நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 27 (1)

மூன்று மாதங்களுக்குப் பிறகு…

ஒரு வாரமாக ஶ்ரீகாந்த் பரபரப்பாகவே சுற்றிக் கொண்டிருந்தான். அவனிடம் எப்போதும் நிலைத்திருக்கும் நிதானம் தவறியிருக்க, “என்னங்க, என்னாச்சு ஏதாவது பிரச்சனையா?” என்று அவனை நிறுத்தி துர்கா விசாரித்தாலும், “பிரச்சனையா? என்னங்க நீங்க, அப்படியெல்லாம் எதுவும் இல்ல. இருந்தா உங்ககிட்டதானே மொதல்ல சொல்லுவேன்” என்று அவன் சொன்னாலும், அவனிடம் மாற்றமில்லை.

துர்கா அவளால் முடிந்தவரை கணவனை அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

அந்தக் காலை நேர பரபரப்பில் அவள் இருக்க, நிதானமாக அவளைப் பின்னோடு அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான் கணவன்.

“ஏங்க, இன்னைக்கு அவசியம் ஸ்கூலுக்குப் போகணுமா நீங்க?” என்று அவன் கிசுகிசுக்க, ஆழ மூச்செடுத்தாள் துர்கா.

“ஆமா, போயே ஆகணும். நெக்ஸ்ட் வீக் எக்ஸாம் ஸ்டார்ட்டாகுது”

“அது அடுத்த வாரம் தானேங்க?”

“மொதல்ல இந்த ங்க போட்டு பேசுறதை நிறுத்துங்க. ரொம்ப ஆக்வர்டா இருக்கு” அவன் கைகளுக்குள் திரும்பி அவன் கண் பார்த்து அவள் சொல்ல, சன்ன சிரிப்புடன், “நீங்க மட்டும் என்னை ங்க சொல்லலாம். ஆனா நான் சொல்ல கூடாதா? என்ன டீச்சர் நீங்க?” என்று சீண்டினான்.

“ஶ்ரீ..” என்று அவள் முறைக்க, “அப்படி வாங்க வழிக்கு” என்று மீசையோடு உதடு கடித்துச் சிரித்தான்.

அவனின் சிரிப்பு அவளையும் தொற்ற அவன் மார்பில் சாய்ந்தாள்.

மெல்ல அவளின் சேலையை நீக்கும் வேலையில் இறங்கினான் அவன்.

“ஐயோ எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகுதுங்க. இப்போ போய்..” என்று அவள் பதறி சேலை முந்தானையை அழுத்தமாகப் பிடிக்க, அதை அழுத்தமாக அவள் தோளில் இருந்து நீக்கினான் அவன்.

அடர்ந்த குரலில், “துர்கா” என்றழைத்தான். மகுடிக்கு மயங்கிய பாம்பை போல அவனைப் பார்த்தாள்.

அவள் விழிகளுக்குள் விழி பதித்து, “நானும் உங்க பேர் சொல்லி கூப்பிடுற நேரமெல்லாம் நீங்க மயக்கத்துல இருக்கீங்க. அதுனால நான் கூப்பிடுறது உங்களுக்கு மறந்து போகுது. அது என் தப்பு இல்லையே துர்கா. நான் என்ன பண்ண?” என்று சோம்பலாகக் கரகரத்த குரலில் கேட்டு, கையோடு அவள் சேலையை உருவி தரையில் இட்டிருந்தான்.

“ஶ்ரீ.. என்னங்க..” என்று அவள் சிணுங்க, “கொஞ்ச நேரம் கொஞ்சலாம்.. பிளீஸ்” என்று கெஞ்சினான். அதற்கு நேர்மாறாக அவளின் மறுப்பையெல்லாம் சம்மதமாக்கி அவளைத் தன் வசமாக்கி தானும் அவள் வசமாகி இருந்தான்.

அறையின் காற்றாடி முழு வேகத்தில் சுழல, இருவரின் மேனியும் வியர்வையில் குளித்திருந்தது.

துர்கா சுக அயர்ச்சியில் கண் மூடி உறங்கிட, “உங்களுக்கு லீவ் சொல்லிடுறேன்” அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுச் சொன்னான்.

“அச்சோ, லீவா? வேணாம், வேணாம்” என்று அடித்துப் பிடித்து அவசரமாக அவள் எழவும், அவள் தோள் பிடித்து, “பதறாம கிளம்புங்க. இன்னைக்கு உங்களை நான் ட்ராப் பண்றேன்” என்றான்.

“மாசத்துல பாதி நாள் நீங்கதான் என்னை ட்ராப் பண்றீங்க” என்று செல்லக் கோபத்துடன் அவள் அலுத்துக் கொள்ள, “ஹாஹாஹா, பாதித் தானா? அதுல உங்க பங்கும் பாதி இருக்கேங்க” என்று மீசையை நீவி அவன் கண் சிமிட்ட, “போங்க” என்று அவன் தோளில் அடித்து எழுந்தாள்.

“ஸ்கூலுக்குப் போய் நாள் முழுக்க நிக்கப் போறீங்க சோ இப்போ பத்து நிமிஷம் படுங்க.” என்று அக்கறையுடன் அவன் சொல்ல, அவளுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. அவள் ஒரு நொடி தயங்க, அந்நேரம் அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது.

“அம்மா.. ஶ்ரீக்கா..” என்று ரோஜா வெளியில் இருந்து அழைக்க, அவ்வளவுதான் வாரி சுருட்டி எழுந்து கொண்டாள் துர்கா. அவளின் சேலை, அவனின் சட்டை எல்லாம் எது எங்கே என அவசரத்தில் பிடிபடவில்லை. அப்போது அவளின் கைக்குச் சிக்கிய ஶ்ரீகாந்தின் வேட்டியை மேனியில் சுற்றிக் கொண்டு அவள் நிற்க, ஶ்ரீகாந்த் வெடித்துச் சிரித்தான்.

“பட்டு ரோஜா, இதோ வந்துட்டேன்” என்று மகளுக்குக் குரல் கொடுத்தவன், “நீங்க போங்க, நான் ரோஜாவை பார்த்துக்கறேன்” என்று மனைவியை ஓய்வறை நோக்கி தள்ளினான்.

அவன் சென்று கதவை திறக்க, “உன்னைய சாப்பிட கூப்பிட்டா நீ என்னா பண்ணிட்டு இருக்க இங்க? அப்பத்தா பேச்சை கேட்பியா மாட்டியா ராசாத்தி? வா, இப்படி” என்று ரோஜாவின் கைப் பிடித்தார் உண்ணாமலை.

ரோஜா பள்ளி சீருடையில் நின்றிருந்தாள். தலை முடி கலைந்து இரண்டு பக்கமும் தொங்கி கொண்டிருந்தது. அப்போதுதான் குளித்து வந்திருப்பாள் போலும். பன்னீர் ரோஜா போலப் பளிச்சென்று இருந்தாள்.

“நான் ஶ்ரீக்கா கூடச் சாப்பிடுறேன் அப்பத்தா” என்று அவள் சொல்ல, “உன் ஶ்ரீக்கா இன்னும் குளிக்கக் கூட இல்ல பாரு. உனக்கு ஸ்கூலுக்கு டைமாகுது இல்ல? வா, ராசாத்தி” என்று அவளைத் தூக்கி கொண்டவர், “நீ போய்க் கிளம்புப்பா” என்றார் மகனிடம்.

அப்பத்தாவை ஓரக் கண்ணால் முறைத்து அவரோடு சென்றாள் ரோஜா. நாள் முழுக்க அவரோடுதான் இருக்கிறாள் குழந்தை. அவளுக்கு உணவு ஊட்டுவதில் தொடங்கி, அவளைப் பள்ளிக்கு கிளப்புவது, மாலை அவள் பள்ளி முடித்து வந்தால் வாசலில் சைக்கிள் ஓட்டுவளுக்குத் துணையாக நிற்பது என்று எல்லாமே அவர்தான் செய்கிறார். அவளுக்குப் பள்ளி பாடங்கள் மட்டும் அப்பச்சி சிதம்பரம் சொல்லித் தருகிறார்.

இரவு படுக்கையும் உண்ணாமலையோடுதான்.

“ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சா..” என்று அவர் கதைச் சொன்னாலே அம்மாவை அதிகம் தேடாமல் கண்ணயர்ந்து விடுவாள் குழந்தை.

“இன்னைக்கு எங்க கூடத் தூங்கட்டும்த்தே” என்று துர்கா சொன்னால் மறுக்காமல் அவளோடு அனுப்பி விடுவார்.

இப்போதும் அவளுக்குப் பள்ளிச் செல்ல இரட்டை பின்னல் போட்டு விட்டு, காலை உணவாகப் பணியாரத்தை வைத்தார்.

சிதம்பரமும் காலை உணவு உண்ண வந்து அமர, தன் தட்டில் இருந்ததைச் சாமர்த்தியமாக எடுத்து அப்பச்சிக்கு வைத்தாள் அவள்.

“ஏய் ராசாத்தி. அப்பச்சி இனிப்புப் பணியாரம் சாப்பிட கூடாது. அவருக்கு வெள்ளை பணியாரம் செஞ்சிருக்கு. நீ ஸ்வீட் சாப்பிடு” என்று அவளை அதட்டினார்.

“ஶ்ரீக்கா கூடச் சாப்பிடுவேன்” என்றால் மூக்கை சுருக்கி. உண்ணாமலை கணவருக்கு உணவு பரிமாறி, ரோஜாவுக்கு ஊட்டி விட அவள் பக்கத்தில் இருந்தார்.

“ராசாத்தி.. ரோஜா..” என்று கண்டிப்புடன் அழைத்தார்.

“ம்ம், அப்பத்தா” என்று அவரை விழி மலர்த்திப் பார்த்தாள். அவளுக்கு ஒரு வாய் பணியாரத்தைப் பிட்டு ஊட்டி விட்டு, “நான் உனக்கு யாரு?” என்று கேட்டார்.

“அப்பத்தா”

“இவரு..” என்று கணவரை கைக் காட்டினார்.

“அப்பச்சி..” என்று பால் பற்களைக் காட்டி புன்னகைத்தாள்.

“துர்கா?”

“அ..ம்மா” வாய் நிறைய உணவுடன் சொன்னாள்.

“அப்போ ஶ்ரீகாந்த் யாரு?”

சிரிப்பில் உப்பிய கன்னங்களுடன், “ஶ்ரீக்கா” என்றாள்.

“அப்பா சொல்லணும் ராசாத்தி. அப்பான்னு கூப்பிடணும். கேட்டுச்சா?” செல்லமும் கண்டிப்புமாக அவர் சொல்ல, அந்நேரம் துர்கா, ஶ்ரீகாந்த் இருவரும் அங்கு வந்து நின்றார்கள்.

ஶ்ரீகாந்த் மகளை ஆர்வத்துடன் பார்க்க, கோலி குண்டு கண்களை உருட்டி அவனைப் பார்த்தாள்.

அவன் புன்னகைக்க, அவள் கண்கள் மெல்ல சுருங்கியது, லேசாகத் தலையைத் திருப்பி உண்ணாமலையைப் பார்த்தாள்.

“ம்ம், சொல்லு ராசாத்தி” என்று அவர் ஊக்கமூட்டவும், “ஶ்ரீக்கா” என்று அழைத்து, “ஶ்ரீக்கா அப்பா” என்றாள்.

ஒரு நொடி மகளையே பார்த்தவன், மறுநொடி அவளைக் கைகளில் அள்ளி முத்தமிட்டான்.

“இதெல்லாம் நீ சொல்லிக் கொடுக்கணும்” என்று மருமகளை முறைத்தார் உண்ணாமலை. ஆனால் அவர் சொல்லி கொடுத்ததில், அவளின் பெற்ற மனம் பெரும் உவகைக் கொண்டது. துர்கா கண்கள் பனிக்க மாமியாரை பார்த்தாள்.

மூவரும் உணவு உண்டு முடிக்க, அவர்களை ஶ்ரீகாந்த் பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.

மகளின் கன்னத்தில் முத்தமிட்டு, அவன் கையசைக்க, பதிலுக்கு, “பை ஶ்ரீக்கா” என்று கையசைத்து கீழிறங்கினாள் ரோஜா.

“ஶ்ரீ.. அவ..” என்று துர்கா தயங்க, “அவ குழந்தைங்க, அவளுக்கா கூப்பிட வரும் போது கூப்பிடட்டும். விடுங்க” என்று லகுவாகப் பேச்சை முடித்து விட்டான்.

“ஈவ்னிங் வெயிட் பண்ணுங்க வந்துடுறேன்” என்று மனைவியின் கையை அழுத்தி கொடுத்து அங்கிருந்து கிளம்பினான்.

error: Content is protected !!
Scroll to Top