சசிகுமார் உணவை முடித்து அலைபேசியுடன் ஹாலுக்குச் சென்று விட, பெண்கள் உண்ணத் தொடங்கினார்கள்.
“ரோஜா, தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க?”
“இப்போ பரவாயில்ல மா. நல்லா இருக்காங்க”
“நானும், அப்பாவும் கூடப் போய்ப் பார்க்கணும். உங்கப்பாகிட்ட சொன்னா, எங்க? காதுல போட்டுக்கவே மாட்டேங்கிறார்” சித்ரா புலம்ப, “அதான் போன் பண்ணி விசாரிச்சீங்க இல்லம்மா. அது போதும்” ரோஜா சமாதானம் செய்தாள்.
“அது மட்டுமில்ல ரோஜா. உனக்குச் சீர் செய்யணும். எங்க, எப்படி, என்னனு எனக்கு ஒன்னுமே புரியல. மாப்பிள்ளை வீட்ல எல்லாப் பொருளும் இருக்கு. இப்போ நாங்க உனக்குப் புதுசா என்ன வாங்கிக் கொடுக்க? வாங்கிக் கொடுத்தாலும் அதை நீங்க எங்க வைப்பீங்க? இப்படி எத்தனை இருக்கு? உங்கப்பா எனக்கென்னனு கண்டுக்காம இருக்கார். உங்க அத்தை, மாமாகிட்ட பேச சொன்னா, சரி சரின்னு தலையாட்டி மறந்துட்டு வர்றார். எல்லோரும் ஒரே ஹாஸ்பிடல்ல தானே இருக்காங்க? அவங்களைப் பார்க்கும் போது ஞாபகம் வராதா? அங்க வச்சு இதைப் பேசக் கூடாதுதான். வீட்டுக்கு வந்ததும் பேசலாம் இல்ல?” சித்ரா புகார் வாசிக்க,
“ம்மா, எத்தனை தடவை மா உங்களுக்குச் சொல்றது. அவர் எதுவும் வேணாம்னு சொல்றார்.” ரோஜா அழுத்தமாகக் கூறினாள்.
“மாப்பிள்ளை மொதல்லயே நகை, பணம் எதுவும் வேணாம்னு சொல்லிட்டார். உங்க அத்தை அதைப் பத்தி பேசினாலே, கண்டுக்க மாட்டேங்கறாங்க. அதுக்காக நாங்க உன்னை அப்படியே வெறும் கையா அனுப்ப முடியுமா ரோஜா? முறைன்னு ஒன்னு இருக்கு இல்ல? உங்கக்காக்கு செஞ்சது போல உனக்கும் செய்யணும் இல்ல?” என்றவர்,
“நித்தி மாமியார் எல்லாம் குண்டூசி கூடக் கணக்கு பார்த்து, கேட்டு வாங்கிட்டு போனாங்க” என்று அங்கலாய்க்க, சட்டென எட்டி ஹாலில் இருந்த கணவனைப் பார்த்து விட்டு, “அம்மா” என்றாள் நித்யா.
“நான் உண்மையைத் தானே சொன்னேன். எங்களுக்கு உங்க அத்தை ஒரு லிஸ்ட் கொடுத்தா, நீ அதை விடப் பெருசா ஒரு லிஸ்ட் வச்சுருந்த இல்ல? என்னோட நகைல பாதியை உனக்குப் பிடிச்சிருக்குன்னு வாங்கிட்டு போய்ட்ட. மிச்சம் இருக்கறதை நான் ரோஜாக்கு கொடுக்கணும் இல்ல. அதானே நியாயம்?” சித்ரா மகள்களைப் பார்த்து நமுட்டு சிரிப்புடன் கேட்க,
“ஆனாலும், நீங்க என்னை ரொம்ப டேமேஜ் பண்றீங்க மா. உங்களுக்கு ரோஜாதான் செல்லம். எனக்குத் தெரியும்” என்றாள் நித்யா முகத்தைத் திருப்பிக் கொண்டு.
அவள் முகத்தை வாஞ்சையுடன் பற்றி, “அவ உன் தங்கச்சி நித்தி. அவகிட்ட என்ன போட்டி?” என்று கேட்டார்.
“எனக்கு நீங்க ரெண்டு பேரும் செல்லம்தான்” என்று அவர் சொன்னதும் மகள்கள் இருவரின் முகமும் மலர, “என்ன பண்ணலாம் நித்தி” என்று முதலில் இருந்து தொடங்கினார் சித்ரா.
“அம்மா, இவருக்கு லீவ் முடியுது. ரெண்டு நாள்ல நாங்களும் ஊருக்கு போகணும். எங்க அத்தை வேற ரோஜாவை விருந்துக்கு வீட்டுக்கு கூப்பிட சொன்னாங்க” என்று அம்மாவிடம் சொன்ன நித்யா, “வீட்டுக்கு வாங்க ரோஸ் குட்டி. ரெண்டு நாள் எங்க கூட இருந்துட்டு போகணும். சரியா?” என்று தங்கையிடம் கேட்டாள்.
“நானும், மாமாவும் அவர்கிட்டயும் சொல்றோம். கண்டிப்பா வீட்டுக்கு வரணும். என்ன?” நித்யா மீண்டும் கேட்க, “சரிக்கா” என்றாள் ரோஜா.
“இன்னும் ஒரு வாரம் இருந்துட்டுப் போகலாம் இல்ல நித்தி. ரோஜாவுக்குச் சீர் செஞ்சு, அவ வீட்ல விட்டுட்டு வந்ததுக்கு அப்புறம் போயேன். அம்மா உனக்கு ஊறுகாய், மசாலா பொடி, பருப்பு பொடி எல்லாம் ரெடி பண்ணி தர்றேன்” என்று மகளைக் கெஞ்ச, “அம்மா..” என்று பொய் கோபத்துடன் கத்தினாள் நித்யா.
“நீயும் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ற. உங்கப்பாவும் கண்டுக்காம இருக்கார். நான் தனியா என்ன பண்ணுவேன்?” என்று புலம்பிய சித்ரா, கணவரை உடனே அலைபேசியில் அழைத்தார்.
மூவரும் பேசிக் கொண்டே உணவை முடித்திருக்க, “அம்மா, எனக்கு எதுவும் வேணாம். பிளீஸ்” என்றாள் ரோஜா. மகளை முறைத்து விட்டுக் கணவரிடம் பேசத் தொடங்கினார் சித்ரா.
ரோஜா, நித்யா இருவரும் சசிகுமாரிடம் சென்றனர்.
“உங்களுக்குத் தூக்கம் வரலையா? பால் எடுத்துட்டு வரவா?” நித்யா கணவனிடம் கேட்க,
“அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ?” அவளின் கைப் பிடித்துப் பாடினான் சசிகுமார்.
அவனுக்குப் பின்னால் நின்றிருந்த ரோஜா சிரிப்பை உதட்டைக் கடித்து விழுங்கினாள். ஆனாலும், கண்கள் மின்னி காட்டிக் கொடுக்க, தங்கையைப் பார்த்து வெட்கத்துடன் சமாளிப்புச் சிரிப்பொன்றை உதிர்த்தாள் நித்யா.
“மாமா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்” ரோஜா கேட்க, தொலைக்காட்சியில் இருந்து பார்வையை விலக்கி அவளைப் பார்த்து புன்னகைத்து, “என்னனு சொல்லு ரோஜா. செய்யறேன்” என்றான் சசிகுமார்.
“எங்க கல்யாண ஃபோட்டோஸ் எப்போ கிடைக்கும் மாமா? உங்களுக்குத் தெரியுமா?”
“அதுவா? பத்து நாள் டைம் கேட்டாங்க ரோஜா. உங்க மாமனார் ஏற்பாடு பண்ண டீம் அவங்க. என்கிட்ட நம்பர் இருக்கு. நான் விசாரிச்சு நாளைக்குச் சொல்லவா?” அவன் கேட்க,
“சரிங்க மாமா” என்றவள், தொடர்ந்து, “நாங்க அன்னைக்குச் சரியாவே ஃபோட்டோ எடுக்கல, இன்னொரு ஃபோட்டோ ஷூட் அரேஞ் பண்ண முடியுமா மாமா? நாம எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் ஃபேமிலி ஃபோட்டோஸ் எடுத்துக்கலாம்” என்று தயக்கத்துடன் கேட்க,
“அவ்ளோ தானே ரோஜா. நான் அரேஞ் பண்றேன். மாமாகிட்டயும் நானே சொல்லிடுறேன்” என்று சேர்த்து சொல்ல, “தேங்க்ஸ் மாமா” என்றாள் ரோஜா.
“அப்புறம் வேற ஏதாவது வேணுங்களா மேடம்?” நித்யா கேலியாகக் கேட்க, அவளுக்கு உதடு சுளித்துப் பழிப்பு காட்டி விட்டு தன் அறைக்குச் சென்றாள் ரோஜா.
அங்கே பால்கனியில் நின்று மிகத் தீவிரமாக அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான் இளமாறன். மனைவியைப் பார்த்ததும், “ரெஸ்டாரண்ட் கால், பேசிட்டு வர்றேன்” என்றான்.
“ஓகே” என்ற ரோஜா உள்ளே வர, படுக்கையில் அவனின் மடிக் கணினி திறந்திருந்தது.
“பார்க்கவா?” கையசைத்து அவள் கேட்க, சரியென்ற பதிலையும் அப்படியே கொடுத்தான் இளமாறன்.
அவனது கணினியில் திறந்திருந்த கோப்பில் இருந்த கணக்கு வழக்குகளைப் பார்க்கத் தொடங்கினாள் ரோஜா. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலான வரவு, செலவு, லாப, நஷ்ட கணக்குகள். அவளுக்குப் பார்க்க பார்க்க சற்றே மலைப்பாக இருந்தது.
அதிலும் இந்த வருடத்தின் நஷ்டத்தைச் சமாளித்து, நண்பனுக்கு அவனது பங்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்து, தொழிலை நேர்படுத்தி, மீண்டும் லாபம் எடுக்கக் கடும் உழைப்பையும், கொள்ளை பணத்தையும், கணக்கில்லா நேரத்தையும் கணவன் முதலீடாகப் போட்டிருந்ததைப் பார்க்கையில் அவளுக்கு மலைப்பாக இருந்தது.
கணவன் மீதான பிரமிப்புக் கூடியது.
ரோஜாவை இடித்தபடி வந்தமர்ந்து, “என்ன பண்ற?” என்று அவளின் காதை உரசியபடி கேட்டான் இளமாறன். கூச்சத்துடன் சிரித்து, “பிசினஸ் கத்துக்கறேன் செஃப்” என்றாள் கண் சிமிட்டி.
“ம்ம்” மென்மையாய் ரோஜாவை அணைத்துக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.
“அம்மம்மா வீட்ல என்ன நடந்தது?” அவன் கேட்க, “என்ன? என்ன நடந்தது? ஒன்னும் நடக்கல” என்றாள் ரோஜா மலுப்பலாக.
“அப்படியா?” என்றான் சந்தேகமாக.
“ம்ம். பாட்டி, எப்பவும் போல உங்களைப் பத்தி சொல்லிட்டு இருந்தாங்க. அவ்ளோதான்” என்றாள் ரோஜா.
“ம்ம்” என்றவனின் அணைப்பில் திரும்பி அவன் முகம் பார்த்து அம்மாவின் கேள்விகளை எல்லாம் ஒப்பித்தாள் ரோஜா.
“இதென்ன கேள்வி ரோஜா? நம்ம வீட்ல எல்லாமே இருக்கு. அதுக்கு மேல உன் விருப்பம்” என்று முடித்து விட்டான் அவன்.
ரோஜாவும் அதையே பெற்றோரிடமும் கூறினாள். சித்ராவிற்கு மகளுக்குச் சீரை சிறப்பாகச் செய்ய முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்.
தன் ஒட்டு மொத்த கோபத்தையும் சேர்த்து வைத்து சிவஹரியை தாளித்துக் கொண்டிருந்தார் அவர்.
“ரோஜா சென்னையில் தானே இருக்கப் போறா சித்ரா. அப்பப்போ நாம போய்ப் பார்த்து தேவைப்பட்டதைச் செய்யலாம். கவலையை விடு” என்று அவர் சொல்ல, அது சித்ராவின் கோபத்தை இன்னுமே தூண்டி விட்டது.
“பொண்ணுக்குக் கல்யாணம் முடிச்சு அனுப்பும் போது நிறைவா செய்யணும். அதை விட்டுட்டு…” அவரின் புலம்பல்கள் எல்லாம் வேலையே செய்யவில்லை.
ரோஜா பெற்றோர் வாங்கிக் கொடுத்த ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டாள். ஆனால், தனக்குத் தேவையான மிகச் சில நகைகளை மட்டுமே தன்னுடன் எடுத்துக் கொண்டு, பாதுகாப்பு கருதி மற்றவை அனைத்தையும் பெற்றோரிடமே கொடுத்துச் சென்றாள் அவள்.
குடும்பமாகச் சென்று மகளை அவளது கணவன் வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார்கள் சிவஹரி குடும்பத்தினர்.
அன்று இளமாறன் வேலை செய்யும் ஐந்து நட்சத்திர விடுதியில் அவர்களுக்குச் சிறிய விருந்து, கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதியமே என்ன உடை அணிவது, அதற்குப் பொருத்தமான நகை என அனைத்தையும் தேர்ந்தெடுத்து தயாராக வைத்துக் கொண்டிருந்தாள் ரோஜா.
“ரிலாக்ஸ் ரோஜா. இட்ஸ் அ நார்மல் பார்ட்டி. நாம சும்மா போய்த் தலை காட்டிட்டு, விஷ் பண்றவங்களுக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு, அப்படியே டின்னர் சாப்பிட்டு வரப் போறோம். அவ்ளோதான். ஓகே?” என்று அவளை அமைதிப்படுத்தினான் இளமாறன்.
ஆனாலும், ரோஜாவுக்குப் படபடப்பாகத்தான் இருந்தது. இளமாறன் வேலை செய்யும் ஐந்து நட்சத்திர ஹோட்டல், அவனது பதவி என அவளுக்கு நிறையக் கர்வம் தந்த அளவுக்கு அது பதட்டத்தையும் தந்தது.
தாமரை வண்ண பனாரஸ் பட்டை மிகுந்த சிரத்தையுடன் அவள் உடுத்திக் கொண்டிருக்க, “சேலையா கட்டுற ரோஜா?” என்று கேட்டு அவளின் ரத்த அழுத்தத்தை ஏற்றினான் இளமாறன்.
“இளா..” என்று கடுப்புடன் கணவனை ஏறிட்டவளின் கண்கள் அப்படியே ஆச்சரியத்தில் விரிந்து பின் மயங்கியது.
அவசரமாகச் சேலையை மார்பில் இட்டு, “வாவ்” என்றாள் ரசனையுடன்.
இளமாறன் சத்தமாகச் சிரித்து, “என்னடி?” என்றான் புருவம் உயர்த்தி.
“டெய்லர் மேட் சூட். நைஸ்” என்று அவன் மார்பில் கைப் பதித்த மனைவியின் இடையில் கைக் கோர்த்து இழுத்துக் கொண்டு போய் அவனது வார்டு ரோப்பின் முன் நிறுத்தினான். அதைத் திறந்து நீண்ட டிசைனர் உடை ஒன்றை அவன் எடுத்துத் தர, “ம்ம். டிசைனர் ட்ரஸ், நாட் பேட் செஃப்” என்றாள் ரோஜா.
மெல்லிய சரிகையுடன் கற்கள் பதித்த விலையுயர்ந்த அந்த உடை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும், அவளுக்கு வசதியும், சௌகரியமும் தரும் சேலையை உடுத்தவே விரும்பினாள் அவள்.
“எனக்குச் சேலைதான் கம்பர்ட்டபிள் இளா, பிளீஸ்” என்றவளின் கோரிக்கையை அவனும் மறுக்க விரும்பவில்லை.
இருவரும் தயாராகி மாலை ஏழு மணி போல ஹோட்டலில் இருந்தனர்.
ரோஜா எதிர்பார்த்ததை விடப் பிரம்மாண்டமாக இருந்தது அவர்களுக்கான விருந்து. அந்த ஹோட்டலின் உரிமையாளர் குடும்பத்தில் இருந்து வந்திருந்து வாழ்த்தி, பரிசு வழங்கினார்கள்.
சென்னை மட்டுமின்றி மற்ற மாநிலங்களின் கிளைகளிலும் இளமாறன் வேலை செய்திருக்க, அங்கிருந்தும் அவனோடு பணி புரிந்தவர்கள், உயர் பதவியில் இருந்தவர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
திருமண வாழ்த்துகள், பரிசுகள், பேச்சு, சிரிப்பு, பழைய கதைகள் என நேரம் அமர்க்களமாகச் சென்றது.
வேலையிடத்தில் இளமாறன் சம்பாதித்திருந்த நட்பும், அன்பும், நற்பெயரும் காண, கேட்க ரோஜாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“உனக்குக் குடிக்க ஏதாவது வேணுமா ரோஜா? புலாவ் பிடிக்கும் தானே? ஏன் சாப்பிடாம வச்சிருக்க? வேற ஏதாவது கொண்டு வரச் சொல்லவா?” மனைவி சாப்பிடாமல் இருப்பது பார்த்து இளமாறன் கரிசனத்துடன் கேட்க,
“வேற ஏதாவதா? ம்ம். அன்னைக்கு மாதிரி, உங்க ரூமுக்கு போய் ஆந்திரா மீல்ஸ் சாப்பிடலாமா இளா? கிடைக்குமா?” அவள் கண் சிமிட்டி கேட்க, பற்கள் தெரிய சத்தமாகச் சிரித்தான் இளமாறன்.
“ஹலோ மிஸஸ் இளமாறன். நான் மானவ் கன்னா” என்ற அறிமுகத்துடன் கை நீட்டியவரை பார்த்து புன்னகைத்து, “செஃப் என்னோட மெண்டார் ரோஜா. செஃப்கிட்ட இருந்துதான் என் கேரியர் ஸ்டார்ட் பண்ணேன் நான். எனக்குச் சமையலில் ஏபிசி கத்துக் கொடுத்த குரு இவர்” மிகப் பணிவுடன், ஆனால் நிமிர்வாக அவரை மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.
தன் மாணவனைப் பெருமையுடன் தோளில் தட்டிக் கொடுத்து, ரோஜாவின் கைகளைப் பற்றிக் குலுக்கி இருவருக்கும் மண வாழ்க்கைக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார் கன்னா.
ரோஜா அதுவரை பார்த்திடாத கணவனின் ஒரு கோணத்தை அன்றுதான் கண்டாள்.
இளமாறன் முகத்தில் கலையாமல் நிலைத்திருந்த புன்னகை, அவனுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், அவனது தொழில் நேர்த்தியை, நேர்மையைச் சொன்னது.
“மேரேஜ் சூட்ஸ் யூ யங் மேன். இப்படிச் சிரிச்ச முகமா உன்னைப் பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்கு” என்று அவர் சொல்ல, இளமாறனின் புன்னகை பெரிதாகியது.
“இந்தப் புன்னகைக்கு நீதான் காரணம்னு நினைக்கிறேன். அது நிலைக்கணும். குஷ் ரஹோ (சந்தோஷமா இரு)” ரோஜாவின் தலையில் கை வைத்து அவர் வாழ்த்தியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. மனம் நெகிழ அவளுக்குக் கண் கலங்கி விட்டது. இளமாறன் இயல்பாக அவளின் இடையில் கைக் கோர்த்து நெருக்கமாக நிற்க, “ஜி, சுக்ரியா” என்றாள் ரோஜா.
“உனக்கு ரொம்பப் பொருத்தமான பொண்ணு இளா.” புன்னகையுடன் சொன்னார் கன்னா.
அவர்களோடு சேர்ந்து உணவு உண்டபடி சிறிது நேரம் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் விடை பெறும் முன், அங்கு வந்த ஹைதராபாத் ஹோட்டலின் செஃப், “நல்லா ஹிந்தி பேசறீங்க ரோஜா. எந்த ஊர் நீங்க?” என்று ஹிந்தியில் கேட்க, “சென்னைதான்” என்றாள் ரோஜா.
ரோஜா, அவர்கள் நகரவும் இளமாறனிடம் திரும்பி, “எனக்குப் பூர்வீகம் சொர்க்கம்னாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கதான் செஃப்” என்றாள் கண்ணைச் சிமிட்டி. அதைக் கேட்டதும் முதலில் புரியாமல் திகைத்துப் பின் புரிந்ததும் வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்தவனைச் சிரிப்புடன் பல முகங்கள் திரும்பிப் பார்த்தது.
நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் விருந்து முடிந்து பரிசு பொருட்களுடன் வீடு திரும்பினார்கள்.
இருவரும் அன்றைய நிகழ்வை பேச்சும், சிரிப்புமாகப் பகிர்ந்துக் கொண்டார்கள்.
மறுநாள் பெரியவர் வைத்தியலிங்கம் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருக்க அங்குச் சென்றார்கள்.
அதன் பின்னர் விடுமுறை முடிந்து இளமாறன் வேலைக்குச் செல்லத் தொடங்க, ரோஜா அப்பாவுடன் கேன்டீன் சென்றாள்.
சுகந்தி, சங்கரன் தம்பதியர் மகனையும், மருமகளையும் வீட்டிற்கு அழைத்த நேரம் புதுமணத் தம்பதியர் நித்யா வீட்டில் இருந்தனர். இவர்கள் அங்குச் செல்ல விரும்பிய போது மருத்துவமனை வேலைகள் அவர்களைப் பிஸியாக வைத்திருந்தது.