்கி அவன் கை விரலில் காயம் உண்டானது.
விரலில் இருந்து சொட்டிய ரத்தத்தை வெறித்துப் பார்த்து நின்றான்.
இனி அவனுக்குக் காயங்கள்தான் நிரந்தரம் போலும்!