பார்த்திபன் காதலி – 19 (2)

எப்போதும் தவறு செய்தவன் தப்பித்து விடுகிறான். பாதிக்கப்பட்டவன்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

பொய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் உண்மைக்குப் பல நேரம் வாய்ப்பதில்லை.

இங்கும் அதுதான் நிகழ்ந்தது.

பாரிவேந்தனின் பெற்றோர் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞருடன் விரைந்து காவல் நிலையம் வந்து விட்டனர்.

மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறான் அல்லவா? அதனால் அவன் மேல் வழக்கு என்ன, முதல் தகவல் அறிக்கை கூடப் பதிய விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

பின்னே பணம் பாதாளம் வரை பாயும் என்றால், அதிகார பலம் அதற்கு மேலான காரியங்களைச் சாதிக்க உதவும்தானே?

ரங்கராஜன் கொதித்துப் போனார். அவரின் ஒற்றை மகள், எத்தனை பாசமாக அவளை வளர்த்திருப்பார். அவளுக்கு ஒன்றென்றால் அவரால் தாங்கவே முடியாது. ஆனால் இன்றைக்கு அவள் இருக்கும் நிலைக்கு இவர்களைக் கொன்று போட்டால் கூட அவர் மனம் ஆறாது.

“என்னடா பெரிய சுண்டைக்காய் பணம்? எங்ககிட்ட இல்லாததா? அதுவும் என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்னா என் மொத்த சொத்தையும் வித்துக் கூடக் கேஸ நடத்துவேன்டா” என்று திட்ட வட்டமாக உரைத்தார்.

பாரிவேந்தனுக்கு அவர்களின் திருமணம் நின்றது மிகுந்த அதிர்ச்சி. அது குறித்துப் பேசத்தான் அவள் வீடு வந்தான். அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், அவளோடு நெருங்கி பேசி, பழகுவது இத்தனை நாள்களில் இயல்பாகி இருந்தது. அவளின் பழைய காதல் தோல்வியால் அவனைத் திருமணம் செய்ய மறுத்தது அவனுக்குப் பேரதிர்ச்சி. அதைப் பற்றி அவன் கேட்டதும் அவனைத் தாக்கி அறையில் வைத்து அடைத்து விட்டாள் பார்கவி என்று சொல்லி அவனது நெற்றி, முதுகு காயங்களைக் காண்பித்தான் அவன்.

கைகளில் வேறு காயம் அது பார்த்திபன் அடித்தால் வந்தது.

அவள் தாக்கும் போது பதிலுக்குத் தானும் தற்காப்புக்கு அடித்தேன், அவ்வளவுதான் என அவன் அடித்துச் சொல்லி விட, காவல் நிலையம் என்று கூடப் பாராமல் பிரபஞ்சன் அவன் மேல் பாய்ந்து விட்டான். பிரியதர்ஷினியை தவிர வேறு யாரும் அவனைத் தடுக்கவில்லை.

அரை நிமிடத்தில் தோசையைத் திருப்பிப் போடுவதைப் போல நடந்த அனைத்தையும் அவர்களுக்குச் சாதகமாக மாற்றிப் பாரிவேந்தன் குடும்பம் பேசிட, ரங்கராஜன் நெஞ்சில் கை வைத்து இருக்கையில் சாய்ந்து விட்டார்.

“போலீஸ் ஸ்டேஷன்ல வச்சே இப்படி என் பிள்ளையை அடிக்கறாங்களே சார். நீங்க என்னன்னு கேட்க மாட்டீங்களா?” என்று பாரியை பெற்ற தெய்வம் கேட்க, “இப்படியொரு பிள்ளய பெத்துட்டு நீயெல்லாம் மூஞ்சியை நிமித்திட்டு பேசாதம்மா” என்று அங்கிருந்த பெண் காவல் அதிகாரி கோபத்துடன் சொல்லியே விட்டார்.

“நாங்க இப்பத்தான் ஹாஸ்பிடல் போய் அந்தப் பொண்ணைப் பார்த்திட்டு வர்றோம்.” என்று இறுக்கமாக முறைத்து அவர் சொல்ல, “ஐயோ என் பையன்..” எத்தனை பெரிய அப்பாவி தெரியுமா என்று கதையளந்து கொண்டிருந்தார் அவர்.

“வந்த காரியத்தைக் கவனியுங்கள்” என்று மாணிக்கவேல் சொல்ல, பார்த்திபன் அதிர்ந்து அமர்ந்திருந்த ரங்கராஜனை கவனித்தான்.

பாரிவேந்தன் குடும்பத்தினர் முன்னேற்பாடாக வந்திருந்தார்கள்.

அவர்கள் பேசுவதைக் கேட்க கேட்க மனம் வெறுத்துப் போனது இவர்களுக்கு.

“கேசு, கோர்ட் அது இதுன்னு உங்களைச் சும்மா அலையத்தான் விடுவானுங்க சார். நீங்க இங்க வச்சு பேசி முடிச்சிட்டு வெளில போய் இவனை நல்லா கவனிச்சி விட்டுருங்க.” என்று பெண் காவல் அதிகாரி சிறு குரலில் சொல்ல, என்னவோ அந்நேரம் அதுதான் சரியென அவர்களுக்கும் பட்டது.

“இங்க நியாயமா போராடி எதையும் நட்டமா நிறுத்திட முடியாது சார்” என்றார் வருத்தத்துடன்.

இவனை இப்படியே விடுவதா என்ற ஆத்திரம் மறையாமல் வேறு வழியின்றி, “என் பெண் பக்கம் இவன் மூச்சு காற்று கூடப் படக் கூடாது. அப்படி இவன் வந்தால், அவ்வளவுதான்” எனக் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் வழக்கறிஞர் வைத்தே சாட்சியங்களுடன் முறையாக எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

“அவனை எதாவது செஞ்சிருக்கணும்” என்ற ஆத்திரம் மட்டும் அவர்கள் அனைவருக்கும் அடங்கவேயில்லை.

ரங்கராஜனை அழைத்துக் கொண்டு மாணிக்கவேல் மருத்துவமனை செல்ல, அவர்களோடு இணைந்து கொண்டான் பிரபஞ்சன். பிரியதர்ஷினி அவனைப் பின் தொடர, அவன் மறந்தும் கூடப் பார்த்திபன் பக்கம் திரும்பவேயில்லை.

இனி அவனால் பார்கவியைப் பார்க்கவே முடியாது. அப்படியொரு வாய்ப்பை அவனுக்கு விதி மட்டுமல்ல, அவன் வாழ்க்கையும் தரப் போவதில்லை என்பதே நெஞ்சில் பாரமேற்றியது. எப்போதும் தவற விட்ட தருணங்களுக்காக வருந்துவதுதானே மனித இயல்பு.

இந்தக் காதல் இருக்கிறதே, உயிரோடிருக்கும் போதே உயிரை உருவும் உயிர்க்கொல்லி என்று காதலை கறுவினான்.

காதல்! அது எப்போதும் அப்படித்தானே?

நம்மையே அழிக்கும் என்று அறிந்தும், பிறரை காயப்படுத்தும் என்று தெரிந்தும் காதலால், காதல் கொண்ட மனங்களால் ஒன்றுமே செய்ய இயலாது. அதற்குத் தனியாக அழியத் தெரியாது!

பார்த்திபன் வீடு வந்து விட்டான். இதுவரை மற்றவர் பார்வையில் படாத ஒன்று அவனது தாயின் கண்களில் தவறாமல் பட்டது.

“என்னடா பார்த்திபா காலையில வீட்ல இருந்து பாதிக் குளியல்ல கிளம்பி போனவன், இம்புட்டு லேட்டா வர்ற?” என்று கேட்டவர், அவருக்குப் பதில் சொல்லாமல் அறையை நோக்கி சென்றவனை அவசரமாக அவன் கைப் பிடித்து நிறுத்தினார்.

“என்னடா மூஞ்சில காயம்? ஏன்டா இப்பிடி வீங்கி போய் இருக்கு? எங்கடா போய் விழுந்த? அப்படியாடா கிரிக்கெட் விளையாடுவ?” என்று அவன் கன்னத்தைத் தொட்டு கேட்டார். சட்டென வலியில் அவன் முகம் சுருங்கியது.

“விடும்மா” என்று அவரின் கையை விலக்கினான்.

“இப்படியாடா மூஞ்சில கீறல் விழற அளவுக்கு விழுந்து வாருவ? இதைப் பார்த்தா விழுந்தா மாதிரி தெரியலையே, அடி வாங்கினாப்ல இல்ல இருக்கு? யாருடா அடிச்சா உன்னை?” என்று தாயாகப் பதறி அக்கறையுடன் கேட்டார்.

அவர் எத்தனை அழுத்திக் கேட்டாலும் அவன் பதில் சொல்லப் போவதில்லை என்று உணர்ந்ததும், “ஐஸ் கட்டி வைடா, வீக்கம் குறையும்” என்று குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து வந்து கொடுத்தார்.

அவன் மனம் இருக்கும் நிலைக்கு உறைந்த இமய மலையைத் தூக்கி வந்து வைத்தால் கூட வீக்கம் குறையாது என்று அவனுக்கு மட்டும்தானே தெரியும்.

அம்மா நீட்டியதை வாங்கிக் கொண்டு அமைதியாய் மாடியேறினான்.

மற்றவரை மன்னிப்பதை விடுங்கள், சமயங்களில் நம்மை நாமே மன்னிப்பதுதான் இயலாத காரியமாக இருக்கும்.

மொட்டை மாடி தரையில் அவனைப் போலவே வருந்தி தேய்ந்து கொண்டிருந்த நிலவை வெறித்தபடி மல்லாந்து விட்டான்.

“என்ன பார்த்திபா இப்படி வெறும் தரையில படுத்துட்ட?” என்று அவனுக்குத் தேநீர் எடுத்து வந்து கொடுத்தார் சத்யபாமா.

“பொண்ணு வீட்ல இருந்து..” என்று அவர் ஆரம்பிக்க, ஏற்கனவே மனம் நொந்து இருந்தவனுக்கு அதையெல்லாம் இப்போது கேட்க முடியும் என்று தோன்றவில்லை.

“தயவு செஞ்சு இப்போ ஆரம்பிக்காதம்மா” என்று அலுப்புடன் சொல்லி விட்டான்.

“என்னடா நீயும் உங்கப்பா போலவே பேசுற? பின்ன அவங்க பண்றது கொஞ்சமாவது நியாயமா இருக்கா நீயே சொல்லு” என்று அவனிடம் முறையிட்டார். அவர் ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல ஏற்கனவே குழம்பிப் போய் இருந்தவன் மனத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது.

அவனது அலைபேசியை எடுத்தான். அவன் எதிர்பார்த்தது போலப் பிரபாவதியிடம் இருந்து அவனுக்கு ஏகப்பட்ட தவறிய அழைப்புகள் வந்திருந்தது.

உடனடியாக அவளை அழைத்து விட்டான்.

அவள் அழைப்பை ஏற்றதும், “ஹாய் ரொம்பப் பிசியா நீங்க? இன்னைக்குப் புல்லா என் காலை எடுக்கவே இல்ல?” என்று கேட்டு, “அப்பா வேற..” என்று ஆரம்பிக்க, இவனுக்கு அவளின் அப்பா புராணத்தைக் கேட்டாலே சலிப்பாக வந்தது.

அவளோ பேசிக் கொண்டே போனாள்.

“அப்பா வேற நீங்க அவருக்குப் போன் பண்ணி போலீஸ் ஸ்டேஷன் பத்தி விசாரிச்சதா சொன்னாங்க. அப்பாகிட்ட என்ன ஏதுன்னு சொல்லலையாம் நீங்க. எனக்குத் தெரியுமான்னு அப்பா கேட்டாங்க” என்று சொன்னாள்.

“அது பத்தி உன்கிட்ட பேசணும் பிரபாவதி.” என்றான்.

“ஓ, அப்படியா? காலையில இருந்து இப்படித்தான் புதிர் போட்டு பேசுறீங்க. என்னனு போன்ல சொல்லுங்களேன்.” என்று கெஞ்சினாள்.

“இல்ல, நாளைக்கு நேர்ல மீட் பண்ணலாம். அப்போ சொல்றேன். நான் தனியா வர மாட்டேன். என் பேரன்ட்ஸ் என்னோட வருவாங்க..”

“ஓ, நான் அப்பாகிட்டு சொல்லி வைக்கிறேன்” என்றாள்.

“ம்ம், எங்கப்பா உங்கப்பாக்கு போன் பண்ணி சொல்லுவார்” என்றான் இறுக்கமாக.

“ஓகே. ரொம்பப் பில்ட் அப் பண்றீங்க” என்று சிரித்து, “அப்போ நாம வெளில போக முடியாதா? நீங்க என்னைப் பீச் கூட்டிட்டு போவீங்கன்னு நினைச்சேன்” என்று அவள் கொஞ்சலாகச் சொல்ல, அவன் மனத்தில் கணத்தில் கனம் ஏறியது.

“சாரி பிரபாவதி” என்றான்.

“இட்ஸ் ஓகே. நாம சண்டே போகலாம்” என்று சொல்லி அவனைத் தேற்றினாள். தலைவலி என்று சொல்லி அழைப்பை அத்துடன் துண்டித்து விட்டான்.

மறுநாள் அவன் குடும்பம் பிரபாவதியின் வீடு செல்ல வேண்டும். அதிகாலையில் எழுந்திருந்த அவன் பெற்றோர் அது குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் காலை எட்டு மணிக்கெல்லாம் அவர்கள் வீடு தேடி வந்து நின்ற கோவிந்தனை திகைப்புடன் பார்த்தான் பார்த்திபன்.

error: Content is protected !!
Scroll to Top