32 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 32 

 

வானம் எங்கும் வண்ண தீப்பொறி மழை. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரம் கண்களும், கைப்பேசி கேமிராக்களும். 

ஜூலை 4, அமெரிக்கர் தங்கள் சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக வான வேடிக்கை மூலம் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்றைய இரவு நேர வான வேடிக்கையை வேடிக்கை பார்க்கவென்றே ஜனம் குவியும். 

ஜன நெரிசல் அலர்விழிக்கு வேண்டாம் என்று நினைத்தானோ இல்லை அவளின் அலாஸ்கா கப்பல் பயணம் முன் அதைப் பற்றி சிறிய முன்னோட்டம் கொடுக்க நினைத்தானோ தெரியவில்லை. இன்று வான வேடிக்கையைக் காண பாஸ்டன் ஹார்பர் நீர்நிலையில் மிதந்து கொண்டிருந்த அந்த சொகுசுப் படகில் அலர்விழியோடு இருந்தான், மனோ. 

எபியின் எம்.ஐ.டி. கனவு பூர்த்தியாகியிருக்க, பாஸ்டனிலேயே வேலை கிடைத்த அவனும், அவன் தோழர்கள் என மூன்று பேர் கொண்ட குழு அந்த சொகுசு படகை வாடகைக்கு எடுத்திருந்தனர், தங்கள் துணையோடும், நண்பர்களோடும் வான வேடிக்கையைக் காண. வான வேடிக்கையை ரசித்துக் கொண்டே, வானவில்லின் நிறங்களை நீரில் கண்டு களிப்பதென்பது யாருக்குப் பிடிக்காது? நகராமல் மிதந்து கொண்டிருக்கும் சொகுசு கப்பலில்! அதுவும், தன் மனதிற்கு மிகவும் பிடித்தவனோடு? 

“என்ன டி… பேசவே மாட்டேங்கற? நீ எதிர்பார்த்த அளவு இல்லியா?” 

எபியின் புஜத்தை      சுற்றிப் பிடித்திருந்தவள், தலை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அந்த கருவிழிக்குள்ளும் வண்ணத் தீப்பொறிகள். எம்பி கன்னத்தில் முத்தமிட்டு, மீண்டும் கண்களை வானுக்குச் செலுத்த, புன்னகையோடே, “அப்போ அலாஸ்கா க்ரூஸ் புக் பண்ணிட வேண்டியது தான்,” என்றவன் பார்வை பாவை மேல் நிலைத்தது. 

அதிக உணர்ச்சிவசப் பட்டால் பெண்ணிடமிருந்து இந்த ஆசை முத்தம் பரிசாய் கிடைக்கும் என்பது அவன் கண்டு கொண்டது. அந்த ஒரு நொடி முத்தத்திற்காக உலகையும் புரட்டிப் போடுவானே!

வானவெடியை விட அவள் முகத்தில் எழும் பாவங்களை அதிகம் ரசிக்கத் தோன்றியது மனோவிற்கு. அதனால் நின்று நிதானமாக ரசித்தான். இதழ்கள் பேசவில்லை.  இதயம் பேசிக் கொண்டது. இறுக்கி பிடித்திருந்த புஜத்தில் தலை சாய்ந்து கொண்டது. 

“இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்

வானம் வண்ணத்தில் குளிக்கிறதே 

கதைகளை பேசும் விழி அருகே

எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே…” 

  பெதும்பையவள் காதருகே அவன் கிசுகிசுக்க, வான வேடிக்கையிலிருந்து கண் எடுக்காமல், “ஹனி-மூனுக்கு போவோம் மனோ. நார்தன் லைட்ஸ் தான் உங்களுக்குப் பாக்க வேண்டாமே”, கள்ளப் புன்னகை புரிந்தாள்.

தோளோடு அணைத்தவன் காது மடலில் இதழ் பதித்து, “அது போகும் போது போகலாம்… இப்போ நீ இதையே அரோரா பொரியாலிஸுன்னு (aurora borealis) நினைச்சுப்பீயாம், நாம இங்கேயே ஹனிமூன் கொண்டாடுவோமாம்”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், அதில் ஆசை பொங்கி வழிய தான் செய்தது. ஆனால் கண்டிப்பாக இன்றே தேன் நிலவை கொண்டாடும் எண்ணமெல்லாம் இல்லை. ஏப்ரல் மாதம் மூன்று நாட்கள் விடுப்பிற்கு அலர்விழி பாஸ்டன் வந்தது. அதன் பின் இப்பொழுது தான் மூன்று நாள் விடுப்பிற்கு வந்திருக்கிறாள். இடையே ஒரு முறை எபி, வீடு மாற்றிக் கொடுக்க என்று நியூ ஜெர்சி சென்று, அன்று மாலையே திரும்பினான். 

“மனோ… நாளைக்கு லன்ச் முடிச்சதும் கிளம்பறேன்”

 “ஏன் டி? ட்யூஸ் டே காலையில போலாமே?” 

“இல்ல மனோ, அந்த ஷிவானி, வேற பொண்ணோட இருக்கப் போறாளாம். நாளைக்கு காலி பண்றா. அது தான் சாவி வாங்கிட்டு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து அனுப்பணும். அவ எதையாது உடைச்சு வச்சுட்டு போனா, யாரு ஃபைன் கட்டறது?”

“இந்த வீட்டுக்கு என்ன வசதி குறைச்சல்? பெருசு பெருசா ரெண்டு பெட் ரூம். நடந்தா அஞ்சே நிமிஷத்தில ஆஃபீஸ். போதாக் குறைக்கு செலவே இல்லாம வாய்க்கு ருசியா மூணு வேளையும் உன் கையால சாப்பாடு! அப்புறம் என்னவாம்?”

“போய்த் தொலையறா மனோ. அவகூட இருக்க எனக்குப் பிடிக்கவே இல்ல. வீட்டுல ஒரு வேல செய்யறது இல்ல. இதுல அதிகாரம் வேற! ஆஃபீஸ்ல இவ எனக்கு பாஸ்னா வீட்டுல இவளுக்கு சேவகம் செய்யணுமா? எத்தன நாள் வாய மூடிட்டே இருக்க முடியும்? உனக்கு வடிச்சு கொட்ட முடியாது, வேலை செய் இல்லன்னா இடத்த காலி பண்ணிட்டுப் போடின்னு சொல்லிட்டேன்!”

“ஹ ஹ ஹா… என்ன வாய் டி, உனக்கு? தைரியம் தான்! தனியா இருந்துடுவியா விழி?”

  “சேஃப் தான் மனோ. இருந்திடலாம். 24 மணி நேரம் செக்யூரிட்டி இருக்காங்க! ஏதாவதுன்னா 911 கூப்பிட வேண்டியது தான். இங்க தான் உடனே போலீஸ் வந்திடுறாங்களே.”

“வேற ஆளுக்கு விளம்பரம் கொடுப்போமா?”

“தெரியாதவங்க வேண்டாம் மனோ. அதுக்கு தனியாவே இருந்துப்பேன். கூட வேலை பார்க்கிற யாராவது அவங்களே வந்து கேக்கட்டும், அப்போ யோசிப்போம். ஏதாது தேவைனா உங்கள     கூப்பிட்டுப்பேன்.”

“அடுத்த மாசம் கடைசியில வீட்டுக்குப் போயிட்டு வர மூணு வாரம் ஆகும் டா பட்டு! இருந்துடுவ தானே? உன்ன விட்டுப் போகவே யோசனையா இருக்கு. போகவா வேண்டாமா?”

“ரெண்டு வருஷம்! ஆண்டி அங்கிள் பாவம் மனோ. உங்கள ரொம்ப மிஸ் பண்றாங்க, போயிட்டு வாங்க. 

நடுவுல ஒரு நாள் இங்க வரவா மனோ? நான் வந்தா நீங்க என்னையே சுத்தி வருவீங்க. அப்புறம் நான் படுத்த பிறகு பேய் மாதிரி உக்கார்ந்து உங்க வேலயப் பார்ப்பீங்க. உங்களுக்குப் படிக்க இருக்குமேன்னு தான் இந்தப் பக்கம் வரதே இல்ல. இப்போ தான் படிப்பு முடிஞ்சுடுச்சே, ரெண்டு வாரம் கழிச்சு வரவா?” 

“எதுக்கு? நான் அங்க இருந்து போய் வர மாதிரி தானே ஃபிளைட் புக் பண்ணி இருக்கு. இப்போ தான் ஒரு ரூம் காலி ஆகிடுமே, நானே ஒரு நாள் முன்ன வந்து இருந்துட்டு போறேன். என்ன சொல்ற?”

“ரெண்டு பேரும் தனியா என்ன பண்ணீட்டு இருக்கீங்க?” ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே ஆட்ரே இருவரையும் இழுத்துக் கொண்டு போக, அன்றைய இரவு படகில் ஆடல் பாடலோடு சிரிப்பும் கும்மாளமுமாய் சென்றது. 

அடுத்து வந்த வாரங்கள் எப்பொழும் போல் இருவருக்கும் சென்றது. மூன்று நாள் நண்பர்களோடு அரிசோனா மற்றும் கலிபோர்னியா சுற்றுலா என்று எபி கிளம்பி விட்டிருந்தான். அது முடிந்து, வாரக் கடைசியை அலர்விழியோடு கழித்து விட்டு, அங்கிருந்தே சென்னை கிளம்புவதாக ஏற்பாடு செய்திருந்தான். 

தீ பிழம்பாய் காட்சியளித்துக் கொண்டிருந்த வானத்தை தங்கள் சிறிய கைப்பேசிக்குள் அடக்கும் நோக்கத்தோடு எபியும், அவன் தோழர் கூட்டமும் கிராண்ட் கேனியனியனை காலை ஐந்து மணிக்கு முற்றுகையிட்டிருந்தனர். 

அரிசோனாவில் பாயும் கொலராடோ ஆற்றின் மூலம் காலப்போக்கில் செதுக்கப்பட்ட 446 கிமீ நீள, 2,600 அடி ஆழ, செங்குத்தான பள்ளத்தாக்கின் சித்திரம் தான், கண்கவர் கிராண்ட் கேனியன். பூகோளத்தின் பல மில்லியன் வரலாற்றை நிமிர்ந்து நின்று பறைசாற்றும் வரலாற்று அற்புதம் எனலாம் அதை! 

விதவிதமான வண்ணப் படங்களில் அஷ்டகோணத்தில் நண்பர்களோடு எபி. அவன், ஏழு மணிக்கு அனுப்பிக் கொண்டே இருக்க புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் காலை மணி பத்து. 

“பிக்சர்ஸ் எல்லாம் சூப்பர் மனோ. சன் ரைஸ்ச அநியாயத்துக்கு அழகா கேப்சர் பண்ணியிருக்கீங்க” என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடங்கள் இடத்தை பற்றி பேச்சு சென்றது. 

“எனக்கு இன்னும் பத்து நிமிஷத்துல மீட்டிங் இருக்கு மனோ… நைட் பேசலாமா?” என்று மீட்டிங்கானவைகளை சரி பார்த்துக் கொண்டே அலர்விழி கேட்க, 

“நைட் ஃப்ரெண்ட்ஸ்சோட பிஸி விழி. நாளைக்கு காலையில உன்னோட பதினோரு மணி உனக்கு ஓக்கேவா?” என்று பேசி முடித்தனர். 

கட்டாயத்தின் பேரில் இல்லாமல் விருப்போடு நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் என்ற புரிதல் இருந்தது இருவரிடமும். தனிமனிதனின் ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் நேரம் காலம் ஒதுக்க வேண்டும் என்பதில் இருவருமே கவனமாயிருக்க, ‘எனக்கென்று நீ இந்த நேரத்தை ஒதுக்கித்தான் ஆகவேண்டும்’ என்ற பிடிவாதங்கள் இருவருக்குமிடையே கிடையாது. 

மாலை நான்கு மணியளவில் காபி அருந்திக் கொண்டிருந்தவனுக்கு விழியைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற உந்துதல். அழைத்தான். அழைப்பு ஏற்கப் படவில்லை. 

‘மிஸ்ட் கால்’ பார்த்தால் அவளே அழைப்பாள் என்று விட்டு விட்டான். ஒரு மணி நேரமாகியும் அவள் அழைத்தாளில்லை. அவன் மீண்டும் அழைக்க, ம்ம்கூம்… எந்த பலனும் இல்லை.  பேச முடியவில்லை என்றாலும் ‘பிஸி’ என்று குறுந்தகவலாவது வரும்… அதையும் காணவில்லை என்றதும் சிறு நெருடல்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்து முறை முயன்று விட்டான். பலனில்லை என்றதும் சட்டென்று பயம் கவ்விக் கொண்டது. நேரம் சென்றதே ஒழிய அவளைப் பற்றி தகவலில்லை. 

‘கர்த்தாவே ப்ளீஸ்…’ மனம் தவிக்க, இறைவனை துணைக்கு அழைத்தவன், மீண்டும் மீண்டும் அழைத்தான். அவன் இம்சை பொறுக்க முடியாமல் எடுத்ததாய் செவிலி கூறினார். 

கடந்த ஆறு மணி நேரமாக மருத்துவமனையில் விழி? பயந்து போனான். மதியம் மூன்று போல் அவசரப் பிரிவில் வந்ததாகவும், தற்போது உறங்குவதாகவும் கூறினார். என்ன கேட்டும் நோயின் விபரம் தர மறுத்தார். துடித்துப் போனான்.  

யாரிடம் கேட்பது? பாயல்! அலர்விழி வசிக்கும் கட்டிடத்தில் வசிப்பவள். அலர்விழியின் ஒரே நட்பு அந்தக் குடியிருப்பில். அலர்விழியின் கூகுல் காண்டக்ட்ஸ் (google contacts) சென்று அங்கிருந்து பாயல் எண்ணைத் தேடி எடுத்தான். அவளும் ‘எபி’ என்றதும் கண்டு கொண்டாள். 

“மதியமே உடம்பு முடியலன்னு வீட்டுக்கு வந்துட்டா போல. வயிறு வலி, வாந்தி, பேதி, தலை சுத்துன்னு ரொம்ப கஷ்டப் பட்டிருக்கா. சாயங்காலம் மூணு மணிக்கா ஹாஸ்பிட்டல் எமர்ஜன்சில காட்டியிருப்பா போல, ரொம்ப டிஹைட்ரேட்(dehydrate) ஆகிட்டான்னு அட்மிட் பண்ணிட்டாங்களாம். ஃபுட் பாய்சனிங். முழிச்ச பிறகு தான் எனக்கு சொன்னா.

அவளுக்கும் இன்னும் முடியல. எட்டு மணிக்கு மேல யாரும் கூட இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டதுனால நான் வந்துட்டேன். நான் வரும் போது முழிச்சு இருந்தா… ட்ரிப்ஸ் போயிட்டு இருந்துது.” 

நீளமான கதையை அவள் கூறி முடிக்கவும் விமான நிலையம் அடைந்திருந்தான். ஒற்றை விமானத்தில், ஐந்து மணி நேரத்தில் முடிய வேண்டிய விமானப் பயணம், கடைசி நிமிடம் என்பதால் பயணச்சீட்டு கிடைக்காமல், ஊரைச் சுற்றிக்கொண்டு வந்த விமானத்தில், ஒன்பது மணி நேரம் கழிந்தது. 

வாழ்க்கையை வெறுக்க வைத்த மணித் துணிகள். மருத்துவமனை சேரும் வேளை காலை ஒன்பது மணியாகி விட்டிருந்தது. எழுந்து அமர்ந்திருந்தாள். எபியைப் பார்த்ததும் கண்கள் விரிந்தன. 

“என்ன டி… எப்பிடி இருக்க?” என்று தலை வருடியவன், அவளை விடக் களைப்பாய் இருந்தான் என்பது நிஜம். 

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து விட்டாலும், வயிற்று வலி குறைந்திருந்தாலும் படுத்தே இருக்க வேண்டிய நிலை தான்.  ஜூசைப் பிழிந்து அவன் நீட்டிக் கொண்டிருக்கவும் நகுநா அழைத்தாள். வீடியோ காலில் குடும்பமே ஒருவர் மாற்றி ஒருவர் என்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். 

“அப்பா பேச்சைக் கேட்டு உடனே ஹாஸ்பிட்டல் போனது எவ்வளவு நல்லதாப் போச்சு பாரு” என்றார் பாட்டி. 

“உனக்கு எதுக்கு இந்த தலையெழுத்து பாப்பா… யாருமில்லாம தனியா கஷ்டப்பட்டது போதும், வா வீட்டுக்கு” என்றார் அம்மா. 

“வெளியில ரொம்ப சாப்பிடாத பாப்பா. உடம்ப பாத்துக்கோ மா” என்றார் அப்பா. 

“அங்க ஹாஸ்பிட்டல் எல்லாம் எப்பிடி அலர்? பெரிசா இருந்துச்சா?” என்று கேட்டுக் கொண்டு நகு!

“அலர் பாப்பா… வயறு வலி போச்சா உனக்கு? வயிறுல ஊசி போட்டாங்களா? வலிச்சுதா?” நகுவோடு விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நான்கு வயது சிந்துஜா! 

அதே அறையிலிருந்த எபிக்கு, தான் மூன்றாம் மனிதன் ஆகிப்போன உணர்வு. நேற்றே அவர்களுக்கு விடயம் தெரிந்திருக்கிறது. அதுவும் மருத்துவமனை செல்லும் முன்னமே. தன்னை மட்டும் ஒதுக்கி நிறுத்தி விட்டாளே என்ற ஏமாற்றம். 

எழுந்து அறைக்கு வெளியே சென்று விட்டான். நேரம் தவறாமல் தெரிந்தது போல் சமைத்துக் கொடுத்தான். மருந்து மாத்திரையும் சரியான நேரம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், பேசவில்லை. முதலில் கவனிக்கவில்லை என்றாலும், அவன் முகமாற்றம் தெரிந்தது. 

“என்ன ஆச்சு மனோ? ரொம்ப டையர்டா இருக்கா? கொஞ்சம் ரெஸ்ட் எடுங்களேன்” என்றாள்.

மாத்திரையை நீட்டிவிட்டு பதில் கூறாமல் செல்லவும் அவளுக்குக் கொஞ்சமாக வலித்தது. ‘ரெண்டு வேள சமையலுக்கே அலுப்பு தட்டிடுச்சோ’ என்று தான் எண்ணினாள். 

அடக்கப்பட்ட கோபங்கள் குடும்பத்திற்கு ஆபத்தானது. அது ஏற்படுத்தும் சின்னப் பிளவிற்குள் நுழைய ஆள் இருந்தால் பிளவு பெரிதாகி விடும். நல்ல வேளை இன்று வரை இவர்களுக்கு இடையே அப்படி ஒருவரும் இல்லை. இப்படியே இருந்தால் சரி தான்! 

அடுத்த நாளும் அதே நீடிக்க, எழுந்து நடக்க ஆரம்பித்தவள் தவித்துப் போனாள். “ஏன் மனோ? என் மேல கோவமா? ரொம்ப படுத்துறேனா? நீங்க ஃப்ரீயா விடுங்க நான் பார்த்துக்கிறேன் இன்னைக்கு” என்றவள் மேல் கோபம் எழுந்தாலும் மௌனம் காத்தான். 

அன்று மதிய உணவைத் தயாரிக்க அவள் அடுக்களைக்குள் செல்லவும், “போடி வெளியில,” என்று கரண்டியைப் பிடுங்கி தூர எறிந்தவனின் கோபம் அவளை மிரளச் செய்தது. 

இன்னும் இரண்டு நாட்களில் சென்னை கிளம்பி விடுவான். போகும் முன் இப்படியா நேரம் செல்ல வேண்டும்? 

அவன் காய் வெட்டிக் கொண்டிருக்க, நின்றிருந்தவன் முதுகில் நெற்றி இடித்து நின்று கொண்டாள். தள்ளி நின்ற தேகங்கள் போலவே மனமும் தள்ளி நின்றிருந்தது. 

“ஏதோ செஞ்சு உங்கள கஷ்டப் படுத்தியிருக்கேன்னு தெரியுது மனோ. என்னன்னு தெரியல. சொன்னா தானே தெரியும். ரெண்டு நாள்ல நீங்க கிளம்பின பிறகு நான் என்னாவேன் மனோ…” 

பின்னிருந்தவளை முன்னுக்கு இழுத்தான். “உனக்கு நான் இருந்தா என்ன, இல்லேனா என்ன? எதுக்கும் நான் தேவ இல்லன்னு நினைச்சுட்ட தான? டைம் பாசுக்கு உன் கூட சுத்தறேன்னு நினைச்சுட்ட இல்ல?” 

“ஏன் மனோ… என்னென்னமோ பேசறீங்க? என்ன தான் ஆச்சுன்னு முதல்ல சொல்லுங்க” அவளும் சண்டைக்குத் தயாரானாள். 

“உனக்கு முடியலன்னதும் நான் தானே உனக்கு முதல்ல நினைவுல வந்திருக்கணும்? இங்க இருக்க எனக்கு விஷயம் தெரியல. நான் கால் போடாட்டி எனக்கு தெரிஞ்சிருக்கவே இருக்காது. ஆனா கடலூர்ல இருக்க பக்கத்து வீட்டு நண்டு சிண்டுக்கெல்லாம் விஷயம் தெரியுது. அப்போ நான் யாரு டி உனக்கு? வேண்டாத மூணாம் மனுஷன் தான?” 

“திடீர்ன்னு ரொம்ப வலி மனோ. மன்த்லி வலியோன்னு நினைச்சேன். முடியலனதும் லீவ் போட்டு வீட்டுக்கு வந்துட்டேன். வீட்டுல இருந்து எதேச்சயா ஃபோன் போட்டாங்க. வயிறு வலி, வாந்தின்னு தெரிஞ்சதும் அப்பா இப்போவே டாக்டர பாருன்னு நின்னாங்க. எனக்கு சுத்தமா முடியல மனோ. ப்ளாக்-அவுட் ஆன மாதிரி ஆகிடுச்சு! எப்போ 911 கால் பண்ணினேன்… எப்பிடி டாக்டர் கிட்ட போனேன்னு கூட நினைவில்ல. முழிப்பு தட்டினதும், உங்க டிரிப்ப கெடுக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்!” 

“ஆமா டி… உன்ன விட எனக்கு ஊர் சுத்தறது தானே ரொம்ப முக்கியம்!” 

“ம்ப்ச்! சரி ஆகிடும், நாளைக்கு வீட்டுக்கு போயிடலாம்ன்னு சொன்னாங்க மனோ. ரெண்டு நாள்ல எப்படியும் வந்திடுவீங்க… என்ன அவசரம்ன்னு… அது தான்” 

“போதும் விழி! காரணம் சொல்லாத. நல்லதோ கெட்டதோ எனக்கு முதல்ல சொல்லி இருக்கணும். புரியுதா?” 

“ம்ம் ம்ம்ம்!”  கண்கள் உருட்டி அவனைப் பார்த்தாள், அவனின் புதிய அவதாரத்தை. 

“என்ன பாக்கிற?” 

“ரொம்ப தான் மிரட்டுறீங்க…” 

“போடி… என் தவிப்பு உனக்குப் புரியல. நானும் ஒரு நாள், இப்படி நீ பார்க்க முடியாத தூரத்துல ஹாஸ்பிட்டல்ல படுத்துக் கிடந்தா உனக்கும் புரியும்.” 

வெறி பிடித்தவள் போல் அவன் மார்பில் அடிக்க ஆரம்பித்தாள். “என்ன டா உன் பிரச்சின? எப்போ பார் அபசகுணமா பேசிகிட்டு…” கண்ணீர் துளிர்த்தது. 

மெல்ல அணைத்துக் கொண்டான். “பயந்துட்டேன் டி. திருவிழால காணாமப்      போன குழந்த மாதிரி ரொம்ப பயந்துட்டேன் விழி. உனக்கு என்ன ஆச்சுனே தெரியல! நூறு தரம் கால் போட்டாலும் நீ ஃபோன எடுக்கவே இல்ல. ஆஃபீஸ்ல நீ கிளம்பிட்டன்னு சொன்னாங்க. உன் கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்ல.

கடைசியா ஃபோன எடுத்தது நர்ஸ். அவங்களும் நீ ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு மட்டும் தான் சொன்னாங்க. என்னன்னு நினைப்பேன். எனக்கு கூடச் சொல்ல முடியாத அளவுக்கு உனக்கு என்னவோ ஆகிடுச்சுன்னு செத்தே போயிட்டேன் விழி. ஆறு மணி நேரம் நீ ஹாஸ்பிட்டல்ல இருந்திருக்கன்னு கேட்டதும் உயிர பிடிச்சுட்டு வந்தேன்.” 

அவன் அணைப்பிற்குள் அடங்கிப் போனாள். 

“உன்ன இப்பிடியே விட்டா சரிப் பட மாட்ட! போனதும் உங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கறேன். கல்யாணம் பண்ணிக்கலாம்.”

“ம்ம்ம்ம்!” 

அணைப்பின் கதகதப்பிலேயே வாழ்வை ஓட்டிவிட இரு காதல் பறவைகள் ஆகாசத்தில் கூடு கட்ட, ஒருவன், லண்டனிலிருந்து இந்தப் பறவைகளில் ஒன்றைத் தன் கூண்டில் அடைக்கும் முடிவோடு சென்னை விமான நிலையத்தில் இறங்கினான். 

போட்டி போடும் இரு ஆண் பறவைகள் கூட, பெண் பறவைக்கு ஒரு ஆண் பறவையைப் பிடித்ததும் மற்றது விலகிக் கொள்கிறது. அறிவு படைத்த மனிதனுக்கு அது தெரிவதில்லை.

error: Content is protected !!
Scroll to Top