பிரபஞ்சனின் கண்கள் நண்பனை ஆராய்ச்சியுடன் நோக்கின. தான் சரியாகத்தான் கேட்டோமா என்ற சந்தேகம் அவனுக்கிருந்தது. அது நட்பினால் உண்டான நம்பிக்கை.
நண்பன் தன்னிடம் எதையும் மறைத்திருக்க மாட்டான் என்று ஆணித்தரமாக நம்பியதால் வந்த அதீத நம்பிக்கையுடன், அதே நேரம் அவனது வார்த்தையினால் துளிர்த்த சந்தேகக் கீற்றுடன் என இரு வேறு மனநிலையுடன் நண்பனை பார்த்தான்.
பார்த்திபனின் கண்கள் படுக்கையில் இருந்த பார்கவியின் மேலிருந்தன.
அந்தப் பார்வையில் அப்பட்டமான பரிதவிப்பு இருந்தது. அந்தப் பார்வை பிரபஞ்சனை மேலும் குழப்பியது.
“எல்லாம் என்னால.. நான் எடுத்த ஒரு தப்பான முடிவால என் லைஃபை நானே.. காம்ப்ளிகேட் பண்ணிட்டேன். அது என் வீடு பிரியா, இனிமே நான் அங்க எப்படி நிம்மதியா இருப்பேன். பயந்துட்டேன் பிரியா. ரொம்பப் பயந்துட்டேன் பிரியா. டெய்லி நியூஸ்ல எவ்ளோ மோசமான நியூஸ்லாம் பார்க்கறோம்? எனக்கும் அப்படி நடந்திருக்க வேண்டியது.. நான் அவன் கையில சிக்கியிருந்தா..” என்று பார்கவி தன் மனத்தின் அழுத்தத்தை எல்லாம் புலம்பியே வெளியிட, “பாரு, உனக்கு ஒன்னுமில்ல. நான் இருக்கேன், தூங்கு” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி, அவள் கரத்தை மென்மையாக வருடிக் கொடுத்துக் கொண்டேயிருந்தாள் பிரியதர்ஷினி. அவளுக்குப் பூஞ்சை மனம், பார்கவிதான் அவர்களில் தைரியசாலி. அவளுக்கு இத்தனை வருடங்களில் துணையாக நின்ற தோழியை இப்படி உடைந்து போய்ப் பார்க்கவே அவளால் முடியவில்லை.
பார்கவி தூக்க மருந்தின் உபயத்தால் சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்திருந்தாள்.
பிரபஞ்சன் தீர்க்கமான பார்வையுடன் நண்பனின் பக்கம் திரும்பினான்.
“பார்த்தி..” என்று அழுத்தமாக அழைத்தான். பார்த்திபனின் பார்வை இன்னமும் பார்கவியின் பக்கம் தானிருந்தது.
பிரகாஷின் திருமண வீட்டில் நடந்த மற்றுமொரு நிகழ்வு அவன் மனக் கண்ணில் வந்து நின்றது.
புகைப்படக் கலைஞர்கள் தேநீர் அருந்த இடைவேளை கொடுத்து அவர்களிடம் நின்று பேசிக் கொண்டிருந்தாள் அவள். அப்போது, “நீங்க டீ குடிக்கிற வரைக்கும் உங்களுக்குப் பதில் நான் கவர் பண்ணவா அண்ணா?” என்று ஒரு சிறுமியின் ஆர்வத்துடன் கேட்டு, அவர்களிடம் அனுமதி பெற்றுப் புகைப்படக் கருவியின் முன் சென்று நின்றாள் பார்கவி.
“ஹலோ, கேமரா ஹேண்டில் பண்ண தெரியாதா உனக்கு?” அவளை ஒட்டி உரசும் நெருக்கத்தில் நின்று அவன் கேட்டதை நினைக்கையில் அவனது தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறியிறங்கியது.
“இரு, உனக்கு நான் சொல்லித் தர்றேன்” என்று பின்னால் இருந்து அவளின் கைப் பிடித்து நின்றது இப்போது அவனுக்குப் பசுமையாய் நினைவில் வந்தது.
பார்கவிக்கு எப்படி அவனால் இதைச் செய்ய முடிந்தது? என்று அவனுக்கே புரியவில்லை. தன் மனத்தில் அப்போதே அவள் வேரூன்றி விட்டாளோ? ஆனால் அதை நான் ஏன் உணராமல் போனேன்? என்று தன்னைத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டான்.
அன்றைக்கு, “பார்த்தி.. பயமுறுத்தாதீங்க” என்று அவனைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த கண்களில் இருந்த உணர்வை இனி ஒரு நாளும் அவன் காணவே போவதில்லை என்று நினைக்கையிலேயே அவனுக்கு நெஞ்சை அடைத்தது.
“பார்த்தி” என்று பல்லைக் கடித்து அவனை அழைத்தான் பிரபஞ்சன்.
திடுக்கிட்டு திரும்பி, “என்ன பிரபா?” என்று அவன் கேட்க, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாம் என்னாலன்னு சொன்ன இல்ல? ஏன் அப்படிச் சொன்ன?” என்று கூர்மையாகக் கேட்டான்.
பார்த்திபன் அதிர்ச்சியுடன் நண்பனை பார்க்க, “சோ, இட் வாஸ் யூ இல்ல?” என்று ஆழ்ந்த அமைதியுடன் கேட்டான் பிரபஞ்சன்.
“பிரபா..”
“என் கேள்விக்குப் பதில் சொல்லு போதும். வேற பேச்சே வேணாம். புரிஞ்சுதா? பார்கவிதானே நீ சொன்ன அந்தப் பொண்ணு? ஷி லவ்டு யூ இல்ல?” என்று கோபத்திலும் கலங்கிய குரலில் கேட்டான்.
பார்த்திபனின் தொண்டையை யாரோ அழுத்தி நெரிக்கும் உணர்வு.
“பிரபா..” என்று திக்கினான்.
“பதில் சொல்லுடா. பார்கவி உன்கிட்ட லவ் சொன்னாளா இல்லையா? அதை மட்டும் சொல்லு போதும்” என்று அடி தொண்டையில் இருந்து சீறினான்.
அமைதியான அந்த மருத்துவமனை அறையில் அப்போதுதான் பிரியதர்ஷினிக்கு அவர்களின் குரல் கேட்டது போலும்.
“என்னாச்சு பிரபா” என்று கேட்டு எழுந்து அவர்களிடம் வந்தாள்.
மனைவியின் பக்கமே திரும்பவில்லை அவன் கண்கள்.
நண்பனையே கூர்ந்து நோக்கின.
“பார்த்தி..” என்று சீறினான்.
“பார்கவி சொல்லும் போது நான் அவ லவ்வை அக்செப்ட் பண்ற நிலைமையில் இல்லடா. அதைப் பத்தி யோசிக்கிற நிலையில கூட நான் இருக்கல” என்று பார்த்திபன் சொல்லி முடிக்கும் முன், அவனை ஓங்கி பளாரென்று அறைந்திருந்தான் பிரபஞ்சன்.
“பிரபா.. என்ன பண்றீங்க..” என்று பதறி பிரியதர்ஷினி அவன் கையைப் பிடிக்க, அவள் கையை உதறி விட்டு, அதிர்ந்து நின்றிருந்த நண்பனின் கன்னத்தில் மற்றொரு அறையை விட்டான் அவன்.
“ஏன்டா இப்படிப் பண்ண? அந்தப் பாரியை போல நீயும் பார்கவிய ப்ளேம் பண்றியாடா?” என்று அவன் டிஷர்ட்டின் காலரை பிடித்து உலுக்கினான்.
“ஏன் இப்படிப் பண்ண பார்த்தி? அவ நம்ம பாருடா. உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு?” என்று குமுறினான்.
“பிரபா, இது ஹாஸ்பிட்டல்..” பிரியதர்ஷினியின் குரலே அவன் காதில் விழவில்லை. அவனது கவனமெல்லாம் பார்த்திபனின் மீதுதான் இருந்தது.
“நான் உன்கிட்ட கேட்டேனா இல்லையாடா? எனக்கு அந்தப் பொண்ணைத் தெரியுமான்னு கேட்டேனா இல்லையா? அப்போ கூட உனக்கு உண்மையைச் சொல்லத் தோனல இல்ல?”
“சாரிடா”
“உன் சாரி மயிரை வச்சுட்டு ஒன்னும் புடுங்க முடியாது இங்க..”
“பிரபா, என்ன இப்படிப் பேசுறீங்க?” என்று பிரியதர்ஷினி அவனைக் கண்டிக்க, “நியாயமா பார்த்தா உன் ஃப்ரெண்ட்டுக்காக நீதான் கொந்தளிக்கணும், இவனை அடி வெளுக்கணும்..” என்று கத்தினான்.
“அப்படி நான் கொந்தளிச்சா எதுவும் மாறப் போகுதா இல்லையில்ல விடுங்க” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள். பார்த்திபனின் கழுத்தில் இருந்து கையை எடுக்காமல் மனைவியைத் திரும்பி கூர்மையாகப் பார்த்தான் அவன்.
“அப்போ உனக்கு ஏற்கனவே உண்மை தெரியும். அப்படித்தானே பிரியா? நீயும் என்கிட்ட இருந்து உண்மையை மறைச்சுருக்க இல்ல?”
“ப்ச், இல்ல பிரபா. இன்னைக்கு வீட்ல வச்சு அந்தப் பாரியை பாரு அடிக்கும் போது அண்ணா நடந்துக்கிட்டது வச்சது கெஸ் பண்ணேன்” என்றாள். பார்கவியை மார்போடு அணைத்து பார்த்திபன் ஆறுதல் சொன்னது அவள் பார்வையில் இருந்து தப்பவில்லை.
என்னமோ எல்லோரின் மேலும் அப்படியொரு ஆத்திரம் பிரபஞ்சனுக்கு வந்தது. அதில் கையில் சிக்கிய நண்பனின் மேல் மொத்த கோபத்தையும் இறக்கி வைத்தான்.
“நான் உன்னை எத்தனை முறை வார்ன் பண்ணேன் பார்த்தி? பார்கவியை நெருங்காதன்னு சொன்னேனா இல்லையா?”
“சாரி பிரபா. நீ சொன்னதாலதான் நான் அவகிட்ட இருந்து தள்ளியே நின்னேன்டா. அவளை அந்தக் கண்ணோட்டத்தில் நான் பார்க்காததுக்குக் கூட அதான் காரணமா இருந்திருக்கும்..”
“டேய் செய்யறது எல்லாம் செஞ்சிட்டு அப்படியே பழியை என் மேல தூக்கி போடாதடா. அப்புறம் அந்தப் பாரி பிராடுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?” என்று கொதிப்புடன் கேட்டான் பிரபஞ்சன்.
“நான் தெரிஞ்சே எதையும் செய்யலடா. என் சிட்டுவேஷன் அப்படி ஆகிடுச்சு” என்று பார்த்திபன் சொல்லவும், அவனது கோபத்தின் அளவு கூடித்தான் போனது.
“நீ தெரிஞ்சே செய்யலயா? அறிவுக் கெட்டவனே என்கிட்டேயே வந்து அந்தப் பொண்ணு கிட்ட நான் ப்ளர்ட் பண்ணேன்னு சொன்னவன்தானே டா நீ? இப்போ அப்படியே பல்டி அடிச்சு நல்லவனாகப் பாக்கறியா?”
“இல்லடா பிரபா..”
“பேசாதடா. நான் அத்தனை முறை அந்தப் பொண்ணை எனக்குத் தெரியுமான்னு கேட்டேனேடா. எனக்கும் பிரியாக்கும் அந்தச் சந்தேகம் இருக்கவும்தான் டா கேட்டோம். நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா.. ச்சே..” என்று நண்பனை வெறுப்புடன் உதறி கால்களை மடித்துத் தரையில் அமர்ந்து விட்டான்.
“நான் ஆல்ரெடி ரொம்பக் கில்ட்டியா ஃபீல் பண்ணிட்டு இருந்தேன் பிரபா..”
“டேய், உன் கில்ட்டி ஃபீல் வச்சு.. என்ன கிழிக்கப் போற இப்போ. பாருவை பாருடா..” என்று கத்தி எழுந்து நின்றான் பிரபஞ்சன்.
அவர்கள் காவல் நிலையம் சென்று பாரிவேந்தனை ஒப்படைத்திருந்தார்கள். இன்னும் அவன் மேல் முதல் தகவல் அறிக்கையைப் பதிந்திருக்கவில்லை. அதற்குள் பாரியின் வீட்டுக்கு அழைத்திருந்தான் அவன்.
அவனது பெற்றோர் வழக்கறிஞருடன் வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. மாணிக்கவேலுக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரிதான். ஆனாலும் அவர் நம்பிக்கையின்றிப் பேச இவர்களுக்கு வெறுத்துப் போனது.
“நீங்க ஃபர்ஸ்ட் போய் உங்க பொண்ணைப் பார்த்திட்டு வாங்க. அப்புறமா இந்தக் கேஸை பார்க்கலாம்” என்று பேசி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தார். அதில் பிரபஞ்சனுக்குப் பெரிதான அதிருப்தியும் ஆத்திரமும் உண்டாகியிருந்தது.
அதையெல்லாம் இப்போது நண்பனின் மேல் திருப்பியிருந்தான் அவன்.
பார்த்திபனின் பார்வை மீண்டும் படுக்கையில் இருந்த பார்கவியின் மேல் பதிய, உயிரை உடலில் இருந்து உருவிப் போட்ட வலியை உணர்ந்தான். அவளுக்கு இந்த வலியும் வேதனையும் அவனால் உண்டானது. இந்தக் குற்ற உணர்ச்சி அவனைக் காலத்துக்கும் விட்டு விலகப் போவதில்லை.
அவளுக்கு இப்படி நேர்ந்திருக்க வேண்டாம் என்று மனதார வருந்தினான்.
“உனக்கு அந்தப் பாரிய பத்தின உண்மை எப்போ தெரியும் பார்த்தி?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டான் பிரபஞ்சன்.
எதையும் மறைக்காமல், “ரெண்டு நாளைக்கு முன்னாடியே..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், மீண்டும் அவன் கன்னத்தில் விரல் தடம் பதியும் அளவுக்கு அறைந்திருந்தான் பிரபஞ்சன்.
அந்தச் செய்தியில் அதிர்ந்து உறைந்து நின்ற பிரியதர்ஷினி இம்முறை கணவனைத் தடுத்துப் பிடிக்கவில்லை.
“ஏன்ண்ணா, உங்களுக்குத் தெரியும்னா ஏன் முன்னாடியே சொல்லல? உங்களுக்கு உண்மை தெரிஞ்சதும் என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்லண்ணா?” என்று கண்ணீருடன் கேட்டாள். தோழிக்கு எத்தனை பெரிய அனர்த்தம் நிகழ்ந்து விட்டது. இவன் மட்டும் உண்மையை முன்னரே சொல்லியிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம்தானே என்ற ஆதங்கம் அவளுக்கு.
பார்த்திபனுக்கு முழு உண்மையும் அப்போது தெரியாது. பாரிவேந்தன் அமெரிக்காவில் இருக்கும் போது ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்தான் என்ற தகவல் மட்டுமே அவனுக்குக் கிடைத்திருந்தது.
அதன் உண்மைத் தன்மையை மேலும் விசாரித்து ஆராயச் சொன்னான் அவன். தான் ஒரு தகவல் சொல்லி அதனால் பார்கவியின் திருமணம் நின்று விடக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு.
அது இப்போது எத்தனை பெரிய மடத்தனம் என்று உணர்ந்து வருந்தினான். அவனது வலியில் கேள்விக் கேட்டு கத்தியை பாய்ச்சினான் பிரபஞ்சன்.
“உன்னை விசாரிச்சி சொல்ல சொன்னது நான்டா பார்த்தி. நீ என்கிட்ட அவன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்தான்னு சொல்லியிருக்கணுமா இல்லையா? நான் பிரியா கிட்ட சொல்லி பார்கவிய வார்ன் பண்ணியிருப்பேனேடா. நானே கூடப் பார்கவி கிட்ட பேசியிருப்பேன். அவ அப்பா கிட்ட.. ப்ச், ஏன்டா இப்படிப் பண்ண?” என்று மனம் நொந்து கேட்டான்.
“இப்படிப் பண்ணிட்டியே பார்த்தி. நான் லவ் பண்ணத பார்த்து அப்படியாடா நீ லவ்வ வெறுத்துட்ட?” கோபம் எல்லாம் வடிந்து உடைந்த குரலில் கேட்டான். பார்கவியின் நிலைக்குத் தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவனைக் கொன்றது.
“பிரபா உன் மேல தப்பில்லடா. நான்தான்..”
“பேசாத பார்த்தி. இத்தனை வருஷம் கழிச்சு என்னாலதான் அவ உன்னை மீட் பண்ணா. நான்தான் அவளை மேட்ச் பார்க்க கூட்டிட்டு வந்தேன். நான் மட்டும் அன்னைக்கு அவளைக் கூட்டிட்டு வரலைன்னா.. இன்னைக்கு அவளுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்கவே வந்திருக்காது..” என்று தன்னைத்தானே குற்றம் சாட்டினான்.
நண்பன், மனைவி என்று இருவருமே அவன் கைப் பிடிக்க, இருவரையும் உதறினான் அவன்.
“பட்டர்பிளை எஃபெக்ட் தெரியும்தானே உனக்கு? உலகத்தின் ஒரு மூலையில ஒரு பட்டாம்பூச்சி சிறகடிக்கறதால இன்னொரு மூலையில புயல் அடிக்குமாம்.. ஆனா இங்க நானே நேரடியா சம்பந்தப்பட்டிருக்கேன்.”
பிரபஞ்சன் பேச பேச பார்த்திபன் குறுகி நின்றான்.
அவன் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. பட்டாம்பூச்சி சிறகடிப்பது போல எல்லாமே இயல்பாக நடந்தது. அதனால் ஒரு புயல் உருவாகும் என்று அவனால் முன்னரே கணிக்க முடிந்திருந்தால், முன்னெச்சரிக்கையாகத் தடுத்திருப்பானே!
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்கிறோம்! ஆனால் நம்மால் எதையும் மாற்ற முடியாது என்று உணர்கிற நொடி இருக்கிறதே. அதைக் கடப்பது கொடிதிலும் கொடிது.
பிரியதர்ஷினி அமைதியாகப் பார்கவியிடம் சென்று அமர்ந்து விட்டாள்.
“பிளீஸ், வெளில போய்டு பார்த்தி.” என்று நண்பனுக்குக் கதவைக் கைக் காட்டிய பிரபஞ்சன் தரையில் சரிந்து அமர்ந்து விட்டான்.
பார்த்திபனால் அப்போது மன்னிப்பு என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியவில்லை. மற்றதை எல்லாம் விட உண்மையைத் தெரிந்து கொண்ட கணம் அவன் நண்பனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவன் தவறி விட்டான்தான். முதலில் நண்பனாக, பிறகு அவனை நேசித்த பெண்ணுக்கு நியாயம் செய்யாதவனாக, ஒட்டு மொத்தமாக மனத்தளவில் உடைந்து போனான் அவன்.
“இப்போ யாரை குறைச் சொல்லி என்ன செய்ய? நாங்கல்ல அவனைப் பத்தி நல்லா விசாரிச்சுருக்கணும். எங்க பொண்ணு வாழ்க்கை, நாங்க இல்ல பொறுப்பா இருந்திருக்கணும். அவன் இப்படின்னு தெரிஞ்சுருந்தா என் பொண்ணு பக்கம் அவன் மூச்சு காத்துப் படக் கூட விட்டிருக்க மாட்டேனே” என்று புலம்பிக் கொண்டே அறைக்குள் வந்தார் ரங்கராஜன். அவரைத் தொடர்ந்து காவேரி, பிரியதர்ஷினியின் பெற்றோரும் வந்தனர்.
“ஏன்ப்பா ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று அவர்களின் முகங்களைப் பார்த்தே கேட்டவர், பார்த்திபனின் பக்கத்தில் வந்து நின்றார். அவன் தோளில் கைப் போட்டு, “நான் செய்ய வேண்டிய வேலையை நீ செஞ்சுருக்கப்பா. இப்பவாவது அவனைப் பத்தின உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டோமே. இனிமேட்டு ரொம்பக் கவனமா இருப்போம்.” என்று அவனுக்கு நன்றி சொன்னார். அவனால் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தொண்டை அடைத்துக் கண்கள் கலங்கி போயின.
மாணிக்கவேல் காவல் நிலையம் செல்ல வேண்டும், அங்கிருந்து அழைப்பு வந்தது என்று சொல்லவும் பார்த்திபன்தான் முதலில் பார்கவியைப் பார்த்தது என்பதால் அவனும் அவர்களோடு வர வேண்டும் என்றார்.
காவல் துறையில் இருந்து பெண் காவலருடன் வந்து உறங்கும் பார்கவியைப் பார்த்து, பின் மருத்துவருடன் பேசிச் சென்றார்கள்.
அவர்களைப் பின் தொடர்ந்து இவர்களும் காவல் நிலையம் சென்றார்கள்.
காவேரி, ராதா இருவரும் பார்கவியுடன் மருத்துவமனையில் இருக்க, மற்றவர்கள் காவல் நிலையம் சென்றார்கள்.